காற்று மழை வெயில் வெளிச்சம் பகுதியில் அன்பரசின் கடிதங்கள்


கோமாளிமேடை
ஊமையின் புல்லாங்குழல்
காற்று மழை வெயில் வெளிச்சம்



ஹெரிடேஜ் தமிழன்
[2014]



                      ஊமையின் புல்லாங்குழல்                   
·         அன்பரசு சண்முகம் எழுதிய கடிதங்கள்
·         தொகுப்பாசிரியர்: அரசமார்
     என் சகோதரர் மூலம் அன்றுதான் முருகானந்தம் ராமசாமி அவர்களைச் சந்தித்தேன். அப்போது எவ்வளவு தூரம் அபத்தமாக பேச முடியுமோ அவ்வளவு பேசினேன். அப்போது திருப்பூரார் அருகிலிருந்தார். முகவரி பெற்றுக்கொண்டதும் எனக்கு பெரிய மகிழ்ச்சி. எந்த விஷயத்தையும் பேசுவதற்கு இன்றுவரையில் என் சமவயது தோழர்கள் யாரும் கிடையாது. எந்த ஒரு விஷயம் குறித்தும் தெளிவான பார்வை, தான் சார்ந்த கட்சி குறித்த நேர்மையான நிலைப்பாடு, எந்த விஷயம் குறித்தும் தயக்கமில்லாமல் முருகுவிடம் உரையாடலாம். பல விஷயங்கள் பேச்சில் வந்தாலும் நான் முடிந்தவரை கலைகள் குறித்து பல பகிர்தலை நிகழ்த்த மேற்கொள்ள முயற்சித்தேன்.

                                                     22.9.2012
இரா. முருகானந்தம் அவர்களுக்கு,
     அன்பரசு எழுதுவது, உண்மையிலேயே நீங்கள் தாராபுரம் வருகிறாயா என்று கேட்டது அற்புதமான கணம். பைக்கில் சென்ற அப்பயணம் விவரிக்க முடியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நெடுநேரம் பைக்கில் பயணித்தது அதுதான் எனக்கு முதல்முறை. காலச்சுவடில் உங்களது இரங்கல் கட்டுரை லட்சுமி சேஹலின் முழுமையான வாழ்க்கையை இருபக்கங்களில் கண்முன் நிறுத்தியது. தேர்ந்த சொற்களால் எழுதப்பட்ட அக்கட்டுரை, அவரைப்பற்றிய விவரங்களை யாரும் எளிதில் தெரிந்து கொள்ளும் விதமாக இருந்தது சிறப்பு.
     படிப்பதற்கு நிறைய புத்தகங்கள் சேர்ந்து விட்டதால் வேகமாக படிக்க முடியவில்லை. உங்களிடம் வாங்கி வந்த நூல்களை என் பெயர் ராமசேஷன் படித்துவிட்டேன். இப்போது சேட்டன் பகத் எழுதும் ஆங்கில நாவல்களை போல அப்போதே எழுதியிருக்கிறார் ஆதவன். ஒரு கல்லூரி, ஒரு காதல், உடலுறவு என செல்லும் நாவலில் ராமசேஷன் மாலா, கி. ராம், பிரேமா, ராம்பத்ரன், வி.எஸ்.பி என கதாபாத்திரங்கள் குறைவு. பிராமண இளைஞன் செய்யும் காஸனோவா செயல்கள்தான் கதை. மிக சுவாரசியமான கதை. மறுக்கவே முடியாது. எப்போது எந்த வருடம் படித்தாலும் ஏற்றுக்கொள்ள முடியும் இந்தக் கதையை.
‘Barfi” படம் பார்த்திருப்பீர்கள்! படம் உங்களை மகிழ்வித்ததா? ஆனி ப்ராங்க் மேரி எவ்வளவு படித்திருக்கிறீர்கள்? நலமறிய ஆவல்.
                                                     உங்கள்
                                                      அன்பரசு







                                                     26.9.2012
அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு,
     அன்பரசு எழுதுவது, நலமாக இருக்கிறீர்களா? சென்னை சென்று திரும்பி ஊருக்கு வந்துவிட்டீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. சுவரை வெறித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். நடந்து செல்லும் நிரூற்று எனும் சிறுகதைத் தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன். இந்த நூலிலுள்ள அனைத்து கதைகளிலும் இயந்திரமாகி பின் தொலைத்த ஏதோவொன்றை தேடிக்கொண்டே இருக்கும் மனிதர்கள் நிறைந்துள்ளார்கள். அவர்கள் குறையாக பிழையாக யாரையும் கூறவில்லை என்றாலும் அவர்களது கதை சில மனிதர்களின் மன குரூரத்தை அப்பட்டமாக கூறுகிறது. ‘பி. விஜயலட்சுமியின் சிகிச்சைக்குறிப்புகள்’ எனும் சிறுகதை சிற்சில குறிப்புகளாக அவள் மனபிளவிற்கு உள்ளான கதையை எளிமையாக விளக்கிச் செல்கிறது. புதிய புத்தகங்கள் ஏதாவது வாசித்தீர்களா? தங்களுக்கு நேரம் இருந்தால் கடிதம் எழுதி பகிர்ந்தால் தேடிப்பிடித்து படிக்க எனக்கு உதவியாக இருக்கும். உண்மையிலேயே மனம் இயந்திரம் ஆகாது சில மனிதத் தன்மைகளும் மிச்சமிருக்க காரணமே புத்தகம் வாசிக்கும் பழக்கமே. தொடர்ந்து எங்காவது புதிய பகுதிகளுக்கு பயணிக்க வேண்டும். நம்மை நமக்கு யாரென கண்டு சொல்லும் ஒரு குரல் புத்தகங்கள்தான்.
     இசையும், புத்தகங்களுமே என்னை நோக்கிய சுய வெறுப்பிலிருந்து என்னை மீட்டெடுத்து கொண்டு இருக்கிறது. வர்கீஸ் குரியன் இரங்கல் குறிப்பை எழுதி அனுப்பியிருப்பீர்கள். வெப்பத்தின் வாசனை மெல்ல காபியின் மணமாகவும், தேளின் நஞ்சாய் உடலில் மேலேறிக்கொண்டு இருக்கிறது. சென்னை சென்றிருந்தீர்கள் என்றால் ஏதாவது படங்கள், புத்தகங்கள் பார்த்திருப்பீர்கள், வாங்கியிருப்பீர்கள். உங்களது கண்களைப் பார்த்தே நம்பிக்கை கொள்கிறேன் என் மீது.
                                                உங்கள்
                                                அன்பரசு

                                                     2.10.2012
அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு,
     நலமா? உங்களிடம் பெற்ற புத்தகங்களில் அவஸ்தை இன்று காலையிலேயே படித்து முடித்துவிட்டேன். கிருஷ்ணப்ப கௌடாவின் வாழ்க்கையே அவஸ்தை. அவரை யாருக்கும் எளிதில் பிடித்து விடுகிறது. அவர் கேட்காமலேயே அனைத்து உதவிகளும் தேடிவரும் தெய்வீக சக்தி பெற்ற ஆளுமை. வாழ்வின் முன்பகுதி மற்றும் பின்பகுதி அக, புற நேர்மை பற்றிய நிகழ்ச்சிகள் அவரது மனதை அமாவாசை கடல் போலாக்குகிறது. நல்ல சுவாரசியமான தொடர்ந்து வாசிக்க வைக்கும் சிறப்பான மொழியாக்கம். குமாரின் திருமண அழைப்பிதழ் கவர் போட்டு மஞ்சள் தடவும் பணி இன்று காலை நேரத்தை விழுங்கிச் செரித்தது. இந்த மாதம் ஐந்தாம் தேதி திருப்பூர் வருவேன் கண்பரிசோதனைக்கு. தங்களின் இரங்கல் அறிக்கை காலச்சுவடில் வருகிறதா என்பதைத் தெரிவிக்கவும். இசை கேட்பது என்பது பற்றிய பல விஷயங்களை ஓஷோவின் புத்தகங்களிலிருந்து படித்து அறிந்தேன். மந்திரம் ஓதுவது என்பது சொற்கள், சொற்களிலிருந்து ஒலி, ஒலியிலிருந்து உணர்வு எனும் வரிசையில் பயணிக்கிறது. சொற்கள் என்பவை அர்த்தமின்மையை உணர்த்துகின்றன. எனவே சொற்களை விடுத்து அதன் ஒலி அது ஏற்படுத்தும் உணர்வை தியானமாக கொள்ளவேண்டும் என்பது நூலிலிருந்து படித்தறிந்தது. தொடர்ந்து எழுதுவேன், நான் படித்த, கேட்ட, உணர்ந்த விஷயங்களை.
நன்றி!
                                                      உங்கள்
                                                       அன்பரசு     

