புனித பசு


புனித பசு
ஆனந்த் டெல்தும்டே

தமிழில் - அன்பரசு ஷண்முகம்




நீண்ட பட்டியலாய் நீளும் தேவாலயங்களின் மீதான தாக்குதல்கள், கர்  வாப்ஸி குறித்த கபடமான பேச்சுகள், இந்துத்துவத்தைக் காக்க இந்துப்பெண்கள் குறைந்தது நான்கு குழந்தைகளேனும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி பிறப்பிக்கப்படும் ஆணைகள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் உக்கிரமாகி தொடர்ந்து அவர்கள் இழிவுபடுத்தப்படுவது என்று செயல்பட்டுவரும் பாரதிய ஜனதா கட்சி இந்துத்துவவாதி மேம்பாட்டு வளர்ச்சியில் கவனம் குவிக்கும் வகையில் புனித பசு என்பதனையும் அதில் இணைத்துக் கொண்டுள்ளது.

மார்ச் 3 அன்று, மகராஷ்ட்ரா அரசு பசுக்களையும் அதன் கன்றுகளையும் இறைச்சிக்காக கொல்வது மட்டுமல்லாமல் அதன் இறைச்சியை வேறு எந்த வகையிலும் வைத்திருப்பது கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என்று கூறும் கொடிய சட்டத்தினை அங்கீகரித்து செயல்படுத்தியுள்ளது. மகராஷ்ட்ரா அரசு இத்தகைய இறைச்சி குறித்து பல்வேறு தடைகள் மற்றும் வழிமுறைகளினை முன்பே கொண்டுள்ள மாநிலம் ஆகும். 
மகராஷ்ட்ரா விலங்குகள் பாதுகாப்புச்சட்டம் 1976 ஆனது  இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதை  தடுப்பதோடு, அதன் ஆண் (அ) பெண் கன்றுகள் கொல்லப்படுவதையும் முற்றாகத் தடுக்கிறது. 1995 ஆம் ஆண்டு பி.ஜே.பி - சிவ சேனா கூட்டணி அரசு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து எருதுகள், எருமைகள், பசுக்கள் அவற்றின் கன்றுகள் கொல்லப்படக்கூடாது என்று மாற்றி அவற்றை ஒப்புதல் பெற தலைமைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மத்தியில் தொடர்ந்து வந்த அரசுகளில் பி.ஜே.பி யின் தேசிய ஜனநாயக் கூட்டணி தொடர்ந்து நிலைபெற முடியாததினாலும், காங்கிரஸ் ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கும் மேல் அதில் இருந்ததால் மாநிலம், மத்தியில் என்று எதையும் எளிதாக செய்ய முடியவில்லை. ஆனால் இன்று மத்தியிலும், மாநிலத்திலும் பி.ஜே.பி அதிகாரத்தைக் கொண்டுள்ளதால் சட்டத்தினை மிக எளிதாக அதன் சர்ச்சைக்குரிய, கடுமையான தண்டனைகளோடு தான் ஆளுகின்ற பல மாநிலங்களில் அமுல்படுத்த பெரும் போட்டியே நிலவிவருகிறது. ஹரியானாவில் மனிதனைக் கொன்றால் எப்படி தண்டனைகளோ அதுபோலவே இறைச்சிக்காக மாடுகளை வெட்டினாலும் என்று கூறி கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மக்கள் தாம் விரும்புவதை உண்ணும் அடிப்படை ஜனநாயக உரிமையை இவை தடுப்பதோடு உண்மையான பொருளாதார அழிவை வரவேற்கும் விதமாக உள்ளது என்றும் உணரப்பட்டுள்ளது. நம் நாட்டில் 26 மில்லியன் குழந்தைகள் ஆண்டுதோறும் பிறக்கிறார்கள். அதில் தோராயமாக 1.83 மில்லியன் குழந்தைகள் தமது ஐந்தாவது பிறந்தநாளுக்கு முன்பே இறந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் இரண்டு தலித்துகள் படுகொலை செய்யப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்துகொண்டு இறக்கிறார்கள். ஆண்டிற்கு 130 பேர் குழு வன்முறைக்கு பலியாகிறார்கள். அரசின் மக்கள் விரோதக்கொள்கையால் உண்டாகும் இயற்கையான வன்முறையினால் பல மில்லியன் மக்கள் பாதிப்படைகிறார்கள். எப்படி இத்தனைப் பிரச்சனைகளினூடே துணிச்சலாக பசு மட்டும் முன்னுரிமை பெற்றது? எப்போது ஏழைப்பசு புனித பசுவாக மாறும்? போற்றிப்புகழப்படும் அரசியல் சட்டத்தினால் நாம் பல கெடுதல்களை சந்தித்துள்ளோம் என்றாலும் இந்த தடை உண்மையில் சட்டப்பூர்வமானதுதானா? தொடர்ந்து கூறப்பட்டுவரும் இந்துக்களின் பெரும்பான்மை அதிகம் என்பது இந்தியாவை சிறுபான்மையினர் நாடாக மாற்ற முயலும் சில கொத்துக்களான ஜாதி வகுப்புகள் தவிர வேறு யாருமில்லை.

