நூல் வெளி

பாரதிபுரம்
ஆசிரியர்: யு. ஆர். அனந்தமூர்த்தி
பதிப்பகம்: அம்ருதா, சென்னை.
                                           ஜெர்ரி – ப்ளம்

     பிராமணக்குடும்பத்தில் பிறந்த ஜகன்னாத ராயன் லண்டனில் மேற்படிப்பு படித்துவிட்டு, பாரதிபுரம் எனும் அவனது சொந்த ஊருக்கு வருகிறான். அங்கு மனிதர்களை அடிமைபோல கசக்கிப்பிழியும் சாதி மனோபாவம் எங்கும் துளிர்விட்டிருக்க, அதைக்களைய பல்வேறு வழிகளில் அவன் முயற்சிக்கிறான். என்னவானது அவன் முயற்சிகள்? போராட்டத்தில் வென்றானா என்று கூறுகிறது நாவலின் உச்சப்பகுதிகள்.

     நாவல் பயணிப்பது ஊருக்கே முதல்வனான மஞ்சுநாத சாமியைக் காப்பாற்றும், போற்றும் குடும்பத்து மனிதனின் பார்வை வழியில் என்பதைத்தெரிந்துகொள்ளவேண்டும். முழுக்க ஐரோப்பிய வழியில் படித்தவர்களின் அறிவுசார்ந்த தளத்திலான தேடல்கள், தவிப்புகள், சிந்தனைகள், உரையாடல்கள் அமைகிறது. புராணிகர் பேசுவது அதன் தன்மை கெடாத வகையில் ஆங்கிலத்தில் வருகிறது.

     உயர்ஜாதியினைச்சேர்ந்தவனின் மனதளவில் ஒரு செயலினைச் செய்ய நினைப்பதற்கும், அதனைச்செய்யும்போது ஏற்படும் சமூகத்தின் எதிர்வினைக்கான பதட்டத்தினையும், பலம், பலவீனத்தையும் நேர்த்தியாக நேர்மையாக பதிவு செய்துள்ள படைப்பு இந்நாவல் என்று கூறலாம்.

     இறுதிக்காட்சியில் சாதாரண ஒரு கதாபாத்திரம் செய்யும் செயல்களே பெரும் திருப்பத்தை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் மையமான ஒன்றை நீடித்துக்கொள்ள ஆதிக்க ஜாதி ஆட்கள் எதனையும் பயன்படுத்த தயாராக இருக்கிறார்கள் என்பதை எளிதில் புரியவைக்கும் எழுத்துக்கள் அனந்த மூர்த்தியுடையது.

     பதட்டம் ஏற்படும் காட்சியாக சாளக்கிராமத்தை எடுத்து தலித் மக்களிடம் கொடுக்க முயல்வது, கோயில் நுழைவு விஷயங்கள் ஆகியவற்றைக் கூறலாம். இந்த இடங்களில் கடுமையான பதட்டம் வாசிப்பவர்களை ஆட்சி செய்கிறது.

     எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பொறுத்தவரை முடியவில்லை. தொடருகிறது. சாதிகளின் கடுமையான கூட்டணி என்பது வெறும் நம்பிக்கை மட்டும் கொண்டு எழவில்லை. அதை முன்வைத்து செய்த பல விஷயங்கள் இங்கு உண்டு. தகர்ப்பது என்பது ஐரோப்பிய மனதிற்கு சரியானது. ஆனால் இங்கு ஆற்ற வேண்டிய பணி என்பது பரபரப்பு என்பதைத்தாண்டிய மாற்றங்களைக் கோரி நிற்கும் ஒன்றாகும். அனந்தமூர்த்தி இந்த கதையின் நாயகன் போலத்தான் சமரசமில்லாமல் வாழ்ந்தார். இந்த செய்தியை அறியும்போது, கதையினை உள்வாங்க உதவியாய் இருக்கும்.





புகைநடுவில்
ஆசிரியர்: கிருத்திகா
காலச்சுவடு பதிப்பகம்.
                                                      ரங்கவன்

     இதுவும் ஒரு அறிவுசார்ந்த உரையாடல்களை அதிகம் கொண்டது. கதை நகர்வது இரண்டு இடங்களுக்குத்தான். ஒன்று கிளப் மற்றொன்று வீடு. பின்னட்டையில் தத்துவச்சிக்கல், சாரம் என்றெல்லாம் கூறினாலும், ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்களின் குடும்பத்திற்குள் நிகழும் சிக்கல்கள், கோபம், வலி, வேதனைகள், மகிழ்ச்சி என இவற்றை புகை நடுவில் சித்திரமாக்கித்தரும் 1955 ஆண்டு புழக்கமான எழுத்து.

     எழுதப்பட்ட காலம் சார்ந்த எழுத்து என்பதால் இன்று பொறுமையுடன் வாசிப்பது மட்டும் தேவையானது. மற்றபடி பெரிய சுவாரசியமான ஆர்வம் தூண்டும் எழுத்து என்று கூற தயக்கமாக இருக்கிறது. சில உரையாடல்கள் விதர்பன் பேசுவது போல ஈர்க்கிறது. பெண்களின் குணங்கள், உயர்நடுத்தரவர்க்க பெண்களின் வாழ்க்கை பற்றி பேசுகிற நாவல் இது.

     காலம் தாண்டி இந்நாவல் வாழ்வது கதையினைத்தாண்டி தத்துவம் என்ற வகையில் இருக்கலாம். பெரிய வாசிப்பனுபவம் அளிக்கும் என்று கூறமுடியாது. காலத்தில் தேங்கி போனதுபோலுள்ளது இந்நாவல் வாசிக்க சிரமம் ஏற்படக்காரணமாக இருக்கிறது.

பேய்க்கரும்பு
ஆசிரியர்: பாதசாரி
பதிப்பகம்: தமிழினி
                                                            மல்லாட்டை

      பேய்க்கரும்பு என்பது தமிழின் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் முழுமையான தொகுப்பு.

     மிக நுட்பமான எள்ளல் சுவை உள்ளது. நேரடியாக அதை அறிய முடியாது. இன்னொன்று ஒன்றிலிருந்து ஒன்றாக பெருகியோடும் வார்த்தைகளினூடே தாண்டி ஓடும் இந்த எழுத்தாளனை பின்தொடர்வது எளிதானதல்ல.

     பேய்க்கரும்பு ருசிக்க அதை விதைப்பவனோடே பயணிக்கவேண்டும். அப்போதுதான் அதை அந்த வித்தை, ருசியை அறிய வழி கிடைக்கும். அகமனவுலகை வெளிப்படையாக பேசி வெளியிடப்பட்ட பட்டியல் வெகு நேர்த்தி. நாம் சொல்ல தயங்கும் பலதையும் கட்டுடைக்கும் இந்த தைரியம்தான் இந்த எழுத்தில் வாசகனுக்கு மிக நெருக்கமானது.

     முழுக்க தனது உலகத்தின் சூழலை, அரசியலை என முழுக்க எழுதியிருந்தாலும், குறைவானது போல் தோற்றமளிக்கும் அதன் உள்ளடக்க நேர்மையின் களத்தைப்பொறுத்தவரை நிறைவான வாசிப்பனுவம் தருகிற பிரதிதான் இது. நன்றாக ஆழ்ந்துபடிக்க, மனதோடு உரையாடல் செய்ய இந்நூல் நிச்சயமாக உதவும்.

சால்வடார் டாலியின் டைரிக்குறிப்புகள்
தமிழில்: சா.தேவதாஸ்
வ.உ.சி பதிப்பகம்
                                                      ஜூனியர் ஷான்

      ஸ்பெயினின் முக்கிய ஓவியரான டாலியின் குறிப்புகள் தனித்தன்மையான அகமன உணர்வுகளை வெளிக்காட்டுகிறது. அதே விதத்தில் தன்னை இப்படித்தான் என்று ஓவியம் என்ற ஊடகம் தவிர்த்து வெளிக்காட்டும் எழுத்து. ஊடகத்தையும் நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்.