                                                           3.10.2012
அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு,
     முக்கியமான படங்களைப் பற்றி எழுதித்தரக்கூறினீர்கள். நீங்கள் எதுமாதிரியான படங்களைப் பார்ப்பீர்கள், விரும்புவீர்கள் என்று எனக்குத் தெரியாது. சில புதுமையான முயற்சிகளைச் செய்கிறவர்களை நான் மிகவும் விரும்புகிறேன். அந்தவகையில் அப்படி சில நபர்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
விஷால் பரத்வாஜ் இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக ஆளுமை கொண்டவர். அவரது படங்களான Kaminey, 7koon maaf, Omkara,ishqiya. இதில் இஸ்கியா தயாரிப்பும், இசையும், திரைக்கதையும் இவர் செய்திருப்பார். இயக்கம் இவரது சீடர்.
     அனுராக் காஷ்யப் இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என தற்போது விநியோகஸ்தர் எனுமளவிலும் செயல்படுகிறார். இவரது படங்களான dev d, gangs of wasseypur, gulaal,ugly என்பனவும் தலைவரின் புகழ்பாடும் சித்திரங்கள்.
     திபாகர் பானர்ஜியும் கூட திரைக்கதையாசிரியாக புகழ்பெற்றவர். Love sex aur dhoka, oye luckey luckey oye, shanghai ஆகிய படங்களைப் பாருங்கள்.
      இவை தவிர சில புதிய முயற்சிகள் கொண்ட படங்களும் உள்ளன. இவை எப்படி இந்தியில் மட்டும் சாத்தியம் என்று எனக்கு புரிவதேயில்லை. இப்போது “aiyaa” படப் பாடல்களைக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். இசை அமித் திரிவேதி. சாருவின் தேவ் டி பட விமர்சனத்தில் அமித் திரிவேதி பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதிலிருந்துதான் இவரை பின்தொடர்கிறேன். ஏமாற்றம் அடையவில்லை இன்றுவரை. நாட்டுப்புற செவ்வியல் தன்மையோடு, மேற்கத்திய இசையின் சேர்ப்பு தனித்துவமான இசையாக இவரிடமிருந்து வெளிவருகிறது. எளிதில் இதனைக் கண்டுபிடித்துவிடுகிறேன் இப்போதெல்லாம். அமித் திரிவேதி தான் இசையமைத்த தேவ் டி படத்திற்காக தேசியவிருது வாங்கினார். பின்நவீனத்துவ இசை என்கிறார் சாரு நிவேதிதா. அது என்னவோ, எனக்கு புதுமையான இசை என்றால் மிகப்பிடிக்கும். நீங்களும் கேட்டுப்பாருங்கள்.
                                                           உங்கள்
                                                           அன்பரசு


                                                           6.10.2012
அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு,
     நலமா? காலச்சுவட்டில் வெளிவந்த சிறுகதை படித்தீர்களா? முரளிதரன் மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது. வாக்கு அரசியல்வாதியின் செயல்கள்தாம் கதை. சொல்லில் அடங்காத இசையை படித்து பின் குறிப்பெடுத்துக்கொண்டு இருப்பதால் வேகமாக படிக்க முடியவில்லை. இந்த வாக்கியமே பிழை. இசையை எப்படி வாசிக்க? உணர, உயிரில் உணர மட்டுமே முடியும். பல்வேறாக இசையின் வடிவங்கள், நுட்பமான இசை கேட்பதற்கான விஷயங்கள் என பரந்துபட்ட விஷயங்கள் வாசிக்கும் போது தெரியவருகின்றன. நம் ஊரின் செவ்வியல் இசை தாண்டி பல்வேறுபட்ட நாட்டிலுள்ள மக்களின் உயிரின் உணர்வாகிய இசையைக் கேட்க விருப்பமேற்பட்டுள்ளது. என்னை பயமுறுத்தியது அந்நூலிலுள்ள தற்கொலைப் பாடல்தான். பாடலைக் கேட்டவரெல்லாம் ஒரு சூழலில் அதை தனக்கும் மற்றவருக்கு நினைவுறுத்திவிட்டு துயரம் தாங்காது உயிர்துறந்து விட்டார்களாம். அப்பாடலை எழுதிய இசையமைப்பாளர் உட்பட.
நீங்கள் புதிதாகப் படித்த மலர்ச்சி செய்த புத்தகங்களை குறிப்பிடுங்கள்.
அன்பரசு
57, கிளுவன்காடு,
வடக்குப்புதுப்பாளையம்(அ),
ஊஞ்சலூர்(வழி),
ஈரோடு 638152.
எனது முகவரி இதுதான். குறித்துக்கொள்ளுங்கள். தவறு எனதே. தங்களது முகவரியைக் கேட்கும்போதே எனது முகவரியை உங்களிடம் தெரிவித்திருக்க வேண்டும். இனி கவனமாக இருப்பேன்.
நன்றி!
                                                     உங்கள்
                                                     அன்பரசு


                                                     9.10.2012
அன்பு முருகுவிற்கு,
     நீங்கள் எழுதிய மொத்தக் கடிதங்களும் இன்றுதான் படிக்கக் கிடைத்தன. ஒரு  விஷயத்தை நாமாக கடும் முயற்சி செய்து செய்வது எந்த அளவு சரியாக வரும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் வர்கீஸ் குரியன் பற்றி அனைவரும் அறியவேண்டும். அதற்கான முயற்சிகளை விரைந்து செய்து முடிப்பீர்கள் என்று நம்புகிறேன். எந்த புகழும் இல்லாமல் அமைதியாக அனைத்தையும் அறிந்து மறையும் இவரைப்போல எத்தனை பேர் உண்டு நம்மிடம்.
ஒருவருக்கு சிலைவைப்பது என்பதே அநாகரிகம் என்று நினைக்கிறேன். அவரின் சொற்களை கடைபிடிக்க சோம்பல் பட்டு, சிலைவைத்து பூக்கள் தூவி நம் குற்றவுணர்வுகளை மறைத்துக் கொள்கிறோமோ என்னவோ! அந்த தலைவர் எதனை முன்னிட்டு போரிட்டாரோ அதனை முனைமழுங்கச் செய்யும் தந்திரம் இதுவோ என்று ஐயம் எனக்கு.
     அலெக்சாந்தர் பூஷ்கினின் ‘கேப்டன் மகள்’ படித்துக்கொண்டிருக்கிறேன். இன்று காலையில்தான் சரத் சந்திர சட்டோபாத்யாய எழுதிய ‘தேவதாஸ்’ சு. கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பில்  படித்து முடித்தேன். காலச்சுவடு வெளியீடு. காதலின் துயரம் சரளமாக பக்கத்திற்கு பக்கம் தேவதாசன் இறக்கும் வரை தொடர்கிறது. வேறு அதிக விவரங்கள் இல்லை. தேவதாஸ், சந்திரமுகி, பார்வதி என மூன்று கதாபாத்திரங்கள் கொண்ட சிறு நாவல். எளிமையாக பல பக்கங்களை அதிக பிரயத்தனமின்றி படிக்கமுடிந்தது. பத்திரிக்கை வைக்க பாப்பினி போய்விட்டு இப்போதுதான் வந்தேன். நல்ல படங்களை பார்க்க நாமும் சிறிது உழைக்க வேண்டும். பல கமர்சியல் குருமாக்களுக்கு மத்தியில்தான் ‘பர்பி’ படம் வெளிவந்தது. நல்ல படங்கள் பார்க்க விரும்புவன் தேடி அலைந்துதான படங்களைப் பார்க்கவேண்டும். இப்போதைய நிலைமை அதுதான்.
     ஹிந்தி படங்களில் சற்று கருத்து சுதந்திரம் இருப்பது போல் உணர்கிறேன். பல்வேறு படங்கள் என உங்களுக்கு பிடித்த வகையில் படங்களை பார்க்க முடிகிறதல்லவா? அந்தவகையில் மகிழ்ச்சிதான்.
                                                                                                                     உங்கள்
                                                அன்பரசு