புனித பசு குறித்த கற்பனை


பாபாசாகேப் அம்பேத்கர் (Riddles of hinduism) எனும் நூலில் இந்துக்களில் எவர் மாட்டிறைச்சி உண்டார் (அ) உண்ணவில்லை என்பதற்கான பதிலை இறுதியில் கூறவில்லை. ரிக் வேதத்தில் பசு பால் தருகின்ற வரை கொல்வதற்கு தகுதியானதல்ல என்று கூறப்பட்டுள்ளது(aghnya). பசுவானது செல்வத்தின் குறியீடாக தொன்மையான விவசாய இனக்குழுக்களான இந்தோ - ஆரியர்களால் கருதப்பட்டு அவை போற்றி வணங்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் இந்த கருவி (அ) புனிதம் என்பதெல்லாம் ஆரியர்கள் பசுவினை உணவுக்காக கொல்வதிலிருந்து காக்க முடியவில்லை. உண்மையைக் கூறவேண்டுமெனில் பசுக்கள் கொல்லப்பட்டதே அந்த புனிதமான தன்மைக்காகத்தான்.

அம்பேத்கர் மராத்தியில் பாண்டுரங்க வாமன் கனே எழுதிய தர்ம சாஸ்திர விசார் நூலினை மேற்கோளாக காட்டுகிறார்: ''வேதகாலத்தில் பசு புனிதமானதாக கருதப்படவில்லை என்று கூறமுடியாது. பசு கொண்டிருந்த அந்த புனிதத்தன்மையே அதனை உண்ணவும் அதிகாரமளித்தது என்று வஜஸ்னேயி சம்ஹிதாவில் கூறப்பட்டுள்ளது''. அபஸ்தம்பா தர்ம சூத்திரம்(15,14,29) ''பசு மற்றும் எருது ஆகியவை புனிதமானவை என்பதால் அவை உண்ணப்படலாம்'' என்று கூறுகிறது.

ரிக் வேதகாலத்தில் ஆரியர்கள் வாள் (அ) கோடாரி மூலம் பசுக்களைக் கொன்று உணவாக உட்கொண்டது ரிக் வேதத்தில் வரும் பல்வேறு ரிச்சாஸ் மூலம் தெளிவாக புலப்படுகிறது. தொன்மையான காலகட்டத்தில்  மரியாதையாக, விருந்தோம்பலாக, கௌரவமானதாக முக்கியமான விருந்தாளிகளுக்கு மாட்டிறைச்சி அளிப்பது கருதப்பட்டு வந்துள்ளது. விருந்தாளிகளுக்காக பசுவினை கொல்வது பின்னாளில் விரிவானதாகி பசுக்களைக் கொல்லும் விருந்தாளிக்கு 'கோக்னா'( Go-ghna)  பசுக்களை கொன்றவர் என்று பெயர் வழங்கலாயிற்று. எனவே இந்துக்கள் பசுக்களைக் கொன்று உண்டு வந்தது தெளிவான குறிப்புகளாக பௌத்த சூத்திரங்களில் யஜ்னாவில் அக்குறிப்பிட்ட காலகட்டங்களை வேதங்கள், பிராமணர்கள் என்பதைத்தாண்டி பார்க்கிலும் தெளிவான உண்மையாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.

