இந்தியாவை அணுசக்தி நாடாக வளர்த்தெடுத்த நவீன அறிவியல் மனப்பான்மை கொண்ட பிரதமர் இந்திரா காந்தி!
இந்திரா காந்தி - தி ஸ்டோரி ஆப் தி லீடர்
சகானா தாஸ் குப்தா
ரூபா பதிப்பகம்
ப.129
பிரியா என்ற சிறுமி, முசௌரியில் வாழ்கிறாள். பள்ளி செல்லும் சிறுமி. வகுப்பில் ஆசிரியர், செல்வாக்குள்ள மக்களை சிந்திக்க தூண்டிய, ஊக்கம் ஊட்டிய பெண் ஆளுமை ஏதேனும் ஒருவர் பற்றி கட்டுரை எழுதச்சொல்லி பணிக்கிறார். பலரும் பல்வேறு பெண் ஆளுமைகளை, தலைவர்களைத் தேர்ந்தெடுத்து கட்டுரைகளுக்கான தகவல்களைத் தேடுகிறார்கள். பிரியாவும் நவீனமான பெண் தலைவர் ஒருவரைத் தேடும்போது இந்திராகாந்தி கிடைக்கிறார். அப்போது, அவர் இறந்து இருபது ஆண்டுகள் ஆகியிருக்கிறது. நூலகத்திற்கு சென்று தனது வகுப்பறைத் தோழியோடு தகவல்களைத் தேடுகிறாள். இப்படித்தான் இந்த நூல் தொடங்குகிறது.
இந்த நூல் இந்திரா காந்தி பற்றி சுருக்கமாக வெறும் 129 பக்கங்களில் குறிப்பிட்ட சித்திரத்தை அளிக்கிறது. இதில் முக்கியமான தகவல்களாக நாம் அறிவது, இந்திராகாந்தியின் பெற்றோர் இல்லாத தனிமையான இளம் பருவம். அவருக்கு பெற்றோர், சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றுவிட வீட்டில் நூல்களை வாசித்தபடியே இருக்கும்படியான சூழல் அமைகிறது. அதுவே பின்னாளில் அவரின் தைரியமான ஆளுமை, தன்னை, தன்னுடைய திறமையை மட்டும் நம்பி முன்னே செல்லும் துணிச்சல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைகிறது. கமலா நேருவுக்கு, நேருவின் குடும்பத்தில் பெரிய வரவேற்போ, அன்போ இருக்கவில்லை. நேருவின் குடும்பத்தினர் மேற்கத்திய பழக்க வழக்கம் கொண்டவர்கள், கமலா இந்து கலாசாரத்தை பின்பற்றக்கூடியவர். சரி, இப்படி இருக்கக்கூடிய பெண்ணை எதற்காக திருமணம் செய்தனர் என்று புரியவில்லை. மேற்கத்திய கலாசாரத்தில் பழக்கப்பட்ட பெண்ணை மணம் செய்திருக்கலாம். கமலாவுக்கு நேருவின் குடும்பத்தில் புறக்கணிப்புதான் கிடைத்திருக்கிறது. அவர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது கூட தன் மீதான கவனத்தை குடும்பத்தினரிடம் ஏற்படுத்தத்தான். இந்த தகவல் சற்று ஆச்சரியமாக இருந்தது.
சசிதரூர் நேரு - கமலா பற்றிய நூலொன்றை எழுதியிருக்கிறார். அந்த நூல் சொல்லும் தகவல்களும், இதில் எழுத்தாளர் சகானா சொல்லும் தகவல்களும் வேறு விதமாக உள்ளன.சரிதான் உண்மைக்கு பல கோணங்கள் உண்டு அல்லவா? அம்மாவின் சிகிச்சைக்காக ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி சென்றது. அங்கு கல்வி கற்றது, இந்திராகாந்தியை முற்றிலுமாக மாற்றுகிறது. வெளிநாட்டில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தவருக்கு, பிடித்த ஆடைகளை அணிந்தவருக்கு உள்நாட்டில் கிடைத்தது கதர் ஆடைகள்தான். சிறுவயதில் சுதந்திரப் போராட்டம் காரணமாக அழகான ஆடைகள், வெளிநாட்டு பொம்மைகளை கைவிடுவது அவருக்கு பெரிய வருத்தமாகவே இருந்திருக்கும். நேருவுக்கு மகள் பற்றிய வருத்தம் ஏதுமில்லை. அவரை பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்த நினைத்திருக்கிறார். அவரின் ஆசை, பின்னாளில் ஒருவழியாக நிறைவேறியது. ஆனால், அவர் விரும்பிய வழியில் அல்ல.
