மழைக்காலத்தின் ஒரு சிறு வெயில்பொழுது













மழைக்காலத்தின்
 ஒரு சிறு வெயில்பொழுது





மோகனசுந்தரம்








தலைப்பு: மழைக்காலத்தின் ஒரு  சிறுவெயில்பொழுது
வகை: புனைவு
ஆசிரியர்: மோகனசுந்தரம்
தொகுப்பாசிரியர்கள்: ரிச்சர்ட் மஹாதேவ், பியர்சன் கயே
உருவாக்கக்குழு: லிஸா ஜோஸ், ஷைனி, நிகில் வாசுதேவ்
பதிப்பாசிரியர்கள்: அம்பறா சுப்பிரமணி, லோக்கல் ப்ரூஸ்லீ, சுய்யா
மின்னூல் பதிப்புரிமை மற்றும் வலைப்பூ வெளியீடு: தி ஆரா பிரஸ் & Komalimedai.blogspot.in
மின்னஞ்சல்: sjarasukarthick@rediffmail.com
வெளியீடு: ஏப்ரல் 2015
அட்டை வடிவமைப்பு: Incrdible bug

கிரியேட்டிவ் காமன்ஸ் உலகளாவிய உரிமத்தின் கீழ் வெளியிடப்படும் இந்த மின்னூலினை யாவரும் வாசிக்கலாம், பகிரலாம். மூலத்தில் மாற்றம் ஏதும் இல்லாத முறையில் பயன்படுத்தவேண்டும். வணிக முறையில் பயன்படுத்தும்போது வலைப்பூ, மற்றும் மின்னஞ்சல் முகவரியினை குறிப்பிடவேண்டும்.




பேஜ் 3


இனிய தோழமைகளுக்கு, வணக்கம். இந்த நூலைப்பற்றி கூற வேண்டுமெனில் இது காதல் காக்டெய்ல் எழுத்துக்கள் என்று கூறலாம். இதுவரை ஆரா பிரஸ் பதிப்பித்த நூல்கள் அனைத்தும் கட்டுரைகள் என்று மட்டும் இருந்தன; ஆனால் இந்த நூல் புனைவு நூலாக வெளிப்பட்டுள்ளது. பழைய புத்தகக் கடையில் நாளிதழ்களை விற்க கொண்டு போனபோது  ஒரு நாட்குறிப்பில் சிதறிக்கிடந்த கடிதம் ஒன்றினைப் படித்தபோது அது தனித்துவமான உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருந்ததைக் கண்டு இந்த நாட்குறிப்பை கண்டுபிடித்து எடுத்துவந்து நண்பர்கள் இணைந்து தொகுத்தோம். அன்பு, நட்பு, எதிர்காலம், குடும்பம் என பல திக்குகளில் பிரச்சனைகளில் திளைக்கும் கல்லூரி கால மனம் ஒன்றின் பதிவுகள்தான் இவை. வாசிக்கும் யாருக்கும் இவை கல்லூரிச்சாலைகளில் கைபிடித்து நடந்த கரங்கள் குறித்த நினைவுகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

கடித பக்கங்களில்தான் இதை எழுதியவர் பெயரை சிறிது சிறிதாக யூகம் செய்து அதனை குறிப்பிட்டிருக்கிறோம். அவர் நிறைய எழுதியுள்ளபோதும், பலமுறை வாசித்து இதனை வெளியிடலாம் என்று தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளோம். உண்மையில் வெளியிடப்பட்டவை என்பதைவிட வெளியிடாதவைதான் ஆசிரியர் யார் என்பதைக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது மின்னூல் என்பதால் அதுபோலான செயல்பாடு தேவைப்பட்டது. இன்று தொடக்கத்தில் மிக கடினமாக எழுதினால் அது வாசிப்பை மிக அயர்ச்சியாக்கும் என்பதால் இலகுவான நூல்கள்தான் வாசிப்பிற்கு முதலில் தேவை உதா. ராஜேஷ்குமார், சுபா, ப.கோ.பி, சுஜாதா என்று தொடர்ந்து வந்து ஜெயமோகனை வாசிப்பது விஷயங்களை உள்வாங்குவதற்கு சரியானதாக இருக்கக்கூடும். தொடர்ந்து ஊக்கப்படுத்திவரும் மணப்பாறை ப்ருத்விராஜ், மெய்யருள், எழுத்தாளர் ஸ்ரீராம்,  கணியம் ஆசிரியர் ஸ்ரீநிவாஸன் ஆகியோருக்கு எமது நன்றிகள் கோடி. நன்றி!
அன்புடன்,
ரிச்சர்ட் மஹாதேவ்
பியர்சன் கயே
மற்றும் ஆராபிரஸ் பதிப்புக்குழு.










2002









ஹேப்பி நியூ இயர் 2002



1

மலரோடு மணமாக மட்டுமல்ல உன் மனதோடு துணையாகவும்
நான் இருப்பேன்!


2

இத்தனை நாள் மௌனத்திற்கு காரணம் பிறகு சொல்கிறேன். இனிமேல் நம் நட்பிற்கு மௌனம் தடையாக வேண்டாம்.














 1 ஜனவரி செவ்வாய்


எனது சிநேகிதிக்காக...



 2 ஜனவரி புதன்

கல்லூரியில் எனது நாள் இன்று கவலைகளுடன் தொடங்கியது. இந்த வருடம் எனக்கும், நண்பர்களுக்கும், என் தோழிகளுக்கும், பவிக்கும், இனிய வருடமாக அமைய இறைவனை வேண்டிக் கொண்டேன். போன வருடத்தின் தவறுகளை இனி செய்யாமல் திருத்திக் கொள்ளப்போகிறேன். சில கெட்டப் பழக்கங்களை விட முயற்சி செய்கிறேன்! என்னால் பிறருக்கு எந்த துன்பமும் நேர விடாமல் பார்த்துக் கொள்வேன். எனது கொஞ்சூண்டு கவி எழுதும் திறனை தமிழ் கொண்டு உயர்த்திக் கொள்ளவேண்டும். எனது தோழிக்கு நல்ல தோழனாக இருக்கவேண்டும். இனிமையான சொற்களைப் பேசி இளமையை இனிப்பாக்க வேண்டும். நிறைய்ய... புக் படிக்கணும். பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துணிவு வேண்டும். வெற்றிகள் வேண்டும். இந்த வருடம் நிறைய சாதிப்பேன் என்ற நம்பிக்கை ஒளி மனது ஃபுல்லா இருக்கு! பார்க்கலாம்.





ஜனவரி 3, வியாழன்

மண்ணிலுள்ள அழகெல்லாம்
மௌனமாய் ஒன்றுகூடியதோ!
பெண் உன்னை படைத்து
பேரதிசயமாய் உலவவிட்டதோ!

கண்கள் உன்னை காட்டியதால்
காதல் வந்து சேர்ந்தது
ஆயிரம் பெண்கள் இருக்க
அழகே உன்னைத்தானே என் மனம் தேடியது.


4 ஜனவரி வெள்ளி

மஞ்சள் உடை ஃப்ரீ ஹேரில் ம்.. சூப்பர்

காதலர் தின ஸ்பெஷல்

இமைப்பொழுது அறிமுகத்தில் இதயத்தை ஈதல்!
விரகமெனும் நரகத்தில் அனுதினமும் நோதல்!
உயிர்தேடி உயிர்தேடி தவணைமுறையில் சாதல்!
பூவுக்குத் தவமிருந்து சருகாக ஆதல்!
தவங்கள் செய்து செய்து
சாபம் வாங்கிப்போதல்!
இரவெல்லாம் தூங்காமல்
இணையின் பெயர் ஓதல்!
பற்றியெரியும் நினைவுத்தீயில் பற்றுடனே தீதல்!
இவ்வுலகில் இவற்றுக்கெல்லாம் இன்னொருபெயர்
 காதல் ! காதல் ! காதல் !