                                                17.10.2012
அன்பு முருகுவிற்கு,
 நலமா இருக்கிறீர்களா?  நான் உங்களுக்கு இந்த கடிதத்தில் மண்ட்டோ பற்றி, எனக்கு மனதில் பட்டதை பகிர்ந்து கொள்கிறேன். நந்துவிடமிருந்து மண்ட்டோ படைப்புகளை நினைவுறுத்தி பெற்று வந்து படித்துக்கொண்டிருக்கிறேன். மதம் பற்றிய ஆழமான வெறுப்பு அவரது கதைகளில் பகிரங்கமாகவே வெளிப்படுகிறது. முன்பு ஆதியில் ஒன்றாக இருந்த மனிதர்கள் இப்படி பிரிவுபட்டு நிற்பது மதம் என்ற ஒன்றினால்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மதக்கலவரம் என்ற பெயரில் தன் மனதின் வக்கிரங்களை, குரூரங்களை நிறைவேற்றிக் கொள்ளும் கூட்டங்கள் அவற்றின் செயல்பாடுகள், மதம் அவர்களின் மூளையை மழுங்கடித்துக்கொண்டிருப்பது என இவரது கதைகளைப் படிக்கும்போது நம் மதத்தின் மீது எழும் குரோதம் அளவிடமுடியாத ஒன்றாக உள்ளது. மண்ட்டோவை இப்படித்தான் புரிந்து கொள்ளவேண்டுமோ! இல்லையென்றால் நமக்கு எல்லாமே மரத்துப்போய்விட்டது என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதான். ஆர். எல் ஸ்டீவன்சனின் ‘ஆள்கடத்தல்’ என்ற நாவலைப் படித்துவிட்டேன். டேவிட் என்பவனின் தனது சொத்துக்கான தேடல் சாகசங்கள்தான் கதை. டாக்டர் ஜெக்கியூம், மிஸ்டர் ஹைடும் என்ற கதையில் சமுதாயத்தில் நல்ல மனிதன் என்ற அடையாளத்திற்கான உருவத்தையும், தன்னுடைய மகிழ்ச்சி மற்றும் கோபத்தை வேறு ஒரு உருவத்தில் வெளிப்படுத்தி வாழ நினைக்கும் ஒரு மருத்துவரின் சாகசக்கதை இது. சிறந்த சாகச நாவல் இது. அமேசிங் ஸ்பைடர் மேன் கதையில் வரும் டாக்டர் மிருகமாகி பிரச்சனை தருவாரே அது போன்ற கதைதான். நான் ஈரோட்டில் சிபி சரவணனின் வீட்டில் புத்தகங்கள் வாங்கிப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது வேலை செய்யுமிடத்தில் ஆனந்த் என்பவர் எதற்கு புத்தகங்கள் படிக்கிறாய் ? என்ன பிரயோஜனம்? என்றார். சிரித்து வைத்தேன். நீங்கள் சொல்லுங்கள். புத்தகங்களை எதற்கு படிக்கிறோம்? என்ன பிரயோஜனம்?
                                                           உங்கள்
                                                           அன்பரசு


                                                                                                                                25.10.2012
அன்பு முருகுவிற்கு,
நலமாக இருக்கிறீர்களா? நாம் செய்ய நினைக்கும் விஷயத்தில் எதுவும் புறத்தூண்டுதல் இல்லாமல் அகத்தூண்டலாகவே இருந்தால் சிறப்பான ஒன்றாக இருக்கும் அல்லவா? தொடர்ந்த பயணங்களினூடே இரு புத்தகங்கள் படித்தேன். அலெக்சாண்டர் டூமாசின் ‘பிரபு மாண்டி கிறிஸ்டோ’ நான்கு பேர் செய்யும் சூழ்ச்சிகளால் ஒருவன் தன் காதலியை இழந்து சிறையில் பதினான்கு வருடங்கள் கழிக்க நேர்கிறது. பின் வெளியே வந்து பார்க்கும்போது அவன் ஒரே உறவான தந்தையும் பசியில் உயிர் விட்டிருக்கிறார். அவன் எப்படி தன் வாழ்வை உருக்குலைத்த நான்குபேரையும் பழிவாங்குகிறான் என்பது மீதிக் கதை. ஒரே மூச்சில் இடைவேளை இல்லாமல் படித்து முடித்தேன். மொழியாக்கத்திற்குத்தான் என் முதல் பாராட்டு. பரபரப்பு, திகில் என வேகம்..வேகம்.
     சித்திலெப்பை மரக்காயர் எழுதிய அஸன்பே சரித்திரம் இது தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்கிறார்கள் முன்னுரையில். அஸனின் சொத்துக்காக ஏற்படும் சதிகள், தான் யார் என்று தெரிந்துகொள்ள அலையும் தேடல்கள் இவைதான் கதை. தற்போது தாந்திரீகம் பற்றிய அமரகதை என்கிற நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஆதிபகவன் படத்தின் பாடல்களைக் கேட்டீர்களா? அதில் ஒரு பாடல் முழுக்க ஹிந்தியாக உள்ளது. இதன் தாளம் உற்சாகம் கொள்ளவைப்பதாக உள்ளது. ஷாஜியின் சொல்லில் அடங்காத இசை நூல்தான் பல்வேறு இசைகளைக் கேட்க செய்தது. அதன் நுணுக்கங்களை கவனிக்கச் செய்தது என்று உளமார சொல்லுவேன். எம்.எஸ்.வியின் பாடல்களை வாங்க வேண்டும். நீங்கள் என்ன புதிதாக படித்தீர்கள்? அனுபவங்கள், மகிழ்ச்சியைக் கொண்டாடுவதிலும், பகிர்ந்து கொள்வதிலும்தான் வாழ்வே நிறைகிறது. பிறகு எழுதுவேன் பிறிதொன்றைப் பற்றி….                                                                                  உங்கள்
 அன்பரசு


                                                           5.11.2012
பிரிய முருகுவிற்கு,
நலமா? தங்களது கடிதங்களின் தொகுதி கிடைத்தது. மண்ட்டோவின் பாதிப்பு இல்லையோ என்னவோ சமூகத்தின் கடைபட்டவர்களை எழுதியது ஜி. நாகராஜன்தான் என்று அவரது குறத்தி முடுக்கு, நாளை மற்றும் ஒரு நாளே படித்தபோது உணர்ந்தேன். மதங்கள் மனிதனுக்கு நிறைய உதவியிருக்கலாம். ஆனால் அதைக்கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களால் காவிநிறமே அச்சுறுத்தும் நிறமாகிவிட்டது நமது நாட்டில். ‘ஹெய்டி’ எனும் ஜோஷன்னா ஸ்பைரி எழுதிய குழந்தைகள் நாவல் வாசித்தேன். அடல் ஹெய்டி எனும் சிறுமி தன்னைச் சுற்றியுள்ள உலகை அன்பினால் எப்படி நெய்கிறாள் என்பதுதான் கதை. அவளை எல்லோருக்கும் பிடிக்கிறது. தன்னைவிட மற்றவரின் நலத்தை , அகத்தை விரும்புகிறாள். இவளின் அன்பு, காதலால் கிளாரா எனும் கால் ஊனமுற்ற சிறுமி நோய்மையைத் துறக்கிறாள்.
ஜோனாதன் ஸ்விப்ட் எழுதிய ‘கலிவரின் பயணங்கள்’ நாவல் படித்தேன். பயணங்கள் என்றாலே சுவாரசியம்தானே. இதில் கலிவர்  பயணிக்கும் பயணத்தில் தீவுகள், விசித்திர மனிதர்கள் என புனைவுலகை உருவாக்கி அங்கதச்சுவையை அள்ளித்தெளிக்கிறார். குள்ள மனிதர்களின் தீவு, உயர மனிதர்களின் தீவு, பறக்கும் மனிதர்கள் தீவு, குதிரைகளின் தீவு என செல்லும் கதையில் கிடைக்கின்ற இடங்களிலெல்லாம் பகடி வயிறு வலிக்க வைக்கிறது. குதிரை தீவுகளில் யாகூ எனும் மனிதக்குரங்கு கூட்டத்தை வேலையாளாக வைத்திருக்கும் குதிரைகளின் நேர்மையை வியந்து கலிவர் தன்னை குதிரையாகவே மாற்றிக்கொண்டால் என்ன என்று அது போல நடந்துகொள்ள விரும்புவது மனிதனின் மேலுள்ள வெறுப்பு போலவே படுகிறது.
சந்திப்போம்.
                                                     உங்கள்
                                                     அன்பரசு

                                                     5.11.2012
பிரிய முருகுவிற்கு,
     நலம் விழைய பிரார்த்திக்கிறேன். நான் தங்களை சந்தித்து விட்டு வெங்குட்டுவன் அண்ணாவை வஞ்சிபாளையம் பிரிவு நிறுத்தத்தில் இறங்கி சந்தித்தேன். வெங்குட்டுவன் பல சிறுகதைகள், கவிதைகள் எழுதுகின்றவர் கூடவே ஜோதிடமும் கற்றுக்கொண்டவர், மேலும் திரு. வக்கிரத்திற்கு மிகப்பிடித்தவர்.மெலிதான புன்னகையும், கசியும் வியர்வை நெடியுமாக அருகில் வந்து கைபிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். வீட்டை ஒட்டிய அறையில் பவர்லூம் தறி ஓடிக்கொண்டிருந்தது. அவரின் அம்மாவின் ஐயப்பார்வை என் முதுகில் அம்பாய் துளைத்து நின்றது. முதன்முதலில் அவரிடம் பேசுகிறேன் என்பதால், தங்களிடம் வாங்கிய நூல்களைப்பற்றிப் பேசலாம் என்று அவரிடம் நூல்களைக் காட்டினேன். புத்தகங்களை வாங்கிப்பார்த்துவிட்டு, நமது சூழலைப் பாதிக்கும் கதைகளை மட்டும்தான் என்னால் படிக்கமுடிகிறது. மும்பையில் ஒருவன் இறந்தால் என்னால் நிச்சயம் அழமுடியாது. நான் ஏன் அழவேண்டும்? பிற மொழி இலக்கியம் படிப்பது, படிப்பதாகச்சொல்லுவது எல்லாம் டாம்பீகம் தவிர வேறொன்றுமில்லை. நீ என்ன தெரிஞ்சுகிட்ட? என்னமோ மண்ட்டோ பத்தி பேசற? என்ன அதிலிருந்து தெரிஞ்சுகிட்ட சொல்லு பார்ப்போம். மண்ட்டோ தண்ணி போட்டுட்டு திரிஞ்சவன் ஏன் நீ இப்ப படிச்சயே ஜி. நாகராஜன் அவனும் அப்படித்தான் என்றார். நான் எதுவும் பேசாமல் மேசையின் சிறு வளையங்களின் நிறத்தெறிப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். அதன்பிறகு, நான் எதுவும் அவரிடம் பேசவில்லை. உங்களின் பேச்சுவன்மை இருந்தால் பதில் சொல்லியிருக்க முடிந்திருக்கலாம். ஏனோ தொடர்ந்து வெங்குட்டுவன் விரக்தியாகவும், இறுக்கமாகவும் இருப்பது போலிருந்தது. காலையில் 9.45 மணிக்கு கொடுவாய் வந்து பஸ் ஏற்றிவிட்டார். அதற்கு முன் அவரிடம் வாங்கலாம் என்று எடுத்து வைத்திருந்த நூல்களையும் அவரிடமே கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். ஓடு, ஆபத்து என்று ஒரு குரல் உள்ளே தமிழ் டப்பிங் குரல் கேட்டது. பிறமொழி, களம் என்றெல்லாம் இருப்பினும் அது நம்மைப்போன்ற மனிதனின் வாழ்க்கை தானே. அது மாறுவதில்லையே. நுண்ணிய நுட்பமான உணர்வுகள்தான் அது என்றும் மாறுவதில்லை. சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை. மிகத்தீவிரமான எரிச்சலோடு பேசுவது போலிருக்கும் மனிதர்களிடம் தலையசைப்பைக் கூட இயல்பாக என்னால் செய்யமுடியவில்லை. அனுமதி கேட்க வேண்டுமோ என்ற அச்சமும், தலைமை ஆசிரியர் அல்லது கணக்கு ஆசிரியரின் முன்நிற்பது போல் பதட்டமும் வெங்குட்டவனோடு இருந்த கணம் முழுக்க நிரம்பியிருந்தது. வாழ்க்கையின் வெம்மையில் அனைத்தையும் தொலைத்துவிட்டவர் போல மிகத்தீவிரம் கொண்டு பிடிவாதமான கருத்துக்களை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பதைப்போல பேசுபவர்களில் முதலிடம் வெங்குட்டுவனுக்குத்தான். ஒவ்வொரு மனிதருமே சுவாரசியம்தான்.
சந்திப்போம்.
                                                                                                                      உங்கள்
                                                அன்பரசு


                                                6.11.2012
பிரிய முருகுவிற்கு,
     நலம் விழைய இயற்கையை வேண்டுகிறேன். உங்களிடம் வாங்கிய புத்தகங்களைப் படிப்பதில் சிறிய தொய்வு ஏற்பட்டிருக்கிறது. மாக்சிம் கார்க்கியினுடைய ‘எனது குழந்தைப்பருவம்’ என்ற நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் நம்பி. சற்று சோம்பல் தரக்கூடிய சுவாரசியம் குறைந்த நூல்தான் இது. வண்டி ஓட்டக் கற்றுக்கொண்டதுதான் திரு. வக்கிரத்தின் திருமணத்திற்கு அலைந்ததில் கிடைத்த ஒரே நல்ல விஷயம். அடுத்தமுறையில் நம்பிக்கையில்லை. இருந்தாலும் வாய்ப்பிருந்தால் தாராபுரத்தை சுற்றியுள்ள வேறு ஏதாவது இடத்திற்கு செல்லலாம். பார்ப்போம். ஜெயமோகனை சந்தித்தது நல்ல ஒரு நிகழ்வு. சென்னையில் கூட அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தங்களின் மூலம் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.
நேற்று இரவு ‘ ladis vs rickey ball’ இந்திப்படம் பார்த்தேன். நான் அவனில்லை என்ற படம் இருக்கிறதே அந்த வகை. ரன்வீரின் முகம், உடல் வசீகரமானதாக இருக்கிறது. ஜாலியான படம். பணத்திற்காக பேராசைப்படும் பெண்களை ஏமாற்றுவதுதான் கதை. சுவரில்லா சித்திரங்கள் படம் துயரமும் கண்ணீரும் நெருக்கித்தள்ள, டிவிடி பிளேயரும் கண்ணீர் விடத்தொடங்க, படம் நின்று நின்று ஓடி, கண்ணைக்கட்டிவிட்டது. கம்ப்யூட்டர் வாங்குவது பற்றி சொன்னீர்கள். இயக்குவதற்கான சக்திக்கு என்ன செய்வீர்கள்?
     சந்திப்போம்.
                                                உங்கள்
                                                அன்பரசு
    
                                                7.11.2012
பிரிய முருகுவிற்கு,
     நான் நலம். தாங்கள் நலமா? மெல்ல நிலம் தன் தாகம் தீர்த்துக்கொண்டிருக்கிறது. வெயில் மறைவில் சற்று சோம்பல் மேலிட்டு இருக்கிறது. வெளிச்சக்குறைவால் அதிகம் படிக்க முடியவில்லை. லார்ட் ஆப் தி ரிங்ஸ் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். கால்வினோவின் சிறுகதைகள் படித்து விட்டேன். இவரைப் பொறுத்தவரையில் மிகச் சிக்கலான கதைகள் எல்லாம் எதுவும் இல்லை. ஒரு குளியலறை ஷவரில் வெளிவரும் நீர் பற்றி இப்படியெல்லாம் யோசித்து எழுதமுடியுமா என்று யோசிக்க வைக்கும் கதை. இதைத்தான் எழுதவேண்டும் என்றில்லாமல்,  கதை அதன் போக்கிலே நீளுகிறதான் புதுமை. இது போலவே முன்பு எளிய அடையாளமாக இருந்த தன் முகத்தை பார்வைக்குறைபாட்டினால் அணியும் ஒரு கண்ணாடி எப்படி சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துகிறது என்று கூறும் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் கதையும் அதுதானே!. தி. ஜானகிராமனின் ‘அடி’ உணர்ச்சிக்கும், அறிவுக்குமான போராட்டத்தை எளிமையாக நேர்மையாக விவரிக்கும் படைப்பு. கதையில் அவனும், அவளும் அதை உணர்ந்தே மனம் ஒருமைப்பட்டே ஈடுபடுகிறார்கள். அது பற்றிய அச்சமும் அவர்களிடம் இருந்தாலும் ஏதோ ஒன்று அவர்களை ஒரே சரடில் இணைக்கிறது. மனைவி அவனை மெல்ல அதிலிருந்து மீட்டெடுக்கிறாள். அதுதான் அடி. இன்று உளறுவதெல்லாம் உண்மை என்று பஞ்சாயத்து நடந்து ஏதோ ஒரு கப் பஞ்சாயத்து போல ஒரு தீர்ப்பு எழுதுகிறார்கள். ஆணுக்கும், பெண்ணுக்குமான உறவுச்சிக்கல்கள் என்றும் முடியாத ஒன்று. பெரும் சுவர் இருவருக்கும் இடையில் நிற்கின்ற வரை ஆணுக்குப் பெண்ணைப்பற்றியும்,பெண்ணுக்கு ஆணைப் பற்றியும் அறிந்தே தீரும் ஆவல் தீரவே தீராது.
யாஷ் சோப்ராவின் இறுதிப்படமான ஜப் தக் ஹை ஜான் படத்தின் பாடல்களைக் கேட்டீர்களா? பிறகு சந்திப்போம்.
                                                உங்கள்
                                                அன்பரசு

                                                24.11.2012
அன்பு முருகு அண்ணாவிற்கு,
     தங்களின் நலத்திற்கு எனதன்பு. புதிதாக வாங்கிய நூல்கள் ஏதாவது படித்தீர்களா? ஆனி ப்ராங்கின் நாட்குறிப்புகளை தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன். அற்புதமான எழுத்து. அவர் இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் பல சிறப்பான நூல்கள் கிடைத்திருக்கக்  கூடும். தேங்காய் வெட்டிற்கு ஒரு வாரமாக செல்வதால், நூல்களை முன்னைப்போல வேகமாக படிக்கமுடியவில்லை. தினமும் ஐம்பது பக்கத்திற்கு குறையாமல் படிக்க முயற்சிக்கிறேன். திருமண அலைச்சல்கள் சற்று குறைந்து அரவங்கள் குறைந்திருக்கின்றன. வக்கிரமும், அவரின் துணையும் சென்னை சென்றுவிட்டார்கள். நாட்குறிப்பை கணினியில் எழுதலாம் என்றாலும் சோம்பல் எனக்கு அதிகமாகிவிட்டதால், தாளில் எழுதி பொறுமையாக அதனை கணினியில் தொகுக்க எண்ணியிருக்கிறேன். பார்ப்போம். தேங்காய் வெட்டு முடிந்ததும், தங்களின் இல்லத்திற்கு வரலாம் என்று எண்ணியிருக்கிறேன். வெங்குட்டுவன் அண்ணா திரு.வக்கிரத்திற்கு ‘நாகம்மாள்’ நூலை பரிசளித்திருக்கிறார். தாங்கள் தொடர்ந்து இரங்கல் குறிப்பு மட்டும் அல்லாது முக்கிய ஆளுமைகள் குறித்து எழுதி வைக்க வேண்டும். தங்களின் உடைத்தேர்வு மெருகேறி வருகிறது. உடைகள் கச்சிதமாக பொருந்திவருகிறது.
சந்திப்போம்.
                                                     உங்கள்
                                                     அன்பரசு