மற்றொரு முக்கிய ஆய்வாளரான டி.டி கோசம்பி தனது நூலான (Ancient india -1965) ல் ''வேத காலத்து பிராமணர்கள் கொழுப்பைக்கரைக்க மாட்டிறைச்சியை தியாகம் செய்து உண்ணாது இருந்திருக்கிறார்கள் எனும் நிலையில் நவீன மரபான இந்துக்கள் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்தை நரமாமிசம் உண்ணுவது போல எடுத்துக்கொள்வது ஏன்? '' என்று எழுதியிருக்கிறார்? சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூட தனது (Religion and society) ல் தொன்மைக்காலத்தில் பௌத்தம், சமணம், வைஷ்ணவம் பெற்ற செல்வாக்கினால் அதனை இழிவுபடுத்துவதற்காக பிராமணர்கள் மாட்டிறைச்சி உண்டனர் என்று கூறியுள்ளார். ஆனால் உண்மையில் பல வரலாற்று ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இந்துக்களை குறிப்பாக பிராமணர்கள் குறித்து ஆராய்ந்தபோது அவர்கள் வழக்கமாக மாட்டிறைச்சி உண்ணுபவர்கள் என்ற உண்மையை கண்டறிந்துள்ளனர். 

பௌத்தத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக நடந்த ஒரே போராட்டம் அது என்று குறிப்பிடும் அம்பேத்கர், அத்தகைய பிராமணர்கள் பௌத்தத்தின் சில கொள்கைகளின் மேல் தீவிரமான அக்கறை கொண்டு சைவ உணவுகள் உண்ணுபவர்களாகவும், பசுக்களினை வணங்குபவர்களாகவும் மாறினார்கள் என்று கூறுகிறார். அண்மையில் டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுப்பேராசிரியர் த்விஜேந்திரா நாராயண் ஜா எழுதியுள்ள   The Myth of the Holycow எனும் நூலில் தொன்மைக்காலத்திய இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் அண்மைய ஜெயின் சமூகத்தினர் வரை கொண்டிருந்த மாட்டிறைச்சி உணவுப்பழக்கம் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது.  இந்து வெறியர்களால் இந்த நூல் எழுதிய ஆசிரியர் அச்சுறுத்தலுக்கு ஆளானதால் காவல்துறையினரின் பாதுகாப்பை நாடவேண்டி வந்தது என்பதைக்கூற அவசியமே இல்லை. 

