உணவுகளை ஆராய பெண் ஷெர்லாக் ஹோம்ஸ் வருகிறார்!


      உணவுகளை ஆராய
பெண் ஷெர்லாக் ஹோம்ஸ் வருகிறார்!


அனிஷா திமான்

                           தமிழில்: ஜோ ஃபாக்ஸ்

பார்ச்சூன் பட்டியலிட்ட 500 நிறுவனங்களில் வெற்றிகரமான மேலாண்மை ஆலோசகராக இருக்கும் வாணி ஹரி இணையத்தில் பெரும் செல்வாக்கு பெற்ற மனிதர்களில் பாரக் ஒபாமா, ஜே.கே. ரௌலிங் ஆகியோர் இடம்பெற்றுள்ள பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, 25 வயதான வாணி ஹரி உடல் எடை அதிகமாகி பல்வேறு உடல்நலப்பிரச்சனைகளுடன் மாற்றம் தேவைப்படும் நிலையில் இதற்கான மூலகாரணத்தை அறியாது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ''மற்ற அனைத்து மக்களைப்போலவே நானும் அமெரிக்க உணவுமுறைப்பழக்கத்தை பின்பற்றி வந்தேன். அலுவலகத்தில் கிடைக்கும் உணவுகள் (அ) சாலையோரத்தில் கிடைக்கும் உணவுகளையும் நான் வேலை செய்யும் பரபரப்பான வேலைநேரங்களுக்கிடையில் சாப்பிட்டுவிட்டு மேலாண்மை ஆலோசகராக பணிபுரிந்துவந்தேன். அதுவே பின் என் உடலை கடுமையான நோய்க்கு ஆளாக்கியது'' என்று கூறும் வாணிஹரியின் பெற்றோர் இவர் பிறப்பதற்கு முன்பே பஞ்சாபிலிருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்து வந்தவர்களாவர். 

இவர் குழந்தையாக இருக்கும்போது ஆஸ்துமா, சிரங்கு, ஒவ்வாமை ஆகிய நோய்களினால் பாதிக்கப்பட்டு பருவகாலங்களைப்பொறுத்து ஆறிலிருந்து எட்டுவகையான மருத்துவக்குறிப்புகளின் அடிப்படையில் ஏகத்திற்குமான மருந்துகளை உட்கொள்ளவேண்டியிருந்தது. ஆனால் பிறகு நடந்ததுதான் ஆச்சர்யமானது. உடல்நலப்பிரச்சனைகள் மெல்ல முற்றிலும் சரியானதோடு, எடையும் இயல்பானதாக உடலுக்கு ஏற்றதாக குறைந்து மாறியிருக்கிறது. ''நீங்கள் உங்களை நடத்தும் விதம் உங்கள் உடலை என்ன உணவு மூலம் பராமரிக்கிறீர்கள் என்பது வாழ்க்கையையே மாற்றும் வித்தியாசத்தைக் கொண்டுள்ளது'' என்கிறார் 35 வயதான வாணி ஹரி.

மருத்துவமனைக்கு சென்று வந்தபின் உடல்நலப்பராமரிப்பு என்பதில் இவரின் முழுகவனமும் குவிந்தது. 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஃபுட் பேபி எனும் வலைப்பூவினைத்தொடங்கி அதில் உணவுகளைக்குறித்து தனது அனுபவங்களைத் தொடர்ச்சியாக எழுதத்தொடங்கினார். ''என் முதல்பெயரின் தாய்மொழி அர்த்தம் குரல் என்பதாகும். ஆனால் இந்த வலைப்பூ பல மில்லியன் மக்களின் குரல்களை ஒலிக்கவைக்கும் என்று நான் நினைக்கவேயில்லை'' என்று கூறும் வாணி தன் செய்திகளை பல மில்லியன் வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறார்.
வாணியின் வலைப்பூ சாதனை அளவாக 54 மில்லியன் மக்களைத்தொட்டிருக்கிறது. ஃபுட் பேபி எனும் இந்த ஆண்டு வெளியான நூல் நியூயார்க் டைம்ஸ் ல் சிறப்பாக விற்பனையாகும் நூல்வரிசையில் இடம்பிடித்துள்ளது. 

