மலைகளின் பிள்ளைகள்


மலைகளின் பிள்ளைகள்
                        -அன்பரசு சண்முகம்

     லட்சக்கணக்கானோர் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று இறையருள் பெறுவதற்காக வந்து செல்லும் சூழலில் இந்நகரம் சில நாட்களிலேயே ஒரு ஆண்டில் சேரும் பல மடங்கு குப்பைகளை பெற்றுவிடுகிறது. சக மனிதர்கள் வீசி எறியும் குப்பைகளை சேகரித்து அகற்றுவதில்தான் எங்களது தன்னகங்காரம் அழிகிறது, வாழ்விற்கான ஞானம் அதில்தான் உள்ளது என்று உறுதியாக கூறும் இயற்கை மீது நேசம் கொண்ட தன்னார்வ நண்பர் குழுவினை பதிவு செய்வதோடு, அவர்களோடு வானகம் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது.
     கார்த்திக், சரவணன், பாஸ்கர், மணிகண்டன், வெங்கடேசன், செந்தில், ஜெகந்நாதன், ரஞ்சித், கார்த்திகேயன் என்ற இந்த நண்பர்கள் குழுவில் அவர்களின் பணிகளைப் பற்றி கேட்டதும்,கார்த்திகேயன் உற்சாகமாக, மெல்லிய குரலில் பேசத்தொடங்குகிறார். ‘’ எனக்கு முதலில் இந்த மலையை அறிமுகம் செய்தது என் அம்மாதான். பின் சில மாதங்களிலேயே அவர் இறந்துவிட, அவரை மலையின் வடிவில் காணத்தொடங்கினேன். மலையிலுள்ள மான் ஒன்று பிளாஸ்டிக் கழிவைத் தின்று இறந்துகிடக்கவே, அதன் இறப்பினால் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு, பிறகு வெங்கடேசன், மணிகண்டன்  ஆகியோருடன் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதோடு, மான்களுக்கு பருக நீரும் வைக்கத் தொடங்கினோம் ‘’ என்பவரைத் தொடர்ந்து நீளமான முடிவைத்திருந்த சித்த வைத்தியத்தில் ஈடுபாடு கொண்ட கார்த்திக் ‘’ எனக்கு காட்டிலுள்ள பாம்புகள் உள்ளிட்டவற்றின் மீதான ஆர்வம்தான் மலைமேல் பயணிக்க வைத்தது. இந்த நண்பர்கள் குழுவில் நான் தாமதமாகத்தான் இணைந்தேன். நண்பர்கள் அனைவருமாக சேர்ந்து பல வீடுகளில் புகுந்து விடும் பாம்புகளை மீட்டு வனத்தில் விடுவதைத் தொடர்ந்து செய்து வருகிறோம் ‘’ இயல்பான குரலில் கூறும் இவர் பாம்புகளைக் கையாள்வதில் வல்லவர் என்று நண்பர்கள் கூறுகிறார்கள்.
     செந்தில், ஜெகந்நாதன், அருணை செல்வம் மற்றும் ரஞ்சித் ஆகியோர் ‘’ எங்களால் முடிந்த விஷயமாக மலையில் கிரிவலப்பாதையில் அனாதரவாக விடப்படும் முதியவர்கள், நோயாளிகள் என இவர்களுக்கு உணவளிக்க முயற்சிக்கிறோம் ‘’ என்று தயக்கத்துடன் பகிர்ந்து கொள்ளும் இவர்கள் இச்செயல்பாட்டினை பல ஆண்டுகளாக இணைந்து செய்து வருகின்றனர்.
     அடுத்ததாகப் பேசிய பாஸ்கர் ‘’ திருவண்ணாமலை உச்சியில் வாழ்ந்து வந்த துறவி ஒருவரின் சிற்றுயிர் மற்றும் இயற்கை மீதான பரிவைப் புரிந்து கொள்வதற்காகவே மலையில் முதலில் பனிரெண்டு வயதில் ஏறத்தொடங்கினேன். பின்னாளில் மலையில் தனியாக வாழும் துறவி ஐயாவைப்பற்றி வியப்பு அதிகரிக்க, தொடர்ந்து அவரைக்காண மலைக்குச் செல்லும்போதுதான் இன்று குழுவிலுள்ள நண்பர்களைச் சந்தித்து அறிமுகமாகி பின் அனைவருமாக இணைந்து செல்லத்தொடங்கினோம். இன்று மலை என்பது தாய் மடியின் கதகதப்பை தருகிற, உணர்கிற இடமாக எங்களுக்கு உள்ளது ‘’ என்றவர் சிறிது இடைவெளிவிட்டு, ‘’ மலையை சுத்தம் செய்வது என்பது முதலில் மேலேதான் தொடங்கியது. இதற்கு காரணம் மேலே இருந்த துறவி ஐயாதான். அவர் எந்த பொருளையும் தன்னிடம் வைத்திருக்க மாட்டார். சிறு மண்பாண்ட பொருட்களை மட்டுமே தன்னிடம் கொண்டிருந்த இவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பனையேறி ஆவார். மேலும் அவர் வயது மலைக்கு வரும்போது அறுபத்தெட்டு இருக்கும் ‘’ என்கிறவர் மக்களுக்கு நன்மைகள் செய்ய அரசு பதவிக்கான முயற்சியாக விவசாயம் தொடர்பான ஐசிஏஆர் தேர்வு எழுதி தோல்வியுறுகிறார்.