வெறுப்பூட்டும் எதேச்சதிகாரம்


இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்ததால் அவர்களின் கட்டளைகள் நிறைவேற்றப்பட்டன என்று கூறுவது எந்த பகுத்தறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் உட்படாத கற்பனையே ஆகும். இந்துக்களிடையே எண்ணற்ற ஜாதிகள் நீளமான இழையாய் அதிகாரத்தினை தமக்கு உரித்தாக்கிக் கொள்ள சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இவர்களிடையே காலனியாதிக்க காலத்திலிருந்து இன்றுவரை பல்வேறு சடங்குகள் வேறுபட்ட தன்மையினைக் கொண்டுள்ளன. சுதந்திரத்திற்குப் பிறகான காலகட்டத்தில் நாடோடிக்குழுக்கள் முழுமையாக சூத்திர வகுப்பில் இனக்குழுக்களாக இணைக்கப்பட்டனர். தலித் மற்றும் தலித்தல்லாதவர்களிடையே பல்வேறு வகுப்பு வேறுபாடுகள் உருவானது. எண்ணிலடங்காத இந்த ஜாதி அடுக்குகளிடையே உள்ள பல வேறுபாடுகள் உணவுபழக்க வழக்கங்களிலும் உள்ளது. மக்கள் தொகையில் 15% விழுக்காட்டிற்கும் அதிகமில்லாத மேல்தட்டு வர்க்க மேலாதிக்கவாதிகளால் கபடமாக இந்தியர்கள் சைவ உணவுப்பழக்கம் கொண்டவர்கள் என்ற கற்பனை வாதம் பிரசாரமாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுவாக தலித்துகள், ஆதிவாசியினர் மற்றும் சூத்திரப்பிரிவில் கீழே உள்ள மக்கள் மேல்தட்டு வர்க்கத்தினரின் சம்ஸ்கிருத தன்மையோடு இணைந்து நிற்பவர்களல்ல. மாட்டிறைச்சி மற்றும் இறைச்சி உண்பது குறித்த எந்தவித மனத்தடுமாற்றமும் கொள்ளாத மக்களாவர். மேலும் மாட்டிறைச்சி மற்ற இதர இறைச்சிகளோடு ஒப்பிடுகையில் விலை மலிவானது.  புரதச்சத்திற்கு மக்கள் பெரும்பாலும் நம்பியிருப்பது இந்த இறைச்சி ஒன்றுதான் என்பதும்தான் சூழலின் யதார்த்தமாக உள்ளது. 

சூத்திர வகுப்பில் குறைந்த அளவு என்று தோராயமாக பாதி நபர்கள் இல்லையென்று கொண்டாலும், 45% விழுக்காடு இந்துக்கள் இறைச்சி கிடைத்தால் உண்ணுபவர்கள் என்று கருத வாய்ப்புள்ளது. முஸ்லீம்கள் 13.4% விழுக்காடு, கிறிஸ்தவர்கள் 2.3% விழுக்காடு என இவர்களையும் இணைத்தால் 60.7% விழுக்காடு இந்தியர்கள் மாட்டிறைச்சி உண்ணுபவர்களாக உள்ளார்கள். உண்மையில் பல்வேறு வகுப்புகளைச்சேர்ந்த நவீன இளைஞர்களும் மாட்டிறைச்சியினை உண்ணுபவர்களாக உள்ளனர். பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள் என்றெல்லாம் இருந்தாலும் அதனையெல்லாம் தாண்டி உலகில் மாட்டிறைச்சி உண்பவர்கள் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தினைப் பெற்றுள்ளது.
இந்த பெரும்பான்மை வாதம் தவிர்த்து பார்த்தால், 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கால்நடைகளைக் கொல்ல விதிக்கப்பட்ட தடைகளால் வீடுகள், உணவகங்களில் மாட்டிறைச்சியினை உண்ண, சேமிக்க (அ) அவற்றினை சட்டப்படி விற்பது கடினமாகி வருகிறது. 2012 ஆம் ஆண்டு மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு  எதிராக ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் தலித் மாணவர்கள் தமது உணவு தொடர்பான உரிமைகளைக் காக்கும் பொருட்டும், தலித் மற்றும் முஸ்லீம் மாணவர்களின் உணவு குறித்த அரசியல் வெளிப்பாடாகவும்  கல்லூரி வளாகத்தில் மாட்டிறைச்சி கொண்டு பிரியாணி சமைத்து, உண்டு போராட்டம் நடத்தினார்கள். நான் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்க வேண்டியது, ஆனால் சில சூழல்களினால் பங்கு கொள்ள முடியவில்லை. இந்துத்துவ குண்டர்களினால் இப்போராட்டம் தாக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