     பிகாசோவை விமர்சிக்கிறவர், தன்னையும் தன் ஓவியங்கள் குறித்த கருத்துக்களையும் மிக வெளிப்படையாக கூறுகிறார். கடவுகள் குறித்த எழுத்துக்களை எதுவும் எழுதவில்லை.

     தனக்கான உளவெழுச்சியை டாலி பெறுகிற இடம் குறித்து முதலில் படிக்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு பொருள், ஒரு இடத்தில் இருந்து உளவெழுச்சி, ஆர்வம் கிடைக்கிறது. தொடர்ந்த ஈடுபாடு தன்னைத் தொடர்ந்து தக்கவைக்க சிறிய அளவிலான தூண்டுதல் கிடைக்கிறது என்றால் அது எதுவாகத்தான் இருக்கட்டுமே. பல ஓவியங்களும் குறியீட்டுத்தன்மையுடன் இருக்கின்றன. அதைப்புரிந்துகொள்ள நிச்சயம் நிறைய விஷய ஞானம் தேவைப்படுகிறது.

     இந்தக்குறிப்புகளை படிக்கின்றவர்களுக்கு டாலியின் ஓவியங்களைப் புரிந்துகொள்ள சிறிது வாய்ப்பு உள்ளது என்றே கூறலாம்.




கோடையில் மழை( மொ.பெ சிறுகதைகள்)
தமிழில்: ச. ஆறுமுகம்
ஆதி பதிப்பகம்
                                                      கணேஷ்ஷன்

      இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கதைகளின் தேர்விற்காகவே மொழிபெயர்ப்பாளரைப்பாராட்ட வேண்டும். நேர்த்தியான தொகுப்பு இது.

‘கோடையில் மழை’ எனும் கொரிய சிறுகதை சிறுவனுக்கும், சிறுமிக்கும் இடையே நிகழும் பெயர்தெரியாத இனம்புரியாத அன்பைப்பேசுகிற மனதை பெரும் பாரமாக்கும் கதை. இத்தொகுப்பின் சிறந்த சிறுகதையாக இது இருக்கிறது.

     ‘மலைமேல் கரடி ’ எனும் சிறுகதை ஆலிஸ் மன்றோ எழுதியது. ஃபியோனா, கிராண்ட் ஆகிய இருவரின் வாழ்வில் உதிர்ந்துவிடாத காதலையும், அன்பையும் பேசுகிறது. வாழ்வின் புயல்போன்ற நெருக்கடி சூழல்களிலும், மனதின் ஈரம் வற்றாது இருக்க இதுபோன்ற கதைகள்தான் உதவும். நீண்ட சிறுகதையென இச்சிறுகதையை தொகுப்பில் சுட்டிக்காட்டலாம். 30 பக்கங்களுக்குமேல் நீளுகிறது.

     ‘இரும்புக்குழந்தை’ சீனக்கதையான இக்கதை ஒரு பகுதியில் தண்டவாளம் அமைக்கச்செல்லும் குடும்பங்களைச்சேர்ந்த குழந்தைகளின் நிராதரவான நிலையைப்பேசுகிறது. இது ஒரு முக்கியமான குறியீட்டுக்கதை எனலாம். இதயத்தினால் படிக்கவேண்டிய கதை இது. எழுத்தாளர் கடும் அங்கதமும், பகடியும் நிரம்ப எழுதுபவர் என்று எளிதில் உணரமுடியும்.

     7 சிறுகதைகளில் நான்கு எனக்கு பிடித்தமானதாக உள்ளது. நரகத்தில் ஹான்வெல் எனும் சிறுகதை மனைவி தற்கொலை செய்துகொள்ள, ஹான்வெல் ஒரு சிறு உணவு விடுதியில் பாத்திரங்கள் கழுபவராக வாழ்கிறார் என அவரோடு பழகிய கிளைவ் என்பவர் எழுதும் கடிதம் வழியாக ஹான்வெல் பற்றி அறிகிறோம். அவர் தன் மகள் மீது கொண்டுள்ள பாசத்தை அறிந்து கண்ணீர் பெருகுகிறது. வாங்கி வாசித்தறிய வேண்டிய அனுபவிக்க வேண்டிய நல்ல சிறுகதைகளைக்கொண்டுள்ள மொழிபெயர்ப்புச் சிறுகதைகளைக் கொண்டுள்ள தொகுப்பு இது.

 பசி
எலிஸ் பிளாக்வெல்
தமிழில்: சுப்பாராவ்

                                                      சின்னமுனி

     இந்தக்கதை ரஷ்யாவில் உள்ள லெனின் கிராப்ட் பகுதியிலுள்ள விதை ஆராய்ச்சி மையம் ஒன்றை அதில் வேலை செய்யும் பணியாட்கள் கடும் பஞ்ச காலத்தில் எப்படி அதை காப்பாற்றினார்கள் என்று விவரிக்கும் குறுநாவல் ஆகும்.

     தான் சேகரித்து வைக்கிற விதைகளை உண்ணக்கூடாது என்று உயிரையே துச்சமாக கருதி தன்னையே அழித்துக்கொள்கிறாள் அலெனா. ஆனால் அவளது கணவனோ, நம் உயிர் முக்கியம். அந்த உயிர் இருந்தால்மட்டும்தான் விதைகளை சேகரித்து அவற்றை நாம் காப்பாற்ற முடியும் என்று நம்பி, தான் சேகரித்து விதைகளை சிறிது உண்டு, உயிர்பிழைக்கிறான். ஜெர்மனியின் போரினால், பல்லாயிரம் , லட்சக்கணக்கான மக்கள் பசி, ஆயுததாக்குதல்களினால் உயிரிழக்கின்றனர்.

     புத்தகத்தை படித்து முடித்தபின் எழும் கேள்வி, கதை சொல்லி விதையை ஏன் எடுத்து சாப்பிட்டார்., அது சரியா, தவறா என்றால் வாசகர் தன்னை அங்கே பொருத்தி நெஞ்சுக்கு நீதியாக தன்னை உணர்ந்துபார்த்துக்கொள்ள வேண்டும். இறுதியில் இடம்பெற்றிருக்கும் நேர்காணல் எழுத்தாளரின் மனதைக்கூறுகிறது. இந்த நூலும் சரி, நட்ஹாம்சன் எழுதிய பசி எனும் நூலும் சரி கூறுவது பசி மனிதனின் அறவுணர்வை குலைத்துப்போட்டுவிடும் என்பதைத்தான். அந்த நினைப்பிற்கு எதிராக இந்நூலில் தன்னை பலியாக்கிக்கொள்ளும் லட்சியவாத கதாபாத்திரமாக உள்ள அலெனாவை ஆச்சர்யமாக பார்க்கிறேன். லட்சியவாதிகளைப்பற்றிய குத்தல்கள் இதில் ஏராளமாக உள்ளன.


57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புதினம்
வா.மு. கோமு
எதிர் வெளியீடு
                                          சாந்தாமணிபழனிச்சாமி

                வா.மு கோமுவின் எழுத்துக்கள் என்றாலே எனக்கு கொண்டாட்டம்தான். அது நம்மை நம் ஊர் மனிதர்களின் கதைகளுக்கு இழுத்து செல்லும் வகையில் இருப்பதைத்தான் கூறுகிறேன். அழுத்தமாக அப்பட்டமாக கிராமத்தில் இருக்கும் பல்வேறு வேறுபாடுகளை அவருக்கே உரிய வகையில் பேசிச்செல்லும் எழுத்தாளர் அவர்.

