புலிகள் சூழ்ந்த வனம்


புலிகள் சூழ்ந்த வனம்



                                ஆங்கிலத்தில்: மீரா பரத்வாஜ்
          தமிழில்: அன்பரசு சண்முகம்

கர்நாடகாவில் உள்ள பத்ரா பாதுகாக்கப்பட்ட புலிகள் பகுதியை உருவாக்கியதில் வன சூழலியலாளரான டி.வி கிரிஷ் முக்கியமான பங்காற்றியுள்ளார்.
2001 – 2002 ஆகிய ஆண்டுகளில் உருவான புலிகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியினை உருவாக்க கிரிஷ் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகா மாநிலத்தின் சிக்மகளூர் அருகிலுள்ள  பதிமூன்று கிராமங்களில் வாழும் நானூற்று அறுபத்து நான்கு குடும்பங்களின்  மக்களிடமும், உண்மையை விளக்கிப் புரிய வைத்து இதனை சாதித்து இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தொடங்கியது 1993 ஆம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பிற்கான இடமாக பத்ரா பகுதியை மாற்றும் விதமாக மூங்கில்மரங்களை அகற்ற முயலும்போது, கிராம மக்களுக்கும் பல முரண்பாடுகள் ஏற்பட்டன. மனிதநேயத்துடன் அந்த பிரச்சனையை அணுக முயன்றார் கிரிஷ். ‘’ கிராம மக்களுக்கான மறு வாழ்வு குடியமர்த்துதல் செயல்பாடுகளைச் செய்ய சில ஆண்டுகளை ஒதுக்கினேன். எண்பது விழுக்காடு கிராம மக்கள் வறுமையில் உழலும் மக்கள் என்பதால், நான் இங்கு செய்யப்போகும் செயல்பாடுகளை எடுத்துக் கூறி, அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டு அவற்றைத் தீர்க்க முயற்சித்தேன் ’’ என்று மரத்தின் வேர்களைப் பற்றியபடி தீர்க்கமாக பேசுகிறார்.
பத்ரா திட்டம் முதலில் 1982 – 1983 ஆகிய ஆண்டுகளில் திட்டமிட்டாலும் , 1992 ஆம் ஆண்டு தொடர்ந்தாற்போல் வந்த அரசு திட்டத்தில் தங்களின் பங்களிப்பை செய்தது. மத்திய அரசு திட்டத்திற்கான எழுநூற்றைம்பது ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அனுமதி கொடுத்தாலும், மாநில அரசு மக்களின் மறு குடியமர்த்தல் பணிகளுக்காக சிறிது காலம் அவகாசம் கேட்டது. மக்களிடம் எங்களது திட்டங்களை தெளிவாக எடுத்துக்கூறி, கண்ணியமான எங்களது நடவடிக்கையால் மக்கள் கொடுத்த ஒத்துழைப்பினால் 2000 – 2001 ஆண்டிலிருந்து அவர்களை வேறு இடத்திற்கு குடியமர்த்த தொடங்கினோம். இது மேலும் ஒரு ஆண்டு காலம் நீடித்தது. கிரிஷ் இன்றுவரை குடியமர்த்தப்பட்ட குடும்பங்களின் பிரச்சனைகளை கண்டறிந்து தீர்த்து, அவர்களை அக்கறையுடன் கவனித்து வருகிறார்.
பத்ரா பாதுகாக்கப்பட்ட புலிகளின் பகுதியான ஐம்பத்தி மூன்று கி.மீ நீண்டிருக்கும் பகுதியில் கால்நடை மந்தைகளோ, கிராமங்களோ, தச்சு வேலைக்கான மரம் வெட்டுதலோ இல்லாமல், பசுமையாக இருக்கும்  இப்பகுதியை ஒருவர் கடந்து செல்லும்போது, தன் மனதில் உள்ளே சுனை போல பெருகியோடும் உற்சாக பரவச இரைச்சல்களை தடுக்கவே முடியாது. இருபதிற்கும் மேற்பட்ட புலிகளைக் கொண்டிருக்கும் இப்பகுதியான வனத்தில் யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் மற்றும் பிற உயிரினங்களும் வாழ்கின்றன.
கிரிஷின் இயற்கை மீதான நேசம் தொடங்கியது அவரின் வீட்டிலிருந்துதான். மாவட்டம் முழுவதும் அழகாய் வனம் போல சூழ்ந்திருக்கும் காபித்தோட்டங்களில் நோயுற்று அல்லது காயமுற்று கிடக்கும் விலங்குகளை காப்பாற்றி சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்.
‘’ சுதந்திரமாக இருக்கும் விலங்குகளை அவை காயமுற்றோ, நோயுற்றோ இருந்தால் அவற்றைப் பேணிப் பாதுகாத்து அவற்றை வனத்தில் கொண்டுபோய் விட்டுவிடுவோம். இது போன்ற செயல்பாடுகள்தான் என் இந்நாளைய இயற்கை நேயத்தின் முதற்படியாக அமைந்தது. எனது பனிரெண்டாவது வயதில் பெரிய விலங்குகளைக் காண்பதற்காக பத்ரா காட்டினில் நுழைந்தேன் ‘’ நினைவுகளின் சிலிர்ப்பில் முகம் மலர்கிறார்.
