டாரன்டினோ ஹிந்திப்படத்தினை இங்கு உருவாக்க முடியுமா?
நேர்காணல்
டாரன்டினோ ஹிந்திப்படத்தினை இங்கு உருவாக்க முடியுமா?
மெஹூல் எஸ். தாக்கர்
தமிழில்: லாய்ட்டர் லூன்
இன்றைய பாலிவுட்டில் மிகப்பெரும் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ராதான் என்றாலும், ஹாலிவுட்டில் அவர் இயக்கி, தயாரிக்கும் ப்ரோக்கன் ஹார்ஸ் ஆங்கிலத் திரைப்படத்திற்கு இந்த நாற்பது ஆண்டு அனுபவங்கள் உதவப் போவதில்லை. யதார்த்தமான இந்த நேர்காணலில் எதையும் தான் கற்கவில்லை என்று கூறுகிறார்.
ஆங்கிலப்படத்தினை எழுதி, தயாரித்து, இயக்கும் முதல் இந்தியர் நீங்கள் என்பதில் பெருமைப்படுகிறீர்களா?
படத்தினை உருவாக்கும்போது, நான்தான் முதல் நபர் என்று அறியவில்லை. என் மனதில் அப்போது இருந்தது ஆர்வமும், கனவும், ஹாலிவுட் உலகம் நம்மை எப்போதும் மேலிருந்து கீழாகப் பார்க்கிறதே என்கிற சிறிது கோபமும்தான்.
ஏன் அப்படிக்கூறுகிறீர்கள்?
சிறந்த திரைப்படங்களை எடுத்தாலும், பாடல்களை பாடுவதன் மூலம் நாம் அதனை மாற்றிவிடுவதாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஏன் நமது இயக்குநர்களும் கூட அப்படித்தான் கூறுகிறார்கள். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, காதலில் விழுந்த தருணத்தில் நான் ஹிந்திப்பாடல் ஒன்றைத்தான் பாடினேன். ஒருவர் பிறந்தாலும், இறந்தாலும் பாடல்களை பாடும் கலாசாரம் கொண்ட மகிழ்ச்சியான மனிதர்கள் நாம். நாம் சினிமாவை உருவாக்கும்போது, கலாசாரம் வழியாகவே மக்களைத் தொடர்புகொள்கிறோம். ஆனால் அதன் அர்த்தம் நம்மால் வேறுவகையான படங்களை உருவாக்கவே முடியாது என்பதல்ல. அதன் காரணமாகவே ப்ரோக்கன் ஹார்ஸ் உருவானது. ஹாலிவுட்டைச் சேர்ந்தவர்கள் விரும்புவது போலவே படத்தினை உருவாக்கியுள்ளேன் சிறந்தது என்று கூறமுடியாவிட்டாலும் சரியானதாக.
3 இடியட்ஸ் திரைப்படம் வசூலித்த தொகைக்கு, தயாரிப்பாளராக நீங்கள் அதன் அடுத்த பாகத்தினை உருவாக்க முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதனை செய்யாமல் அமெரிக்கா வந்து ப்ரோக்கன் ஹார்ஸ் திரைப்படத்தினை......
வெற்றி பெற்ற தயாரிப்பாளராக இருந்தாலும், பணம் என்னை எப்போதும் முன்னோக்கி செலுத்தியதில்லை. என்னுடைய தேவைகள் மிகவும் எளியவை. என்னால் கோட்டினை ஒரு நிமிடத்திற்கு மேல் அணிந்திருக்க முடியாது. டீஷர்ட் அணிந்திருப்பதே எனக்கு பிடித்தமானதாக இருக்கிறது. வீடு மற்றும் கார் தேவை என்றால் என்னிடம் இரண்டுமே இருக்கிறது. விருந்து அளிப்பதோ (அ) அவற்றில் கலந்துகொள்வதோ இல்லை. மக்கள் யாரும் என்னை மிகச்சிறந்தவர் என்று கூறுவதும் இல்லை. சினிமா என்ற ஒரு விஷயமே என்னை இயக்குகிறது. 3 இடியட்ஸ் படத்திற்குப் பிறகு 4 இடியட்ஸ் உருவாக்காமல் ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு ஹாலிவுட் சென்று படத்தினை இயக்குவதற்கும் அதுவே காரணம்.
திரைப்படத்தினை உருவாக்கும்போது, எப்போதும் பாக்ஸ் ஆபீஸ் குறித்து கவலையே படமாட்டீர்களா?
