வானகம் இதழ் ஜூலை – ஆகஸ்ட் 2014 தலையங்கம்
வானகம் இதழ் ஜூலை – ஆகஸ்ட்
2014 தலையங்கம்
தொகுப்பு:
அரசமார்
கரங்களே
ஒன்று சேர்த்துக்கொள்ளத்தானே நண்பர்களே! உழவர்களுக்கான நலன்களை முன்னிறுத்தி நம் மரபை
மீட்டெடுக்க முயலும் எளிய ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியைச் செய்ய வானகம் இதழ் முனைந்ததற்கு விமர்சனங்கள், பாராட்டுக்கள், கருத்துக்கள்
என்று மகிழ்வோடு பகிர்ந்து கொண்டு பெரும் ஊக்கத்தையும், ஆனந்தத்தையும் அளித்த இயற்கை
நேசர்களுக்கு நன்றி என்ற சிறு சொல் போதாது.
குழந்தைகளுக்கான இலக்கியம் படைத்தலையே
தன் இறுதி மூச்சுவரை அர்ப்பணிப்போடு வறுமையினூடேயும் செய்த வாண்டு மாமாவிற்கு எங்களது
ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.
சென்னை மௌலிவாக்கத்தில் நடந்த
கட்டிட விபத்தில் பலியானவர்கள் அனைவரும் விவசாயப்பின்னணி கொண்ட விளிம்புநிலை மக்களே.
உலகமய சூழலின் நிர்பந்தம் காரணமாக நிலத்தைக் கைவிட்டு பெருநகரங்களை நோக்கி பயணிக்கும்
அப்பாவி மக்கள். தம் சக மனிதர்களின் பெரும் நுகர்வுக்காக மனித நேயம் இன்றி காவு கொடுக்கப்படுகின்றனர்.
கட்டிட உரிமையாளர்களுக்கோ அங்கு
வீடு வாங்குபவர்களுக்கோ இதனால் சிறு கீறலும் ஏற்படப்போவதில்லை. தம் நேசத்திற்குரிய
உறவுகளை இழந்து நிற்கும் நம் சகோதர, சகோதரிகளுக்கு இதனைத் தாங்கி நிற்கும் மனவலிமையை
எல்லையற்ற இயற்கையின் பேரருள் தரவேண்டும் என்பதே நமது பிரார்த்தனை.
எந்த வணிக நிறுவன பின்புலங்களும்
இன்றி தன்னார்வலர்களின் ஆத்மார்த்தமான உதவிகளினால்தான் வானகம் உயிர்ப்புடன் இன்றுவரையும்
இயங்கி வருகிறது. வானகம் இதழின் வளர்ச்சியை நிலைப்படுத்தி
வளர்க்க இதழுக்கான சந்தாத்தொகையினை பெற்றுத்தர எவ்வித பிரதிபலனும் கருதாத உன்னத தோழர்கள்
பலர் மகிழ்வுடன் முன்வந்திருக்கின்ற நிகழ்வு பெரும் நம்பிக்கையினை விதைக்கிறது.
பேசுவதை விட களம் சார்ந்த செயல்பாடுகளில்
தம்மை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டு எந்த அடையாளமும் இல்லாது தெருவிளக்கு போன்று சமூகத்திற்கே
வழிகாட்டுதலாக வாழும் மனிதர்களை அடையாளம் காண்பது இன்றைய சூழலில் மிக அவசியம்.
தன்னைத்தாண்டியும் அடுத்தவர்களின்
நலனில் இயற்கையில், சூழலில் அக்கறை காட்டுவதற்கான தேவை உள்ளது என்பதை இளையோருக்கும்
கூற, பின்பற்ற இம்முயற்சி உதவும் என்று நம்புகிறோம்.
தன்னை எரித்தே பிறருக்கு வெளிச்சம்
தரும் உன்னத ஆன்மா கொண்ட மனிதர்களை அடையாளம் கண்டறிந்து வெளிக்கொணர கௌரவப்படுத்த தொடர்ந்து
முயற்சிப்போம். நன்றி தெரிவித்தலில்தானே நம் வாழ்வே அர்த்தமுள்ளதாகிறது.
விவசாயம் தொடர்பான கட்டுரைகள்,
இயற்கை மேம்பாட்டு செயல்பாடுகள், சூழல் பிரச்சனைகள், மரபை மீட்டெடுக்கும் செயல்பாடுகள்,
கவனம் கொள்ளப்படாத விவசாய ஆளுமைகள் குறித்த கட்டுரைகள் என எதுவானாலும் அனுப்பி வையுங்கள்.
தகுதியானவற்றை பகிர எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து பேரொளியாக
மாறுவோம் நண்பர்களே.
கருத்துகள்
கருத்துரையிடுக