உரத்துப்பேசு


                                    உரத்துப்பேசு


                                தமிழில்: ஜோஸபின் பிராஸனன்

இரு ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் விழா ஒன்றில் எல்கா அஞ்சலியை சந்தித்தார். அன்றே இருவரின் மனதிலும் இருவருமாக இணைந்து ஏதோ ஒன்றினைச் செய்ய பெரும் ஆவல் எழுந்திருக்கிறது.

கனவு கனிந்திருக்கிறது. இன்று ஆந்திரப்பிரதேசத்தில் பாலின சமத்துவம், பாலின சுதந்திரம் ஆகியவற்றை ஆதரித்தும், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளை எதிர்த்தும் போராடுகின்ற அமைப்பினை தோழிகளான எல்காவும், அஞ்சலி ருத்ரராஜூவும் கட்டமைத்து நடத்திவருகிறார்கள்.

‘’ பெண்களுக்கான அதிகாரமளித்தல், அங்கீகாரம் என்ற முறைகளில் அவர்களுக்கு வாய்ப்புகளை கிடைக்கச்செய்ய நினைத்தோம். எல்காவும் நானும் இருவருமாய் இணைந்து உருவாக்கிய ‘மை சாய்ஸ்’ நல்ல வாய்ப்பாய் அமைந்தது. எங்களுடைய இலக்குகள் ஒன்றே. அவை நீண்ட தொலைவில் உள்ளன. நிதானமாக அதனை நோக்கி பயணிக்கிறோம் ‘’ என்கிறார்கள் ‘மை சாய்ஸ்’ அமைப்பின் நிறுவனர்களான எல்கா குரோபிலும், அஞ்சலி ருத்ரராஜூவும்.

‘மைசாய்ஸ்’ தொண்டு நிறுவனமானது ஹைதராபாத் மற்றும் வாராங்கல் ஆகிய இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்துப் போராடுகிறது மேலும் அவர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கிறது.

 ‘மை சாய்ஸ்’ அமைப்பின் மூலம் இந்தியாவில நிகழும் குடும்ப வன்முறைகளை எங்களிடம் இருக்கும் பயிற்சி பெற்ற பீஸ் மேக்கர்ஸ்களைக் கொண்டு தடுக்க முயற்சிக்கிறோம். அதற்கான ஆலோசனைகளையும், சட்ட உதவிகளையும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்குகிறோம். எங்களிடம் பயிற்சி பெற்ற எண்பது பேர் உள்ளார்கள். என்கிறவர் ‘’ உள்ளூர் பெண்கள் பீஸ்மேக்கர் பயிற்சிக்காக தங்கள் பெயரை பதிவு செய்துகொண்டபின் நான்கு வாரங்கள் அவர்களுக்கு அடிப்படை பயிற்சிவகுப்புகள் இருக்கும். அதன்பின் அவர்கள் குடும்ப வன்முறை நிகழாது தங்களின் உறவு வட்டத்தில் பணிபுரிய எட்டுவாரங்கள் அனுமதிக்கப்படுவார்கள் ‘’ என்று விரிவாக மைசாய்ஸின் செயல்பாடுகளைப் பகிர்ந்துகொள்கிறார் அஞ்சலி.
நாற்பத்து நான்கு வயதாகும் எல்கா 2011 ல் சவுத் ஆப்பிரிகாவிலிருந்து தன் கணவர் ரோஜர் மற்றும் மூன்று குழந்தைகளான காப்ரியல், ஜோஷ்வா, ஜோ வுடன் இந்தியாவுக்கு வந்தவர்.

