நூல்வெளி
















19
                                                                     அபிதா
                                                            லா.ச. ராமாமிர்தம்
                                                                வ.உ.சி பதிப்பகம்

கரடிமலையிலிருந்து ஒரு பிணக்கினால் வேறு ஊருக்கு வந்து சேருபவனுக்கு கிடைக்கும் வேலை பின்னாளில் அவனுக்கு வசதியான வாழ்க்கை, இசைவான மனைவி அமைய காரணமாகிறது. ஆனால் அவன் விரும்பியது கரடிமலையில் உள்ள ஒரு பெண்ணின் மனதை மட்டுமே. முயற்சித்து தோல்வியுற்றது பெரும் பாரமாய் நெஞ்சையழுத்த அவன் கரடிமலைக்கு தன் மனைவியோடு சென்று தன் பழைய தோழியைத்தேடுகிறான். அவள் கிடைத்தாளா, அவள் வாழ்வின், குழந்தைகள் உள்ளார்களா உள்ளிட்ட கேள்விகளுக்கு மீபொருண்மைவாத பதில்தான் லா.ச.ராவின் 'அபிதா'.

நாவல் என்பதைவிட கவிதை நூல் போல எனக்குறிப்பிடலாம். முழுக்க அக உணர்வுகளை, தீவிரமான உணர்வு உந்துதலான உணர்ச்சிகளை கவித்துவ மொழியில் வாசகனோடு பகிர்ந்துகொள்கிறார் லா.ச.ரா. தனித்துவமான அந்தமொழி அவ்வளவு சுதந்திரமாக மனதிற்குள் நுழைந்து வாசிக்கும் ஒவ்வொருவரையும் சூழலில் எளிமையாக பிணைத்துவிடுகிறது.

அபிதா வரும் இடங்களிலெல்லாம் மொழி பொலிவு பெறுகிறது. நீர் சேந்தி எடுத்து குடத்தினை இடுப்பில் வைத்துவரும் இட வர்ணனை, ஆற்றில் துணி துவைப்பது, புதிய ஆடை உடுத்தி வருவது ஆகிய இடங்களில் காதல்மொழியின் பித்துநிலை வசீகரம் மேலிடுகிறது. பூரணத்தை அடைவதுதானே ஒவ்வொரு ஆன்மாவின் இறுதி லட்சியம். தோழியின் உருவமாக தோழியின் மகளான அபிதாவை காணுகின்றவனின் துல்லியமான பெருகி வழிகிற மன உணர்வுகளின் பீறிடலே இந்நாவல். ஒரு முறையல்ல பலமுறை படித்து புரிந்துகொள்ளவேண்டிய நூல் இது என்பது நிச்சயமான உண்மை. 



                                                                   20
பலநேரங்களில் பல மனிதர்கள்
                                                            பாரதிமணி
                                                      உயிர்மை பதிப்பகம்

சுவாரசியமான பல்வேறு மனிதர்களை அறிமுகப்படுத்தி பயணிக்கும் 18 கட்டுரைகளைக்கொண்டுள்ள நூல் இது. இதில் எனக்குப்பிடித்த கட்டுரைகளாக தில்லி நிகம்போத் சுடுகாடு, திருவிதாங்கூர் சமஸ்தானம், தில்லி தமிழ்ஹோட்டல்கள், கையேந்தி பவன்கள், சிங் இஸ் கிங், பங்களாதேஷ் நினைவுகள், பூர்ணம் விஸ்வநாதன் குறித்த கட்டுரைகளைக்கூறலாம்.

உணவு குறித்த எழுத்துகள் இக்கட்டுரையில் நேர்த்தியாக குறிப்பிட்ட இடம் குறித்த விவரணைகளுடன் சிறப்பாக ஹோட்டல்களின் வளர்ச்சி, தோற்றம் என்பதை மிகத்துல்லியமான தொனியில் வெளிப்படுத்துகிறது. தில்லி தென்னிந்திய ஹோட்டல்கள் கட்டுரை தமிழ் உணவுகள் எங்கெங்கே கிடைக்கும் என்பதை வழிகாட்டு புத்தகம் விளக்குவது போல மிக சுவாரசியமான தேடுதலுடன் விவரிக்கிறது. 

திருவிதாங்கூர் சமஸ்தானப் பதிவுகள் பாரதிமணியின் சிறுவயது நினைவுகளாக செழுமையான விவரங்களோடு பல்வேறு விஷயங்களையும், மனிதர்களையும் நெகிழ்ச்சியாக அறிமுகப்படுத்துகிறது.
சிங் இஸ் கிங் கட்டுரை பாஸ்மதி அரிசி உற்பத்தியில் இந்தியா புகழ்பெற  காரணமான சீக்கியர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, குணம் குறித்த முழுமையான பதிவாக உணர்வும், நெகிழ்ச்சியுமாக பல செய்திகளைக் கூறுகிறது.

நிகம்போத் சுடுகாடு கட்டுரை அவ்விடத்தோடு ஆசிரியர் கொண்டுள்ள உறவு குறித்து விளக்கமாக அந்த இடத்தில் முதன்முறை சென்றது எப்படி என்பதோடு இன்றுவரையிலுமான உறவை விளக்கமாக பகிர்கிற நேர்த்தியான கட்டுரைகளில் ஒன்று.

தான் வேலை செய்கிற பணியினாலும், நாடகம் ஆகிய இரண்டிலும் பல்வேறு முக்கிய அரசியல் பிரபலங்களை சந்தித்த பாரதிமணி அவை தனக்கு தெரிந்த ரகசியங்களை சிறு கோடு காட்டிவிட்டு நகர்ந்துவிடுகிறார். ஏன் என்பது அனைவருக்கும் தெரியுமே! மொரார்ஜி தேசாயின் மகன் குறித்த பதிவு மட்டுமே திடமாக ஒருவரைப்பற்றி பாரதிமணி கூறிய உண்மைகள் என்று கூறலாம். மற்றபடி, தன்னை மிக நல்லவன் என்று நிரூபணம் செய்யாமல் தான் எப்படி ஒருவரை அணுகியது என்றெல்லாம் எள்ளலாக குறிப்பிட்டு நகர்ந்து செல்கிறார்.

வங்காளதேச அதிபர் ஷேக் ஹசீனா, வங்காளதேச தந்தை முஜிபிர் ரஹ்மான், அன்னை தெரசா, நேரு, ஆங் சான் சூகி ஆகிய பிரபலங்களை சந்தித்து உரையாடியது மற்றும் அவர்களுக்கு செய்த உதவிகள், தன் மாமனார் க.நா.சுவுடனான உறவு, தமிழ் திரைப்படங்களில் நடித்தது இந்நூலில் நம்மை பரவசப்படுத்தும் தருணங்கள் பல.

புதிய அனுபவங்கள், மனிதர்கள், உணவுகள், மதுவகைகள், ஏமாற்றம், பழைய காலம் ஆகியவற்றை நாமும் வாழ்ந்த அனுபவம் ஏற்படுத்தும் குறிப்பிட்டட காலகட்டத்தை பதிவு செய்யும் புத்தகம் இது என்றே கூறமுடியும். 





21
                                                                  மதில்கள்
                                                            த.மொ: சுகுமாரன்
                                                                   காலச்சுவடு

சிறையில் உள்ள ஆண் ஒருவருக்கும், அருகில் உள்ள மதிலின் அப்பால் உள்ள சிறையின் பெண் ஒருவருக்கும் உருவாகும் மதில்களை த்தாண்டிய ஒரு உறவே 'மதில்கள்' ஆகும்.

பஷீர்தான் எப்போதும்போல இக்கதையின் நாயகன். அவரது எழுத்துகளில் மெல்ல சிறைச்சாலைச்சூழல், அதன் மனிதர்கள், வசதிகள் குறித்து பேசும்போதே சுய எள்ளல், பகடி தொடங்கிவிடுகிறது. அவரது வகுப்பறைத்தோழன் குறித்த விவரணைகள் ரகளைதான் போங்கள்.

மதில்களுக்கு அப்பால் உள்ள பெண்ணுடன் பேச தொடங்குவதிலிருந்து கதை உச்சவேகம் கொள்கிறது. மதில் காணமுடியாத அந்தபெண்ணின் மீது பெரும் வசீகரத்தை, ஆவலை நிரப்புகிறது. மதில் தொடர்ந்து இருவருக்குமான இடைமுகமாக இருப்பது இருவருக்குமே ஆச்சர்யத்தை, ஆர்வத்தை தினமும் சந்திக்கும் நேரத்தை பல சமிக்ஞைகளுடன் உருவாக்குகிறது. இதில் இறுதியில் வருகிற சுதந்திரம் பற்றிய கேள்வியும் முக்கியமானதுதான்.

காதலிக்கும் பெண்ணை நினைவிலிருத்த பல்வேறு விஷயங்கள் இங்கே உள்ளன. ஆனால் இவை எதுவும் இங்கே இருப்பதில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் மதில் தாண்டி நெருங்குகிற இரு ஆன்மாக்களின் இருப்பின் அடையாளம்தான் மதில்கள். இந்தக்கதை 'கௌமுதி' ஓணம் சிறப்பிதழில் வெளியாகி இரண்டாம் பதிப்பு பதிப்பிக்கும் அளவு பெரும் வரவேற்பு பெற்றது ஒன்றே பஷீரின் எழுத்து பற்றிய வரவேற்பிற்கு ஒரு உதாரணம் என்று கூறலாம்.





22
  ஈரானிய சினிமா 
                                       சமயவாதங்களும்,அடிப்படைவாதங்களும்
அனஸ்
அடையாளம் பிரஸ்

இந்த நூல் இந்திய சினிமா, அமெரிக்கா சினிமா போல ஈரானிய இஸ்லாமிய சினிமா பரவலாகவேண்டிய அவசியம் குறித்து அத்துறையில் ஈரான் நாட்டின் பல்வேறு கட்டுப்பாட்டுகளுக்கிடையே படம் எடுத்து உலகையே ரசிக்க வைத்த முக்கியமான இயக்குநர்கள் குறித்த குறிப்புகளோடு, படங்களில் அவர்கள் கூறவந்த விஷயம் குறித்தும் விளக்கமாக ஆய்வேடு போல வாசிக்க வைக்கிற தன்மை கொண்டிருக்கிறது.
செறிவான தகவல்கள் என்றாலும், இயக்குநர்கள் குறித்த விபரங்கள் சரியானபடி தகவல்களோடு எடுக்கப்படாதது குறித்த கேள்வி இல்லாமல் இதனை வாசிக்கமுடியாது.

ஈரானிய சினிமாவின் மையப்பொருள். அதற்கான இசை குறித்த பார்வை முக்கியமானது எனலாம். வணிகரீதியான படங்களுக்கு சரியான மாற்று ஈரானிய சினிமாகவே உள்ளது என்று கூறுவது நம்பிக்கை தருகிற ஒன்று.
மேலும் குழந்தைகளைக்கொண்டு எடுக்கப்படுகிற படங்கள் எப்படி குழந்தைகளுக்கான படங்களாக இல்லாமல் பெரியவர்களுக்கான அரசியல் படங்களுக்காக குறியீடாக மாறியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் பகுதி சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவின் மையம் குடும்ப கதையிலிருந்து சமூகம் குறித்து மாறியதை பாராட்டுகிறவர் அப்படங்கள் கூட நாடகத்தன்மையிலிருந்து பெரிதாக காட்சிரூபத்திற்கு மாறியிருக்கவில்லை என்பதை குறிப்பிடவில்லை. ஈரானிய இயக்குநர்கள் குறித்த பதிவுகளில் அப்பாஸ் கியாரஸ்தமி, மெக்மல்பஃப் குறித்து பேசுகிறவர் மற்றவர்கள் குறித்து எதுவும் கூறவில்லை.

இஸ்லாமிய சினிமா குறித்த புத்தகம் அது குறித்ததை முக்கியமாக கொண்டுள்ளது என்றாலும், இலங்கை சினிமா குறித்த பதிவுகளையும் நேர்த்தியாக பதிவு செய்கிறது. இந்தியசினிமா, அமெரிக்க சினிமா எப்படி உலகம் முழுக்க கலாசார உலகமயமாக்கலை ஏற்படுத்தி பண்பாடுகளை நசிக்கிறது என்பதையும் பட்டவர்த்தனமாக பேசியிருக்கிறார். இஸ்லாமிய சினிமா பற்றிய புரிதலுக்கான முக்கியமான நூல் இது என்று கூறலாம். 






23
கற்பனைக்கடிதங்கள்
சுந்தரப்புத்தன்
பரிதிபதிப்பகம்

இந்த நூலில் ஆசிரியர் மனசாட்சி, தோழி, நண்பன், ஆசிரியர், அப்பா, அம்மா, நெப்போலியன் போனபர்ட், ஜென்னி, மொட்டைமாடி, முதல் காதல், காதலி என பல்வேறு தனக்கு பிடித்த விஷயங்கள், மனிதர்கள் குறித்து எளிமையான கவித்துவமொழியில் கடிதங்களை எழுதியிருக்கிறார்.

வின்ஸ்டன் சர்ச்சில், நெப்போலியன் போனபர்ட், ஆங்கில ஆசிரியை, சார்லி சாப்ளின், ஜென்னி, காமராஜர், காயத்ரி அக்கா, நிகலாய் ஆஸ்ரோவெஸ்கி என இவர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் முக்கியமானவையாக கருதுகிறேன்.

இவை இதழில் எழுதப்பட்டு தொடர்ச்சியாக வெளிவந்தவையாகும். எனவே அதே தரத்துடன், எளிமையாக இருக்கிறது. அதுவே பலவீனம் என்றும் கூறலாம். 

சம்பவங்களை மிக எளிமையாக கவிதைபோல கூற முயற்சிக்கின்ற மொழி நன்றாக இருக்கிறது என்றாலும் எங்கேயும் தங்காமல் வழிந்து வீழ்கின்ற நீர் போல நழுவிக்கொண்டே இருக்கிறது அனைத்து  விஷயங்களும். வார்த்தைகளை இன்னும் இறுக்கமாக அமைத்திருக்க வேண்டும்.

 ஓரளவு தகவல்களைக் கூற முயற்சிக்கிற கிராமத்தை மனதில் இழந்துவிடாத, இழக்கநேரும் தருணத்தில் உயிர்ப்பித்துக்கொள்ள முயற்சிக்கிற மனது தொடர்ச்சியாக எழுதும் கடிதங்கள்தான் இவை.

24

தமிழ்ப்பெரியார்
வ.ராமசாமி அய்யங்கார்
விருட்சம் வெளியீடு

இந்த நூலில் வ.ரா பெரியார், ராஜாஜி, வ.உ.சி, வரதராஜூலு நாயுடு, சத்தியமூர்த்தி, கொடுமுடி சுந்தராம்பாள், என்.எஸ். கிருஷ்ணன், வாசன், வெ. ராமலிங்கம்பிள்ளை, ஜார்ஜ் ஜோசப், டி. எஸ். ராஜன் உள்ளிட்டோரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளில்தான் கண்டவற்றை அறிந்தவற்றை அக்காலகட்டத்திற்கான மொழியில் எடுத்துரைக்கும் நூலே தமிழ்ப்பெரியார் நூலாகும்.

சுந்தராம்பாள், எஸ்.வாசன், சத்தியமூர்த்தி, என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோரது வாழ்வு குறித்த பகுதிகள் நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பலரும் மற்றவர்கள் தங்களைப்பற்றி அறியாத பலவற்றையும் அறிந்தும், ஒப்புக்கொண்டும் இருந்தனர் என்பது மிக முக்கியமானது ஆகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தங்கள் துறை மூலம் தேசத்திற்கு தொண்டாற்றியவர்கள் ஆவர். வ.ராவின் எழுத்து ஒவ்வொருவரையும் நேரடியாக இணக்கமான முறையில் அறிமுகப்படுத்தி நம்மோடு அவர்களை மித்ரனாக்கும்படி சக்தி கொண்டது எனலாம். பிரிவினைகள் எழும் இக்காலத்தில் வெவ்வேறு இன, மொழி சார்ந்திருந்தாலும் அவர்களின் உழைப்பு என்பது விரிந்து பரந்த இந்த தேசத்திலுள்ள அனைவருக்கானதுதான் அப்படி நினைத்து சொந்த வாழ்வை விட்டு வெளியே பார்க்க ஆன்மாக்கள் குறித்து இந்த நூல் உதவக்கூடும்.
                                      25

கதாவிலாசம்
எஸ். ராமகிருஷ்ணன்
விகடன் பிரசுரம்


இந்த நூலில் 50 சிறுகதை எழுத்தாளர்களின் கதை வழியே எஸ்.ரா தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்கிறார். இந்த கதைகள் நமக்கு பல்வேறு விஷயங்களை தன்னிச்சையாகவே கூற விழைகிறது. சில அனுபவங்களை, கதைகளை, படிக்க ஆசைப்படுவது என்பது இயல்பிலே நிகழக்கூடியதும் கூட.

எஸ்.ரா தன் தொடர்ந்த பெரும் பயணத்தில் சந்தித்த பல மனிதர்களின் வாழ்வு நமக்கு பல்வேறு சித்திரங்களை மனதில் வரைந்துபோகிறது. நோயாளிகளைத் தேடி வரும் புத்த மருத்துவர், தொலைந்த பொருட்களைஎடுத்துக்கொடுக்கும் மனிதர், மகளின் திருமணத்திற்கு தானம் வேண்டி தாலி செய்யும் பெண், பசியில் தன்னிலை மறக்கிற மனிதர்கள், பிச்சை வாங்கும் மனிதர்களின் தெரு நாயிற்காக இரங்கும் மனம், வீடு வீடாக ஐஸ்க்ரீம் விற்கும் பெண், அஸ்தி கலயம் உடைந்துபோனதற்காக அழும் வட இந்திய தம்பதி, வாழ்வின் இறுதியிலும் அன்பு குறையாத முதியவர்கள் என இந்த கட்டுரைத்தொகுப்பில் உள்ள பல்வேறு மனிதர்களின் வழி நாம் அனுபவிக்கின்ற வாழ்வனுபவம் என்பது எளிதில் தீர்ந்துவிடக்கூடியதல்ல.

தொடர்ந்து எஸ்.ராவின் எழுத்துகள் பயணத்தை சாகசமான ஒன்றாக மாற்றிக்கொள்ள வலியுறுத்துபவை. இங்கு கதைகளின் விலாசமாக இருப்பது பயணங்களே. அதில் தேடி அடையும் மனிதர்களின் கதைகளே இத்தொகுப்பில் குன்றாத வசீகரத்தை எத்தனை முறை வாசித்தாலும் நமக்கு அளிக்கிறது என்பேன். இவற்றின் வழியே சமூகத்தின் மீதான விமர்சனங்களையும் முன்வைக்கிறார் எஸ்.ரா. சிறுகதைகளைப்பற்றி அறிந்துகொள்ள படைப்பாளிகளை பின்தொடர இது முக்கியமான பகிர்தல் என்று கூறலாம்.



26 வெள்ளாவி விமல் குழந்தைவேல் உயிர்மை


மாதவி, அவளது மகள் பரஞ்சோதி, நாகமணி, போடியார் இவர்கள்தான் இந்த நாவலில் முக்கியமான கதாபாத்திரங்கள். இலங்கையில் உள்ள வண்ணார்களின் வாழ்க்கைச்சூழலை விவரிக்கிறது.

கிராமம் பற்றிய விவரணைகள் சிறிது நீளமோ என்று தோன்றும்படி இருக்கிறது. மாதவி தன் கணவனை இழந்து பிழைக்க தன் உடலையே வாழ்விற்காக விற்கிறாள். அதனை பின்னாட்களில் தெரிந்துகொள்கிற பரஞ்சோதி அவளை கடுமையாக வசைபாடுகிறாள். மாதவி தன் மகளை திருமணம் செய்துகொள்ள பக்கத்து முறைக்காரனான நாகமணியிடம் கேட்கிறாள். ஆனால் வயது வித்தியாசம் காட்டி மறுக்கிறான் நாகமணி. ஆனால் அதற்குள் பரஞ்சோதி திருவிழாத்தருணத்தின்போது அவளே எதிர்பார்க்காத விபத்தாக சம்பவம் ஒன்று நிகழ, கருவுறுகிறாள். ஆனால் தந்தை யார் என்று தெரியாத நிலை. தனக்கு உண்டான நிலை தன் மகளுக்கும் உருவானபின்பு அதற்கு மாதவியின் எதிர்வினை என்ன? பரஞ்சோதியின் கரு என்னவானது? என்பது மையப்பகுதிதான். பரஞ்சோதியின் நிலைக்கு காரணமானவர் ஊரின் முக்கியமான புள்ளி. இந்தக்கவலையில் மாதவி இறந்துவிட, இதற்கு பிறகு பரஞ்சோதியினை நாகமணி திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் வாழ்வு எப்போதும் போல தினம் உழைத்தால் சோறு என்கிற நிலையில் தன் மகனை சிறப்பாக வளர்க்கவேண்டும் என்று நாகமணி நினைக்கிறான். இந்த சூழலில் விரிவாக வண்ணார்களின் வாழ்வு குறித்த சிக்கல்கள் பேசப்படுகின்றன. குறிப்பிட ஜாதியின் குறுக்கீடுகள் தொடர்ந்து எளியமக்களின் வாழ்க்கையில் கடக்கமுடியாத தடைக்கற்களாக மாறி அவர்களின் காலைத்தடுக்கி புரட்டிவீசுகிறது என்பதை நேர்மையாக கூறியிருக்கும் ஆசிரியரின் திறமையை பாராட்டவேண்டும். வண்ணார்களது வாழ்வை யதார்த்தமாக கூற முற்படும் முக்கியமான நாவல் இது.



பின்னிணைப்பாக..

தமிழ் நாவல்கள்: விமர்சகனின் சிபாரிசு 

- ஜெயமோகன்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை - பிரதாபமுதலியார் சரித்திரம்
பி.ஆர். ராஜம் அய்யர் - கமலாம்பாள் சரித்திரம்
மாதவையா - பத்மாவதி சரித்திரம்
கு.ப. ராஜகோபாலன் - வேரோட்டம்
ஆர். ஷண்முக சுந்தரம் - நாகம்மாள், சட்டி சுட்டது
ந. சிதம்பர சுப்ரமணியன் - இதயநாதம்
அநுத்தமா - கேட்ட வரம்
எம்.எஸ். கல்யாண சுந்தரம் - இருபது வருடங்கள், பகல்கனவு
க.நா. சுப்ரமணியம் - பொய்த்தேவு, ஒருநாள், வாழ்ந்தவர் கெட்டால்
சி.சு. செல்லப்பா - வாடிவாசல், ஜீவனாம்சம்
லா.ச. ராமாமிர்தம் - அபிதா, புத்ர
எம்.வி. வெங்கட்ராம் - வேள்வித்தீ, நித்ய கன்னி, காதுகள்
கரிச்சான் குஞ்சு - பசித்த மானுடம்
ரகுநாதன் - பஞ்சும் பசியும்
தி.ஜானகிராமன் - மோகமுள், அம்மா வந்தாள், மலர்மஞ்சம், செம்பருத்தி, அன்பே ஆரமுதே மரப்பசு
சங்கர்ராம் - மண்ணாசை
மு.தளையசிங்கம் - ஒரு தனி வீடு
கிருத்திகா - வாசவேச்வரம், தர்மக்ஷேத்ரே, புகைநடுவில், நேற்றிருந்தோம்
இந்திரா பார்த்தசாரதி - ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, தந்திரபூமி, சுதந்திர பூமி, குருதிப்புனல், வேதபுரத்து வியாபாரிகள், கிருஷ்ணா கிருஷ்ணா, வேரோட்டம்
ராஜம் கிருஷ்ணன் - குறிஞ்சித்தேன், வளைக்கரம், பாதையில் படிந்த அடிகள்
ஜெயகாந்தன் - ஒரு மனிதன் ஒரு வீடு ஓர் உலகம், பாரீஸூக்குப்போ,
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், கங்கை எங்கே போகிறாள்,
சில நேரங்களில் சில மனிதர்கள், சுந்தர காண்டம்,
கு. சின்னப்ப பாரதி - தாகம், சங்கம்
டி. செல்வராஜ் - தேநீர், மலரும் சருகும்
ப. சிங்காரம் - புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால்
நகுலன் - நினைவுப்பாதை, நாய்கள், வாக்குமூலம், நவீனன் டைரி
சுந்தர ராமசாமி - ஒரு புளிய மரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
கி. ராஜநாராயணன் - கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள்
சா.கந்தசாமி - சாயாவனம், சூரியவம்சம், தொலைந்து போனவர்கள், அவன் ஆனது
ஜி. நாகராஜன் - நாளை மற்றுமொரு நாளே, குறத்தி முடுக்கு
அ. பாலமனோகரன் - நிலக்கிளி
ஹெப்சிபா ஜேசுதாசன் - புத்தம் வீடு
அசோகமித்திரன் - பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், கரைந்த நிழல்கள்,   மானசரோவர்
நீல பத்மநாபன் - தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம், உறவுகள்
பொன்னீலன் - கரிசல், புதிய தரிசனங்கள்
ஆ. மாதவன் - கிருஷ்ணப்பருந்து, புனலும் மணலும்
சு. சமுத்திரம் - சோற்றுப்பட்டாளம், வாடாமல்லி
விட்டல் ராவ் - போக்கிடம், நதிமூலம்
சம்பத் - இடைவெளி
தமிழவன் - ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
வண்ணநிலவன் - கம்பாநதி, ரெயினீஸ் அய்யர் தெரு, கடல்புரத்தில்
பூமணி - பிறகு, வெக்கை
நாஞ்சில் நாடன் - தலைகீழ் விகிதங்கள், என்பிதலனை வெயில்காயும்,மிதவை   மாமிசப்படைப்பு, எட்டுத்திக்கும் மதயானை
தோப்பில் முகமது மீரான் - ஒரு கடலோரக்கிராமத்தின் கதை, கூனன்தோப்பு,   துறைமுகம், சாய்வு நாற்காலி 
பிரபஞ்சன் - மானுடம் வெல்லும், மகாநதி
ஆதவன் - காகித மலர்கள், என்பெயர் ராமசேஷன்
எஸ். அருள் சுப்ரமணியம் - அவர்களுக்கு வயது வந்துவிட்டது
பாமா - கருக்கு, சங்கதி
சிவகாமி - பழையன கழிதலும், ஆனந்தாயி
தேவகாந்தன் - கனவுச்சிறை 
வாஸந்தி - மௌனப்புயல், நிற்க நிழல் வேண்டும்
சி. ஆர். ரவீந்திரன் - ஈரம் கசிந்த நிலம்
சூரியகாந்தன் - மானாவாரி மனிதர்கள்
பாவை சந்திரன் - நல்ல நிலம் 
ஸ்ரீதர கணேசன் - உப்பு வயல்
பாவண்ணன் - பாய்மரக்கப்பல்
சுப்ரபாரதிமணியன் - மற்றும் சிலர், சாயத்திரை
சோ. தருமன் - தூர்வை, கூகை
ராஜ் கௌதமன் - சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை
இமையம் - கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல்
தஞ்சை பிரகாஷ் - கள்ளம், கரமுண்டார் வீடு
கோணங்கி - பாழி, பிதிரா
ஜெயமோகன் - விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், காடு, ஏழாம் உலகம், கன்யாகுமரி, கொற்றவை
எஸ். ராமகிருஷ்ணன் - உபபாண்டவம், நெடுங்குருதி, உறுபசி
சாருநிவேதிதா - எக்ஸிஸ்டென்ஷலியசமும் ஃபேன்சிபனியனும், ஸீரோ டிகிரி
பிரேம் ரமேஷ் - புதைக்கப்பட்ட மனிதர்களும் எரிக்கப்பட்ட மனிதர்களும், சொல் என்றொரு சொல் 
யுவன் சந்திரசேகர் - குள்ளச்சித்தன் சரித்திரம், பகடையாட்டம்
பெருமாள்முருகன் - நிழல்முற்றம், கூளமாதாரி
சு.வேணுகோபால் - நுண்வெளிக்கிரணங்கள்
ஷோபாசக்தி - கொரில்லா, ம்
ஜோ டி குரூஸ் - ஆழிசூழ் உலகு
எம். கோபாலகிருஷ்ணன் - அம்மன்நெசவு, மணல்கடிகை
கண்மணி குணசேகரன் - அஞ்சலை, கோரை
விமல் குழந்தைவேல் - வெள்ளாவி 
பாரததேவி - நிலாக்கள் தூரதூரமாக

நன்றி: நவீன தமிழிலக்கிய அறிமுகம், உயிர்மை



கருத்துகள்