'இந்தியாவின் வன மனிதன்'
'இந்தியாவின் வன மனிதன்'
பசுமைப்போராளி ஒருவர் பிரம்மபுத்திரா ஆற்றில் மணல்பரப்பில் 1,00,000 க்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார்.
பிரசாந்தா மஜூம்தார்
தமிழில்: அன்பரசு ஷண்முகம்
30 க்கும் மேற்பட்ட பள்ளிமாணவர்கள் மெய்மறந்து பரவசமாக இந்தியாவின் வனமனிதனான ஜாதவ் பேயங்க் கூறும் உறுதிமொழியினைக் கேட்டபடி அவரைச்சுற்றி நிற்கின்றனர்.
''நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடை மரங்கள் உள்ளிழுத்துக்கொள்கின்றன. அவை வெளியிடும் ஆக்ஸிஜன்தான் நம்மை வாழவைக்கிறது. மரங்களை வெட்டினால் விரைவில் அனைவரும் அழிந்துபோய்விடுவோம். எனவே மரங்களை வீழ்த்தாமல் வளர்ப்போம் '' என்று பேயங் ஆறிலிருந்து எட்டாம்வகுப்புவரையிலான மாணவர்களுக்கு உறுதிமொழி எடுத்துக்கொள்ள அறிவுறுத்துகிறார்.
அஸாம் - நாகலாந்து எல்லையான உரியம்காட் பகுதியிலிருந்து பேயங்கினை சந்திக்க இந்த மாணவர்கள் வந்துள்ளனர். இவரினை முலாய் என்றும் அழைக்கின்றனர்.
குழந்தைகள் பள்ளம் மற்றும் தூசியான சாலைகளைக்கடந்து, பிரம்மபுத்திரா நதியினை இயந்திரப்படகு மூலம் கடந்து தீவினை அடைந்து , அங்கிருந்து ட்ராக்டர் மூலம் முலாய் கதோனி எனும் பகுதியை அடைந்துதான் ஜாதவ் பேயங்கினை சந்திக்கவந்துள்ளனர்.
அஸாம் மாநிலத்திலுள்ள ஜோர்ஹட் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் உள்ள வறண்ட மணற்பரப்பு 500 ஹெக்டேரினை தனி ஆளாக நின்று மரக்கன்றுகளை ஊன்றி பசுமையான வனப்பரப்பாக மாற்றியுள்ளார் பேயங்.
30 ஆண்டுகாலமாக பேயங் வளர்த்துவரும் காட்டில் மொத்தம் 1,00,000 மரங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் காண்டாமிருகம், சிறுத்தை, யானைகள், முயல்கள், வாலில்லாக்குரங்கு, பறவைகள், கழுகுகள், பாம்புகள், மான்கள், காட்டுப்பன்றி மற்றும் காட்டு எருமைகள் என பலவற்றிற்கும் உறைவிடமாக இந்த வனப்பரப்பு இருக்கிறது. காசிரங்கா தேசியப்பூங்கா இங்கிருந்து அதிக தூரத்தில் இல்லை என்பதால் அங்கிருந்தும் பல விலங்குகள் இங்கு வருகின்றன.
''இந்தியாவின் வனமனிதன் என்று பேயங் அழைக்கப்படுகிறார். ஒரு மனிதன் என்னவெல்லாம் சாதிக்கமுடியும் என்பதற்கு இவர் வாழும் உதாரணமாக விளங்குகிறார். உலகமெங்கும் இவரின் செயல்பாடுகளால் பலரும் மன எழுச்சி பெற்றுள்ளனர்.சிறுவயதிலேயே மாணவர்களுக்கும் இதுபோன்ற அகத்தூண்டல்களை ஏற்படுத்த அவர்களை இங்கு அழைத்து வந்துள்ளோம்'' என்று மாணவர்களை அழைத்து வந்திருந்த நான்கு ஆசிரியையகள் தெரிவித்தனர்.