பழனிச்சாமி என்ற 5வது படிக்கும் சிறுவன் ஒருவனின் வாழ்க்கை, மாரிமுத்து என்பவனின் வாழ்க்கை என இவ்விரண்டும் மாறி மாறி பயணிக்கின்றன இந்நாவலில். இந்த இரு பாத்திரங்களும் ஆதிக்க சாதியில் பிறந்தவர்கள் என்பதை எளிதில் உணர முடியும். இதனால்தான் சிறுவனான பழனிச்சாமி டெய்சி, இந்திராணி என இருவரையும் கடுமையான வன்மத்துடன் திட்டுவதோடு, அந்த தண்டனையிலிருந்து தப்பிக்க முடிகிறது.

     மாரிமுத்து திருமணமாகாத சாராயம் காய்ச்சுகிற 35 வயதான ஆள். தன் நாயுடன் படுத்து உறங்கிவருபவர் என்றாலும், நேர்மையானவர். இவருக்கும் தன் தாய்மாமன் மகள் மீது காதல் வந்து விடுகிறது. பின் அது ஒருதலைக்காதலாக கருகிப்போகிறது. பின் அத்தை முறை வரும் ஒரு விதவைப்பெண்ணிடம் ஏற்படும் தொடர்பு என கதை நகர்கிறது.

     வா.மு. கோமுவை தொடர்ச்சியாக வாசிப்பவர்களுக்குத்தான் தெரியும் அவர் உடலுறவு போன்றவற்றை எழுதுவது அவர் எழுத்தை விற்பதற்கான ஒரு வழி. ஆனால் அவர் நாவலில் அதை மட்டும் முதன்மையாக கொள்வதில்லை. இனி ஒண்ணையும் மறைக்க முடியாது என்ற சிறுகதை உயிர்மையில் வந்தது. இதை படிக்கும்போது, அவர் தனது எப்போதைக்குமான சிறுகதை வடிவத்தை எப்படி ஆழமாக பயன்படுத்தியிருப்பார் என்று புரிந்துகொள்ளமுடியும்.

ஆபரேஷன் சூறாவளி
டயபாலிக், ஈவா
லயன் காமிக்ஸ்
                                                            சித்தாமட்டி

      தியாகச்செம்மல்களின் காலம் முடிந்துவிட்டது. தன்னியல்பாக, குற்றச்செயல்பாடுகளை தனக்கே உரிய நியாயத்துடன் செய்யும் நாயகர்கள் திரையில் பெருகிவிட்ட காலம் இது.

     டேஞ்சர் டயபாலிக்கின் ‘குற்றத்திருவிழா’ வின் ஈர்ப்புக்காக ஆபரேஷன் சூறாவளி வாங்கினேன். குற்றத்திருவிழாவின் பரபரவென ஈர்க்கும் ஆற்றல் இதில் இல்லையென்றாலும், குற்றச்செயல்பாடுகளின் ராஜாவான டேஞ்சர் டயபாலிக் எனக்கு மிகப்பிடித்த நாயகர். இதில் தொடக்க காட்சி நல்ல நாயக பிம்பத்தை தூக்கிப்பிடிக்கிற ஒன்று என்பதில் ஐயமில்லை.

     ஜிங்கோவின் முகத்திற்கும், டயபாலிக்கின் முகத்திற்கும் சில வேறுபாடுகளை ஓவியர் காட்டியிருக்கலாம். முடி மட்டுமே மாறுதலாக உள்ளது என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. டயபாலிக்கின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் படு சுவாரசியமாக இருந்தன. நாற்காலியில் இருந்து எழுந்து செல்லும் காட்சிக்குப்பின்தான் டயபாலிக் ஜிங்கோவின் வேடத்தில் வந்திருக்கிறார் என்று தெரியவருவது திடுக் திருப்பம்.

     டயபாலிக், ஜிங்கோ என மாறி மாறி தோன்றுவதை சிறிது புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. அடுத்த இதழை எதிர்பார்க்கவைக்கும் டயபாலிக் சரவெடி இது. முத்தக்காட்சிகள் நீக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது உற்சாகமான விஷயம்தான். சண்டாளா என்பது ஒரு ஜாதி குறித்த பழிச்சொல் என்பதை மொழிபெயர்ப்பாளருக்கு யார் சொல்வது?

அதிகாலை அமைதியில்
பரீஸ் வஸீலியெவ்
என்சிபிஹெச் வெளியீடு
                                                             சின்ன சம்பு

      ரஷ்ய இலக்கியம்தான். நண்பர் தீவிரப்புரட்சி கொடுத்த நூல் இது. பெரும் ஆண்மை படம் இதை தழுவியது என்று கூறினார். வஸ்கோ எனும் சார்ஜெண்டு போர் நிகழும் காலத்தில் காட்டினருகில் சிறு படைக்குழுவோடு இருக்கிறார். அங்கு  பெண்கள் குழு ஒன்று பயிற்சிக்காக வருகிறார்கள். கதையில் ஐந்துபேர் மட்டுமே வருகிறார்கள். ரீதா, ழேனியா, கிரிகாலனோ, காலியா, ஸோனியா இவர்களோடு ஒரு வனத்தில் நுழைந்துவிட்ட ஜெர்மன்காரர்கள் 16 பேரை எப்படி வீழ்த்துகிறார்கள் என்பதுதான் கதை.

     கதையின் முடிவு நெகிழ்ச்சியான தேசப்பற்று படத்தின் இறுதிக்காட்சிபோலத்தான் என்றாலும் அதுவரையிலும் பயணிக்கும் கதை வனம் பற்றி பல நுட்பமான தகவல்களை கதைவழியில் தந்துகொண்டே இருக்கிறது. அந்தப்போரில் பங்குபெறும் ஒவ்வொருவரைப்பற்றியும் மிகத்துல்லியமாக அவர்களின் எளிய வாழ்க்கையை விளக்கும் இடம் நன்றாக இருந்தது.

இதில் குறிப்பிடவேண்டியது குறிப்பிட்ட ஐந்து பேரும் கொண்டிருப்பது குறைவான ஆயுதங்களையும், எவ்வித பயிற்சியும் கொண்டிராதவர்கள் என்பதும்தான். இவர்களைக்கொண்டு வஸ்கோ என்ன செய்தார் என்பதுதான் பரபரப்பான கதையின் மையம்.  இறுதியில் அனைவரும் இறந்துவிட எதிரிகளின் துப்பாக்கிச்சூட்டில் ஒரு கையும் செயலிழந்துவிட எதிரிகளை பணியவைக்கும் காட்சி தைரியத்தை படிக்கின்ற நமக்கு தருகின்ற ஒன்று.

தஞ்சை ப்ரகாஷ் படைப்புலகம்
கீரனூர் ஜாகிர்ராஜா
                                                            ஏஆர்ஏ

      தஞ்சை ப்ரகாஷின் எழுத்துக்களை முதன்முறையாக வாசித்தாலும், அவை கவனமாக வாசிக்கும் நிலையை கோரும் எழுத்துக்கள் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு கதைகளும் அடித்தட்டு மக்களின் இன்ப, துன்பங்களை பேசுகின்றதாக உள்ளது.

     மேபல், அஞ்சு மாடி, அகமோழ்ந்து எனும் சிறுகதைகளில் மேபல் பயந்த சுபாவம் கொண்ட பெண் மெல்ல சமூகம், சூழலை தைரியத்துடன் எதிர்கொள்ளும் சூழலை மையப்படுத்தியுள்ளது.