- ஆ.வி வந்த கவிதை


5 ஜனவரி சனி

எதைப்பற்றி எழுதுகிறாய்
என்னைப்பற்றியும் எழுதேன்
என்று தினம் தினம்  கொஞ்சுகிறாய்!
மழையில் நனைவது சுகமா?
மழைபற்றி எழுதுவது சுகமா?

7 ஜனவரி திங்கள்

நான் கொண்ட காதலை நிஜமா என்று கேட்டனர் நண்பிகள். காதல் இரு உள்ளத்தில் உருவாவது. அதை நான்கு பேருக்கு மத்தியில் அம்பலப்படுத்த எனக்கு ஆசையில்லை. என் காதல் உனக்கு மட்டுமே தெரிந்தால் போதும் ஊருக்குத் தெரிய வேண்டாம்.

8 ஜனவரி செவ்வாய்

ஏன் என் வாழ்க்கையில் மட்டும் இத்தனை ஏமாற்றங்கள்? சே.. சந்தர்ப்பத்தை பயன்படுத்தத் தெரியாத முட்டாள் நான்! சிலரின் சுயநலங்களை காட்டிய ஆண்டவனுக்கு நன்றி! வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் எத்தனை வலிகள், அடிகள்? இனி நான் ???

11 ஜனவரி வெள்ளி

ஊருக்குப் பயந்து உசுருன்னை மறச்சேனே!
உள்ளுக்குள்ள வெச்சதால உபத்தரமா ஆனதடி
உன் நெனப்பென்னைக் கொல்லுதடி!

நெனப்பெல்லாம் நடந்துதின்னா
சாமியெல்லாம் என்னத்துக்கு?
பேசாம பேசறனே
கண்ணீருல பதிலு சொல்லறனே
மீளவும் பாக்க நேரந்தான் ஒதவுமா?
மறுபடியும் மண்ணுல பெறப்பேன்
ராசாத்தி கையப் புடிப்பேன்!

15 ஜனவரி செவ்வாய்

போனவருடம் இதே நாள் பவி ஊருக்கு வந்ததும், நான் அதை பார்க்கும் முன்பே புறப்பட்டுச் சென்றுவிட்டது. இந்தவருடமும் இதே நாள் சந்திப்பு நிகழ சந்தர்ப்பம் அமையவில்லை.

21 ஜனவரி திங்கள்

இன்று வானதி டைரி கொடுத்தாங்க. ரொம்ப சந்தோஷமாக இருந்தேன். நானும் அவங்களுக்கு ஒண்ணு கொடுத்தேன். பிரச்சினை விரைவில் தீரும் என்று நம்புகிறேன்.


23 ஜனவரி புதன்

இன்று வானதி காலேஜூக்கு லீவ் போட்டுட்டாங்க. சாயந்திரம் நான் போன் பண்ணி பேசினேன். சிறிய இடைவெளிக்குப் பிறகு பேசியபோது மிகுந்த மகிழ்ச்சி.

24 ஜனவரி வியாழன்

இன்று பொங்கல்! நண்பர்களுடன் சந்தோஷமாகக் கொண்டாடினேன்.

25 ஜனவரி வெள்ளி

இன்று வானதி தன் ஃபேவரைட்டான புன்னகையுடன் என்னைப் பார்த்து சிரித்தது. நீண்டநாள் கழித்து இன்றுதான் வகுப்பில் பேசினோம். ஒரு சின்ன விளையாட்டு விளையாடினேன். பொயக்கோபம் வானதிக்கு. மகிழ்ச்சி.

26 ஜனவரி சனி

இன்று சிவராம் வீட்டில் சாப்பிட்டேன். நிறைய பேசினோம். ஆனந்தவிகடனின் 'ரொமான்ஸ் ரகசியங்கள்' படித்தேன். நாளை வானதியிடம் பேச வேண்டும். பார்க்கலாம். பவிதாவையும் பார்த்து பேசவேண்டும்.

28 ஜனவரி திங்கள்

இன்று வானதியிடம் பேசினேன். பஸ்ஸில் நான் அதைப்பார்த்தேன். அதுவும் என்னைப்பார்த்தது. போன் பண்ணிப் பேசினேன். மகிழ்ச்சியாகவும் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. இந்த மகிழ்ச்சியும் மரணித்துவிட்டால்???

2 பிப்ரவரி சனி

இன்று வானதியிடம் பேசியதை தமிழ் மேடம் பார்த்துவிட்டு வானதியை கூப்பிட்டு ஏன் பேசினாய்? என்று கேட்டது. என்னால் தேவையில்லாத பிரச்சினை!

5 பிப்ரவரி செவ்வாய்

நான் நினைத்தது உண்மையில் உறுதியாகிவிட்டது. அதிகம் ஆசைப்படக்கூடாது. ஆசைப்பட்டதெல்லாம் நடக்கணும் என்று நினைப்பதும் ரொம்பத் தப்பு. நம்ம ப்ரெண்ட் இப்ப மாதிரியே எப்பவும் நல்ல இருக்கணும். இனிமேல் பேசமுடியாது. பேசி என்ன ஆகப்போகுது. ஒழுங்காப் படிக்கணும். நல்ல மார்க் எடுக்கணும். கவிதக்காவை பஸ்ஸிற்கு கொண்டு போய்விட்டேன். நிறைய பேசினோம்.

6 பிப்ரவரி புதன்

நிழல் - கவிதை, மனமுருங்கை - கதை சாக்லெட் - 4 முறை, வளையல், ஹிந்தி புக், கதைப்புத்தகங்கள், ரப்பர் நிறைய முறை போன், கடிதம் - 6 முறை இரண்டு முறை இடையில் பிரச்சினை வந்து கொஞ்ச நாள் பேசாமல் பார்க்காமல் இருந்தோம். ஒவ்வொரு முறையும் நான்தான் விட்டுக் கொடுத்தேன். மறக்கமுடியாத நாள் - நான் பவி கொடுத்த வளையல் போட்டுக் கொண்டு வானதி காலேஜ் வந்தது. என்மேல் துளியளவாவது ...... இருக்கிறதை நினைத்து கொஞ்சம் சந்தோஷம்.




9 பிப்ரவரி சனி

பவி வீட்டுக்கு வந்து எனக்காக காத்திருந்தது. இரவு வீட்டிலேயே தங்கி தூங்கி காலையில் வீட்டுக்கு போலாம்னு சொன்னேன். பவியோட நிறைய பேசினேன்.... ரொம்ப நாளைக்குப்பிறகு.

10 பிப்ரவரி ஞாயிறு

எதையோ மனசு தேடிக்கொண்டிருப்பது எனக்குத் தென்படுகிறது. எதை? காதலி? தோழி? அன்பு? வேறு எது? என்னைப்பாராட்டவும் ஒரு ஜீவன் உண்டு. அது பவி. இன்னமும் ஒரு நிலையில்லாமல் மனம் அலைபாய்கிறது! ஆன்மீகத்தில் சேர்ந்துவிடலாம் என்று கூட சமயத்தில் நினைக்கிறேன். முன்புபோல ஓர் நிம்மதியான நிலை இப்போது இல்லை. ஒரு குழப்பமான தெளிவற்ற, பிரச்சினைகள் உள்ள பாதையில் பயணிக்கும் நான் என்றுதான் அமைதியான, அழகான, ஓய்வான ஒரு பொழுது என்று அமர்வது? நாளைக்கு மெடிடேஷன் க்ளாஸ் போகலாம்னு பார்க்கிறேன். பார்க்கலாம்.