2011 ஆம் ஆண்டு சிக்ஃபிலா எனும் துரித உணவகத்தின் சாண்ட்விட்ச்சிலுள்ள கெடுதலான சேர்மானங்களைக் குறித்து வாணி தன் வலைப்பூவில் எழுதினார். பிறகு, வாணி அந்த உணவகத்தின் தலைமையகத்திற்கு பார்வையிட அழைக்கப்பட்டதோடு, 2013 ஆம் ஆண்டு சிக்ஃபிலா நிறுவனம் கெடுதலான நிறங்கள், செயற்கை சோளச்சாறு, TBHQ எனும் வேதிப்பொருட்களை உணவிலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தது. 

2014 ஆம் ஆண்டு சப்வே நிறுவனத்தின் ரொட்டியில் ஆபத்து ஏற்படுத்தும் வேதிப்பொருளான மாவினை தூய்மைப்படுத்துவதில் உதவும் அஸோடைகார்பனமைட் என்பதனை நீக்கக் கோரி ஒருநாளில் 50,000 கையெழுத்துகளை இதற்கு ஆதரவாகப்பெற்று அந்நிறுவனத்திற்கு வாணி ஹரி அனுப்பிவைத்தார். பின்னா் அந்நிறுவனம் வேதிப்பொருளை நீக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்தது. மெக்டொனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ், கோககோலா, சிபோட்டில் என மற்ற பெரிய உணவு நிறுவனங்களும் இவரது எழுத்திற்கான முக்கியத்துவத்தை தந்துவருகிறார்கள். 

''வயதாகும் வரை பதப்படுத்தப்பட்ட, வேதிப்பொருட்கள் நிரம்பிய உணவுகளை உண்டு அதன்விளைவாக நோய்வாய்ப்பட்ட பிறகே நாம் அம்மா தயாரிக்கும் புதிய இந்திய உணவுகளின் பெருமையை உணர்ந்தேன். இந்த குடும்ப உணவுகள்தான் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகளை நமக்கு அளிக்கிறது மேலும் அதனால் உடலில் ஏற்படும் விளைவுகளையும் அறிய உதவியது'' என்று விரிவாக விளக்குகிறார் வாணி ஹரி.
வாணி தன்னுடைய வலைப்பூ மற்றும் புத்தகம் ஆகியவை வாழ்க்கையை மாற்றும் புத்தகங்களை முறையாக பழகுவது குறித்துதான் பேசுகிறது என்பவர் ''நீங்கள் எப்போதும் உணவுக்கட்டுப்பாடு என்பதையே கடைபிடிக்கத்தேவையில்லை'' என்கிறார்.

''மளிகைக்கடைக்கு செல்லும் பழக்கமும் இதில் முக்கியமானது என்று கூறலாம். கோககோலா (அ) டொரிடோஸ் ஆகியவை அடுக்குகளில் இல்லாமல் அதற்குப்பதிலாக இயற்கைப்பொருட்கள் மட்டும் நிரம்பியிருக்கும் தனித்துவமான இயற்கை அங்காடிகளுக்கு செல்வது நல்ல பயனளிக்கும். நான் அதுபோன்ற குறிப்பிட்ட அங்காடிகளைத் தேர்ந்தெடுத்து சென்று நமக்கு ஆசை ஏற்படுத்தும் தேவையற்ற பொருட்களை தவிர்த்துவிட்டு அவசியமான பொருட்களை மட்டும் வாங்கிவருவேன். அதுபோன்ற பொருட்கள் என் மனதில் ஏற்படுத்தும் ஆசையை நான் முன்பே உணர்ந்திருந்தேன். இதுபோலவே 21 முக்கியமான பழக்கங்களை எனது ஃபுட்பேபி நூலில் உடல்நலம் காக்க நான் கடைபிடித்தவற்றை தொகுத்து எழுதியுள்ளேன்'' என்று கூறுகிறார் வாணி.