அஞ்சுமாடி கதை வாட்ச்மேன் ஒருவர் தன் கதையை கூறுவதாக உள்ளது. கதை வழியே இரண்டுபேரின் வாழ்க்கையை கண்டடைகிறோம். அதன் வழியே கதை கூறுபவரின் மனதில் உள்ள அதே உணர்ச்சிகளை நாமும் அடைகிறோம் என்பது ஆச்சர்யமான உண்மை.

     சின்னா, வித்யாசாகர் என இருவரின் கதைகள் ஆழமாக ஒரு சமூகத்தின் கடைக்கோடி இனக்குழுவினை முழுமையாக ஆராய்ந்து எழுதப்பட்ட கதை என உறுதியாக கூறமுடியும். உடல் குறித்த கவனம் எப்போது நமக்கு இல்லாமலிருக்கிறது. மேலும், மேலும் தேடிக்கொள்கின்ற, அடைகின்ற அனைத்தும் உடலுக்குத்தானே என்ற வகையில் ப்ரகாஷ் எழுதும் வாக்கியங்கள் எல்லாம் மிக ஆழமானவை என்று கூறலாம். மிக கச்சிதமான கதைகள் இவை என்று கூறமுடியும். எந்த நீதியும், போதனையும் இல்லாமல் கதைகள் அப்படியே நிறைவுறுகின்றன. இது முக்கியமான விஷயமாக கருதுகிறேன்.

போயிட்டு வாங்க சார்!
ச.மாடசாமி
பாரதி புத்தகாலயம்
                                                      ராடிசா

      இந்த நூல் மொழிபெயர்ப்பு நூல் அல்ல. வாசிப்பனுபவம் குறித்து பகிர்ந்துகொள்கின்ற சிறிய அறிமுக நூல் என்றே கொள்ளவேண்டும்.

     ஆசிரியர் புனைவு என்று இறுதியில் கூறினாலும், இப்படி ஆசிரியர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்க வைத்ததில் நூல் வெற்றிபெற்றிருக்கிறது.

     1848 ல் பிறக்கிற  சிப்பிங் 22 ஆம் வயதில் ப்ரூக்பீல்டு பள்ளியினைத் தேர்ந்தெடுத்து கற்பிக்க வருகிறார். மூன்று தலைமுறைகளை கற்பிக்கும் வாய்ப்பினை பெறுகிறார். பல முக்கிய ஆளுமைகளை பள்ளி உருவாக்கியிருந்தாலும் மக்கள் இதனை இரண்டாம் தர பள்ளியாகவே கருதுகின்றனர்.

     நாற்பது வயதாகும்போது, 25 வயதுப்பெண் காத்ரீனை காதலித்து மணக்கிறார். காத்ரீனுடன் வாழும் ஒரு ஆண்டு பல நல்ல மாற்றங்களை உண்டாக்க, அவர் பள்ளியில் மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியராகிறார்.  மனைவியின் கருத்துக்கள் அவரை ஈர்க்க  பின் கர்ப்பிணியான மனைவி இறந்துபோன பின், அதனை பின்பற்றுகிறார். மனைவி திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் நிகழ்வொன்றில் கூறும் வார்த்தைதான் குட்பை மிஸ்டர் சிப்ஸ்.

     ரசிக்கத்தக்க படித்து செயல்படுத்தவேண்டிய பல விஷயங்கள் இந்நூலில் உள்ளன.

கே
ஃப்ரன்ஸ் காப்கா எழுதிய கடிதங்கள், கதைகள்
தமிழில்: சா. தேவதாஸ்
வ.உ.சி பதிப்பகம்
                                                      அய்யன் காளி

      விசாரணை நாவலைப்படிக்கும்போது அந்த நாவலின் பாத்திரம் அனுபவிக்கும் மன உளைச்சலை படிக்கும் அனைவரும் அனுபவித்திருக்க கூடும். அது ஆசிரியரின் எழுத்தாற்றலை அதிக சேதமில்லாது தமிழுக்கு மாற்றிய மொழிபெயர்ப்பாளரின் உழைப்பு.

     மனநிலைகளை அதன் அழுத்தங்களை மிகத்துல்லியமாக விவரித்த அப்படைப்பு அதன் ஆசிரியரை அறியத்தூண்டுவது இயல்பான ஒன்றே. ஆசிரியரை அறிவதன் மூலம் மட்டுமே படைப்பை முழுமையாக அறிய, உணர, உள்வாங்குதல் சாத்தியமாகும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.
காப்காவின மனநிலை பெரிதும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்தான் உள்ளது என்றாலும் அதில் நிதானம் உள்ளது என்பதை இக்கதைகளை வாசிக்கும்போது உணரமுடிகிறது. மிக எளிதாக தனக்கான உயிரை வசப்படுத்த முயலும் அதேவேளையில் அந்த உயிரை தன்னிடமிருந்து விலக்கும் காரணங்களையும் நேர்மையாக வெளிச்சம் பாய்ச்சும் பக்கங்களாகும்.

     மனநிலைப்பிறழ்வு என்பது இயல்பாக எழுத்தாளர்களுக்கு ஏற்படும் ஒரு நிலைதான். இந்த எழுத்துகளில் காப்காவிற்கு இந்த தன்மை அதிகம் நிகழ்ந்திருக்கிறது என்று அவர் எழுதிய எழுத்துக்களின் வழியே உணர முடிகிறது.

     அம்மாக்களால் வாழ்ந்த ஒரு பிள்ளையின் மனதை அப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் நாம் உணரமுடியும். அதோடு, நோய்மையில் தோய்ந்த உடல் ஏற்படுத்தும் பல பிரச்சனைகளோடு, காதலின் ஏக்கமும், எழுத்திற்கான உழைப்பும், காப்பீட்டு வேலையும் ப்ரான்ஸ் காப்காவை நெருக்கித்தள்ளுகிறது. கடிதங்கள் என்பவை அந்தந்த சூழலிற்கானவை என்பதை உணர்ந்தே படிக்கவேண்டும். அந்தவகையில் இந்தக்கடிதங்கள் மற்றும் கதைகள் ப்ரான்ஸ் காப்காவின் மனதை முழுக்க வாசகனுக்கு உணர்த்த முற்படுகின்ற ஒரு தொகுப்பு எனலாம்.

      ‘தந்தைக்கு ஒரு கடிதம்’ என்று பல பக்கங்களில் நீளும் கடிதமானது, குடும்பம் என்ற அமைப்பு தனிமனிதனை கட்டுப்பாடுகளால் எப்படி சிதைத்து நோயுற்றவனாக மூலையில் வீசுகிறது என்பதை விளக்கமாக பேசுகிறது.  தன் தந்தையின் மூர்க்கமான சொல்லொன்றும், செயலொன்றுமான செயல்பாடுகள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரையும் எப்படி மனம் சிதைந்தவர்களாக மாற்றியது என்றும், சுடுமொழிகளால் வெந்துபோன தன் பல நாட்கள் பற்றியும் மனந்திறந்துபேசும் காப்கா, தன் தந்தை குறித்த சில நல்ல விஷயங்களையும் கூறத்தயங்குவதில்லை.
     

சிந்தனையை, மனதை மயக்கும் பல பக்கங்களில் நீளும் கடிதங்கள் காப்காவின் அன்பிற்கு ஏங்கும் நோயுற்ற ஒரு குழந்தையின் மனநிலையை ஒத்தவையே ஆகும். நம்பிக்கையின் வறட்சி உடலின் சீரற்ற தன்மையினால் எழுத்திலும் படிந்திருக்கிறது. ஆனால் அதனால்தான் உண்மையாக இருக்கிறது. காலத்தின் சலுகையினால் நீடித்தும் தொடர்ந்தும் வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது என்பது நிதர்சனமான உண்மை.