பொருளாதார அறியாமை


புனிதத்தன்மை கொண்ட பசுவானது தொன்மைக்காலத்தில் மற்றும் இடைக்காலத்தில் விவசாய பொருளாதாரத்தோடு தொடர்புடையதே ஒழிய மதத்துடன் அல்ல. இஸ்லாமிய ஆட்சியாளர்களான பாபர், ஹைதர் அலி, அக்பர், ஜஹாங்கீர், அஹ்மத் ஷா ஆகியோர் கூட இறைச்சிக்காக பசுக்களை  கொல்வதை தடைசெய்தோ (அ) நிபந்தனைகளுடன் அதை அனுமதித்திருக்க கூடும்.  இந்திய சுதந்திர இயக்கத்தில் இருந்த இந்து மேல்தட்டு வர்க்கத்தினர் இந்த உணர்ச்சிகரமான தன்மையை அரசியல் பலத்திற்கானதாக மாற்றிக்கொள்ள பல்வேறு செயல்பாடுகளை செய்தனர். '' நான் பசுக்களை பூஜிக்கிறேன் உலகமே அதனை எதிர்த்தாலும் அவற்றினை பூஜிப்பதற்காக  அதனை எதிர்த்து நிற்பேன்''  என்று கூறிய காந்தியின்  இந்தக்கூற்று பின்னாளில் பெரும் முக்கியத்துவம் கொண்டதாக மாறியது. இன்றைய தாராளமய முதலாளித்துவ உலகில் சமூக டார்வினிஸ்ட் போட்டியில் ப்யூடல் பழக்கமான வணங்குகின்ற (அ) பூஜிக்கின்ற தன்மைகளைத்தாண்டி நமது திறமைகளை அறிவதும், உற்பத்தி சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. கால்நடைப்பொருளாதாரம் என்பது தரம் உயர்த்தப்பட்ட அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை உத்திகளோடு பசுக்கள் அவற்றின் பால் உற்பத்தி நிறைவடைந்த பின் இறைச்சிக்காக மாற்றப்படுவது என்பதை எளிமையாக, பூரணமானதாக மாற்றுகிறது. 

உலகில் 57% விழுக்காடு எருமைகள், 16% விழுக்காடு என உலக கால்நடைகளில் எருமை மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கையில் முதல் இடம் இந்தியாவே பெற்றுள்ளது. 2012 - 2013 ஆம் ஆண்டில் 132.4 மில்லியன் டன்கள் பாலினை உற்பத்தி செய்து உலகின் பெரும் பால் உற்பத்தியாளராக இந்தியா மாறியுள்ளது. இதன் மதிப்பு விவசாய தானியங்களான நெல், கோதுமை, கரும்பு ஆகியவற்றின் ஒன்றிணைந்த மதிப்பை விட அதிகமாக 2,900 பில்லியன் டாலராக உள்ளது. தோராயமாக பால் தரும் ஒரு இந்தியப்பண்ணைப் பசு 1,284 கி. எனவும், ஐரோப்பாவில் 6,212 கி. எனவும், அமெரிக்காவில் 9,117 கி. எனவுமாக உள்ளது. விவசாய செயல்பாட்டில் கால்நடை உற்பத்தி என்பது மிகவும் முக்கியமானதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24.8% விழுக்காடு ஆகவும் பங்களிக்கிறது. பால்பண்ணை,  கால்நடை உற்பத்தி என்பதில் ஆதிக்கம் செலுத்தி கீழ்த்தட்டுவர்க்க  நிலமில்லாத ஏழை (அ) குறைந்த நிலம் கொண்ட மக்கள்  என மொத்தம் 18 மில்லியன் மக்களுக்கு வறுமையிலிருந்து வெளியேறுவதற்கான தற்சார்பான வேலைவாய்ப்பை வழங்குகிறது. அரசின் மேல்வர்க்க கொள்கை வகுப்பாளர்கள் இந்த குறிப்பிடத்தக்க தன்மையை கவனமில்லாது அலட்சியப்படுத்துகிறார்கள்.