சில மனிதர்கள் பணத்திலிருந்துதான் வலிமை பெறுகிறார்கள். அவர்களின் முதுகெலும்புக்கும், வங்கிக் கணக்குக்கும் தொடர்பு இருக்கிறது. ஆனால் உண்மையில் முதுகெலும்பு உள்ளவர்கள் பணம் குறித்து கவலைப் படமாட்டார்கள். மோசமான சூழலாக இங்கு மக்கள் படத்தினை ரசிக்காமல், இந்தப்படம் நூறு கோடி வசூலிக்குமா என்று கேட்கிறார்கள். மோசமான படம் இருநூறு கோடியை வசூலிக்கும் போது அதனை நல்லது என்று கூறமுடியுமா? பணம் கொடுத்து உங்களை நீங்கள் பெரும் தயாரிப்பாளராக அறிவித்துக் கொண்டு பின் அதே நாளிதழை எடுத்துப் பார்க்கும்போது உண்மையை நம்பத்தொடங்குவீர்கள். அதற்கு நீங்கள் செலவு செய்யாமலேயே இருக்கலாமே?
ஹாலிவுட்டில் திரைப்படங்களின் உருவாக்க முறைகள் முற்றிலும் வேறுபட்டவை. என்னமாதிரியான சவால்களை சந்திக்கவேண்டி இருந்தது?
எனக்கு 62 வயதாகிறது மேலும் சினிமா எடுப்பதை நாற்பது ஆண்டுகளாக செய்துவருகிறேன். அனைத்தையும் நினைவில் கொண்டு செயல்படமுடியாது. சிலர் நான் அமெரிக்காவில் திரைப்படம் எடுப்பது, குவான்டின் டாரன்டினோ 1942: எ லவ் ஸ்டோரி படத்தினை இந்தியாவில் எடுப்பது போல என்று கூறினார்கள். இந்தியாவிற்கு அவர் வந்து படமெடுப்பார் என்பது குறித்து எனக்கு ஆர்வம் உண்டு.
ஜேம்ஸ் கேமரூன், அல்போன்சோ குவாரோன் என இருவரையும் உங்கள் படத்திற்கு எப்படி சம்மதிக்க வைத்தீர்கள்?
நான் எதுவும் செய்யவில்லை. அதுவாக நடந்ததுதான். டெல்லிக்கு ஜேம்ஸ் வந்தபோது, என்னுடைய கதையைப் பார்த்தார். அவர் அமெரிக்காவில் இருந்து என்னை அழைத்து அவதார் படத்திற்காக அந்த கதை எழுத்தாளரை சந்திக்கவேண்டும் என்றார். அதுவரையில் அக்கதையில் எழுத்தாளர்கள் என என் பெயரையோ, அபிஜத் பெயரையோ அதில் போடவில்லை என்பதால் அவர் அதை நாங்கள்தான் எழுதியதாக அறிந்திருக்கவில்லை. இந்த பாலிவுட்காரர்களுக்கு ஹாலிவுட் பற்றி என்ன தெரியும் என்றுதான் கூறுவார்கள். அவர்களின் எழுத்துகளை கூட சோதித்துப்பார்க்க முடியும் என்று கூறினேன். அதைக்கேட்டு சிரித்தவர், நீ ஒரு ***** அறிவாளி என்று கூறியவர், படத்தினைப்பார்த்துவிட்டு அது முடியும் முன்னே கைதட்டத்தொடங்கினார். கைதட்டலின் ஒலி அதிகரித்தது. இது ஒருவேளை கேலியோ என்று கூட நினைத்தேன். ஆனால் அவரோ '' கடவுளே நீ சாதித்துவிட்டாய்' என்று கூறி 90 நிமிடங்கள் படம் குறித்து என்னோடு பேசிக்கொண்டிருந்தார்.
நான் அப்படியே நெகிழ்ந்து போய்விட்டேன். உலகிலேயே மிகவும் வெற்றிகரமான இயக்குநர் தன்னுடைய படத்தினை பாராட்டிப்பேசுகிறார் என்றால் மகிழ்ச்சியாக இருக்காதா என்ன! படத்தின் காட்சியமைப்பு, ஒலியமைப்பு குறித்து கேட்டறிந்தார். அல்போன்ஸோ இதில் இணைந்ததும் கூட அப்படித்தான். அவர் எனது சிறந்த நண்பரும் கூட. 1942: எ லவ் ஸ்டோரி படத்தினைப் பார்த்துவிட்டு உடனே அது குறித்து வெளிப்படுத்திய உணர்வுகள் மேன்மையானதாக இருந்தது.
தற்போது படங்களை தயாரிக்க மட்டுமே செய்கிறீர்கள். படம் இயக்க இடைப்பட்ட ஆண்டுகளில் முயற்சிக்காமல் ஏன் இவ்வளவு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்?
காரணம் கதையை எழுதிக் கொண்டிருந்ததுதான். ஐந்து ஆண்டுகளும், 62 கதைக்குறிப்புகளும் உள்வாங்கப்பட்டுத்தான் ப்ரோக்கன் ஹார்ஸ் திரைப்படம் உருவானது. நான் இவ்வளவு நேரமும், உழைப்பும் இங்கே வழங்கவில்லையென்றால் நல்ல படமாக உருவாகியிருக்கமுடியாது. பிகே படத்திற்கான தொகுப்பு பணிகள் ஏறத்தாழ ஒரு ஆண்டு நடந்தது. சிலர் என்னை தற்பெருமை பேசுபவனாக நினைக்கலாம். நான் அடக்கமானவன். இல்லையென்றால் பிகே படத்தினை ஏன் மேம்படுத்தி இவ்வளவு காலம் செலவு செய்து வெளியிடவேண்டும்?; உடனே வெளியிட்டிருக்கலாமே?