விலங்குப்பண்ணை
ஜார்ஜ் ஆர்வெல்
தமிழில்: க.நா.சு
நற்றிணைப்பதிப்பகம்
                                                                  அனலி

      கதை என்று கூறினால் ஒற்றைவரியில் கூறிவிடலாம். விவசாயப்பண்ணையில் உள்ள முதலாளியை விரட்டிவிட்டு விலங்குகள் அதனை ஆட்சி செய்ய முயற்சிக்கின்றன. அந்த ஆட்சியின் திட்டங்கள் பற்றியதுதான் கதை.

     மேலும் இது குறியீட்டுத்தன்மைகொண்ட கதை. படிக்க படிக்க இது யாரை பகடி செய்கிறது என்று எளிதாக அறிந்துகொள்ளமுடியும். 1930 ல் எழுதிய கதை இன்றைக்கும் படிக்க சலிப்பு ஏற்படுவதில்லை என்றால் அதற்கு காரணம் ஜார்ஜ் ஆர்வெல்லின் எழுத்தின் வசீகரம் என்று கூறுவேன். சகோரத்துவம், சமத்துவம் என்று கூறி அனைத்துக்கட்சிகளும் மக்களின் முன் நிற்கின்றன. ஆட்சியில் பங்கு, அதிகாரம் கிடைத்தவுடன் என்னவாகிறது அந்த வார்த்தைகள்? இதற்கு முன் ஆட்சி செய்தவர்களைக்காட்டிலும், ஊழல், லஞ்சம், வன்முறை, கலவரம் என்று இன்னும் மூர்க்கமாக பயணிக்கிறது வெற்றுகோஷ கொள்கை ஆட்சி.

     பன்றிகள் விலங்குப்பண்ணையில் மேலாண்மைப்பொறுப்பை ஏற்கின்றன. அதில் ஸ்நோபால் பன்றி தன்னைச்சுற்றியுள்ள விலங்குகளை சகோதரர்களாகப் பார்க்கிறது. நெப்போலியன் பன்றி ஸ்நோபாலை தனது எதிரியாக கருதி அதனை பண்ணையிலிருந்து விரட்டி, தானே தலைவனாக பதவி ஏற்கிறது.  அவர்கள் வகுத்த திட்டங்கள், விதிகள் தொடர்ந்து அழிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. படுகொலைகள், பஞ்சம் ஏற்படுகின்றது. உழைப்புதான் சிறந்தது என்று தேவையே இல்லாமல் கடும் உழைப்பை மக்களிடமிருந்து பெற்று அவர்களை சிந்தனை செய்ய விடாமல் மலடாக்குகிறது நெப்போலியன் பன்றி.

     ரஷ்ய கம்யூனிச ஆட்சியை வரிக்குவரி கண்டதும், பகடியும் செய்கிறார்கள் என்று தீவிரப் புரட்சி  கொந்தளித்தார். இவ்வளவு சமத்துவம் பேசும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டும் என்ன மாறிவிடும்? ஆட்சி மாறுகிறது என்பது ஆட்கள் மாறுவதே. சிந்தனை மாறுவது அல்ல என்பதை பகிரங்கமாக பேசுகிறது. விமர்சனம் என்பது ஒன்றுதான் படைப்பு அல்லது அமைப்பு வளருவதற்கான ஜனநாயக வழி என்று நான் நம்புகிறேன்.

     நுணுக்கமான, நுட்பமான இந்தப்பகடி தொடர்ந்து காலத்தில் வாழ்வில் தன்னை நீட்டித்துக்கொண்டிருப்பது இன்னுமே மக்களுக்கு என்று கூறி தனக்கான அரசியல் ஆதாயங்களை பெறும் பிழைப்புவாதிகளால்தான். அவர்கள் அதிகாரம் பெற்றவுடன், தன்னை புகழும் ஒரு கூட்டத்தின் உதவியோடு மக்கள் விரோத செயல்பாடுகளை அழுத்தமாக மூர்க்கவேகத்துடன் செய்யும் வினோதத்தை, பேரழிவுச்செயல்பாட்டை அழுத்தமாக கூற முனைகிறது இந்த நாவல். மொழிபெயர்ப்பின் சிறப்பினால் இந்நூல் படிக்க மேலும் ஈடுபாட்டை அளிக்கிறது. காலத்திற்கேற்ப மாறும் மொழிபெயர்ப்பு அவசியம் என்பதால், இதே நூலை கிழக்கு பதிப்பகத்தில் வேறொருவர் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். விலையும் இந்த பதிப்பக நூலை விட குறைவு. அதையும் படித்து பார்க்க முயற்சிக்கலாம்.


வெலிங்டன்
சுகுமாரன்
காலச்சுவடு பதிப்பகம்
                                                      ப்ரியா தடகெம்பே

      ஊட்டியிலுள்ள வெலிங்டன் எனும் ஊரின் தோற்றம் குறித்தும், அதில் இன்றைய சமகாலம் வரை வாழும் மனிதர்களின் வாழ்வு குறித்த பதிவுதான் சுகுமாரன் எழுதிய வெலிங்டன் நாவல்.

     ஜான் சல்லிவன் பற்றிய எழுத்துக்கள், தாவரங்களை, மனிதர்களை நேசிக்கும் ஒரு மனிதனைப்பற்றிய குறிப்புகளாக நீள்கின்றன. அவர் இறப்பு நிகழ்ந்தபோதும், அவர் மகன் பற்றி குறிப்புகள் நீளக்கூடாதா எனும்படியான மொழியில் உரைநடையில் எழுதப்பட்டுள்ளது அப்பகுதி.

     ஹத்தேயம்மா என்ற தெய்வத்தின் கதை இடையே வருகிறது என்றாலும் அதில் ஒரு பூரணத்தை உணரமுடிவதில்லை. வலுவில் திணித்தது போல் இருக்கிறது. அதோடு ராமேட்டன், அம்மு, நாராயணன், கண்ணன் என் முந்தைய காலத்திலிருந்து தற்காலம் வரை வரும் பாத்திரங்களின் அறிமுகம் சிறப்பானதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு, பாரதப்பிரதமர் பேசும்போது வரும் சரஸ்வதி டீச்சர் அறிமுகம் கதையில் சிறிது தூரம் தாண்டியே வருகிறது.

     பாபு என்கிற கதாபாத்திரம் ஆசிரியர்தான் என்பதை வாசிக்கும் யாரும் உணரமுடியும். பல்வேறு உணர்ச்சிகொந்தளிப்புகள் பெருக பாபுவாகவே நாம் மாறி தவிப்புகளால் அல்லாடுகிறோம். ராமசாமி, லட்சுமணசாமி என இருவரின் வாழ்க்கை கசப்பால் நிரம்பியது. லட்சுமணசாமிக்கும் அவரது அண்ணிக்குமான உறவு வாசிக்க வாசிக்க மனதினாலேயே உணரும்படி இருக்கிறது. சரஸ்வதி டீச்சர் இறுதியாக லட்சுமணசாமியிடம் பேசும் உரையாடல்கள் கச்சிதமான மன உளைச்சலை கொட்டிடும் முனைப்பிலான தேர்ந்தவார்த்தைகளினால் அமைக்கப்பட்டுள்ளது.
     இதோடு பாபுவுக்கு கௌரி, விமலா, சகுந்தலா ஆகிய பெண்களோடு ஏற்படும் உறவுச்சிக்கல்களையும், முக்கியமாக அது அவனது வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளையும், பாதிப்புகளையும், அதிர்ச்சிகளையும் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் சுகுமாரன் அவர்கள்.