வாணி தன்னை தற்சார்பு கொண்ட புலனாய்வாளராக கொண்டிருப்பதால், அவரின் விமர்சனங்களுக்கு எதிராகவும் உண்மைகள் அமைந்திருக்கின்றன. ஆனால் இவரது எழுத்தை பின்தொடர்பவர்கள் அதுகுறித்து கவலை கொள்வதில்லை. ''நான் ஊட்டச்சத்து நிபுணரல்ல, உணவு குறித்த புலனாய்வாளர்தான்'' என்கிறார் இவர். ''மேல்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது சியர்லீடிங் குழுவிலிருந்து விலகி விவாதக்குழுக்களில் சேர்ந்தேன். அங்குதான் ஆராய்ச்சி செய்வது பற்றிக் கற்றேன். அப்போது கூகுள் இல்லாததினால், ஒரு மாத கோடைகால விடுமுறையை வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்திலும், இரண்டு கோடை விடுமுறைகளை டர்ட்மவுத் கல்லூரி ஆகியவற்றில் உள்ள  நூலகங்களில் வெவ்வேறு தலைப்புகளில் உள்ளவற்றை வாசித்து கற்றேன். ஒரு ஆண்டு ஒதுக்கி உடல்நலம் தொடர்பானவற்றையும் கற்றேன். அதன்பிறகு என் உடல் நலம் சீர்கேடடைந்ததைத் தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெறும்போது, நான் கற்ற பலவிஷயங்களுக்கும் அதற்கும் தொடர்பிருந்ததைக் கண்டேன். பிறகு நார்த்கரோலினா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றபின், மேலாண்மை நிறுவன ஆலோசகராக ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் பணிபுரிந்தேன். பெரும் நிறுவனங்களின் கொள்கைகளை மாற்றி அவற்றை மேம்படுத்துவதற்கான விஷயங்களை செய்ய உதவினேன். இந்த அனுபவங்கள்தான் உணவுத்தொழில்துறை பற்றியும், அவற்றில் ஏற்படுத்தவேண்டிய மாறுதல்களைக் குறித்தும் எனக்கு அறிந்துகொள்ள துணைநின்றது'' என்கிறார் வாணி. 

வாணி ஹரி உணவுகுறித்த புலனாய்வுகள் பலவற்றையும் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். சில சமயங்களில் இவர் குறிப்பிட்ட உணவகத்திற்குச் சென்று அங்கு வேலை செய்யும் பணியாட்களிடம் அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் குறித்தும் கேட்டறிகிறார். சிபோட்டில் உணவக விஷயத்திலும் இதுதான் நிகழ்ந்தது. 

மூன்று சிபோட்டில் உணவகங்களை பார்வையிட்டபின், கடைக்கு அனுப்ப கொண்டு செல்லும் பணியாட்களிடம் கேட்டு அந்த உணவுப்பெட்டிகளைத் திறந்து அவர்கள் அதனைத்தயாரிக்க என்ன பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கேட்டறிந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அப்பொருட்கள் குறித்த தகவல்களை ஆவணப்படுத்திக்கொண்டு வந்திருக்கிறார். அதன் பிறகு அந்நிறுவனமே அதன் உணவுப்பொருட்களை வெளிப்படையாக இணையத்தில் பட்டியலிட்டதோடு, சர்ச்சைக்குரிய ஆபத்தானப்பொருட்களை நீக்கியதோடு மரபணு மாற்றப்பட்ட பொருட்களை குறித்த தகவலை அறிவிப்பையும் அமெரிக்காவிலேயே முதல் உணவகமாக தானாக வெளியிட்டது.

''அண்மையில் எனது வலைப்பூவில் காணொளிப்போட்டி ஒன்றினை அறிவித்திருந்தேன். அதற்கான வரவேற்பு என்பது நானே எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. நூற்றுக்கும் மேலான மனிதர்கள் தங்களது கதைகளை காணொளி வாயிலாக பகிர்ந்திருந்தார்கள். அவர்களது காணொளி உற்சாகம், அழுகை, கூச்சல், சிரிப்பு, அலறல் என்று பல்வேறு வெளிப்பாடுகளைத்தூண்டியது. நான் நூலில் எழுதியுள்ள செய்திகளை தொடர்ந்து பரப்ப உற்சாகமாக செயல்பட்டுவருகிறேன். இந்த நூல் உலகத்திலுள்ள பல்வேறு தரப்பு மக்களின் உணவுப்பழக்கத்தில் விழிப்புணர்வு கொண்டுவரும் என்று நம்புகிறேன். இன்னும் பல புத்தகங்களை எழுதுவேன் என்று நினைக்கிறேன். அடுத்தது சமையல் புத்தகம் ஒன்று எழுத எண்ணமிருக்கிறது'' என்று உற்சாகமாக சிரித்து விடையளிக்கிறார் வாணி ஹரி.
நன்றி: டெக்கன் கிரானிக்கல் 5.4.2015



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்