இந்திராகாந்தியைப் பற்றி எமர்ஜென்சி - அவசர காலம் பற்றிய விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். ஆனால், அவரேதான் கணினி தொழில்நுட்பம், அணு ஆயுதம் ஆகியவற்றை தந்தை வழியில் ஊக்கப்படுத்தி மேம்பட வழிவகுத்தார். அன்றைய காலத்தில் நாட்டிற்கு தேவைப்பட்ட நவீன அறிவு, பார்வையுடன் இந்திரா நாட்டை வழிநடத்தினார். உண்மையில் அவர் காலத்தில் நடந்தது போல பஞ்சம்,பட்டினிகள், வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்கள், இனக்குழு தாக்குதல்கள், ஊழல் இன்றைக்கு நடந்தால் பிரதமர் என்ற ஒருவர் பதவியை விட்டு விலகி இருப்பார். ஆனால், அதையெல்லாம் எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், நாட்டை அவர் எந்நாளும் கைவிடவில்லை. அமெரிக்காவிடம் உணவுக்காக உதவி பெறும்போது, மட்டும்தான் தான் செய்கிற செயலுக்காக வருந்தியிருக்கிறார். அங்கேயும் நாடு என வரும்போது விருப்பு வெறுப்பற்ற நிலையில்தான் நடந்துகொள்கிறார். ஆனால், அமெரிக்காவின் உதவியைக் கோரிபெற்ற அவமானமே, பசுமை புரட்சிக்கான மூலாதாரம். உரங்கள், வீரிய வித்துகள், கலப்பின ரகங்கள் என பயிர்கள் மேம்படுத்தப்படுகின்றன. இதன் வழியாக உணவில் இந்தியா தன்னிறைவு அடைய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த முயற்சி புதிது கிடையாது. ஆனால், தீர்மானகரமாக உறுதியாக நடைபெறவில்லை.உலகளவில் இந்தியா சார்பாக மாநாடுகளில் கலந்துகொண்டு பேசுவது, யாராவது இந்தியாவை இழிவுபடுத்தினால் அந்த இடத்திலேயே பதிலடி கொடுப்பது என்பதெல்லாம் அதுவரை யாரும் கண்டிராத ஒன்று. எடுத்துக்காட்டு, சர்ச்சிலுக்கு இந்திரா கொடுத்த பதில்.
இந்திராவை முதல் பெண் பிரதமர் என்று பலர் கூறினாலும் அதை அவர் விரும்பவில்லை. நான் இந்தியாவின் குடிமகன். எனது பணி நாட்டுக்கு சேவை செய்வதே. நான் பெண்ணியவாதி கிடையாது. நானு ஒரு மனுஷி என்று கூறியிருக்கிறார். பெண் என்ற அளவுகோலில் அவரை பார்ப்பது, அளவிடுவது, சமூகத்தின் கருணை அதன் வழியாக கிடைப்பதை அவர் விரும்பவில்லை என்றே இதை நாம் எடுத்துக்கொள்ளலாம். இந்திராகாந்தி இயற்கை மீது காட்டிய அன்பும் அக்கறையும்,சூழலியல் மீது கொண்ட கவனமும் அதற்குப் பிறகு வந்த பிரதமர்கள் கூட கொண்டிருக்கவில்லை. இதை மகிழ்ச்சியாக கூறுவதா, வேதனையுடன் கூறுவதா என்றே தெரியவில்லை. நூலை முடிக்கும்போது சாதனை, சறுக்கல்கள், அரசியல் ரீதியான முறையற்ற செயல்பாடுகள் எல்லாமே கூறப்பட்டுவிடுகின்றன. இறுதியாக இந்திராகாந்தி நாட்டின் மீது கொண்ட பற்றைக் கூறி நூல் நிறைவு பெறுகிறது. இந்தியாவை தோற்க விட மாட்டேன். இந்த அரசு இருந்தாலும் சரி, இதற்கு பின்னர் வேறு அரசு வந்தாலும் சரி, இந்தியா தோற்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். அவர் கூறியது, அழிவுப்பாதையில் மதிப்பீடுகள் கீழே விழ அணுக்க முதலாளித்துவத்தில் இந்தியா வீழ்ந்து அமெரிக்க காலனி நாடாகிய இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியதிருக்கிறது. இந்த நூல் ஒரு ஆட்சித்தலைவரின் வெளிச்சமான இருண்ட பக்கங்களை பள்ளி மாணவி, வகுப்பு ஆசிரியர் கூறிய கட்டுரைக்காக தேடும் தகவல்கள் அடிப்படையில் நமக்கு காட்டுகிறது. இந்த வடிவம் கூட சிறப்பாகவே உள்ளது. சிறுமி நூலகத்தில் தகவல்களை தேடுகிறான். பிறகு தாத்தா பாட்டியிடம் கேள்விகளைக் கேட்கிறாள். குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்கிறாள். இப்படியாக சித்திரம் மெல்ல வரையப்படுகிறது. இது ஒரு அபுனைவு நூல்தான். புனைவு போன்ற கதை சொல்லும்முறை அந்த அபுனைவு நூலை சிறப்பாக்குகிறது.
இந்திராகாந்தி பற்றி வலதுசாரி பார்ப்பன மதவாத சிந்தனையாளர்கள் அல்லாதவர்களின் நூல்களை வாசித்தால் அவரைப் பற்றிய சித்திரத்தை அறிந்துகொள்ள முடியும்.
#இந்திராகாந்தி #அரசியல் #அறிவியல் #அணுகுண்டு வெடிப்பு #புத்தகவிமர்சனம் #காங்கிரஸ் #பிந்த்ரன்வாலே #ஆபரேஷன் ப்ளூஸ்டார் #வங்கதேச பிரிவினை #பசுமை புரட்சி #தானிய பற்றாக்குறை #உணவு தானிய உதவி #அமெரிக்கா #வெளியுறவுக் கொள்கை
#indiragandhi #assasinination #1984 #sikh #religion #i'm not feminist #human #politics #dumb child #nature #indira congress #nuclear bomb #tamil #book review


கருத்துகள்
கருத்துரையிடுக