     இன்றும் நந்தகோபால் என்கிற நடனா பற்றிய பார்வை சமூகத்தில் எப்படி இருக்கிறது? ஏளனத்திற்கும், கிண்டலுக்கும் இலக்காகி உள்ளார்கள்.  இறுதியில் அவள் எடுக்கும் உச்சமான முடிவு புத்தகத்தை தாங்கமுடியாமல் கீழே வைத்தபின்னும் மனம் கனக்கிறது.
     இந்த நாவலில் வரும் பெண்கள் அதிகம். இந்த பெண்கள் ஆதரவான ஒரு அன்பின் நிழலைத்தேடி தொடர்ந்து கனவிலும் கூட அலைந்து திரிகிறார்கள்.  அது கிடைக்காத போது அழுது அரற்றுகிறார்கள். தாயின் மடியில் பாலில்லாதபோது, பிற ஆட்டின் மடுவை தேடும் குட்டிகள் போல நிறைவுறாத மனதோடு அன்பைத்தேடி ஓடும் மனிதர்கள் நிறைய உள்ளார்கள். இதில் பெண்களும் ஆண்களும் எவ்வித குற்றவுணர்ச்சியும் கொள்வதில்லை. சில குறிப்புகள் ஒவ்வொரு பாத்திரத்தின் வார்ப்பிலும் உண்டு என்றாலும் அவை எதுவும் வாசகனுக்கு முன்முடிவினை எடுக்கத்தூண்டுவதில்லை.

     விமலாவின் வீட்டுக்கு வரும் நந்தகோபால் எனும் திருநங்கை பற்றிய பகுதி, பாபு சந்திக்கும் அனைத்து பெண்களும் தன் வளர்ப்புத் தாய் உட்பட கடுமையான பரிதவிப்பை, ஏமாற்றத்தை, சுமந்துகொண்டு குளிரும் இருளும் போல சலனமில்லாது வாழ்கிறார்கள். வெலிங்டன் முக்கியமான கதை என்று ஒன்றை மட்டும் கொண்டு இயங்குவதில்லை. பல கதைகள் ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்து இறுகி படிக்க, படிக்க நமது வாழ்வில் நிகழும் காட்சிகள் போல நடைபெறுகிறது. இறுதிக்காட்சி நம்மால் இந்நாவலை என்றுமே மறக்க முடியாமல் செய்துவிடுகிறது. இந்நாவலை மறக்க முடியாமல் செய்வது அதிலுள்ள குறையாத உயிர்ப்பான ஜீவத்தன்மைதான். இதிலுள்ள ஒவ்வொரு கதையும் ஒரு சிறுகதைபோல செல்லுகிறது. குறையாத கவிதையின் வசீகரம் கொண்ட வலுவான இந்த நாவலை எழுதிய சுகுமாரன் அவர்களுக்கு புதிய அனுபவத்தை தரிசிக்க வைத்ததற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தனிமையின் நூறு ஆண்டுகள்
காப்ரியல் கார்சியா மார்க்கேஸ்
தமிழில்: சுகுமாரன், ஞாலம் சுப்பிரமணி
காலச்சுவடு பதிப்பகம்.
                                                     நத்தைசூரி

     தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் ஒரு புனைவுலகம் சார்ந்து கட்டமைக்கப்படுகின்ற ஒன்று. மகோந்தா எனும் உலகில் வாழும் மக்கள் பற்றிய கதை எனலாம். மக்கள் கூட்டத்தின் தலைவனான ஹோசே அர்க்காதியோ புயேந்திராவின் தலைமுறைகளின் தொடர்ச்சியான வாழ்வின் தொடக்கமும், வீழ்ச்சியும்தான் கதை. முதலிலிருந்து முடிவு வரை வரும் அர்க்காதியோ, அவுரேலியானோ ஆகிய பெயர்கள் குழப்பம் ஏற்படுத்தினாலும் முன்பக்கம் உள்ள குடும்ப உறவுகளை பார்த்து தெளிவடைய வாய்ப்பு இருக்கிறது.

     ஒவ்வொரு தலைமுறையிலும், உள்ள மனிதர்களின் மனதில் கவியும் தனிமைதான் கதையின் பேசுபொருளாக உள்ளது. வாசிக்கப்படும் காலம் பொறுத்து பலவிதமாக எண்ணங்கள் மாறலாம். இந்திய மரபை முக்கியமாக மாந்திரீகம் குறித்த பல விஷயங்கள் இதில் ஆழமாக கூறப்படுகின்றன. இதில் முக்கியமாக கதையை நடத்திச்செல்வது தலைமுறை முதல்வனான ஹோசே அர்க்காதியாவின் மனைவியான உர்சுலாதான்.

     படிக்க படிக்க மனம் பெரும் பித்தில் ஆழ்ந்துபோவது போலான ஒரு உலகம் பற்றிய கதை. சிக்கலான வாக்கிய அமைப்புகளை ஆழமான உணர்வுகளை கூறுவதாக அமைத்திருக்கும் சுகுமாரன், சுப்பிரமணியனுக்கும் வாழ்த்துக்களை கூறியே ஆகவேண்டும்.

     நெருங்கிய உறவுக்குள் பிறக்கும் குழந்தை அந்த குடும்பத்தை முடித்துவைக்கும் என உர்சுலான கூறிவிட்டு இறக்கிறாள். இதோடு மெல்குயாதெஸின் பட்டயங்கள் கூறுவதும் முக்கியத்துவம் பெறுகிறது.
திரும்பத்திரும்ப இதை படித்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அத்தனைபேரின் வாழ்வு இதில் தொகுக்கப்பட்டு உள்ளது. மார்க்கோஸ் ஏன் கொண்டாடப்படுகிறார் என்றால் இதை நீங்கள் படித்தபின் உணர்வீர்கள்.

வடக்கேமுறி அலிமா
கீரனூர் ஜாகிர்ராஜா
                                                                  ஷெரீப்

     போர்ஹே என்ற அர்ஜென்டினா எழுத்தாளரின் புனைவான கதைகளைப்படித்தபின்தான் இந்நூலைப்படித்தேன். அந்த சாயல் போலவே தோன்றுகிறது.

     அலிமாவின் கதை நேர்கோட்டில் எளிதாக படிக்க முடிகிற கதை அல்ல. வாசிப்பவர்களுக்கு திகைப்பைத்தரும் கதை இது. அலிமாவின் ஆளுமையும் அத்தகையது எனலாம். அலிமா என்ற பெண்ணின் வாழ்க்கை பயணிக்கும் தடத்தினை அவளோடு பழகியவர்கள், அறிந்தவர்கள், மணம் செய்துகொள்ள விரும்பியவர், ஊடகம் என சிறிது சிறிதாக அவளைப்பற்றி தெரிந்துகொள்ளும் முறையிலான கதை வடிவமைப்பு சுவாரசியமான ஒன்று. தனித்துவமான வாசிப்பு அனுபவம் தருகிற ஒன்று இந்த கதை சொல்லும் முறை என்று நிச்சயமாக கூறுவேன்.

     இதில் அலிமாவின் பெரியப்பா ஹமிபுல்லாவின் கதை தனியொரு சிறுகதையாக திகில்படம்போலான உணர்வைத்தந்தது. அலிமாவின் பேட்டி, இடையே கஞ்சா புகைப்பது அதில் ஒரு இழுப்பு பத்திரிகையாளர் இழுப்பது, சினிமா இயக்குநர் அலிமாவை நடிக்கவைப்பது குறித்து நண்பனிடம் பேசுவது எனப் பல இடங்களில் கூர்மையான எள்ளலும், பரிகாசமும் எழுத்துக்களில் ஒளிர்ந்துள்ளன.