‘’ சிஎப்ஏ மற்றும் எம்பிஏ படித்துவிட்டு சிறுநிதி வழங்குதல் உள்ளிட்ட வங்கிப்பணி போன்றவற்றில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு, இந்தியா வரும்போது என் மனதில் இருந்த ஒரு விஷயம் பெண்களை முன்னேற்ற அதிகாரமளிக்க, தற்சார்பாக வாழ தைரியம் அளிக்கும் பொருட்டு அவர்களுக்கு சிறிய அளவில் நிதி அளிக்கலாம் என்பதுதான்.ஆனால் என் நண்பர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள், சமுதாயத்தலைவர்கள் ஆகியோரிடம் இதுபற்றி கலந்தாலோசித்த போது, குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்க ஒரு வழி கண்டிபிடிக்குமாறு வேண்டினார்கள். அதுதான் அவர்களின் பேச்சிலிருந்தும் நான் உடனடித்தேவையாக உணர்ந்ததும் கூட. என்னால் குடும்ப வன்முறைகளை இந்தியாவிலிருந்து முழுக்க அழித்துவிட முடியும் என்று எண்ணவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கையும், தீர்வும் வேண்டியிருக்கிறது. அதனால்தான் ‘மை சாய்ஸ்’ பிறந்தது. இது மட்டுமில்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள், குழந்தைத்திருமணம், மக்கள்தொகைப் பெருக்கம் உள்ளிட்ட பிற இலக்குகளும் உள்ளன. தொடர்ச்சியாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு பின்னர் இதனை அடைவோம் ’’ என்று கனவுகள் ஒளிர பேசுகிறார் எல்கா.

இந்தியாவில் கணவன் தன் மனைவியை தான் ஆண் என்பதற்காகவும், தன் செயல் நியாயம் என்பதற்காகவும் அடிக்கிறான் என ஐம்பது விழுக்காடு மக்கள் ஒத்துக்கொள்கின்றனர். இது குறித்து அஞ்சலி ‘’ வன்முறைகள் நிகழ்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெண்களைக் காக்கும் விதமான சட்டங்கள் அவளின் பின்னே மறைந்து உள்ளது. பள்ளி, வீடு ஆகிய இடங்களில் பெண்களை பாதுகாப்பதற்கான மாற்றங்களை விரைந்து உருவாக்க வேண்டும் ’’ தேசிய குற்றப்பதிவேடுகளில் ஆந்திரப்பிரதேசத்தில் பெண்களின் மீதான தாக்குதல்கள், வன்முறைகள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறார். இந்த அமைப்பின் பணியினூடே இயற்கை விவசாய பண்ணை ஒன்றையும் இவர் ஹைதராபாத்தில் அமைத்து பராமரித்து வருகிறார்.

பெண்கள் தங்கள் பருவங்களில் பெரிதும் பாதிக்கப்படும் இடமாக அண்மையில் இந்தியா மாறிவரும் சூழல் பெரிதும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதை குறிப்பிட்டவர், ‘’ பெண்களின் மீதான வன்முறையை அனைவரும் இயல்பாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். இந்த செயல்பாடு பெண்களை கலவரப்படுத்துகிறது. மனதில் ஏற்படும் இத்தகைய பயம் பெண்களின் முன்னேற்றத்தை தடுத்து முடக்குகிறது. ஒரு ஆண் தெருவில் நடந்துவருவது பயத்திற்குரியதல்ல. ஆனால்  எந்த சமூக பொறுப்பையும் உணராத அகங்காரமும், பழமைவாதமும் பேசித்திரியும்  கீழ்மை குணம் கொண்ட சில காவல்துறை தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் பெண்களுக்கெதிரான அப்பட்டமான வன்முறை மற்றும் தாக்குதல்களை நியாயப்படுத்துவதாக இருப்பது நிச்சயம் தற்செயலானதல்ல என்று நினைக்கிறேன் ‘’ என்று ஆவேசமாக கூறுகிறார் அஞ்சலி ருத்ரராஜூ. அவர் கூறாமல் விட்ட அந்த அரிய கருத்து ‘’ கற்பழிப்பை உங்களால் தடுக்க முடியாதபோது அதனை அனுபவிக்க முயலுங்கள் ‘’ என்பதே. கூறியவர் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா என்பது தங்களின் மேலான கவனத்திற்கு.

                                நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
                                           3 ஆகஸ்ட் 2014




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்