வானகம் இதழ் ஏப்ரல் – மே 2014 தலையங்கம்


வானகம் இதழ் ஏப்ரல் – மே 2014 தலையங்கம்
                          தொகுப்பு: அரசமார்

வானகத்திலிருந்து ஒரு விதை!

     கனவு கனிந்திருக்கிறது. விவசாயம் தொடர்பான இதழ் ஒன்றினை எந்த சார்புமில்லாமல் உழவர்களின் நலன், இயற்கையின் நலம் விரும்பி உருவாக்க விரும்பினார் நம்மாழ்வார். இன்று நம்மாழ்வார் நம்முடன் இரண்டறக் கலந்திருப்பதன் நம்பிக்கையில் அவர்தம் கனவை நாம் அனைவரும் ஏற்றிருக்கிறோம்.

     எப்போதும் பெரும்பான்மை மக்களின் ஆசை, கருத்துக்களுக்குத்தான் மதிப்பு என்றில்லாமல் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் சூழல் குறித்த அக்கறையோடும், உணவு குறித்து கவலைப்படும், உழவர்களின் நலன் பற்றியும் சிந்தனை செய்யும், செயல்பாடுகளை முன்னெடுக்கும் குழு இன்று உருவாகியுள்ளது. எதையும் மக்களுக்கு விதியாக நிர்ணயிக்காமல் பல்வேறான வாய்ப்புகளை உருவாக்க முனைவதே இயற்கை சார்ந்த செயல்பாடுகளுக்கு நல்ல பொருளாக இருக்க முடியும். சிறு பொறி போன்ற நம்பிக்கைதான் பல தடைகளை வென்று சாதித்திருக்கிறது. உலகில் அனைத்து மாற்றங்களும் எதிர்ப்பு, ஏளனங்களைக் கடந்து ஏற்றுக்கொள்ளுதல் நிகழும்வரை மாற்றங்களை நிகழ்த்தியவர்கள் மனம் சோராது நம்பிக்கையுடன் செயல்பட்டார்கள்.

     இரு மாதங்களுக்கு ஒரு இதழ் என்று திட்டமிட்டு பயணப்படும் இந்த பயணத்தின் தூரம் வெகுதொலைவு என்றாலும் முதலடி எடுத்து வைத்தால்தான் பயணம் தொடங்கமுடியும். சக உயிரின் மீது அக்கறையும், கருணையும் கொண்ட பலரும்  இணைந்து கூட்டாக செயல்பட்டால் மட்டுமே பல்வேறு செயல்பாடுகளை செய்ய முடியும். இயற்கை வழி  வாழ்வை பேசுவதை தன் இலக்காகக் கொண்டு தன் பயணத்தைத் தொடங்குகிறது. இதழின்  தொடர்ச்சியான செயல்பாடு மாற்றங்களில் நம்பிக்கை கொண்டு அவற்றை வரவேற்கும் மனிதர்களின் கருத்துக்களில், விமர்சனங்களில், அறிவுறுத்தல்களில்தான் உள்ளது என்று உறுதியாக நம்புகிறோம். பதில்களை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். வாருங்கள்! கைகோர்த்து செல்வோம். ஒவ்வொரு விதைக்கும் வானத்தை சாத்தியப்படுத்துவோம்.
    

கருத்துகள்