     அலிமா என்கிற இந்த நாவலை நீங்கள் சிறுகதை போல வாசிக்கமுடியும். இணைத்தும் நாவலாக வாசிக்கலாம். அலிமாவின் ஆளுமை பற்றிய அறிவது நேர்கோட்டிலான வழியில் என்பது முதல் அத்தியாயம் மட்டும்தான். மற்றபடி அனைத்து அத்தியாயங்களுமே படிக்க எடுத்தால் கீழே வைக்கமுடியாதபடி மனம்கொத்தி பறக்கிறது. நாவல் முடிந்தபின்னும் கூட அலிமா இப்படி இருந்தாளா, இருக்கமுடியுமா என்றெல்லாம் நிரம்ப யோசிக்காதீர்கள். அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்களேன். நன்றாகத்தானே இருக்கிறது. கூடவே சிறிது பயமாகவும் இருக்கிறது இல்லையா? கீரனூர் ஜாகிர்ராஜாவின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்க நம்பிக்கை ஊட்டும் நூல் இது.

என்றார் போர்ஹே
எஸ். ராமகிருஷ்ணன்
உயிர்மை பதிப்பகம்
                                                      வேதக்குரிசு    

      அர்ஜென்டினாவில் பிறந்த போர்ஹே என்பவர் பற்றிய அறிமுக நூல் இது. தன் குடும்பத்தில் தாத்தா, அப்பா முதற்கொண்டு எழுத்தாளர்களாக இருந்தாலும் 30 வது வயதில் பார்வையிழந்துபோகும் அபாயம் சாபம் போல இவரின் குடும்பத்தைத்தொடர்கிறது. வக்கீலாக பணிபுரியும் அப்பாவுக்கு கண்பார்வை பறிபோக பல இடங்களில் சென்று தங்குகிறார்கள்.

     தன் உடலின் வலுவின்மை குறித்த ஏக்கம் தனிமையில் போர்ஹேயை அறையில் அடைக்கிறது. தொடர்ந்து புத்தகங்களே உலகமாகிறது. சிறுவயதில் கவிதை ஒன்றினை மொழிபெயர்க்கிறார். மெய்யியல், புனைவு, கண்டறிதல், காலம் போன்றவற்றின் மீது பெரும் காதல்கொண்டு இவரின் எழுத்துக்களில் அவை தவறாமல் இடம்பெறுகிறது. நூலகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி எழுதி வந்த இவருக்கு, இவரின் எழுத்துக்களை பின்னாளில் பலர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத்தான் இவரைப்பற்றி தெரியவந்திருக்கிறது. பிறந்த ஊரில் இவருக்கு பெரும் மரியாதை உள்ளது. தபால்தலை, நாணயம், சிலை என்று பல அங்கீகாரங்கள், கௌரவங்கள் கிடைத்துள்ளன.

     போர்ஹையை வாசிக்கவென்று சில அடிப்படைத்தகுதிகள் தேவைப்படுகின்றது. ஆங்கில இலக்கியவரலாறு குறித்து அறிந்திருக்கவேண்டும். குறைந்தபட்சம் சில விஷயங்கள் தெரியவேண்டும். ஏன் அவ்வளவு தூரம், கே.என் சிவராமன், பேயோன் போன்றவர்களது எழுத்துக்களை பின்தொடரவே சில அடிப்படைகள் தற்கால உலகை அறிந்திருக்கவேண்டும் போன்றவை தேவைப்படுகின்றன இல்லையா? எஸ். ராமகிருஷ்ணன் பல நூல்களிலிருந்து தேடிப்படித்து கோர்த்து இந்த நூலை உருவாக்கி இருக்கிறார். அவருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும்.

வான்கா பற்றிய வரலாறு
இர்விங் ஸ்டோன்
தமிழில்: சுரா
வ.உ.சி பதிப்பகம்
                                                            கலிபுல்லா

     வான்கா குறித்த வாழ்க்கை வரலாறு அவரின் மனநிலை குறித்த தெளிவான சித்திரத்தை தருகிறது. புத்தகத்தை கீழே வைக்க முடியாதபடி வான்காவிற்கு ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடந்து சந்தோஷப்படுவாரா என்று பெரும் நிராசையாக உள்ளது. வான்காவின் நிலை படிக்க படிக்க கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

     தொடர்ந்த புறக்கணிப்பும், நிராகரிப்பும் எந்த ஆதரவும் இல்லாத நிலையும் வான்காவை சிதைத்து மண்ணில் வீழ்த்துகிறது. போரினேஸ் நிலக்கரிச்சுரங்க பகுதியில் ஏற்படும் நிகழ்வுகளை குறிப்பிடலாம். மதம், கடவுள், கலைஞனுக்கு ஏன் தூரமாக இருக்கிறது என்றால் அவை துன்பப்படும் ஒரு இதயத்திற்கு, அழுக்குபடிந்த களைத்துபோன கரங்களுக்கு அருகில் இல்லை. ஆதரவாகவும் இல்லை. தன்னையே அர்ப்பணித்து பல பணிகளை செய்தும் வான்காவினால் யாரையும் காப்பாற்ற முடிவதில்லை. நாற்பது வயதில் முடிந்துபோகும் வான்காவின் விவரிப்புகள் நம்மை தீராத துயரத்தில் வலிநரம்மை சுண்டி இழுக்கின்றன.
     வின்சென்ட் வான்காவின் வாழ்க்கை சிறிது மகிழ்ச்சியாக இருக்கிற காலம் என்றால் அது அவர் கிறிஸ்டின் எனும் பெண்ணோடு இருக்கும் காலம்தான்.

     ஆர்ள் பகுதி இயற்கை சூழ்நிலையும், மனதின் கடும் துயரும் சேர்ந்து பல்வேறு கனவும், யதார்த்தமும் கடும் குழப்பத்தை ஏற்படுத்த தன் காதினை அறுத்து ரக்கேல் எனும் ஓவியத்தின் மாடல்பெண்ணுக்கு பரிசளிக்கிறார் வான்கா. அங்கேயிருந்து ஆரம்பிக்கிறது வின்சென்டின் தீவிர மனநோய் காலகட்டம். கடுமையான உணர்ச்சி வசத்தால் பீடிக்கப்படும் வின்சென்ட் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்கிறார். ஓவியனின் வாழ்வை அறிந்து படைப்புகளை ரசிக்க முயல்வது அதனை புரிந்துகொள்ள பெரிதும் துணைநிற்கக் கூடும். ஓவியன் ஒருவனின் நிலையில்லாத துயரமான வாழ்க்கையை அருகிலிருந்து கண்ட ஒரு அயர்ச்சியை மொழிபெயர்ப்பாளர் சுரா ஏற்படுத்துகிறார்.

இயந்திரம்
மலயாற்றூர் ராமகிருஷ்ணன்
என்பிடி                                                   
கபியாஸ்
    
     அதிகாரப்படிக்கட்டுகளை இடையறாது தேடிப்பயணிக்கும் ஒரு மனிதனின் கதை. அவனின் பயணவழியே பிற மனிதர்களின் வாழ்வும் நம் கண்களுக்கு வசப்பட கதை நகர்கிறது.

     பாலகிருஷ்ணன் எனும் வசதியில்லாத அந்தஸ்து குறைந்த ஒரு மாணவன் ஐ.ஏ. எஸ் தேர்ச்சி பெறுகிறான். ஆனால் அந்த மகிழ்ச்சியைக்காட்டிலும் அவனுக்கு அவன் குடும்பம் இருக்கும் கீழ்நிலையில் மற்ற மாணவர்களான வசதி நிறைந்த குரியன் உள்ளிட்டோரை நினைத்து ஏங்குகிறான். தொடர்ந்து தன் வாழ்வை குரியனுக்கு நிகராக ஆக்கிக்கொள்ள நினைத்து திட்டமிட்டு திருமணம், நட்பு ஆகியவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.

