கதைகள் நம் அனைவருக்குமானவை


கதைகள் நம் அனைவருக்குமானவை

    ஆங்கிலத்தில்: காமேஸ்வரி பத்மநாபன்
                                                                தமிழில்: அன்பரசு சண்முகம்

     நமது இந்தியாவில் கதை கூறுவது என்பது தொன்று தொட்டு நடந்துவரும் ஒரு நிகழ்வாக உள்ளது. மகாபாரதம், ராமாயணம், பஞ்சதந்திரக்கதைகள், திருக்குறள் மற்றும் நீதிநெறிநூல்கள் பலவற்றையும் எளிய, சுவாரசியமான கதைகளின் வழியே கேட்பவர்களின் இதயத்தில் இடம் பெறச் செய்துவிட முடியும். இவற்றை பின்னாளில் நாம் நூலாகப் படித்திருந்த போதும், இதனை சிறுவயதில் கதையாகக் கூறிய ஆசிரியரை, தாயை, நம் உறவினர்களை மறக்கவே முடியாது. நேர்மை, துணிச்சல், வீரம், பயணம், சாதுர்யம், ஒற்றுமை என வலியுறுத்தும் கதைகளின் நிழலில் பள்ளி நாட்களின் இளைப்பாறல் அவ்வளவு இனிமையான ஒன்றாக இருந்தது. இன்றைய தொழில் பயிற்சி போல் இயந்திரத்தின் ஒரு பாகம் போல் ஆக்கிவிடும் வேலைக்குச் செல்லும் கணவன், மனைவி ஆகியோர் தங்கள் குழந்தைகளிடம் பேச நேரம் கிடைப்பதே அரிதாக உள்ளது. கணவன், மனைவி என இருவருமே சேர்ந்திருந்தால் கூட்டுக்குடும்பம் என்ற சமகாலத்தில் மூதாதையரின் வழிகாட்டல் கிடைக்க அதிக வாய்ப்புகள் இல்லை. தொலைக்காட்சிகள், தகவல் தேடும் நிகழ்ச்சிகள், மதிப்பெண் பந்தயங்களையும் தாண்டி கதைகளை காலத்திற்கு ஏற்றாற்போல, பள்ளிக்குழந்தைகளுக்கு ஏற்றாற்போல கூறும் பல கதைசொல்லிகள் தோன்றி குழந்தைகளின் மனதை நெகிழ்வாக்குகிறார்கள்; புதுமைத்திறனை விதைக்கிறார்கள்.

     குறிப்பிடத்தக்க கதை சொல்லியான ஜெய்ஸ்ரீ சேதியையும் கதை கூறும் கலை அப்படித்தான் வசீகரித்தது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நூலகம் ஒன்றில் தன்னார்வலராக பணிபுரிந்து வந்த ஜெய்ஸ்ரீ கதையின் மாய வசீகரம் அனைவரையும் எளிதில் கட்டிப்போட்டுவிடுவதை கண்டார். வானொலியில் சிறிது காலம் கதை கூறுதலைத் தொடர்ந்தவர், பின் ‘ஸ்டோரி ஹார்’ எனும் கதைகூறுதலுக்கான அமைப்பைத் தொடங்கினார்.
ஜெய்ஸ்ரீ சேதியும், அவரது நண்பர்களும் அமைப்பின் முக்கிய இலக்காகக் கொண்டது குழந்தைகளையும், கிராம மக்களின் முன்னேற்றத்தில் பங்குகொள்ளும் தொண்டுநிறுவனங்களையும்தான். தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு கதை கூறுவதை உயிர்ப்பானதாகவும், வேடிக்கை நிரம்பியதாகவும் மாற்றினார். கதை கூறுதலை விரும்பி கற்க விரும்பும் ஆசிரியர்கள், பல்வேறு நிறுவனப் பணியாளர்கள் ஆகியோருக்கும் கதை கூறுவதற்கான பயிற்சி வகுப்புகளையும் ஜெய்ஸ்ரீ சேதி தயாரித்து நிகழ்த்துகிறார்.
     கதை கூறுவதில் பதினாறு ஆண்டு கால அனுபவத்தினைக் கொண்டுள்ள இவர், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், இயற்கைப் பாதுகாப்பு, ஆண், பெண் ஆகியோருக்கான சிக்கல்கள் ஆகியவை என எதையும் கதையாக மாற்றிவிடும் அற்புதத்தை கைக்கொண்டிருக்கிறார். டெல்லி மற்றும் ஃபரிதாபாத்தில் நடைபெற்று முடிந்த கதைத்திருவிழாவில் நடனம், பாடல், நாடகம் என பல நிகழ்வுகளில் கலந்துகொண்ட குழந்தைகளின் குறையாத உற்சாகம் கொண்ட பங்களிப்பே ‘ஸ்டோரி ஹார்’ அமைப்பின் உழைப்பைக் கூற சான்றாக உள்ளது.