கருத்து என்பதைத்தாண்டி பலருக்கும் இன்று மிஷன் காஷ்மீர் படத்தினை பிடித்திருக்கிறது. வெளிவந்த காலத்தில் சரியாக இப்படம் ஓடவில்லை என்று நினைத்திருக்கிறீர்களா?
நான் அதற்கு ஹிருத்திக்கை தேர்வு செய்தபோது, அவர் அவ்வளவு புகழ்பெற்றவராக இல்லை. பின்பு அவர் சிறந்த கலைஞராக, நடனமாடுவராக உயர்ந்தபோதும் அச்சூழலில் அவை எனக்கு உதவ வில்லை. வான்கா தன் வாழ்நாளில் வரைந்த ஒரு ஓவியம் கூட விற்கவில்லை என்பதற்காக அவர் மோசமான ஓவியர் என்று அர்த்தமல்ல. அவரின் காலத்தில் மக்கள் அவரைப் புரிந்துகொள்ளவில்லை. நான் திரைப்படங்களை உருவாக்கும்போது, மக்கள் நான் காலத்தைத்தாண்டி படத்தினை உருவாக்குவதாக கூறுகிறார்கள். காலத்தை நிச்சயம் ஒருநாள் பிடித்து பயணிப்பேன் என்று நினைத்து சிரித்துக்கொள்வேன். அது என்னை தொந்தரவு செய்வதில்லை.
விதுவினோத் சோப்ரா பிலிம்ஸிற்கான திட்டங்கள் ஏதும் இருக்கிறதா? ஸ்டூடியோ ஒன்றினை உருவாக்குவதற்கான திட்டம் ஏதேனும் வைத்திருக்கிறீர்களா?
யாராவது என்னிடம் தன்னுடைய ஸ்டூடியோவை தந்துவிட்டால் நிச்சயம் அதை என்னால் கையாள முடியாது என்று ஆதித்யா சோப்ராவிடம் கூறினேன். நேர்மையாக கூறவேண்டுமெனில் என்னிடம் எந்த திட்டங்களும் இல்லை. இப்போது திட்டமெல்லாம் தேநீரோடும், சோளப்பொரியோடும் நல்ல உரையாடலை தங்களிடம் மேற்கொண்டிருக்கிறேன் என்பது மட்டுமே. உறங்கச் செல்லும்போது நான் கண்விழிப்பேனா என்பது கூட எனக்குத் தெரியாது. எனவே இன்று என்பது நன்றாக இருக்கிறது. நாளை என்பது நாளை வருவதுதானே!
சுனில் தத் இறந்தபோது, சஞ்சய் அழைத்து இருந்ததினால் அங்கு இருந்த சிலரில் நானும் ஒருவன். அவரது படுக்கையில் ஒரு காகிதத்தாள் இருந்தது. இன்றும் அதனை நான் கொண்டு இருக்கிறேன். அந்த தாள் முழுவதும் அந்த மாதம் செய்யவேண்டிய வேலைகள் குறித்த திட்டங்களின் பட்டியல் இருந்தது. அந்த மாதம் செய்யவேண்டிய வேலைகளைத்தான் சுனில் தான் இறப்பதற்கு முன் படித்திருந்தார். அதனால் நான் திட்டமிடுதல் என்பதை நினைப்பதும் இல்லை. கடைபிடித்ததும் இல்லை. நல்ல படங்களை உருவாக்குவது என்பதை மட்டுமே நான் திட்டமிடுகிறேன். அவ்வளவுதான்.
தங்களது திரைப்படம் குறித்த உண்மையான விமர்சனங்களை திரையுலக பெரும் நட்சத்திரங்கள் யாரேனும் தந்திருக்கிறார்களா?
அதிக அகங்காரம் கொண்ட சிறிய மனிதர்கள்தானே நாம். இந்தியாவிலுள்ள பெரிய நடிகர் (அ) இயக்குநர் வீட்டிற்கு வந்து என்னுடைய படத்தினைப் பார்ப்பார்கள் என்று என்னால் கற்பனை கூட செய்யமுடியவில்லை. ஆனால் அப்படி நிகழ்ந்தது. அமிதாப் லகே ரகோ முன்னாபாய் படத்தினை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பெய்ன் வாங்கி அனுப்பிவைத்தார். சிலர்தான் இப்படி இருக்கிறார்கள். ஆனால் பொதுவாக நாம் பலரும் மற்றவர்கள் குலைந்து போவதைத்தானே விரும்புகிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக