நேர் காணல்


நேர் காணல்


''சங்பரிவாரின் கவனம் மாறிவிட்டது; அவர்கள் முஸ்லீம்களின் மாறுபட்ட எதிர்வினையினை அறிவார்கள்''


பாம்பே கத்தோலிக்க சபையின் முன்னாள் தலைவரான டால்பி டி சூஸா , தேவாலயங்கள், பள்ளிகள் மீது நடக்கும் தாக்குதல்கள் தனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை என்றும், இவை வாஜ்பாய் அரசின் கீழும் நடந்தவைதாம் என்கிறவர், ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பியின் வெற்றியின் வழியே இந்துக்களின் நாட்டினை அமைக்க முயலும் வழி முறையே இது என்று ஆல்கா டெல்லிஸிடம் கூறுகிறார்.

                                                                ஆல்கா டெல்லிஸ்


தமிழில்: ரிச்சர்ட் மஹாதேவ்


தேவாலயங்கள் மீதான தாக்குதல் மற்றும் மேற்கு வங்கத்தில் நடியா மாவட்டத்திலுள்ள கங்னாபூரில் கன்னியாஸ்த்ரீ மீதான வன்முறைகள் கத்தோலிக்க சமூகத்தை பயமுறுத்தியுள்ளது என்று முன்னாள் காவல்துறை அதிகாரி ஜூலியா ரிபெய்ரா கூறியிருக்கிறார். இனக்குழுவின் தலைவர் என்ற முறையில் இவ்விவகாரத்தில் உங்கள் பார்வை என்ன?

இந்த தாக்குதல் நிகழ்ந்தது என்பதில் பெரிய ஆச்சர்யங்கள் ஏதுமில்லை. 1997 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு ஆட்சியிலிருக்கும்போது, இதுபோன்ற தாக்குதல்கள் தேவாலயங்கள் மீது ஒவ்வொரு நாளும் நிகழ்த்தப்பட்டன. இவைபோன்ற பிசகான செயல்பாடுகள் இன்று உருவானவை அல்ல. 1998 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்திலுள்ள டங்ஸ் பகுதியிலுள்ள பழங்குடி கிறிஸ்தவர்களின் வீடுகள், குடிசைகள் ஆகியவை கிறிஸ்துமஸ் வாரத்தில் ஐந்துநாட்கள் தொடர்ந்து நெருப்பில் எரிக்கப்பட்டன. அப்போது முதல்வர் கேசுபாய் படேல் ஆட்சியிலிருந்தார். ஏப்ரல் 2002 ஆம் ஆண்டு பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் குஜராத் கலவரத்தைப்பார்வையிட்டு முதல்வர் நரேந்திரமோடி ராஜ தர்மத்தினை செய்யவேண்டும் என்று கூறினார். இதே பிரதமரின் ஆட்சியில்தான் ஒரிசாவில் ஜனவரி 22, 1999 ஆம் ஆண்டு பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸ் தனது இரு குழந்தைகளான பிலிப்(10), டிமோத்தி(6) ஆகியோர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

இதுபோன்ற வரம்புமீறும் சம்பவங்களுக்கு பின்னால் சங்பரிவார் இருந்துகொண்டு கொடூரங்களையும், சிறுபான்மையினர் வெறுப்பு பிரசாரங்களையும் உருவாக்கிவருவதாக நினைக்கிறீர்களா?
இவை வெறும் விளிம்புநிலையான வரம்புமீறும் நிகழ்ச்சிகள் மட்டுமல்ல. அவர்கள் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தினைச்சேர்ந்த அதிகம் படித்த, அதன்மூலம் எந்த விவகாரங்களிலும் சிக்கிக்கொள்ளாத நபர்களால் இயக்கப்படும் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த வன்முறையினைத் தூண்டும் இவர்கள் அவர்களின் போர்வீரர்கள் போன்றவர்கள்.அவர்களுடைய பாஸிஸ கருத்தியல் என்பது ஹிட்லரை பூஜிக்கும் தன்மையிலானது. 1931 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் கருத்தியல்வாதியான பி.எஸ்.மூன்ஜே இத்தாலிய சர்வாதிகாரியான முசோலினியைச் சந்தித்தார். எனவே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இத்தாலிய பாஸிஸ்ட் கட்சி கருத்துகள் உருவாகி முக்கியமான இடத்தினையும் பிடித்திருக்கிறது. குரு கோல்வாக்கர் இந்த அமைப்பின் மற்றொரு கருத்தியல்வாதி ஆவார். யூதர்களை அழித்து ஜெர்மன் தேசியத்தை தூய்மை செய்து காக்கும் ஹிட்லரின் கொடூரக்கருத்தின் மீது பெரும் நேசம் கொண்டவர் இவர். ஆர்.எஸ்.எஸ் தனது எதிரிகளாக இடதுசாரிகள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என மூன்றுபேரைத்தான் கருதுகிறது. மற்றவர்கள் அனைவரும் தங்களது கலாசாரத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கிறிஸ்தவம் குறித்த அடிப்படையினைக் கற்றிருக்கிறார்களே?
ஆமாம், அவர்கள் பிரம்மச்சரியம், வறுமை, எளிய வாழ்வு ஆகியவற்றை கற்றிருக்கிறார்கள்தான். தேவாலயம் சார்ந்த சிந்தனைகளோடு ஒருமைப்பட்டுப்போனால்தான் அங்கு வருகிற மக்களின் மனதை மாற்ற முடியும். பாஸிஸ்ட் கருத்தியல் இத்தாலியில் உச்சத்தில் இருந்தபோதும், தேவாலயங்கள் தம்மை காத்துக்கொண்டுவிட்டன. எனவே தம்மை அரசியல் அதிகாரத்தின் மூலம் காத்துக்கொள்ள நிகழ்ச்சிகளை திட்டமிட்டு இந்து தேசிய வாதத்தினை உருவாக்குகிறார்கள். பிரதமர் நரேந்திரமோடியும் இங்கிருந்து வந்தவர்தான். ஊழல், வளர்ச்சி ஆகியவற்றை தேர்தல் வாக்குறுதியாக கூறினார். ஆனால் இன்று என்ன நடக்கிறது? லவ் ஜிகாத், கர் வாப்ஸி, காங்கிரஸ் முக்தி பாரத் என்று நேரு, காந்தி உள்ளிட்ட சுதந்திரப்போராட்ட வீரர்களை பிரித்து அழித்துவிட்டார்கள். பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி, அதனை மக்கள் கற்பனை செய்யும்படி செய்கிறார்கள்.

சுதந்திரத்திற்கு போராடியவர்கள் என்று ஒரு குடும்பத்தினை மட்டும் கூறுவது மோசமான பின்விளைவுகளைத்தருவது ஆகாதா?

உங்களது கருத்தோடு நானும் உடன்படுகிறேன். இதனை காங்கிரஸ் சரியான முறையில் கையாளவில்லை. சுதந்திரத்திற்கு போராடிய மற்ற தலைவர்களை அங்கீகரிக்கத்தவறிவிட்டது. ஆனால் இப்போது நடக்கும் விஷயங்களுக்கு நாம் அனைவரும் சாட்சியாக இருக்கிறோம்.
என்ன அது?

அவர்கள் மக்களின் ரத்தத்தை சுவைத்து ஒரு நாடு, ஒரே இன மக்கள் என்ற நிகழ்ச்சிநிரலை முன்வைக்கின்றனர். 2014 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தலில் பி.ஜே.பி 31% ஓட்டுகளைப்பெற்றது. அதிக சதவீத ஓட்டுகள் இல்லாதது கவலைப்பட வைத்திருக்கிறது. மோடி அரசு பதவியேற்ற 300 நாட்களில் 800 க்கும் அதிகமான தாக்குதல்களினை சிறுபான்மையினர் சந்தித்துள்ளனர். இதில் இன்னும் அதிக பயமுறுத்துவது என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ் சேனைகள் கல்வித்துறை, காவல்துறை, ராணுவம், பள்ளிகள் ஆகியவற்றில் ஊடுருவியிருப்பதுதான். 1977, ஜனதாக்கட்சி அரசு, சில தகவல்களை தகவல் ஒளிபரப்புத்துறை, மனித வள மேம்பாட்டுத்துறை, வெளியுறவு அமைச்சகம், உளவுத்துறை, வெளிநாட்டுத்திட்டங்கள் ஆகியவற்றில் கேட்டது. இந்த வழிமுறையானது தந்திரமானதும், தெளிவானதும் ஆகும். எனவே இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், இவர்களது சேனை அதில் இருக்கும்.

72 வயதான கன்னியாஸ்த்ரீ கற்பழிக்கப்பட்டதோடு, மேற்குவங்கத்தில் உள்ள கங்னாபூரில் உள்ள பள்ளியினை அசுத்தப்படுத்தும் செயலும் நடைபெற்றிருக்கிறது. இதுபற்றி தங்களது கருத்தென்ன? கொள்ளையடிப்பதுதான் காரணமா?

அவர்கள் பள்ளிக்கு வந்து கன்னியாஸ்த்ரீயைக்கற்பழித்து புனிதமான இடத்தினை அசுத்தப்படுத்தி, அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்கள். இந்த அநியாயத்தை கவனியுங்கள். இது கோபமூட்டுகிற செயலாகும். கொள்ளையடிப்பவர் நிச்சயம் இதனை நிச்சயம் செய்யமாட்டார். கொள்ளை மற்றும் கற்பழிப்பு என்பதில் கன்னியாஸ்த்ரீ/ அவமானப்படுத்துதல் என்பது என இரண்டும் வேறுவேறானவை.

பிரதமர் மோடி இந்த நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறாரே?

ஆமாம். டெல்லி தேவாலயம் ஒன்றில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது அப்படிக்கூறினார். ஆனால் அவரைச்சேர்ந்தவர்கள் இதற்கு எதிராக செயல்படுகிறார்கள். எளிதானதா என்று எனக்குத்தெரியவில்லை. மோகன் பகவத் அன்னைதெரசாவின் மீது அவதூறு சேற்றை வீசி, நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பான பிரச்சனையை திசைதிருப்ப பார்க்கிறார். கொல்கத்தா அரசியலுக்கான இடம். சங்பரிவார் அமைப்பு பல்வேறு இனக்குழுக்களுக்கான வேற்றுமையை அதிகரிக்க பல விஷயங்களை செய்கின்றன. மம்தா பானர்ஜி அரசு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மற்றும் சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பது என்பதில் மன்னிக்கமுடியாத அளவு தோற்றுவிட்டது. இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. மதவாதக்குழுக்களின் கவனம் இப்போது முஸ்லீம்களிலிருந்து கிறிஸ்தவர்களுக்கு மாறிவிட்டது. காரணம் அவர்கள் மாறுபட்ட எதிர்வினையை தருவார்கள் என்று இவர்கள் அறிந்துகொண்டுவிட்டதுதான்.

இவற்றுக்கும் கருத்துசுதந்திரம் தாக்கப்படுவது வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு உண்டு. சென்னையில் இருக்கும் பெருமாள்முருகன் தனது ஊரிலிருந்து வெளியேறச்சொல்லி அச்சுறுத்தப்பட்டது போல.

தேவாலயங்கள் மற்றும் கன்னியாஸ்த்ரீகள் மீதான தாக்குதல் என்பது தொடர்கிற ஒன்றுதானா?