காடுகள் அழிந்துவரும்நிலையில் பேயங்கின் செயல்பாடுகளுக்கும் அஸாமோடு நெருங்கிய தொடர்பு உள்ளது. 2009 - 2011 வரை எடுத்த ஆய்விலிருந்து அஸாமில் 19 ச.கி.மீ காடு மனிதர்களின் ஆக்கிரமிப்பினால் அழிந்துபோயிருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
''1979 ஆம் ஆண்டு வெள்ளம் எங்கள் கிராமம் மற்றும் அருகிலுள்ள பல பகுதிகளை பாதித்தது. அந்த ஆண்டு வனத்துறை வறண்ட மணல்பரப்புகளில் மரங்களை வளர்க்கும் திட்டத்தினை தொடங்கினார்கள். இது என்னை பெரும் உற்சாகப்படுத்த நானும் கலந்துகொண்டேன். பலரும் இதில் வேலையாட்களாக இணைந்தார்கள். இத்திட்டம் நிறைவேறியதும் பலரும் வீடு திரும்பினர். ஆனால் நான் மட்டும் இங்கேயே தங்கி மேலும் பல மரக்கன்றுகளை ஊன்றி வளர்க்கத்தொடங்கினேன். வெள்ள நீர் சில நாட்களில் வடிந்துவிட்டாலும், அது மிகவும் வெப்பம் கொண்டதாக இருந்தது. வெள்ளநீரில் அடித்துக்கொண்டுவரப்பட்ட நூற்றுக்கணக்கான பாம்புகள் அங்கே இறந்துபோய்க்கிடந்தன. நீரில் குதித்தவையும் கூட வெப்பத்தை எதிர்த்துப்போராடி உயிர்வாழும் சூழல் இருந்தது. உண்மையில் அது எதிர்பார்க்காமல் நிகழ்ந்த ஒரு நிகழ்வே. அந்த சூழலை சரிசெய்ய நான் வாழ்நாள் முழுவதும் மரக்கன்றுகளை வளர்க்கத் தீர்மானித்தேன். மூங்கில் கன்றுகளை முதலில் நட்டு வளர்க்கத் தொடங்கினேன்'' என்கிறார் பேயங்.
ஜாதவ் பேயங் வனத்திலிருந்து ஆறு கி.மீ தள்ளி வசித்துவருகிறார். பிரம்மபுத்திரா ஆற்றினை படகு மூலம் கடந்து சென்றுவரும் இவர், சில நாட்களை வனத்தில் உள்ள குடிலில் கழிக்க அங்கேயே தங்கிவிடுகிறார். சில சமயங்களில் இவருடன் மனைவி பினிட்டா மற்றும் மூன்று குழந்தைகளும் தங்குகின்றனர். பசுக்கள் மற்றும் காளைகள் என பல்வேறு கால்நடைகளை வளர்த்துவரும் பேயங் பசுக்களின் பாலை விற்று வாழ்வை நடத்திவருகிறார்.
2008 ஆம் ஆண்டு வனத்துறை அதிகாரிகள் முலாய் கதோனியை பார்வையிட வந்தபோது, காட்டுயானை மந்தைகள் மூர்க்கமாக பக்கத்து ஊர்களுக்கு ஒடியதைக் கண்டபின்பே பேயங்கின் செயல்பாடுகள் உலகத்திற்கு தெரிய வந்தது.
''வறண்ட மணல்பரப்பு பகுதியினை காடாக்க என் முழுவாழ்நாளை செலவழித்துள்ளேன். என்னிடம் பணம் இல்லைதான் என்றாலும், இயற்கையை விரும்பும் மக்களின் மனதில் எழுச்சியை, அகத்தூண்டலை ஏற்படுத்தியதில் நிறைவு உள்ளது. எனது முயற்சிகள் சொந்த மாநிலத்தில் எந்த அங்கீகாரமும் பெறாமல் போனதுதான் பெரும் வருத்தமாக உள்ளது'' என்று குரல் தேய வருத்தமுற்று பேசுகிறார் பேயங்.
2012 ஆம் ஆண்டு பாரீசில் நடந்த உலக வெப்பமயமாதல் மாநாட்டில் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளியானது இவரைப் பாராட்டி கௌரவித்துள்ளது.
''பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ஏப்ரல் மாதம் அதை பெறவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது எனது ஒரே குறிக்கோள் உலகினைக் காப்பாற்ற மக்கள் மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டும் என்பதுதான்'' என்று நம்பிக்கை ஒளிர சிரிக்கிறார் 'இந்தியாவின் வன மனிதன்' ஜாதவ் பேயங்.
கருத்துகள்
கருத்துரையிடுக