கால்நடை வளர்ப்பில் மேற்கத்திய நாடுகள் நவீன தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்தியாவில் பழமையான தொழில் நுட்பங்களையே கால்நடைவளர்ப்பில் கையாண்டு வருகிறார்கள். பால்பண்ணையில் மிகச்சிறந்த முறையில் பால் உற்பத்தியை அதிகரிக்க பசுக்களை சுத்தமான நிலையில் பராமரித்தல், செயற்கை முறையில் கருத்தரிக்க வைப்பது, அதிக பால் சுரக்கும் முதல் இரண்டு கர்ப்பகாலங்களில் மட்டும் பசுக்களை அதனை பலன் பெறும் வகையில் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் பசுக்களை பால் உற்பத்தி இல்லாது போகும்வரையில் அதாவது ஆறிலிருந்து எட்டு கர்ப்ப காலங்கள் வரை ஏறத்தாழ பசுவின் முழுவாழ்வு முழுவதும் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக மேற்கில்  பால் உற்பத்தி அதிகமாகவும், தரமாகவும் இருக்க நான்கு (அ) ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பசுக்கள் மாற்றப்படுகின்றன.

இறைச்சிக்காக பசுக்களை விலைக்கு கொடுப்பது என்பது வீணான ஒன்றுதான் என்பதை விவசாயிகள் அறியாதவர்களல்ல என்றாலும், உற்பத்தி இல்லாத பசுக்களை வெளியேற்ற அவர்களுக்கு வேறு வாய்ப்பும் வழியும் இல்லை என்பதுதான் உண்மை.

இந்துத்துவவாதிகள் பசுக்களின் மீது அன்பு கொள்வதாக பாசாங்கு செய்து அணிதிரண்டு நின்று கால்நடைகளை வளர்க்கும் கீழ்த்தட்டு ஏழை மக்களின் வாழ்க்கை மீது உக்கிரமான தாக்குதலைத் தொடுத்து அவர்களுக்கு தண்டனை அளிக்க முயற்சிக்கிறார்கள். உற்பத்தி இல்லாத பசுக்களை இறைச்சிக்காக விற்பதை கள்ளத்தனமான வணிகம் என்பதாக அதனை விரிவாக்கி நச்சுப்பிரசாரம் செய்கிறார்கள். 

இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவது, அவற்றினை உயிருடன் பராமரித்து வேதனை கொள்வதை விட குரூரமான ஒன்றல்ல. இந்தியாவில் உருவான பிங் புரட்சி அதனை மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி நாடான பிரேசிலுக்கு சமநிலையில் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் எருதுகள் இயற்கையிலே உள்ளதால் இந்த சந்தையில் நாட்டிற்கு கூடுதலான பலம் உள்ளது. கால்நடைகளை இறைச்சிக்காக கொல்வதற்கு தடை விதிக்கப்பட்டால் இந்த கூடுதல் பலமானது விரயம்  ஆவதோடு, கால்நடைகளை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு வாழும், அதனை   விற்பனை செய்தும், உணவாகக் கொண்டும் உள்ள  பல்வேறு கீழ்த்தட்டு ஏழை மக்களின் வாழ்க்கைக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.  

  
ஆனந்த் டெலும்டே எழுத்தாளரும், மும்பையிலுள்ள ஜனநாயக உரிமைகள் சங்கத்தினைச் சேர்ந்த செயல்பாட்டாளரும் ஆவார். மின்னஞ்சல் முகவரி: tanandraj@gmail.com

நன்றி: அருண் நெடுஞ்செழியன், பூவுலகின் நண்பர்கள்.

         இக்கட்டுரையில் அம்பேத்கர் எழுதிய மூல நூலின் பெயர் ஆங்கிலத்தில் உள்ளவாறே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆங்கில நூலின் தமிழாக்கம் வெளிவந்துள்ளதா என்று தெரியவில்லை. ரிக் வேதச்சொற்கள் புரிதலுக்காக மூல கட்டுரையாளரின் கூற்றிலேயே கூறப்பட்டுள்ளது.









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்