1998 ஆம் ஆண்டு கிறிஸ்தவ இனக்குழுக்களுக்கு முக்கியமான தோற்றங்கள் உருவானது. இனக்குழு முழுவதும் ஒன்றாக திரளுகிற நேரம் ஜே.டி மற்றும் பி.ஜே.பி ஆட்சி தோற்றபின், நாங்கள் திருப்தி கொண்டு அமைதியாக இருந்துவிட்டோம். இன்று அதுபோன்ற சூழல் மீண்டும் உருவாகியிருக்கிறது. அமைதியான போராட்டங்களை எந்த வன்முறையுமில்லாமல் முன்னெடுத்து வருகிறோம். மற்ற இனக்குழுக்களோடு, இணைந்து அரசியல் தளத்திலும் நிற்க முயற்சிக்கிறோம். இதன் மூலம் ஒற்றுமையை, தூய்மையை பல்வேறு மக்களினைக்கொண்டுள்ள நாட்டினை அமைப்பையும் காப்பாற்ற முடியும். இது அபாயகரமான காலம் என்றாலும், மக்கள் அனைவரும் ஒன்றுதிரள்வதற்கான அற்புதமான காலமும் கூட.

கிறிஸ்துவ  மதமாற்றம் தொடர்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? குறிப்பாக வடகிழக்கு மற்றும் பழங்குடிமக்கள் பகுதிகளில்...

1971 ஆம் ஆண்டு கிறிஸ்தவ மக்களின் தொகை 2.3% இன்று 2.6% ஆக உள்ளது. கத்தோலிக்கர்கள் வலுக்கட்டாயமாக அல்லது தூண்டுதலாகவோ மதமாற்றம் செய்வதில்லை. அதற்கும் மேலாக இந்திய தண்டணைச்சட்டத்தில் மதமாற்றத்தை தூண்டுவது சட்டப்படி குற்றம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாங்கள் இதனை வரவேற்கிறோம். மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது, மதச்சுதந்திரச்சட்டம் 1968 ஆனது வலுக்கட்டாயமாக (அ) ஆசைகாட்டி சேர்ப்பது ஏமாற்றுதல் என்று கூறப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு ஆளுநர் பல்ராம் ஜாக்கர் மத்தியப்பிரதேச அரசிடம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மதமாற்றம் செய்யப்பட்டவர்களின் விபரங்களைக்கேட்டார். கள்ளத்தனமான, சட்டத்திற்குப்புறம்பான மதமாற்றம் அதில் ஏதும் இல்லை. கத்தோலிக்க அமைப்புகள் ஏழை மக்களுக்கு கல்வி அளித்து அவர்களின் வாழ்க்கையில் வளர்ச்சி வளப்படுத்துவதை ஆர்.எஸ்.எஸ் விரும்பாது கவலையோடு பார்க்கிறது. இதன் காரணமாகவே 1998 ஆம் ஆண்டு காந்தமல் மாவட்டத்தில் பழங்குடிமக்கள் மீது கொடூரத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

மகராஷ்ட்ராவில் மாட்டிறைச்சி தடைசெய்யப்பட்டது குறித்து தங்களின் நிலைப்பாடு என்ன? அடிப்படை உரிமைகளுக்கு எதிரான ஒன்றா இது?

ஆம். நம் அடிப்படை உரிமைக்கு எதிரானதே இந்த மாட்டிறைச்சி தடை செய்யும் ஆணை. நாம் என்ன சாப்பிடுவது (அ) அணிவது குறித்து எந்த அரசும் உள்நுழைய அனுமதி கிடையாது. வறுமை, கல்வி, உடல்நலம் என மிக முக்கியத்துவம் கொண்ட நிகழ்ச்சிகளில் அரசு கவனம் செலுத்தி குடிமக்களுக்கான பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்க்க முயற்சிக்க வேண்டும். மத்திய, மாநில, சங்பரிவார் ஆகியோர் பலரும் சேர்ந்து தடை செய்யும் விஷயங்கள் மக்களை பாதிப்பவை ஆகும். வாய்ப்புகளுக்கான சுதந்திரம் என்பது நமது உரிமை; அதை குறைக்க (அ) சுருக்கவேண்டிய அவசியமில்லை. குடிமக்கள் அரசு, நிர்வாகத்தில் திறம்பட செயல்பட விரும்புகிறார்களே தவிர தடை கலாசாரத்தை முன்னெடுக்கவேண்டும் என்பதையல்ல. இவை நிச்சயமாக நிறுத்தப்படவேண்டும்.

நன்றி: டெக்கன் கிரானிக்கல் 22.3.2015


கருத்துகள்