‘’ பின் டேனிஷ் பள்ளியில் குக்கூ குழந்தைகள் வெளி மற்றும் குவாவாடீஸ் பல்சமய கலந்துரையாடல் மையம் ஆகிய இரு அமைப்புகள் இணைந்து நடத்திய விதைத்திருவிழாவில் கலந்து கொண்டபோது, ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இது போன்ற விவசாயம் சார்ந்த விழாவில், கலந்துகொண்ட நானூறுக்கும் மேற்பட்ட விளிம்புநிலை பெண்களின் பங்கேற்பும், நம்மாழ்வாரின்  கைகளின் மூலம் விதைகளைப் பெறும்போது அவர்களின் முகத்தில் கண்ட மகிழ்ச்சியும், பெருகிய நம்பிக்கையின் ஒளியும் நாம் உள்ள நிலையிலேயே பல செயல்பாடுகளைச் செய்ய முடியும் என்று அறிந்து நம்பிக்கை கொண்டோம்.
     பின்னர் ஊத்துக்குளியில் நடைபெற்ற பனைக்கான நெடும்பயணத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகளிடம் இருபது கி.மீ நடைபயணம் செய்து பேசிய நம்மாழ்வார் என் வாழ்வின் இறுதியாக என் கையிலுள்ள அனைத்தையும் உங்களிடம் தருகிறேன் என்று கண்ணீர் பெருக பேசிய பேச்சு அந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரின் ஆன்மாவிலும் புதிய வெளிச்சம் பாய்ச்சியது போல் இருந்தது. மறுமுறை அவரின் மரணத்திற்கான அஞ்சலியில்தான் பார்த்தேன். அங்கிருந்த மாட்டுத்தொழுவத்தில் நம்மாழ்வாரின் முனைவர் பட்டம், அடையாள அட்டைகள் கீழே கிடந்தன. அதிலிருந்துதான் எனக்கு படிப்பின் மீதான அகங்காரமே அழிந்துபோனது ‘’ என்றவர் தன் எம்சிஏ படிப்பிற்கான ஆய்வினையே இயற்கைக்கான விவசாய ஒத்திசைவு கொண்டதாக (online support for agriculture) செய்தவர் ஆவார்.
     ‘’ நம்மாழ்வாரைச் சந்திக்கும் முன் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான நூல் வாசித்தலின் போது பசுமைப் புரட்சியை உருவாக்கியவரான நார்மன் போர்லா மற்றும் இந்தியாவில் அதனை அறிமுகம் செய்த எம்.எஸ் சுவாமிநாதன் ஆகியோரே எனக்கு வெகு ஆதர்சமாக இருந்தனர். எப்படி என்றால் நார்மன் போர்லாவின் புகைப்படத்தினை சட்டைப்பையில் நன்றியோடு வைத்துக்கொண்டு சுற்றிய காலம் அது. பின் விவசாயம் என்பது கலாச்சாரம், தொழில் அல்ல என்ற நம்மாழ்வாரின் வார்த்தைகள், கவுத்தி வேடியப்பன் மலையைப் பாதுகாக்கும் போராட்டத்தைப் பின் தொடர்ந்து பசுமைப் புரட்சியின் உண்மைகளை அறிந்துகொண்டு சூழலைக் காக்க அனைவரும் குழுவாக இணைந்தோம். தற்போது குக்கூ குழந்தைகள் வெளியுடன் இணைந்து குழந்தைகளின் புத்துணர்வையும், முதியவர்களின் அனுபவத்தையும் ஒருங்கிணைத்து வாழும் சூழலைக் கொண்ட மாற்றுக் கல்விச் சூழலைக் கட்டமைக்கும் பணியினைச் செய்து வருகிறோம் ‘’ என்கிறார் பாஸ்கர் மலர்ச்சியாக முகத்தில் புன்னகை பெருக.
     திருவண்ணாமலையில் எந்த அடையாளமும் வேண்டாது தெருவிளக்காய் தன்னியல்பாக சமூகத்திற்கு ஒளிவேண்டி திரியாய் தங்களை எரித்துக்கொள்ளும் இந்த நண்பர்கள் குழுவின் உயரிய இயற்கை நேய பணிகள் சிறக்கவும், தொடர்ந்து பயணிக்கவும் வானகம் இதழ் சார்பில் வாழ்த்துகிறோம்.
     மலையினைத் தூய்மை செய்யவும், அதன் சிறு சுனைகளில் கால் நனைக்கவும், உதிரும் இலைகளின் ஓசைகளைக் கேட்கவும், இயற்கை நம்மோடு உரையாடுவதை உணரவும், இயற்கையோடு பயணம் செய்யவும், அடுத்த தலைமுறைக்கான சூழலியல் செயல்பாடுகளை இதயத்தால் முன்னெடுக்க நினைக்கும், அர்ப்பணிப்பான உன்னத உள்ளங்களை என்றென்றும் வரவேற்கிறோம். இனிய நண்பர்களே பேசுகின்ற இதழ்களை விட, பாரம் தாங்கும் இந்த தோள்களும், வாரி அணைக்கும் கரங்களும் எவ்வளவு சிறந்தவை!

கருத்துகள்