12 பிப்ரவரி செவ்வாய்

ஒரு பூ உதிர்ந்த நாள்! முகம் பார்க்காத பூவே! உன் மணம் தெரியுமுன்னே நீ மரணத்தை தழுவியது ஏனோ? எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டால் விரும்பு கிடைத்ததை. பிரச்சினைகளுக்கு தீர்வு மரணமென்றால் மண்ணில் உயிர்களே இருந்திருக்காது. உன் பெற்றோர்களின் கனவு கலைந்துவிட்டது. அவர்களின் வாழ்க்கை உனக்கானது. ஆனால் உன் வாழ்க்கை.



13 பிப்ரவரி புதன்

இன்று வானதி அடிக்கடி என்னைப் பார்த்தது போலிருந்தது. ச்சும்மா பார்த்திருக்கும்.  நாளை காதலர் தினம். 2001 ஞாபகத்திற்கு வருகிறது(ரூ, பூ)

15 பிப்ரவரி வெள்ளி

அழகி படத்தின் பாடல்களைக் கேட்டேன். பாட்டு சொல்லி சூப்பர் சாங். ஐ லைக் வெரி மச். லைன்ஸ் ஆர் வெரி சூப்பர்.

17 பிப்ரவரி ஞாயிறு

18 வயது பிறந்துவிட்டது. இந்தப் பிறந்தநாளும் துன்பங்களின் தொடக்கமாகத் துவங்கியது. காலையிலேயே அம்மாவின் கண்களில் கண்ணீர் வர நானும் காரணமாகிவிட்டேன். பவி வீட்டிற்கு வரவில்லை. மனசே சரியில்லை.

18 பிப்ரவரி திங்கள்

வானதிக்கு 'நேற்றுப்போட்ட கோலம்' கவிதை கொடுத்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு வானதியைப் பார்த்தேன். பவி லெட்டர் கொடுத்தது. நிறைய அட்வைஸ் பண்ணியது. ரொம்ப சந்தோஷம்.  தொடுக்கப்படாத மலர்கள் - அனுராதா ரமணன். வாழ்க்கை என்பதே புரியாத வயதில் காதல் என்ற தெரியாத உறவால் உண்மையான அன்பையும், உறவையும் உதறிவிட்டு ஓடிப்போகின்ற ஒரு பெண்ணின் கண்ணீர்க்கதை. சூப்பர். பாபு ஈஸ் எ ரியலி க்ரேட் பர்சன்.

19 பிப்ரவரி செவ்வாய்

வாழ்க்கையில் எதிர்பாராமல் என்னவெல்லாமோ நடந்துவிடுகிறது. நமது சந்திப்பும் கூட அப்படித்தான். திடீரென்று என் வாழ்க்கையில் முளைத்து கிளைத்து மிகப்பெரும் விருட்சமாய் வளர்ந்துவிட்டாய். காதல் பற்றி உன் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தினம் தினம்  மனதிற்குள் உன்னுடன் பேசி, சிரித்து, விளையாடி இப்படி நிறைய...  கனவுகளுக்கு எல்லையில்லை.  நான் என் கனவுகளுடனாவது சிறிது காலம் சிறிது காலம் மகிழ்ச்சியாய் இருந்திருப்பேன்! உண்மை எனக்கு உறைத்த பின்பு என்னால் உறங்க முடியவில்லை.

என் இரவுகள் விடியவே இல்லை. தவறாக புரிந்துகொண்டது நம்மிருவரில் யாரேனுமாகவோ இருக்கலாம். எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஏதேதோ ஒரு நொடியில் பூக்கிறது காதல். உன்னைப் பற்றியும், உன் உறவுகளைப் பற்றியும் தெரிந்த பிறகு வருவது காதல் அல்ல. உன்னை என்று பார்த்தேனோ அன்றே என் மனதில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்து போனது. நீ என் உறவு என்றதும், உயிரே நீயாக உருமாறிவிட்டாய் என்னுள். என் குணங்கள் அப்படியே உனக்கும் இருப்பதுதான் ஆச்சர்யம். ஆனந்தம். காதல் நீ வெறுக்கும் விஷயம். அதனால்தான் சொல்லலாமா? வேண்டாமா? என்கிற குழப்பம் எனக்குள். நான் எழுதும் கவிதைகளில் உன்னைப்பற்றி எழுதும் போதெல்லாம் அதன் அழகு கூடிவிடுகிறது. ஆழம் அதிகரித்துவிடுகிறது. அடர்த்தி அதிகமாகிவிடுகிறது. உனக்கு என்னை காதலிக்காமலிருக்க நிறைய காரணங்கள் இருக்கலாம். ஆனால் என்னிடம் உனக்கு கொடுக்க நிறைய இல்லை என் மனதைத்தவிர; அன்பைத்தவிர; காதலைத்தவிர.

இந்த வயதில் காதல் வேண்டாம் என்று சொல்கிறாயா? அல்லது என்னை நினைச்சு கிடைக்காம போயிட்டா உன்னால தாங்கமுடியாது அப்படீங்கிறியா? என்னைப் பிடிக்கலையா? பயமா? எது உன்னிடம் உள்ளது? உன்னைக் காதலித்த நான்  உன்னை மட்டும் காதலித்துக் கொண்டு இருப்பேன் எப்போழுதும். உன் நிம்மதியே என் சன்னதி. உன் புன்னகையே என் புதையல். உன் நினைவுகளே எனக்கு நிரந்தரம்...

உன் பாதைகளிலேயே என் பயணம்... உன் மனதோடுதான் என் ஜீவனும்.. உன் வார்த்தைகளில்தான் என் வாழ்க்கை!!

காதலையும், நட்பையும் குழப்பிக்கொண்டு கனவுகளில் மூழ்கிக் கொண்டு யதார்த்தத்திற்கு அப்பால் நிழல்களோடும், இன்று நிஜம், நாளை பொய் என்பதை உணர முடியாதவனும் ஆகிய அப்பாவி இளைஞன் ஒருவனின் முடிவு நோக்கி அவள் முகவரிக்கு அவன் எழுதியது. ஆனால் அவள்...?

உன் முகம் பார்த்து நான் கொண்டது காதலில்லை என்று நான் சொன்னபின்னும்.. நட்புதான் என்று தெரிந்து உன்னோடு நான் உரையாடும்போதும்... ஒவ்வொரு நொடியும் உன் முகம் பார்க்கும் போதும்... உன் கண்களில் நான் கரையும் போதும்.. உன் சினேகமான சிரிப்பை சிந்தும்போதும்... மறக்கப்பட்ட காதலானது, மறுபடியும், மறுபடியும் ஓடிவந்து ஓய்வெடுத்துக்கொள்ள என் இதயம் தேடுகிறது. காதலை நான் ஒத்திவைக்கவா? பொத்திவைக்கவா?


23 பிப்ரவரி சனி

என்னையும் என் வாழ்க்கையையும் அப்படியே இல்லாவிட்டாலும் 75% பிரதிபலித்தது ரோஜாக்கூட்டம். ஆச்சர்யப்பட்டுப்போனேன். சமீபத்தில்  நடந்த நிகழ்ச்சிகளை திரையில் பார்த்தபோது மனது நெகிழ்ந்தது. பாடல்கள் சூப்பர்.