                                                     1.12.2012
பிரிய முருகு அண்ணாவிற்கு,
           நலம் விழைய வேண்டுகிறேன். தங்களது 27ம் தேதியிட்ட மடல்கள் கிடைத்தன. மன, பண நெருக்கடிகளைப்பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். பணத்தில் நிறைவு பெற்றால் மனம் சமநிலைக்கு, நிம்மதிக்கு அரற்றுகிறது. நிம்மதியான சூழலில் நமக்கு உள்ள பணப்போதாமையான தரித்திரம் குறித்து சமூகம் கூரிய வஞ்சப் புன்னகையால் பல கேள்விகளைக் கேட்கிறது. நாம் எதிலும் எளிதில் நிறைவு பெறுவதில்லை. அடங்காத பேராசை வாழ்வை நிர்கதியில் தள்ளுகிறது. அ. முத்துலிங்கம் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். புனைவா, அனுபவமா என்று மயங்கும் வடிவத்தில் சுவாரசியமான தணியாத அங்கதமான நடை கொண்ட எழுத்துக்கள் கொண்டவர் அவர். எந்த ஒன்றும் அவருடைய எழுத்தில் அற்புதமான அனுபவமாக மாறுவது குறித்து எனக்கு ஆச்சர்யம்தான். அது எப்படி என்று புரியவில்லை.
     உறவுகளை அணுகுவதில் பல தடுமாற்றங்களை அனுபவித்து வருகிறேன். முடிந்தவரை அவற்றிலிருந்து விலகியே இருந்து வருகிறேன். தற்போது காலச்சுவடு நேர்முகம் 2000-2003 தொகுப்பை வாசித்து வருகிறேன். ட்ராட்ஸ்கி மருது, ஞாநி, நிர்மல்சர்மா போன்றோரது நேர்காணல்களை படித்துவிட்டேன். இன்னும் சிறு பகுதி இருக்கிறது. உங்களுக்கு நான் எழுதும் கடிதங்கள் எனக்கு பெரிய ஆசுவாசமாக இருக்கிறது. இதில் சொல்லாத பல விஷயங்கள் இருந்தாலும், பகிர்ந்து கொண்டவையே பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தேங்காய் வெட்டு முடிந்துவிட்டது.
சந்திப்போம்.
                                                           உங்கள்
                                                           அன்பரசு
                                                           3.12.2012
பிரிய முருகுவிற்கு,
     நலம் விழைய வேண்டுகிறேன். நீங்கள் கூறியதைப் பின்பற்றி முதல்வேலையாக பாஸ்கரனின் உதவி பெற்று விண்ணப்பத்தை நிரப்பி, இன்று அனுப்பப் போகிறேன். எழுத்துத் தேர்விற்கான பயிற்சிகளைத் தொடங்கிவிட்டேன். தேர்வுமையம் சென்னையில். அறச்சலூர் இந்தியன் போலீசிடம் ‘forest Gump”  என்ற படத்தை வாங்கிவந்து பார்த்தேன். மிகுந்த நம்பிக்கை தரும் படம். நடக்க முடியாத கால்களைக் கொண்டுள்ள சிறுவன் தன் நம்பிக்கையால் கால்கள் குணமாகி, தடகள வீரனாகி, ரக்பி வீரனாகி, பின் ராணுவத்தில் சேர்ந்து, பல பதக்கங்கள் பெற்று, பிறகு ஓய்வு பெற்ற பின் தன் தோழனான இறந்துபோன நண்பனின் நினைவாக மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலை தொடங்கி அவன் அம்மாவிற்கு உதவிசெய்கிறான். இறுதியில் தன் நீண்ட நாள் தோழியான ஜெனியைத் திருமணம் செய்து, அவள் இறந்துவிட. தன் ஒரே குழந்தையை பள்ளிக்கு அனுப்பிவைப்பதோடு படம் நிறைவடைகிறது. பல காட்சிகள் நான் கூறவில்லை. டாம் ஹேங்க்ஸ் நடித்துள்ள இப்படம் சிறந்த வசனங்களைக் கொண்டது. ‘’ வாழ்க்கை என்பது ஒரு பெட்டி நிறைய உள்ளிருக்கும் இனிப்புகள் போல. ஆனால் அவற்றில் எது நமக்கு கிடைக்கும் என்பதை நாம் அறிவதில்லை’’, ‘’தினந்தோறும் வாழ்க்கையில் அதிசயங்களும், ஆச்சர்யங்களும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது’’. வியட்நாம் போர் முதல் அமெரிக்காவின் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளிலும் பாரஸ்ட் கம்ப் கலந்துகொள்கிறார் எப்படி? அது இயல்பாகவே நடக்கிறது. படம் கிடைத்தால் பாருங்கள். பல்வேறு விருதுகள் வாங்கி குவித்த படம். ஒரு பேருந்து நிறுத்தத்தில் வந்து உட்காரும் ஒவ்வொருவரிடமும் தன் கதை சொல்கிறார் பாரஸ்ட் கம்ப். கதை மெல்ல விரிந்து, பின் நிகழ்காலம் திரும்புகிறது. அற்புதங்களை திரையிலும் உருவாக்க முடியும் நம்பிக்கையும், நல்ல திரைக்கதையும் மானுட நேயமும் இருந்தால் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம்.
சந்திப்போம்.
                                                           உங்கள்
                                                           அன்பரசு

 
                                                           4.12.2012
பிரிய முருகு அண்ணாவிற்கு,
     நலம் விளைய வாழ்த்துகிறேன். உங்களுக்கு என்னையும், திரு. வக்கிரத்தையும் நினைத்து சினமேற்படக்கூடும். சென்னையில் படித்துக்கொண்டிருக்கும்போது, கூடவே நேரமிருந்ததால், பகுதி நேரமாக ஏதாவது பதிப்பகத்தில் வேலை பார்க்க விரும்பினேன். காலச்சுவடில் வேலை கிடைக்குமா என்று வக்கிரத்திடம் ஆலோசித்தேன். நானே சென்று பார்க்க விரும்பினேன். அதற்குள் வக்கிரம் தங்களுக்கு அலைபேசி சிபாரிசு கேட்டுவிட்டான். எனக்கு பெரும் சங்கடமாகிவிட்டது. நட்பு வேறு, இது போன்று சிபாரிசிற்கு பயன்படுத்துவது வேறு. தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் சிபாரிசை நம்பி பயணிப்பதை நான் விரும்பவில்லை. கற்றுக்கொள்ள விரும்பி அப்பதிப்பகம் செல்ல விழைந்தேன்.
     தங்களோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் கதகதப்பான உள்ளங்கை என் தோளில் படிந்து கடும் குளிரிலும் என்னை காப்பாற்றுவது போல் உணர்கிறேன். நட்பில் பலன்களை எதிர்பாராமல் இருப்பது பெரிய விஷயம். நான் தங்களிடம் பல புதிய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவே விரும்புகிறேன். வயிறு காய்ந்து இலக்கியம் படிக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். மறுக்கமுடியாதது தங்களது வாதம். நான் சிலசமயம் என் மனதின் அழுகையை வெளியில் சூழல் தெரியாது பிதற்றி விடுவேன். எனக்கு யாரிடமும் பேசுவது என்பது ஒன்றுபோலத்தான். பழகத்தெரியாதவன் என்று அண்ணாநகர் ஆண்டன் செகாவ் வக்கிரத்திடம் எப்போதும் கூறிக்கொண்டே இருப்பார்.
 தங்களிடம் எனது சுயவாழ்க்கை பற்றி பேசாததற்கு காரணம் அவை வெற்று புலம்பல்களாகிவிடும் என்கிற பயம்தான் காரணம். தங்கள் உபசரிப்பிற்கு என்றும் நன்றியுடன் இருப்பேன். மென் சொற்களைக் காட்டிலும், வன் சொற்கள் தன்வேலையை மிகச்சரியாக செய்கின்றன. ஒரு சொல் அடிக்கும். ஒரு சொல் ஆதுரமாக இருக்கும். வங்கியின் கிளர்க் பதவிக்கு விண்ணப்பிக்க முயற்சித்தபோது, கல்வித்தகுதி பற்றிய இடங்களை எப்படி நிரப்புவது என்று என் மந்தபுத்திக்கு தெரியவில்லை.
     கற்பனை உலகை வயிற்றில் எரியும் தீ வெகு நிச்சயம் எரித்துவிடும். ஆனால் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. புலம்பல்கள் நிச்சயம் சலிப்பிற்குத் தள்ளும்.
     எனது புத்தியும், அறிவும், நிலைகொள்ளாத மனமும், பரபரக்கும் கால்களும் எங்கேயும் என்னை நிற்க விடுவதில்லை. ஓடிக்கொண்டேயிருக்கச் சொல்லுகின்றன. உங்களது வழிகாட்டல்கள் எனக்கு பயன்படப்போவதில்லை. மன்னியுங்கள். சென்னையில் முன்னிருந்த தீவிரம் படிப்பில் இல்லை. மெல்ல ஏதோவொன்று என்னைப் பிடித்தது. இரவுகளில் நாட்குறிப்புகளில் கிறுக்கிக்கொண்டு அழுது அரற்றிக்கொண்டு வானத்தைப் பார்த்தபடி இருப்பேன். பின் அதனை இறுதியாக வக்கிரத்திடம் கொடுக்க, அவர் அதனை தன் நண்பர்களிடம் பகிர, அவர்களால் பரிகாசத்திற்கும், ஏளனத்திற்கும் ஆளானதுதான் மிச்சம். பின் அதனைக் கிழித்து தீயின் பசிக்கு உணவிட்டபோது மனதில் எழுந்த நிம்மதிக்கு அளவேயில்லை.
     ஒவ்வொருவருக்கும் யாரோ ஒருவருடைய  தோள் தேவைப்படுகிறது. நான் வக்கிரத்தை நினைத்தேன். அவர் மைலாடிப் பெண்ணை நினைத்தார். ஏணியில் ஏறி இடத்தை அடைந்துவிட்டவர்கள், ஏணியே இல்லாமல் சுவரின் உயரத்தை பார்த்தபடி நிற்பவனை பரிகசிப்பது புதிதல்லவே. யாரையும் குற்றமுரைக்க என்ன தகுதி எனக்கு?
     எதிர்பார்ப்பில்லாத உறவு மட்டுமே நீடிக்கும் என்பது நான் உணர்ந்த ஒன்று. பயன் இல்லாத ஒருவரை யார் சீண்டுவார்கள் என்று வெங்குட்டுவன் சொன்னார்; அது, ஊர்ஜிதமாகிக்கொண்டு இருக்கிறது ஒவ்வொன்றாக. நான் யாரிடமும் பெரிய நம்பிக்கை கொள்வதில்லை. கடந்து சென்றுவிடுகிறேன். உப்பாறு அணைக்கு அழைத்து சென்றதற்கு மிக்க நன்றி.
சந்திப்போம்.
                                                           உங்கள்
                                                           அன்பரசு

                                                           5.12.2012
பிரிய முருகுவிற்கு,
நலமுடன் இருக்க வாழ்த்துகிறேன். உடல்நலம்தானே மனதிற்கு அடிப்படை. ஜெயமோகனின் விமர்சன நூலையும், நாகரத்தினம் கிருஷ்ணாவின் ப்ரஞ்சு சிறுகதைத் தொகுப்பு ஒன்றினையும் வாசித்தேன். உறவுகளின் பூசல்களை திரு.வக்கிரத்தை விடவும் நான் அதிகம் சமாளிக்க வேண்டியிருக்கிறது. எங்களது ஊர் நூலகர் சம்பள நாளில் மட்டுமே ஊரில் தென்படுகிறார். மாற்றலுக்கு விண்ணப்பித்துவிட்டு வீட்டில் ஓய்வெடுக்கிறாராம். ரன்பீர் கபூர் நடித்த ‘பர்பி’ இந்திப்படம் அண்மையில்தான் இந்தியன் போலீசின் உதவியுடன் பார்த்தேன். பிரியங்கா மற்றும் ரன்பீருக்கான காட்சிகள் அனைத்துமே இசையும், ஒளியுமாக அட்டகாசப்படுத்திவிடுகிறார்கள். வாழ்வில் வரும் நெருக்கடிகளைக் கூட இவ்வளவு எளிதில் கடந்துபோக முடிகிறதே எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் இல்லாமல் என்று பொறாமையாக கூட இருந்தது. தெருவிளக்கை கீழே தள்ளி சோதனை செய்யும் காட்சியில் இலியானா ரன்பீரின் கையை உதறிவிடுவார்,பிரியங்கா நம்பிக்கையோடு பிடித்திருப்பார். அதிலிருந்துதான் காதலே ரன்பீருக்கு பிரியங்கா மேல் தோன்றும். ஆட்டிசம் அல்லது மனநோயாளிகளை உடல் ஊனமுற்றவர்களை வணிகரீதியான சினிமாவில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழிவுபடுத்துகிறார்கள். இந்த மனநிலைதான் என்னை தமிழ்ப்படங்களிலிருந்து பிரித்து இந்திப்படங்களுக்கு உள்ளே செலுத்துகிறது. இங்கேயும் மோசமான மசாலாக்கள் இருக்கிறது. ஆனால் தேடினால் நல்லதும் கிடைக்கிறது. புத்தகம் புதிது ஏதாவது வாசித்தீர்களா?
பிறகு சந்திப்போம்.
                                                      உங்கள்
                                                     அன்பரசு
                                                     13.12.2012
பிரிய முருகு அண்ணாவிற்கு,
     நலமா? உங்களுக்காக பேனா ஒன்று வாங்கி வைத்து இருக்கிறேன். கூடவே கருப்புநிற மசிக்குப்பியும். நீங்கள் உணர்ந்த விஷயங்கள், கண்ட காட்சிகள் என பலவற்றையும் என்னால் முடிந்தவரை உள்வாங்க முயற்சிக்கிறேன். தகவல்களைக் கூறும் பேச்சும், நம்பிக்கையான எழுத்தும் தங்களிடம் தனிச்சிறப்பானவையாக நான் கருதுகிறேன். தாராபுரத்து கடைத்தெருவீதிகளில் மனப்பாடமாக சொன்ன கிறிஸ்துவ பாடல்கள், அதன் அர்த்தம் ஆகியவை தங்களுக்கு எவ்வளவு அவை பிடித்திருக்கிறது என்பதை உணர்த்தியது. அந்நாளை நான் என்றும் மறக்கவே முடியாது. நினைவாற்றல் தங்களது பெரும்பலம் ஐயா.
     எம்.எஸ் கல்யாண சுந்தரம் பற்றி கூறியிருந்தீர்கள். அவர் தம் வாழ்வில் பல துன்பங்களை அடைந்தார். ஆனால் அது எந்தவகையிலும் அவரது படைப்புகளை கசப்பாக்க வில்லை என்றீர்கள். எப்படி அது நிகழ்ந்தது என்று தாங்கள் கூறவேண்டும். எப்படி தன் மனதைப் பக்குவப்படுத்திக்கொண்டார் என்று அறிய விரும்புகிறேன். எல்லாக் காலத்திலும் மனிதர்களுக்கு வெவ்வேறு வடிவில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அலைச்சல்களை நிகழ்த்திதான், பயணித்துத்தான் பல எழுத்தாளர்களும் எழுதுகிறார்களா? அனுபவ பாரத்தினால் என் தோள்களில் குருதி கசிகிறது. என் உடல் சாம்பல் போல மிதக்கிறதா என்ன? நாவிலும்,மனதிலும் பேதி ஆரம்பித்துவிட்டது. பிறகு சந்திப்போம்.
                                                           உங்கள்
                                                           அன்பரசு

                                                     15.12.2012
பிரிய முருகுவிற்கு,
     சுகம் பெற்றிருக்க வாழ்த்துகிறேன். உங்களது வழிகாட்டலின் படி நான் படித்துக்கொண்டிருக்கிறேன். ஜெயமோகனின் புதியகாலம் எனும் சமகால எழுத்தாளர்கள் பற்றிய விமர்சன நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன் இடையிடையே. ஒவ்வொரு புதிய மனிதனும் ஒரு புதிர்தான். அதை அறிய நாம் முயல்வதுதான் சுவாரசியமாக இருக்கிறது. இலக்கு எதுவாகவும் இருக்கட்டும். அதற்கான பயணம், பயணிக்கிற இன்பம் போதும். தங்களது கடிதங்களை நான் அறிந்தவரையில் இந்த விஷயம் நிறைந்திருக்கிறது என்றே நம்புகிறேன்.
     புதிய மனிதர்களை சந்திக்கவேண்டம் என்கிறீர்களா? மனிதர்களின் சுயபிரதாப பேச்சுக்களும், தன்னை உயர்த்திக்கொள்ள செய்யும் தந்திரங்களும் எனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. தினமும் எழுந்ததும் மலையைப் பார்க்கவேண்டும். அப்படி ஒரு வீட்டில் குடியேற வேண்டும். ஏகாந்தத்தில் அவ்வீடு அமைந்திருந்தால் மிக உன்னதம். அனிதா தேசாயின் கதாபாத்திரம் கூட இப்படித்தான் உணர்கிறது. சந்தடி, கூச்சல் இல்லாத தனிமை. அதுவே அச்சுறுத்தலாவது வேறு.
உடலும் மனதும் குறிப்பிட்ட ஒரு நிலையில் உற்சாகமாக இருக்கும்போது, சில செயல்பாடுகளைச் செய்துவிடவேண்டும். பின் மனம் நினைக்கலாம், ஆனால் உடல் இணங்காது. படைப்பாற்றல் என்பது வாழ்வு முழுவதும் வரும் என்று நினைக்கவே முடியாது. பாரதியை எடுத்துக்கொள்ளுங்கள். மிகத்தீவிரமாக செயல்பட்டது பத்து ஆண்டுகளாக இருக்கக்கூடும். மெர்கன்டைல் பேங்கில் கிளர்க் பதவிக்காக ஆன்லைன் தேர்வு எழுதவேண்டும். சில புத்தகங்கள், தேர்வு தயாரிப்புகள், டைரிக்குறிப்புகள் என நேரம் நகருகிறது.
சந்திப்போம்.
                                                           உங்கள்
                                                           அன்பரசு





                                                           16.12.2012
அன்பு முருகுவிற்கு,
     என்றும் எனதன்பு. ‘வியத்தலும் இலமே’ எனும் முத்துலிங்கம் அ. எழுதிய நூலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். மலேசியா முதல் கனடா வரை எனும் பயண நூலும் இடையிடையே படிக்கிறேன். அஞ்சலி பற்றி எழுத ஒருவரை தேர்ந்தெடுத்து எழுதுவது சிறப்பு என்றாலும், அவரின் அறியாத திறமைகள் குறித்தும் எழுதலாம். பால்தாக்கரே பற்றி எழுத முயலலாம். முழுக்க விமர்சன நோக்கிலோ, அப்படி இல்லாமலோ கூட அவரது வாழ்க்கையை சிறிய அழகிய பதிவாக மாற்ற முடியும். எழுத்து தங்களுக்கு மிக உகந்தது என்பது என் தாழ்மையான கருத்து. தன் ஆறு, சூழல் குறித்து பேசவே தேசியக்கட்சியில் இணைந்திருக்கிறீர்கள் என்பது நிச்சயம் பெருமையான துணிச்சலான முடிவுதான். அ. முத்துலிங்கத்தின் பகடி குறையாதது. வியத்தலும் இலமே முழுக்க கதை எழுதுபவர்கள் பற்றிய ஒரு முழுமையான பதிவாக இருக்கிறது. எழுத்தாளர்களின் நேரடிப்பகிர்வை எழுதுகிறார். ஒரு எழுத்தாளர் ஒரே சமயத்தில் ஐந்து நூல்களைப் படிக்கிறாராம். நான் இரண்டைத் தாண்டமுடியவில்லை. உழைப்பில்லாமல் எதுவும் சாத்தியமில்லை. பிறகு சந்திப்போம்.
                                                     உங்கள்
                                                     அன்பரசு.




                                                          24.12.2012
பிரிய முருகு அண்ணாவிற்கு,
     இப்போதுதான் ‘ராதையுமில்லை, ருக்மணியுமில்லை’ எனும் அம்ருதா ப்ரீதம் எழுதிய நாவலைப் படித்துமுடித்தேன். முழுக்க அகவய உணர்வுகளின் சித்தரிப்பு இந்நூலில் அதிகம். அனைத்துமே ஹரிகிருஷ்ணனின் நினைவுகளின் வழி கதை உயருகிறது. ஓவியத்தின் வண்ணங்கள் மூலமாக அவனுக்கு ஆன்ம தரிசனம் கிடைத்துவிடுகிறது. ‘மலை மேல் நெருப்பு’ எனும் அனிதா தேசாய் எழுதிய நாவல். இதனை அசோகமித்திரன் மொழிபெயர்த்திருக்கிறார். இது முன்னதிற்கு எதிர்ப்பதமான நூல். புறவயமான காட்சி வழியாக மன உணர்வுகளை சித்தரிக்க அனிதாதேசாய் பெருமுயற்சி செய்கிறார். திரைப்படம் செய்ய இது உதவியாக இருக்கும். நந்தா கௌல், ராக்கா, ஈலாதாஸ் என மூன்று பேர் வசிக்கிறார்கள் கரிக்னோ மலை மீது. ஈலாதாஸின் வாழ்க்கை மிகவும் துயர் வடியும் பகுதி. அவளது வறுமை, பட்டினி, ஒட்டுப்போட்ட பை, உடை என அவளை விவரித்து பின் அவள் தன் தோழியான நந்தாவிடம் உரையாடும் காட்சியில் எனக்கு கண்ணீர் நிற்காமல் பெருகி வழிந்தது. உண்மையில் அவள் தெருவில் நடக்கும்போது அவளது உருவம் கேலிக்குள்ளாகும் தருணம், அவளது அவல வாழ்வு முடிந்துபோனால்தான் என்ன எனும்போது, திருமணமாகாத அவள், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவனால் கற்பழிக்கப்பட்டு தாக்கி கொல்லப்படுகிறாள். அதை ஏற்றுக்கொள்ள மனம் ஏற்கனவே தயாராகிவிடுகிறது. துயரமான சாவு இல்லையா? நந்தா கௌலின் மனதில் துயரச்சுமை எரியத் தொடங்குவதுடன் கதை நிறைவுறுகிறது. நீங்கள் வேறு ஏதாவது வாசித்தீர்களா? காலச்சுவடும், சன்டே இந்தியனும் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. டபங் 2 வருகிறது. பார்க்க விருப்பமிருக்கிறதா இல்லையா? நல்ல உறக்கம் கிடைக்க இது போல படங்களும் தேவைப்படுகிறதே தோழரே!
                                                           உங்கள்
                                                           அன்பரசு.
28.12.2012
பிரிய முருகுவிற்கு,
     தற்போதுதான் ‘சுவாமியும் நண்பர்களும்’ நூலைப்படித்து முடித்தேன். மிகச்சரளமான நடை. அட்டை ஓவியம், பக்கங்களுக்கு இடையேயான ஓவியங்கள் மீண்டும் பார்க்கும்படி உள்ளன. சுவாமி, மணி, ராஜம் என மூன்று நண்பர்களின் கதை. குழந்தைகளின் அறிவை வெளிப்படுத்தும் உரையாடல்கள்தான் இந்நூலின் பெரும்பலமே. ஏறத்தாழ அவர்களது புரிந்துகொள்ளல் தொடர்பான தடுமாற்றம்தான் நகைச்சுவையே. ஒரு கிராமத்து பள்ளியில் இதைக்காட்டிலும் கூடிய விஷயங்கள் நடக்கும் என்றாலும், மால்குடியின் சூழல், கதை மாந்தர்கள் என வாழ்ந்த அயர்ச்சி வருகிறது இல்லையா அங்குதான் நூலின் வெற்றி கண்சிமிட்டுகிறது.
     தகழியின் ‘இரண்டுபடி’ நாவலைப் படித்தேன். கோரன், சிருதை ஆகியோரது வாழ்வு, நிலப்பண்ணைக்காரர்களால், எப்படி சிதைக்கப்படுகிறது என்பதே கதை. தகழியின் வசனங்களின் இழைப்பின்னல் நம் மனதில் நூலாடுகிறது. சமூகத்தின் கடையர்களாக ஒதுக்கப்பட்ட பறையர்கள், பள்ளர்கள் பற்றிய கதை இது. தகழி செம்மீன் நாவலை இருபது நாளில் எழுதியவராம். நம்பவே முடியவில்லை. முழு நாவலே 350 பக்கங்கள் என்றால் இருபது நாட்களில் எழுத வேண்டுமென்றால் மனதிலேயே பாதி உரையாடலை நிகழ்த்தி பார்த்திருக்க வேண்டும். தணிக்கையும் செய்திருக்க வேண்டும். அந்த தூண்டல், வேகம் கிடைக்காதது தான் பலரது எழுத்து மடிய காரணமாகிறது.
என்பிடியில் சலீம் அலி பற்றிய புத்தகம் வந்திருக்கிறது. பார்த்திருப்பீர்கள். காலச்சுவடு நான் பெற்று இன்னும் படிக்கத் தொடங்கவில்லை. சண்டே இந்தியன் இன்னும் வரவில்லை.
சந்திப்போம்.
                                                     உங்கள்
                                                     அன்பரசு


                                                    

    

கருத்துகள்