மன்னித்துவிடுங்கள்


மதிப்பிற்குரிய தமிழ் இ – புக்ஸ் தள தோழர்களுக்கு,

     பள்ளிக்கு வெளியே வானம் எனும் மொழிபெயர்ப்பு என் ஒரு மாத கடின உ.ழைப்பின் பயனாக உருவானது. மொழிபெயர்க்கும்போதே இந்நூலை எவ்வளவு விரைவாக வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியிட வேண்டுமென்று நினைத்தேன். நூலின் மையம் பள்ளிக்கல்வி பற்றிய கடும் விமர்சனங்களடங்கியது. கல்விமுறை பற்றிய ஆதங்கம் கொண்டிருக்கும் அனைவரும், ஏன் கற்கின்ற மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு வெளியே வானம் நூல் வசீகரிக்கும் என்று உளமார நம்பினேன். காப்புரிமை இயல்வாகை பதிப்பகம் பெற்றுள்ளது உண்மை. ஆனால் நிதி நெருக்கடியால் புத்தக உருவாக்கம் தள்ளிச்சென்ற நிலைமையில் நான் அனைவரையும் சென்று சேரும் வழியான இணையத்தை ஆராய்ந்தபோது, தங்களுடைய இணையதளம் வரம் போல் கிடைத்தது. வெளியிட மட்டும்தான் நான் நினைத்தேன். காத்திருந்து அச்சிட்டு அதைக்கொண்டு பெரும் பணம் சம்பாதிக்க என்னுடைய பைத்தியக்காரத்தன இதயத்திற்கு தெரியவில்லை. கடும் உழைப்பில் விளைந்த பலவற்றை நமக்காக பல உன்னத மனிதர்கள் விட்டுச்சென்றிருக்கிறார்கள். நான் என் உழைப்பை, அறிவை  மக்களுக்காக செலவழிக்க முயற்சித்தேன் என்று கூறுவது மிக அதிகம்.சமூகத்திற்கான சிறிய பங்களிப்பாக இந்நூலை நான் கருதினேன். மூல நூலின் பதிப்பாளர்களான அதர் இந்தியா பதிப்பகத்தாருக்கு பள்ளிக்கு வெளியே வானம் மின்னூலாக வெளியான செயல்பாடு கடும் அதிருப்தியைத் தந்துவிட்டது. அவர்களின் கடும் எதிர்ப்பினால், நான் பெரிதும் நம்பிய இயல்வாகை பதிப்பகத்தாரான நண்பர்களும் இதனை கடுமையாக ஆட்சேபித்தார்கள். கடும் மனச்சோர்வை அளிக்கும் வார்த்தைகளை கூறினார்கள்.
 புத்தகமாக, அல்லது மின்நூலாக எப்படி வெளியிட்டால் என்ன? அனைவருக்கும் சென்று சேருவதுதானே முக்கியம் என்று கூறியபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இதில் பெரும் உழைப்பை அர்ப்பணித்த எனக்கென ஒரு ரூபாயும் நான் பெறவில்லை என்றபோதும், நூலை தளத்தில் இருந்து அகற்றியே ஆகவேண்டும் என்று கூறுவதால், வலியோடும், வேதனையோடும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். அதர் இந்தியா பிரஸின் உலக நலம் நாடும் நல்லுள்ளத்தினை கௌரவப்படுத்தும் விதத்தில் தளத்திலிருந்து பள்ளிக்கு வெளியே வானம் மின்னூலை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து என்பிழையை மன்னித்துவிடுங்கள். இனி முழுக்க எனது எழுத்தை மட்டும், முழு உரிமையும் என்னைச்சார்ந்த படைப்புகளை மட்டுமே வெளியிடுவேன். வேறு வழியென்ன இருக்கிறது! அனைத்தும் வணிகமயமான உலகில். பிழையைப் பொறுக்க வேண்டுகிறேன்.
நன்றி!!!
                                                                                                                உண்மையுள்ள அன்பரசு சண்முகம்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்