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ?
கண் தோன்றி மறையும் கானல் நீரோ?

நீயொரு ரோஜாக்கூட்டம்
மொட்டுகளே மொட்டுகளே
காதலிதான் தூங்குகிறாள் காலையில் மலருங்கள்
சத்தம் வந்து அவள் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது.

ஸ்ரீகாந்த் + பூமிகா = மேட் பார் ஈச் அதர்.

24 பிப்ரவரி ஞாயிறு

என் உயிர் சினேகியோடு இன்று சில மணிநேரங்களை செலவிட்டேன். கவிதை நூலொன்றை கடன் தந்தது பவி. முன்பு போல மனம்விட்டு பேச முடியவில்லை. இழந்துவிட்ட நினைவுகள் மறுபடியும் நடக்குமா? என்றைக்குமே பவிக்கு பிடிச்சமாதிரி நடந்துக்குவேன். மனது கஷ்டப்படுகிறத மாதிரி நடந்துக்க மாட்டேன். நான் என்ன தவம் செய்தேனோ? இதுபோல ஓர் உயிர் தொடர்புள்ள உறவு கிடைக்க? தேங்ஸ் ஃபார் லார்ட் ஷிவா!

25 பிப்ரவரி திங்கள்

நான் கனவுகளுக்கு மட்டுமே சொந்தக்காரனாக இருப்பதால்தானோ என்னவோ நீ என்னிடம் விடை பெற்றுக்கொண்டு போன பின்பும் நீ இருந்த பொழுதுகளின் மிச்சங்கள் என் படுக்கையில் கனவுகளாக கண் விழிக்கின்றன. இமைகள் மூடியிருந்தாலும், இதயம் என்னவோ, விழித்துக் கொண்டேதான் இருக்கிறது. என்னையும் உன் நினைவுகளையும் தூங்க வைக்க ஒரே வழி நீதான்.

நிஜங்களை நேசிக்கும் நேசக்காரியே! நிழல்தான் நான் என்று தெரிந்தபின்னாலும் ஒட்டி வருகிறாயே, ஓடி வருகிறாயே! நீ நிஜமாக இருப்பதால்தான் நான் நிழலாக இருக்கிறேன். நீ நிழலாக இருப்பதால்தான் நான் நிஜமாக இருக்கிறேன்.

26 பிப்ரவரி செவ்வாய்

கிறுக்கல்கள் - ரியலி சூப்பர்ப்.. எல்லாக்கவிதைகளுமே உணர்வுகளில் பூத்து உருக வைக்கும் இயல்புடையன.

7 மார்ச் வியாழன்

இன்று காலேஜ் டே. வானதி ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. என்னை ஏன் வெறுக்குது? விலக்குது? அதனாலென்ன? பரவாயில்லை. அது சந்தோஷமாக இருந்தால் போதும். ட்ரிங்க்ஸ் சாப்பிட்டேன். கார்த்திக் காலேஜ் வந்தான். கடன் 40 ரூபாய் வாங்கினேன்.

10 மார்ச் ஞாயிறு

இன்று அழகி படம் பார்த்தேன். என் மனதை என்னவெல்லாமோ செய்துவிட்டது. கொஞ்சம் அதிகமான பில்டப்போ?







ஹாய் மோகன்,

  யுவர் பவி. இன்று உன்னைப்பார்த்ததில் அளவில்லா சந்தோஷம். பேசலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அம்மா இருந்ததால் பேசவில்லை. என்னால் உனக்கு எந்தவகையிலும் கஷ்டம் வேண்டாம் என்றுதான் பேசவில்லை. உனக்காக தண்ணீர்தேசம் கவிதைப்புத்தகம் கொண்டு வந்திருந்தேன். நான் உனக்கு கொடுத்த கொடிமரத்தின் வேர்கள் கிடைத்துவிட்டதா? உன்னுடைய பர்த்டேக்குப் பிறகு உன் கடிதத்தை எதிர்பார்த்தேன். உன் கடிதம் கிடைத்ததில் சந்தோஷம். அதில் நான் எதிர்பார்த்திருப்பேன் என்று எழுதியிருந்தாய் அல்லவா? அப்படியில்லை நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு தூரம் பழகி இதைக்கூட புரிஞ்சுக்கலைன்னா நான் வேஸ்ட்.

நீ பேச மாட்டாய் என்று எனக்கு நல்லாவே தெரியும். சனிக்கிழமை என்னைப் பார்த்ததாய் எழுதியிருந்தாய். நான் உன்னைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் கண்டிப்பாய் பேசியிருப்பேன். அந்தக் கடையில் இருந்த பெண் என்னுடைய க்ளாஸ்மேட்(ஸ்கூல்) சரியான வாயாடி. அவளுடைய நேம் கஸ்தூரி. அன்றுதான் உங்க காலேஜ் பஸ் அந்த வழியாக வரும் என்று எனக்குத் தெரியும். நான் சரியாக கவனிக்கவில்லை. நான் அன்று காலேஜ்க்கு லீவ் போட்டுட்டேன். நீ கொடுத்த வளையல் அழகாக இருந்தது. எப்படி சரியான அளவில் எடுத்தாய்? நான் லாஸ்ட் வீக் வீட்டிற்கு வந்திருந்தபோது (23.2.2002) வானதிக்கு போன் பண்ணியிருந்தேன். அவங்க அப்பா இருந்ததால சரியா பேசமுடியல. உங்களுடைய ப்ரெண்ட்ஷிப் எப்படி போய்க்கொண்டிருக்கிறது? எந்தப் பிரச்சினையும் இல்லையே? நீ எனக்கு எழுதிய இரண்டு கடிதத்திலிருந்து நீ சரியில்லைனு மனசுக்குத் தோணுது. சரியா, தப்பான்னு தெரியலை. உன்னுடைய ப்ரெண்ட்ஸ் சர்க்கிளை நல்லபடியாக அமைத்துக்கொள். நீ பழகிறவங்களை வைத்துதான் உன்னை மதிப்பிடுவாங்க. ஓகே.



இந்த மேட்டர் உனக்கு தெரியுமான்னு தெரியல. பிரேமா (உன் அத்தை பொண்ணு) க்கு அவங்க க்ளாஸ் பையன் ஒருத்தன் வேலன்டைன்ஸ் டே அன்னிக்கு ஐ லவ் யூ கார்ட் கொடுத்துவிட்டிருந்தான். என்னுடைய ஸ்கூல்மேட் சந்திரா எங்கிட்ட காட்டினாங்க. கார்ட் சூப்பரா இருந்துச்சு. பிரேமாகிட்ட கொடுக்கச்சொல்லி சந்திராகிட்ட கொடுத்து விட்டிருந்தாங்க. பிரேமா வாங்கினாளான்னு தெரியல.

