தெருவில் நிகழும் களிப்பின் நடனங்கள்


                                தெருவில் நிகழும் களிப்பின் நடனங்கள்
                           ஆங்கிலத்தில்: செவ்லின் செபாஸ்டியன்
                           தமிழில்: ஆரண்யன்

2012 ஆம் ஆண்டு மே மாதம் குளோபல் விஷன் இன்டர்நேஷனல் அமைப்பைச்சேர்ந்த தன் நண்பர்களோடு கொச்சிக்கு அருகேயுள்ள ஸ்ரீதர்ம பரிபாலனை யோகம் சென்ட்ரல் பள்ளியில் தன்னார்வ குழுவாக பணிபுரிய முடிவெடுக்கிறார் சிகாகோவைச் சேர்ந்த புகைப்படக்காரரான வில்லியம் ஜெரார்டு.
‘’ பெரிதும் பதட்டம் கொண்டிருந்த சூழல் அது. குழந்தைகள் எங்களை எப்படி புரிந்துகொள்வார்கள் என்பதும், அவர்களுக்கு கற்றுத்தரும் அளவு எனக்குள் விஷயங்கள் முழுமையாக இருந்ததா என்றே நான் சந்தேகம் கொண்டிருந்தேன் ‘’ என்கிறார் ஜெரார்டு.

ஜெரார்டின் அறை நீண்ட நடைபாதையின் கடைசியில் உள்ளது. பல வகுப்பறைகள் ஒரு புறம் அமைந்துள்ளன. பள்ளிக்குச் சென்ற முதல் நாளை நினைவு கூர்கிறார் ஜெரார்டு. பள்ளி மாணவர்கள் ஜெரார்டை வரவேற்று, அவரது கைகளைத் தொட்டிருக்கின்றனர். ‘’அற்புதமான பரவசம் கிளர்ந்த கணம் அது’’ என்று நெகிழும் அந்த பள்ளியில் மூன்று மாதங்கள் தங்கி கணக்கில்லாத பல படங்களை எடுத்திருக்கிறார். அதில் பல இளஞ்சிறுமிகள் பள்ளியின் முற்றத்தில் நிற்பது, பிரார்த்தனைக் கூட்டத்தில் கைகூப்பி தொழுதவாறு நிற்பது என படங்களைக் குறிப்பிடலாம். வரிசையில் கைகளை இறுக பற்றி கண்களை மூடி நிற்கும் ஒரு படத்தைக் காட்டி ‘’ இறைமையின் முடிவுறாத இழையில் தன்னை பிணைத்துக்கொண்டுள்ள இச்சிறுமியின் முகம் எனக்கு மிகப்பிடித்திருந்தது ’’ என்று தான் எடுத்த புகைப்படத்தின் சூழலைக் கூறுகிறார்.  பள்ளிக்கூடத்தின் முன்னால் குழந்தைகள் நிற்பது, காற்றில் புழுதி பறக்க மைதானத்தில் விளையாடுவது, ஆசிரியரின் பின்னே குழந்தைகள் நிற்பது என பல புகைப்படங்களும் ஏதோ உணர்வு ஒன்றை பார்வையாளருக்கு கடத்துகிறது.

வில்லியம் ஜெரார்டு கொச்சியின் துறைமுகப்பகுதியில் உள்ள பாஸ்டியன் தெருவில் உள்ள சுவர் ஒன்றில் தான் படம்பிடித்த பள்ளி குழந்தைகளின் புகைப்படங்களை மரச்சட்டமிட்டு மக்களின் பார்வைக்காக மாட்டியிருக்கிறார். புகைப்படங்களைக் காட்சிப்படுத்த கவனமாக இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததாக கூறியவர், பல கிளைகளைக் கொண்டுள்ள மரத்தினைக் காட்டி ‘’இந்த மரங்கள்தான் கண்காட்சியின் தாய்மடி போன்றது மிகவும் உயிர்ப்பான, தன்னியல்பான அழகைக் கொண்டுள்ளது இம்மரம். நான் பிறந்த சிகாகோவுக்கு அழகுண்டு என்றாலும், நாம் உருவாக்கிய ஒன்றுக்கு தன்னியல்பாக உருவாகும் அழகு இல்லை. இந்தியாவில் வளரும் மரங்கள் இயல்பான மலர்ச்சி கொண்டு உள்ளன. ஓவியங்களுக்கு இயற்கையான சூழல் தேவை என்பதை உணர்கிறேன்’’ என்பவருக்கு இன்னொரு உன்னத இலக்கும் உண்டு.

 ‘’ கலை என்பதை ஓவிய அரங்கிலோ, அல்லது அருங்காட்சியத்திலோ பூட்டி வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தை நான் ஆதரிக்கமாட்டேன். தெருக்களில் அவை மக்களின் முன்பாகவே அவை வெளிப்பட, காட்சிபடுத்த வேண்டும் என்று விரும்புகிறேன் ‘’ என்கிறவர் ‘’ தோராயமாக 250 மக்கள் எனது ஓவியக்கண்காட்சியைக் காண்கிறார்கள் தினமும். ஆனால் சிகாகோவில் ஓவியக்கண்காட்சியில் மாதம் முழுவதும் 90 பேர்தான் அதனைப் பார்வையிட வருவார்கள் ‘’ என்று வெளிப்படையாக பேசும் ஜெரார்டு பயன்படுத்தும் கேமிரா கெனான் டி 3000 ஆகும். இதனை இயக்கும் அனைத்து நுட்பங்களையும் தானாகவே முயன்று கற்றுக்கொண்டு படமெடுக்கத் தொடங்கியவர் ஆவார்.

‘’ லியோ டால்ஸ்டாயின் பார்வைக்கோணத்தில் நான் கலையை அணுகுகிறேன். டால்ஸ்டாய் கலையினை பிறரை உணரும் அனுபவிக்க வைக்கும் ஒன்றாக கருதினார். அதனை செயல்படுத்த முயற்சித்தார். நான் என் புகைப்படங்களில் கூறவிரும்புவதும், வெளிப்படுத்துவதும் இந்த கோணத்தையே என்ற நம்புகிறேன். புகைப்படங்களின் வழியே இதனைக் காண்பவர்கள் தங்கள் ஆன்மாவில் மற்றொரு உயிரை, ஆன்மாவினை உணரச்செய்ய முடியும் என்று நினைக்கிறேன். அதனை சாத்தியப்படுத்த முயல்வதே எனது புகைப்படங்கள் என்று கூறி புன்னகைக்கிறார் வில்லியம் ஜெரார்டு.
                                நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
                                           6 ஏப்ரல் 2014

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்