1970 களின் முற்பகுதியில் வனங்களில் வேட்டையாடுவது பெரும் மன உளைச்சலை கிரிஷிற்கு ஏற்படுத்தியது.
‘’ நானும் என் நண்பர்களும் இணைந்து இயற்கையினை பாதுகாக்க   அமைப்பு ஒன்றினை உருவாக்கினோம். அது இன்றைய காலத்தில் பழமையான அமைப்புகளில் ஒன்றாக இருக்கும்.  பள்ளி முடியும் வரை சைக்கிள்தான் எங்களது வாகனமாக இருந்தது. கிடைக்கும் நேரங்களிலெல்லாம் வனத்தினுள் சென்று பறவைகளை கவனித்துக்கொண்டு இருப்பதுதான் எங்களது வேலையாக இருந்தது. பின் கல்லூரிகளின் போது மோட்டார் சைக்கிள் கிடைத்ததால், பல இடங்களுக்கும் சென்று இயற்கையைப் புரிந்து கொள்ள முயற்சித்தோம். அதன் மூலம் அதற்கு எதிரான பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்க்க முயற்சித்தோம் ‘’ என்கிறார்.
1980 ல் சூழலியலாளர்களான உலாஸ்காரந்த் மற்றும் எம். கே சின்னப்பா ஆகியோரை நாககோலில் சந்தித்தது அவரது வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. ‘’ முழு உலகத்தையும் காப்பாற்ற முடியும் என்ற என் அதீத கற்பனையை உலாஸ் உடைத்தெறிந்து குறிப்பிட்ட ஒரு பிரச்சனையை மையமாகக் கொண்டு இயங்குமாறு கூறினார். சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட அவரின் பங்கு என் வாழ்வில் அதிகம். முத்தோடி வனப்பகுதியிலுள்ள பிரச்சனைகளை அதன் பின்னர் கவனிக்கத் தொடங்கினேன். நான் பிறந்த மற்றும் நான் வாழ்கின்ற அடிப்படை இடமான அதன் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது; அதன் காரணமானவற்றை தீர்க்க முயற்சித்தேன் ‘’ என்கிறவருக்கு சூழ்நிலைகள் மிக எளிதாக அமையவில்லை.
சிக்மகளூர் அருகிலுள்ள பத்ரா – குத்ரேமுக் வனவெளியில் இரக்கமற்ற வணிகர்களால் உருவாக்கப்பட இருந்த சுரங்கம், அணைகள், கேளிக்கைவிடுதிகள் மற்றும் இதர வணிகத் திட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து மக்களைத் திரட்டி இவரும் சூழலியலாளர்களும் நடத்திய போராட்டங்கள் மற்றும் வனப்பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்தக்கோரிய நீதிமன்ற போராட்டங்களால் அவை கைவிடப்பட்டுள்ளன.
கிரிஷின் அர்ப்பணிப்பான சேவைக்கு அங்கீகாரமாக 1998 ல் வன பாதுகாப்பு சங்கத்தின்  சேவை விருதும், 2001 ல் கர்நாடகா ராஜ்யோட்சவா விருதும், 2002 ல் டைகர் கோல்டு விருதும் கிடைத்துள்ளன. ஸ்காட்லாந்து நாட்டின் ராயல் வங்கி புவிநாயகர்கள் 2013 என்ற விருதினை புலிகளின் பாதுகாப்பில் கிரிஷின் பங்களிப்பிற்காக வழங்கி கௌரவித்தது.
‘’ அங்கீகாரத்திற்காக என்று எந்த செயலையும் செய்யவில்லை. அதை விரும்பவும், அதைப்பிடித்துக்கொண்டு இருக்கவும் இல்லை. இந்த விருதுகள் வனப்பாதுகாப்பிற்கான விழிப்புணர்ச்சியை அதிகரித்துள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன் ‘’ என்று தெளிவாக மெலிதாக பேசுகிறார்.
தன்னடக்கமாக மெல்லியகுரலில் பேசும் இந்த சூழலியலாளரின் கடும் முயற்சியால்தான் பத்ரா மற்றும் சுற்றியுள்ள மேற்குமலைத்தொடர்கள் உட்பட்டவை பாதுகாக்கப்படுகின்றன. பாபாபுதான் கிரி மலைகளில் வணிகச்சுற்றுலா மற்றும் காற்றாலைகள் அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
கிரிஜா சங்கர், சதாக்சாரி ஆகிய இயற்கை சூழலியலாளர்களோடு சேர்ந்து சில அமைப்புகளை உருவாக்கி, அவற்றின் மூலமாக வனப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருவதோடு இளைஞர்களுக்கென பயிற்சி வகுப்புகள், உரைகள், நிகழ்வுகள் ஆகியவற்றையும் தயாரித்து நிகழ்த்துகிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வனப்பாதுகாப்பு குறித்து கற்பித்தும், பயிற்சி அளித்தும் தன் வழியில் தொடர்ந்து பயணிப்பவர் இந்த அற உணர்வை நேச இதயத்தை மெல்ல காற்றில் ஆடும் மரத்தின் இலைகள் அசைவதை, அமர்ந்து கவனிப்பதன் மூலம் பெற்றிருக்கக் கூடும்.



கருத்துகள்