நீ எப்படி இருக்கிறாய்? பழைய மாதிரி இல்லையோன்னு நினைக்கிறேன். கரெக்ட்டா? நீ கேட்டிருந்தாயே என் மனசு சுகமா இருக்கா என்று. இல்லவே இல்லை மோகன். உன்னை ரொம்பவே மிஸ் பண்றேன். நாம் பழகின நாட்கள் ஏதோ கனவு மாதிரி தோணுது. தினமும் நைட் உன்னோட பேசிட்டுத்தான் தூங்குவேன். எங்க க்ளாஸ்ல இப்ப நல்ல ப்ரெண்ட் ஷர்மி, ஷோபிபிரபா, ஷரன், நதியா எட்செட்ரா. உன்னிடம் நிறைய சொல்லணும். ஆனா எப்ப சொல்றது? மோகன் இனி உன்னோட பேச முடியாதோன்னு பயமா இருக்கு. பழையமாதிரி பேசமுடியுமா? இனி நான் வீட்டுக்கு வருவது சந்தேகம். நீ நல்லாப்படி. நல்லா சாப்பிடு. முக்கியமாக உடல்நிலையை கவனித்துக்கொள். கடிதம் கிடைத்தவுடன் மறக்காமல் உடனே பதில் எழுது. திங்கள் கிழமை கிடைக்குமாறு எழுது. வருகிற சனிக்கிழமை எங்க காலேஜ்ல ஆண்டுவிழா.  நான் உனக்கு மறுபடியும் கடிதம் எழுதுகிறேன். வீட்டில் எல்லோரும் சுகமா? உன்னைப்பற்றியும் தெரியப்படுத்து.

உனது அன்புள்ள தோழி
பவி








6 ஏப்ரல் சனி

இன்று வானதி மஞ்சள் தேவதை. க்ளாஸ் முடிஞ்சு வர்றப்ப என்கிட்ட சுவையில்லாமல் பேசியது. நாளையிலிருந்து ஸ்பெஷல் க்ளாஸ். தினம் வீட்டில் பணம் கேட்க கஷ்டமாக இருக்கிறது. என்ன பண்றது?

9 ஏப்ரல் செவ்வாய்

அதிர்ஷ்டம் என்பதெல்லாம் உண்மைதான். சரியாக போன வருடம் நாம் சந்தித்துக்கொண்டது.  டும்டும்டும் சினிமா போனது எல்லாம் மனதில் பசுமையாய் இருக்கிறது. 2001 மறக்கமுடியுமா?

நீ குலோப் ஜாமூன் செஞ்சு தந்தது. நான் ட்ரிங்க்ஸ் பண்ணி நீ என்கிட்ட சத்தியம் வாங்கியது. நான் திருந்துவதற்காக நீ அழுதது. ச்சே யூ ஆர் ரியலி வெரி வெரி கிரேட் பர்சன் இன் த வேர்ல்ட்.

10 ஏப்ரல் புதன்

நீ சுடிதார் போட்டிருந்தால் அழகாய் மட்டும்தான் தெரிவாய். ஆனால்   ஹாப் ஸாரியில் மிகவும் அழகாய் இருந்தாய். மனம் விட்டு என்னால் காலேஜில் பேச முடியவில்லை. ஆதலால் இங்கே பாராட்டுகிறேன். வருத்தமில்லையே. சிலபேர் முகத்திற்காக அப்படி இருக்கிறது? இப்படி இருக்கிறது? என்பார்கள். நான் அப்படியா? இல்லைதானே!



11 ஏப்ரல் வியாழன்

போன வருடம் போலவே இந்த வருடமும் 13 ம்தேதி பவியை சந்தித்து மனம்விட்டுப் பேச வாய்ப்பு கிடைத்தது. நாளுக்குநாள் உன்னுடன் பேசும்போது அன்பு எப்போதையும் விட அதிகமாகவே இருக்கிறது.

பேசிய விஷயங்கள் அருகில் அமர்ந்து பயணம் செய்தது. பேருந்தில் மனதிற்கு பிடித்த பாடல்கள் பார்த்தது. உன் அண்மை பெற நான் அதிக தவம் முன்னொரு காலத்தில் செய்திருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். என்னை பெற்றவர்களுக்கு என்மேல் அன்பு இருப்பது இயற்கை.. ஆனால் உனக்கு என்மேல் ஏன் இத்தனை அன்பு, பாசம்.. எதையுமே நீ என்னிடம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் நான்தான் உன்னிடம் ஏதாவதொன்றை எதிர்பார்க்கிறேன். உன்னை விட்டால் எனக்கு உதவி செய்யவும், தோல்வியின் போது தோள்கொடுக்கவும் யார் இருக்கிறார்கள்? சொல்? நானும் எத்தனையோ பேர்களிடம் தினசரி பேசுகிறேன். பழகுகிறேன். ஆனால் உன்னிடம் பேசும்போதுதான் என்னவெல்லாமோ, என் இஷ்டம் போல் எனக்குப்பிடித்த, பிடிக்காத விஷயங்களையெல்லாம் உன்னிடம் கொட்டுகிறேன். நீ விரும்புகிறாயோ? இல்லை அறுவை என்று நினைக்கிறாயோ? அது பற்றி எனக்கு கவலையில்லை.

 மொத்தத்தில் நான் இதுவரை மனசோடு என்னவெல்லாம் பேசுவேனோ அல்லது பேசிக் கொண்டிருக்கிறோனோ அதெல்லாம்தான் உன் காதுகளுக்கு ஒலிபரப்புகிறேன். எல்லாவற்றையும் விட நீ அன்போடு என் பெயர் சொல்லி கூப்பிடுவதும், புன்னகையிலே உன் முகத்தை அலங்கரிப்பதும் உன்னிலே எனக்கு மிகவும் பிடித்தது. உன் தோற்றம் எவ்வளவு அழகாய் இருக்கிறதோ அதுபோலவே என் பவியும் உள்ளத்தில் உயர்ந்த உள்ளம் கொண்டவள்.


நீ என்னைத் திட்டுகிறாய். அதையெல்லாம் நான் கவனமாக சேகரித்து என்னைத் திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன். உன் நண்பன் எப்போதுமே உன் மனம் வருந்தும்படி நடந்துகொள்ள மாட்டான். பேருந்தில் உன்னை திடீரெனப் பார்த்ததும் எனக்குள் ஏகமாய் சந்தோஷ அலை. உடனே ஓடி வந்து உன்னோடு பேசினேன். அந்த கவிதக்கா ஏறத்தாழ என்னைப்போலவே இருப்பதுபோல தோன்றியது. எவ்வளவுதான் உன்னோடு பேசுகின்ற போதும், அலுக்கவேயில்லை. வானதி கிட்ட கூட நான் (தற்போது) அதிகமாக பேசமாட்டேன். உன்னைப் பார்த்ததும் எப்படியோ ஒரு துணை இணை கிடைத்த மகிழ்ச்சி மனதில். பெரிய துரோகம் எது தெரியுமா? நம்ப வைத்து கழுத்தறுப்பது. என்கிட்ட நான் வேற ஒருத்தரை லவ் பண்றேன்னு சொல்லவேண்டியதுதானே? மறைச்சது ரொம்பத்தப்பு. என்னைப் பொறுத்தவரையில் அன்று ஏற்பட்ட வலியை உன் ஆறுதல் வார்த்தைகளால் ஆற்றிக்கொண்டேன். என் காயங்களுக்கு அழ உன்னைத்தவிர வேறு யார் இருக்கிறார்கள்?