     மே மாதத்தில் குர்கானில் நடந்த விழாவில் ‘’ ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோர் ஐபேட் அல்லது புத்தகம் வாங்கிக் கொடுக்கிறார்கள். ஆனால் அதைவிட உயிர்ப்பான அனுபவமாக பின்னாளில அவர்களுக்கு இருக்கும் கதை கேட்கும் பயிற்சிக்கு அழைத்துவந்து, அவர்கள் சிறிது நேரம் எங்களோடு இணைந்திருந்தால் போதும். அந்த அனுபவம் பின்னாளில் சிறந்த தகவல் தொடர்பாளராக, பேச்சாளராக மாறுவார்கள். வருங்கால தொழில்நுட்ப காலத்திற்கு இது போன்ற திறன்கள் மிக அவசியம் ’’ என்று பேசினார்.
‘ஸ்டோரி ஹார்’ அமைப்பு குழந்தைகளின் கவனத்தை ஈர்ப்பை தன் மேல் தொடர்ந்து தக்கவைத்திட ஆசிரியர்களுக்கும், பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. மேலும் பல தனிச்சிறப்பான வகுப்புகளையும் இவ்வமைப்பு தயாரித்து நடத்துகிறது.

அனைத்து செய்திகளையும், சிறு கருக்களையும் அற்புதமான கதையாக மாற்றிவிடும் ஜெய்ஸ்ரீ சேதி இன்றைய காலத்திற்கான தேவையான சுருங்கக் கூறுதல் என்ற தன்மையினையும் உணர்ந்திருக்கிறார். மேலும் கதைகளின் வழியே பல்வேறு தகவல்களையும், இந்தியாவின் வரலாறு குறித்த தகவல்களையும் குழந்தைகளுக்கு கூற வேண்டிய முக்கியத்துவத்தினையும் உணர்ந்து அவற்றையும் செம்மையாக செய்ய முயற்சிக்கிறோம் என்கிறார்.

பள்ளியில் கல்வி என்பது கட்டாயப்படுத்துவதாக இல்லாமல், பல்வேறு வாய்ப்புகளை வழங்குவதும், தன்னியல்பாக நிகழும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பவருக்கு, இந்தக் கனவு வித்துகளை ஊன்றி வளர்க்கும் முறையிலான பள்ளியைத் தொடங்கும் ஆசையும் உண்டு. ‘’இன்று எங்களது அமைப்பு மெல்ல சிறகுகளை விரித்து பறக்கத் தொடங்கியுள்ளது. நாளைக்கு என்ன நிகழ்கிறது என்பது அந்த கணத்தில் கண்டறியும் சுவாரசியமாக இருக்கட்டும் ’’ என்று பொம்மைகளோடு சிரிக்கிறார். இவரது இணையதளம்: www.Storyghar.com.

                                நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
     

கருத்துகள்