பெண்களின் கௌரவத்திற்காகத்தான் உழைக்கிறேன்


பெண்களின் கௌரவத்திற்காகத்தான் உழைக்கிறேன்
                     ஆங்கிலத்தில்: எஸ்எஸ்
                     தமிழில்: கார்த்தி

     ஸ்வப்னில் சதுர்வேதி தலைமை ஏற்று நடத்தும் சமக்ரா கழிவறைப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சூழல் அறிவியல் மற்றும் பகுப்பு வடிவமைப்பு முறையில் கழிவறைகளை நகரில் வாழும் ஏழை மக்களுக்காக, பயன்தரும் விதத்தில் கட்டணம் குறைவாக அமைத்துத் தருகிறார்.

     இந்தப்பணியை முன் வந்து செய்வதற்கு ஒரே காரணம் பெண்களின் கௌரவத்தைக் காக்கவேண்டும் என்கிற விருப்பமும், கடமை உணர்வும்தான் காரணம். ஒரு பெண்குழந்தைக்கு தந்தையாக நான் அவளின் எதிர்காலத்திற்கு பொறுப்பாகிறேன். அதை செம்மையாக கட்டமைக்க முயற்சிக்கிறேன் என்று வார்த்தைகள் கோர்த்து நெஞ்சிற்கு நெருக்கமாக உரையாடுகிறார் ஸ்வப்னில் சதுர்வேதி.

     சமக்ரா நிறுவனத்தைத் தொடங்கும் முன் சதுர்வேதி கான்டினென்டல் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனத்தில் அடுத்த தலைமுறை வாகனங்களுக்கான டெலிமேட்டிக்ஸ் மற்றும் நேவிகேஷன் இயக்கம் போன்ற தொழில்நுட்பங்களை வடிவமைக்கும் பணியை செய்து வந்தார்.

     2001 ஆம் ஆண்டு சதுர்வேதி அமெரிக்கா கிளம்பிச் சென்று,தன்  படிப்பை முடித்தார். உடனே மென்பொருள் வடிவமைப்பாளராக பணியில் சேர்ந்தார். பின் திருமணம் முடிந்து குழந்தை பிறந்திருந்தபோது, 2007 ல் தன் பெற்றோர்களைப் பார்க்க பிலாய் வரும்போது, மக்கள் அருவெறுக்கத்தக்க, மோசமான தூய்மையற்ற சூழலில் வாழும் அவலத்தைப் பார்த்து பல கேள்விகள் பிறந்திருக்கிறது சதுர்வேதிக்கு. பின் அமெரிக்கா திரும்பி தன் வேலையை விட்டு விலகி, நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் சுகாதார வசதி மற்றும் வடிவமைப்பு குறித்த படிப்பை படித்துவிட்டு, 2011 ல் இந்தியா திரும்பியதும், சமக்ரா அமைப்பை தொடங்கிவிட்டார்.
     ‘’ நம்மால் பேஸ்புக் இல்லாமலோ, ஸ்மார்ட் போன்கள் இல்லாமலோ, வாழமுடியும். ஆனால் பிற மனிதர்களுக்காக துடிக்கும் இதயங்களும், கரங்களும், அதில் நிறைந்த பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் நம் சமூகமே இயங்க முடியாது ‘’ என்று தீர்க்கமாக பேசி முடித்து புன்னகையுடன் விடைகொடுக்கும் ஸ்வப்னில் சதுர்வேதியிடம் நம்பிக்கையின் ஒளி வசீகரம் குன்றாமல் ஒளிருகிறது. சமூகம் பல தடைகளைத் தாண்டி இயங்க உந்து சக்தியே அதுதானே!
                                     நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
                                                6 ஏப்ரல் 2014

கருத்துகள்