நீ என்னோடு மட்டும் இருக்கவேண்டும். எனக்கு மட்டும் தோழியாக இருக்கவேண்டும். என்னமோ தெரியவில்லை. உன்னை என்னால் கவிதைக்குள் கொண்டுவரவே முடியவில்லை. உன் அன்பு அசாதாரணமாய் இருப்பதால்தான் இது சாத்தியமாகிறதோ? நீ என்னிடம் நல்ல பையனா இருக்கணும் என்று சொல்வாய். எல்லோருமே உன்னைப் போலவே என்னைப் புரிஞ்சுக்கிட்டு இருப்பதில்லை. அதனால்தான் உன்போல் யாரும் என் மனதில் இடம் பிடிக்கவில்லை. நான் ஒரு உண்மையை சொல்லட்டுமா? வானதியை நான் உண்மையில் லவ் பண்ணவில்லை. சாதாரண ப்ரெண்டா பழகலாம். சொந்தம் வேற. நான் நல்ல பொசிஷன் வந்தா மேரேஜ் பண்ணிக்கலாம்னு சின்ன ஆசைதான். நாளடைவில் அதுவே மனசு பூரா நிறைந்துவிட்டது. அதனால்தான் அவளை வேறு யார்க்கும் விட்டுக்கொடுக்க என்னால் முடியவில்லை. நீ சொன்ன மாதிரி நடக்கிறது நன்மைக்கு, நடக்காதது ரொம்ப ரொம்ப நல்லது.


இந்த தீமை ஒரு புத்தகத்தில் படித்தேன்.
''நிகழ்வது எவ்வளவு சந்தோஷமோ அவ்வளவு சந்தோஷம் நிகழாமல் போவதிலும் ஏற்படவேண்டும்''

எப்படி உலக அறிவு உனக்குள் இவ்வளவு இருக்கிறது. என்ன இருந்தாலும் உன்னை மிஞ்ச என்னால் முடியாது. உன் பொறுமை, அடக்கம், ப்ராப்ளம் சால்வ் பண்றவிதம் நம்மைச் சுற்றியிருக்கிறவர்கள் நம்மை பிரிக்க நினைத்தாலும் முன்பை விட அதிகமான உன் நெருக்கம் இதைத்தான் நினைத்துக் கொள்வேன் அடிக்கடி. இப்பவே இவ்வளவு எழுதினேன். இந்த டைரி பூராவும் உன்னைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். சிறிய இடைவெளிக்குப்பிறகு எழுதுவேன்.

16 ஏப்ரல் செவ்வாய்

யார்கிட்டதான் தவறுகள் குறைகள் இல்லை. நம்மகிட்ட ஆயிரம் குறைகளை வைச்சுக்கிட்டு அடுத்தவங்க ரொம்ப சுத்தமா, நல்லவங்களா யோக்கியமா இருக்கணும்னு நினைக்கிறது எந்த விதத்தில் நியாயம்? முதலில் நாம ஒழுங்கா பர்பக்டா இருக்கணும்.

24 ஏப்ரல் புதன்

இன்று அக்கவுண்ட்ஸ் எக்ஸாம். காலை எட்டு மணிக்கு 'ரூ' வை பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன். நீண்ட நாள் கழித்து இந்த சந்திப்பு நிகழ்ந்தாலும் சுவையில்லாமலும், சுவாரஸ்யமில்லாமலும் இருந்தது போல் தோன்றியது. ஒருவேளை வெறுக்கிறேனோ தெரியவில்லை.




25 ஏப்ரல் வியாழன்

தேங்க்ஸ் காட். பவிகிட்ட பேசினேன். சந்தோஷம்னா அது கூட இருந்த நான் இருந்த நிமிடங்கள்தான். பவி என்னைப்பார்க்க வரும்போதெல்லாம் மகிழ்ச்சியை, இனிப்பான விஷயங்களை கட்டி இழுத்துட்டு வரும்போல! அதோட நல்ல மனசுக்கு எல்லாம் அது ஆசைப்பட்ட படியே நடக்கும். நடக்கணும்.

1 மே புதன்

இன்று கேர்ள் ப்ரண்ட்ஸ் மீட்டிங்க்கு பிறகு மாமா வீட்டுக்குப்போனேன். அங்க போய் தம்பி, அம்மாவைப் பார்த்தேன். கள் குடித்தேன். மனது வருத்தப்பட்டது. ஏன் என்று தெரியவில்லை.


2 மே வியாழன்

வருடம் ஒரு பெண்ணுடன் ப்ரெண்ட்ஷிப் ஆரம்பிச்சு அதுல ப்ராப்ளம் ஆகி ஸ்டாப் ஆயிடுது. முதல்ல ரூ, இப்ப வா. ஆனாலும் எனக்கும் பவிக்கும் எப்போதும் போல உறவு தொடர்கிறது. என்னிக்குமே விரிசலும், இடைவெளியும் விழாமல் இருக்கிறது. தினம் இறைவனை நினைத்து வேண்டிக்கொள்கிறேன்.

3 மே வெள்ளி

இன்னிக்கு பவி போன் பண்ணுச்சு. நல்லா பேச முடியலை. கம்ப்யூட்டர் க்ளாஸ் போகுது. எப்படியோ அதுக்கு ஒரு ரிலாக்ஸேஷன் கிடைச்சதுல மகிழ்ச்சி. மறுபடி பவிகிட்ட பேசலாம்னு போன் பண்ணுனா பேச முடியவில்லை. சரி பரவாயில்லை.

4 மே சனி

இன்னியிலிருந்து வேலை சத்தி கடை. சேலரி எவ்வளவுன்னு தெரியலை. பார்க்கலாம். பவி போன் பண்ணிருக்கு. நான் இல்லை. திங்கள்  -வெள்ளி வரை 2 மணிக்கு போன் பண்ணுதாம். பேசமுடியுமான்னு பார்க்கலாம்.

13 ஜூன் வியாழன்

காலேஜ் செகண்ட் இயர் - ஐயம் ஆல்வேஸ் ஹேப்பி. பட் ஐ டோன்ட் ஸ்பீக் வானதி. எக்ஸ்ட்ரீம்லி சாரிடா வானதி.

21 ஜூன் வெள்ளி

வானதி லெட்டர் - ஐ ரீட் . ஐயம் வெரி ஹேப்பி அண்ட் ப்ரவ்ட் ஆப் மை பெஸ்ட் ப்ரண்ட் வானதி. ரியலி யூ ஆர் வெரி க்ரேட். எனிவே யூ ஆர் மை பெஸ்ட் ப்ரெண்ட்.

22 ஜூன் சனி

இன்று வானதிகிட்ட பேசினேன். என்னமோ தெரியலை. வானதி மேல  சந்தேகப்பட்டு எவ்வளவு வெறுப்பு காண்பிச்சேனோ அந்த அளவை விட பல மடங்கு அன்பு அதுமேல வந்திருக்குது.. வானதியை விட்டு அதுகூட பேசாமல் என்னால் இருக்கவே முடியாதுன்னு தோணுது. எப்படி இது நடக்குது?


5 ஜூலை வெள்ளி

ரொம்ப நாளைக்குப்பின்னாடி ரூ வை பார்த்தேன். வீட்டிற்குப் கூப்பிட்டேன். அதைப் புரிஞ்சுக்கவே முடியலை. வீட்டிற்கு வந்தது. நல்லா பேசிச்சு. என்னாலதான் பேச முடியலை.

15 ஜூலை திங்கள்

நான், முகமது ஈரோட்டில் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படம் பார்த்தோம். வீட்டிற்குப் போனபோது மணி இரவு 11.00.

16 ஜூலை செவ்வாய்

வானதி லெட்டர் கொடுத்தது. செல்வா வீட்டுக்கு வந்தான். தங்கவேலு வீட்டுக்குப்போனோம்.

17 ஜூலை புதன்

இன்று பவி பிறந்ததனால் இந்த நாளுக்கு பெருமை. ப்ரியமானவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து இங்கே. நேரில் சந்திக்க முடியுமா? பார்க்கலாம்.

1 ஆகஸ்ட் வியாழன்

ஒண்ணு கொடுத்தா ஒட்டுமொத்தமா பத்து வாங்க நினைக்கும் இந்த உலகத்தில் நான் கேட்கிறதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறாய். நீ எதுவும் கேட்க மாட்டேங்கிறாய். மென் மஞ்சள் உடையில் இன்று உன்னைப்பார்த்ததும் புதுசாய் பார்ப்பது போல இருந்தது. நீண்ட நாள் இடைவெளி. நாட்களுக்குள் மட்டுமே இடைவெளி. நமக்கில்லைதானே. நலம் கூட விசாரிக்கவில்லை. என்னால் இப்படி நேரம் கடந்த பின்னாலோ சந்தர்ப்பம் நழுவியோ, பிறகோதான் சந்திப்பில் பேசியிருக்கலாமோ? என்ற எண்ணங்கள் நிறைய தோன்றுவதுண்டு.

நீ எதையுமே எதிர்பார்க்காமல் உண்மையான அன்பை மட்டுமே என்னிடம் எதிர்பார்க்கிறாய். என் அன்பை எப்படி உனக்கு வழங்குவது? வார்த்தைகளிலா? வடிவங்களிலா? நூல்களிலா? பரிசுகளிலா? இப்படி வழங்கப்படும் அன்பு என்றோ ஒருநாள் வாசமிழந்து வாடிவிடலாம். எனவே என்றும் உன்னோடு நானிருந்த நிமிடங்களை சிந்தையில் வைத்திருக்கிறேன். உன் அமைதி + அமைதியான உருவத்தை கண்களில் வைத்திருக்கிறேன். உன் அன்பான கனிவான, இதமான, குறும்பான கொஞ்சலான மொழிகளை காதுகளில் வைத்திருக்கிறேன். எனக்காக நீ அழுத கண்ணீரை எனது கசப்புகளை கழுவ பயன்படுத்திக்கொண்டேன். இனியொரு முறை கண்ணீர் உன் விழிகளில் வழியக்கூடாது. இந்த எழுத்துக்களை என் முன் நீ வாசிக்க அந்த இறைவன் வரம் கொடுப்பாரா?  பார்க்கலாம். கொஞ்சம், கொஞ்சமாய் உன் வெள்ளை மனசு மாதிரி நானும் மாறி வருகிறேன். இப்பவெல்லாம் வகுப்பில் யாரிடமும் பேசுவதில்லை. மௌனம் எனது பாஷையாகிவிட்டது. வானதியிடம் முன்பு ஒரு பார்வை பார்க்க மாட்டாளா என்று ஏங்கும். அதே மனம் இப்போது ஏன் அலைகிறது என்று களையெடுக்கிறேன். தேவையில்லாத ஆசைகள் மனதில் புகுந்ததால் விளைந்த விளைவுகள் எனக்கும் உனக்கும் மட்டுமே தெரியும். எனை புரிந்துகொள்ள உன்னைத்தவிர யாரால் முடியும்???

4 ஆகஸ்ட் ஞாயிறு

இந்த வருடம் பாடங்கள் முதுகில் கனக்கும் சுமைகள். சுகமாக ஒரு நிமிடம் கூட செலவு செய்ய முடியவில்லை. நீ வேதியியல் படிக்கிறாய். நீ பெரிய அளவில் அந்தத் துறையில் வந்துவிடுவாய். வரணும். அதுதான் எனது ஆசை. உனது லட்சியமும், அதாக இருக்கட்டும். ஜாதகப்படி இது நடக்கும். பாரேன்.

  நான் பழசை நினைத்து நினைத்து சாப்பிடாம இருந்து உடல் உருகி எலும்பும் தோலுமாக ஆயிருச்சு. நீ மட்டு்ம் என்கூட இருந்தாப்போதும். உன்னைவிட குண்டா ஆயிடுவேன். கனவாக இருந்தாலும் ஒரு நாள் நடக்கணும்கிறது என் ஆசை..ஆசை.. ஆசை.

7 ஆகஸ்ட் புதன்

தாழம்பூவே உன்னால் எங்கள் உறவு மறுபடியும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. சேர்த்துவைத்தாய்! மறுபடியும் பிரிவு வராது அல்லவா?

9 ஆகஸ்ட் வெள்ளி

வானதி கூட 1104 செகண்ட்ஸ் பேசினேன். வானதி வீட்டுக்கு வரணும்னு சொல்லுச்சு. ரொம்ப ரொம்ப சந்தோஷம். வானதி வீட்டுக்கு வந்தா இந்த டைரி கொடுத்து படிக்கச்சொல்லணும். என்மேல அது ரொம்ப பாசமா இருக்கணும். எனக்காக மட்டும்... அது மட்டும்தான் என் ப்ரெண்ட்ஷிப்ங்கறது. அது புரிஞ்சுக்கணும்.. புரிஞ்சிக்குமா தெரியலை..

10 ஆகஸ்ட் சனி

காலேஜில் பிரச்சினை. போடா வெண்ணைக் காலேஜ். அப்புறம் ரொம்ப ஜாலி ஆ ஆயிட்டேன். சும்மா ஜோக்குக்கு 1000 ரூ பைனா சொன்னாங்களாட்டம் இருக்குது. ஒரே காமெடியாவல்ல இருக்குது.


11 ஆகஸ்ட் ஞாயிறு

வானதிக்கு போன்.. அம்மா எடுத்துட்டாங்க. இன்று தங்கவேலு வீட்டுக்குப்போனேன். சோபனா வீட்டுக்கு போன் பண்ணிக்கேட்டேன். சோபனா அவங்க அம்மாகிட்ட பேசினேன். திட்டினாங்க.

12 ஆகஸ்ட் திங்கள்

வானதிகிட்ட போன் பண்ணிப் பேசினேன். ஊருக்கு வர சம்மதம் தந்தது.

13 ஆகஸ்ட் செவ்வாய்

உன்னைப்பார்க்கும் வரை மனதின் துடிப்பு அடங்கவேயில்லை. நீ வருவாயா? மாட்டாயா? என்று. நீ வந்தாய். என் வாசல் எங்கும் பூக்கள் விரிக்க முடியவில்லை. வருத்தமில்லைதானே. நிறைய பேசமுடியவில்லை என்றபோதும் நிறைவாய் இருந்தது நீ வந்த என் வீடு. நிழலாய் போய்விடுமோ? என்ற என் எண்ணத்தைப் பொய்யாக்கினாய். கண் முன்னே நிஜமாக்கினாய். இனிமேல் உன்னை கண்டிப்பாய் தக்க வைத்துக் கொள்வேன். இறைவன் தீர்ப்பு எப்படியோ? நடப்பவை எல்லாம் நன்மைக்கே. நாளை நடப்பதும், நடந்துவிட்டுப் போகட்டும். இனிமேலும் எதிர்பார்த்து ஏமாற தயாரில்லை. நடப்பது நடக்கட்டும். காலம் போடும் கோலம். நீயும் நானும் வெறும் மாயம்.



20 ஆகஸ்ட் செவ்வாய்

உனக்குள் இருக்கும் அன்பை எத்தனையோ வழிகளில் வெளிப்படுத்துகிறாய். நான் எதைச்செய்து என் நட்பை வெளிக்காட்ட. நீ மட்டுமல்ல உன் அம்மா, ஆத்தா, பவி .. உங்க வீட்டுக்கு வர ரொம்பவே சந்தோஷமாய் இருந்தது. ஆனாலும் வீட்டில் சொல்லவில்லை என்ற பயம் ரொம்ப, ரொம்ப பயந்து போய்தான் வந்தேன். ஆனா அம்மா நல்லா பேசினதால தெளிஞ்சிட்டேன்.

உங்க வீட்டு சூழ்நிலை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அங்கு வந்து என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அப்புறம் நீ கொடுத்த பிஸ்கட் சாப்பிடவில்லை. அன்று பசிக்கவேயில்லை. சந்தோஷமாக இருந்தால் பசிக்காது என்பது உண்மைதானோ! அந்தக்கிணறு, ரோஜாச்செடி ரொம்ப, ரொம்ப பிடிச்சது.

அந்த சூழ்நிலையில் பவி இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று இரவு நினைத்தேன். பவி கூட பேசி ரொம்ப நாள் ஆயிட்டது. இந்த சாட்டர்டே போன் பண்ணலாம்னு இருக்கிறேன். அதற்கு முன்பே என் ப்ரெண்ட் மூலம் லெட்டர் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.

உனக்கென்று எதுவும் வாங்கி வரவில்லையென்று வேதனைப்பட்டேன். எவ்வளவு பாசமான அம்மா, பரிவான ஆத்தா, நீ கொடுத்து வைத்தவன். உன் அம்மாவிடம் எவ்வளவு பாசமாய் பழகுகிறாய். எது சொன்னாலும் கேட்கிறாய். எந்த விஷயத்தையும் குழந்தை போல அம்மாவிடம் பேசுகிறாய். உன் தம்பி பச்சைக்குழந்தைதான்.

நீ ட்ரிங்க்ஸ் சாப்பிட்டதாய் நீயே சொன்னவுடன் எனக்கு உன் முகம் பார்த்து பேசவே பிடிக்கவில்லை. பிறகு இனிமேல் செய்யமாட்டேன்னு நீயே சொன்னதால் நம்பினேன். இனிமேல் இப்படி செய்யமாட்டாய் என்று நிச்சயமாய் .... நம்புகிறேன்.

எனக்கு சில வேளைகளில் ரூ வை நினைத்தால் ரொம்ப பாவமாய் இருக்குது. அதுக்கு நான் லெட்டர் போடட்டுமா? நீ இஷ்டப்பட்டால்! நீ எல்லா நிகழ்ச்சிகளையும் கவிதையாக வடித்து விடுகிறாய். அந்த முயற்சியில் நானும். படித்துப்பார்.

உங்க வீட்டுக்கு வந்ததை கொஞ்சமாய் என் அம்மா காதில் போட்டு வைத்தேன்.

''நீ பாதையில் பூ விரிக்கவில்லைதான் ஆனால் உன் அன்பு என்ற பாதையில் பாசம் என்னும் மலரை பரப்பினாயே அதுவே போதும்''

என்றென்றும்
வானதி

17 ஆகஸ்ட் சனி

இன்னிக்கு வானதியை பார்க்கலை. என்னமோ மாதிரி இருக்குது. ஈரோடு அம்மாயி வீட்டுக்கு போனேன். ஏனோ கஷ்டமாய் இருந்துச்சு.

19 ஆகஸ்ட் திங்கள்

இன்னிக்கும் காலேஜ் போகலை. வானதிக்கு போன் பண்ணினேன். என் டைம் சரியில்லை போலிருக்கு. எடுக்கலை. அதுகிட்ட பேசியிருந்தா நல்லாயிருந்திருக்கும். மூணு நாளாயிருச்சு பாத்து.



26 ஆகஸ்ட் திங்கள்

என் பிரியமான பெண்ணுக்கு இன்று பிறந்தநாள்.

மறந்தே விட்டேன் பிறந்தநாளை. என் பிறந்தநாள் என்று நீ கூறித்தான் எனக்குத் தெரியும். எனக்கு சந்தோஷம் தாங்க முடியலை. கல்வெட்டு ரொம்ப பிடிச்சது. மேலும் அந்த ரோஸ் ரொம்ப அழகு. தேங்க்ஸ் மை டியர் ப்ரெண்ட். உன்கூட பேசக்கூட முடியலை சாரி.

நீ தந்த லெட்டர்ஸ், புக்ஸ் எல்லாம் இதில் இருக்கு. இன்னிக்கு நான் சந்தோஷப்பட்ட அளவுக்கு கவலைப்பட்டேன். பூபதி கிரீட்டிங் அனுப்பி இருந்தான், என் ப்ரெண்ட்ஸ் மூலமா. அதை 1000 தூளாய் கிழித்தபிறகுதான் நிம்மதியானது. அதற்கு முன்னால் எனக்கு சனி பிடித்துவிட்டது. இன்னிக்கு நான்  கனிமொழி அக்கா  ஊரில் இருந்து வந்தேன். எங்க வீட்டுக்கு யாரோ போன் பண்ணி எங்கம்மாகிட்டயே எனக்கு விஷ் பண்ணியிருக்காங்க. ஏதோ ஒரு பையன் யாருன்னு தெரியலை. எங்கம்மா, அப்பா ரெண்டுபேரும் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க. ரொம்ப பயப்படுத்தினாங்க.

இனி ஒரு போன் கால் வந்தாலும் நான் என்னாவேனோ.. ஏன்தான் இப்படி பிரச்சனை வருதோ தெரியலை.

இந்த லெட்டர்ஸ் எல்லாம் கொஞ்சநாள் கழிச்சு வாங்கிக்கிறேன். போட்டோ வேண்டாம் ப்ளீஸ். தினமும் இந்த முகத்தை நேரில் பார்க்கிறாய். இனி போட்டோவில் வேறயா?

உன் போட்டோ உங்கிட்ட கொடுத்திட்டேனா? சரியான ஞாபக மறதி. உன் போட்டோவை வீடு முழுக்கத் தேடினேன். கிடைக்கவில்லை. என்னமோ நடக்குது வீட்டில். ப்ளீஸ் உன்கிட்ட போட்டோவை கொடுத்திட்டனான்னு சொல்லு விரைவில்.

நீ நினைத்த அளவு எனக்கு எழுதத் தெரியவில்லை. செகண்ட் பிஎஸ்சி சி.எஸ்சில் என் ப்ரெண்ட் ஷோபனா அக்கா, அவர்களோட ப்ரெண்ட் ஒரு அண்ணன் புக்ஸ் மாத்தும்போது நம்ம ஹெச்ஓடி பாத்துட்டாராம். ஸோ, நாம ரொம்ப கேர்புல்லா இருக்கணும். ஓகேவா..

உன்னோட ப்ரசென்ட்ஸை அக்காகிட்ட காட்டப்போறேன். தப்பில்லையே?

ஓகே. அடுத்து ஏதோ ஒரு வகையில் சந்திப்போம்.

உன் தோழி
வானதி

6 டிசம்பர் வெள்ளி

ரம்ஜான் அப்பாஸ் வீட்டில்... சிவா வீட்டில் இரவு தங்கினேன். ஜாலி.

9 டிசம்பர் திங்கள்

இன்று சந்தோஷமாக இருந்தது. பவி லெட்டர் படிச்சதுனால. வேற ஒண்ணும் இல்லை.

12 டிசம்பர் வியாழன்

வானதிக்கு இருமல் தேன் + மிளகு கொண்டுபோய் கொடுத்தேன். முதலில் அதுக்கு சித்திரக்கூடு மீதி தந்தேன். பியூட்டி புக்ஸ் தந்தேன்.
 


துணை நின்றவை
லினக்ஸ் மின்ட் 17, லிப்ரே ஆஃபீஸ் 4, ஐபஸ் தமிழ் மென் பொருள், இன்க்ஸ்கேப் 0.48, ஜிம்ப் 4.8

  . ஸ்வாகதம் .

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்