     ஆனால் அந்த உறவுகள் எதிலும் இவனால் உண்மையாக இருக்கமுடியவில்லை. அவை உண்மையாகவும் இல்லை. இயந்திரம் கவனம் பெறுவது அதனுள் இருக்கும் குறையாத அதிகார விளையாட்டுக்களின் நம்பகத்தன்மைதான். அதிகாரத்தோடு ஒருவன் இன்னொருவரோடு எப்படி உண்மையாக நேர்மையான நட்பை ஏற்படுத்திக்கொள்ளமுடியும்? அதேதான் நிகழ்கிறது இங்கேயும். இவனது வாழ்வில் இவனுக்கு கடும் குற்றவுணர்வை ஏற்படுத்துபவராக ஜேம்ஸ் பயிற்சி காலத்தில் இருந்து இருக்கிறார். ஜேம்ஸ் அனைத்து மனிதர்களுக்கு மதிப்பளித்து நடப்பவர். பணியில் மிக நேர்மையான ஒருவர். ஆனால் அவரது குடும்பவாழ்க்கை அவை பிறரது தயவை எதிர்நோக்கி உள்ளுக்குள் அழும் கழிவிரக்க நிலையில் தள்ளுகிறது. அவர் இறுதியில் தன்னை அதிகார விளையாட்டிலிருந்து காப்பாற்றிக்கொள்ள பணியை ராஜினாமா செய்வதோடு நிறைவடைகிறது. ரணம் பட்ட மனதின் ஒரு சாட்சி ஆக இந்தக்காட்சியை கூறலாம். பாலகிருஷ்ணனின் மாமனாரின் வாழ்வு, அவரது மகள்கள், இரண்டாவது மகளின் வாழ்வு, அவளின் கணவனின் மனநலப்பிரச்சனைகள், பாலகிருஷ்ணனின் ஆசிரியர், அவனின் அப்பா, அவனது நண்பன் எஸ்.பி என பல கதைகள் நிகழ்கின்றன.

     அரசு இயந்திரத்தின் பாகமாகி சாமானிய மக்களுக்கு எதிராக மாறும்  அரசு அலுவலர்கள் பற்றிய நேர்மையான பதிவு என்று இந்த நாவலை கூற முடியும். பாலகிருஷ்ணனின் பணியில் பலர் வந்துபோகிறார்கள். அவர்களின் குணம் பற்றி தனியாக பல பக்கங்கள் எழுதலாம். பாலகிருஷ்ணன் எந்த ஒரு தனித்துவமும் இல்லாமல் குரியனோடு தன்னை ஒப்பிட்டுக்கொண்டு எந்த உறவுகளின் பிணைப்பும் இல்லாமல் இரும்புபோலாகி இயந்திரமேயாகிறான் என்பதுதான் இறுதிப்பகுதி.

ஒன்நைட் அட் தி கால்சென்டர்
சேட்டன் பகத்
ரூபா பதிப்பகம்
                                                            தில்லுதுரை

     இளைஞர்களின் மனம் கவர்ந்த மாஸ் எழுத்தாளர் சேட்டன் பகத்தின் கால்சென்டர் தொடர்பான நாவல் இது. இது தெரியாதா என்ன உங்களுக்கு?

     ஈஷா, பிரியங்கா, ராதிகா , ஸ்யாம் மெஹ்ரா, வருண் மல்கோத்ரா என ஒரு குழுவாக பணிபுரியும் இந்த நண்பர்களின் ஊடல், காதல், குடும்பம், வேலை, கால்சென்டர் பற்றிய பிரச்சனைகளை தீர்வுகளை பேசுகிறது இந்த நாவல்.

     கதை ஸ்யாம் எனும் இந்தக்குழுவின் குழுத்தலைவரின் பார்வையில் நகருகிறது. வருண் (வ்ரூம்) மிகத்துணிச்சலானவன்; பேரைப்போலவே மோட்டார்சைக்கிள், கார் என பேரார்வம் கொண்டவன். அவனுக்கு மாடலாக ஆசைப்படும் ஈஷா மீது ஒருதலைக்காதல். ஸ்யாமிற்கு பிரியங்காவுடன் பிரேக் அப் ஆகிவிட தன்னம்பிக்கை இழந்து திரிகிறான். பிரியங்காவிற்கு தன் அம்மா ஆடும் மெலோடிராமாவினால் அமெரிக்கா வழுக்கைத்தலை மிஸ்டர். மைக்ரோசாப்டை கைபிடித்து எந்த கலர் காரில் போகலாம் என்று யோசனை. ஈஷாவுக்கு தான் மாடலாக உயரம் போதாது போனதில் பெரும் வருத்தம். ராதிகாவிற்கு தன் மாமியார் கூறும் குற்றம் குறைகளால் கணவரோடு சண்டை, மிலிட்டரி அங்கிளுக்கு தன் மகன், பேரனைப்பார்க்க ஆசை.

     இந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒருநாள் இரவில் கடவுள் தீர்வைக்கூறுகிறார். அதன்பின் என்னவானது அவர்களது வாழ்க்கை. இதுதான் மிக சுவாரசியமான எழுத்துக்களைக்கொண்ட நம்பர் ஒன் எழுத்தாளர் சேட்டன் பகத்தின் நாவலின் கதை.

     கதை எப்படித்துவங்கும் சேட்டனை முன்பின் வாசித்தவர்களுக்குத் தெரியும். பெண் தன்னை அறிமுகம் செய்துகொண்டு பேசத்தொடங்குகிறாள். ரயிலில் மெல்ல பயணிக்கும்போது இந்த கதை தொடங்குகிறது.

     கதையின் இறுதிப்பகுதி தர்க்கத்திற்கு அப்பால் செல்கிறது என்றாலும், ரசிக்கவைக்கும் படியான வடிவம் கொண்டு இருக்கிறது.

     இதில் பத்திரிக்கையாளராய் இருந்து கால்சென்டர் வேலைக்கு வரும் வ்ரூம்தான் ஆசிரியரை பிரதிபலிப்பவன். அவனின் பகடி, கிண்டல், சமூகத்தின் மீதான கேள்விகள் என நம் மனதில் எழுபவையாகவே இருக்கின்றன.

     ஸ்யாம் பிரியங்காவை காதலித்து பிரிவது பின் மறக்கமுடியாது தவிப்பது என கச்சிதமான வார்ப்பு. தன்னை ஏமாற்றிய பக்ஷியை அறையும் இடமிருக்கிறதே செம.செம.செம

     கதையை நகர்த்துவதே வ்ரூம்தான். இதில் மிகத்துணிச்சலாக ஏன் கால்சென்டர் வேலைக்கு வந்தேன் என்று கூறுவது, தண்ணியடித்துவிட்டு பீட்ஸா ஹட் வாசலில் வாந்தி எடுப்பது, அவற்றின் கண்ணாடியை கல் எறிந்து நொறுக்குவது என மனதில் தோன்றுவதை செய்துவிடும் எக்ஸ்பிரஸ்ஸிவ் கதாபாத்திரம்.

     கால்சென்டர் கம்ப்யூட்டர்கள் பிரச்சனையில் ஸ்தம்பித்து நிற்க அந்த பணிகளைச்செய்யும் பலரும் தங்கள் பிரச்சனை குறித்து பேச நினைத்து தொடங்குகிறார்கள். ஒரே இடத்தில் கதை நின்றுவிட்டதே என்று கவலைப்படாதபடி கதையின் வடிவம், ஆண், பெண் ஆகிய இருவரின் புரிந்துகொள்ள முடியாத குணங்கள், கால்சென்டர் இரவு வாழ்க்கை, கிடைக்கிற பணம், காதல், செக்ஸ் என சேட்டனின் கரங்கள் எதையும் ரசிக்கச்செய்யும் ரசவாதத்தை ஏற்படுத்துகின்றன.

     சேட்டனின் சமூகம் குறித்த எதிர்வினைகள் இந்த நாவலில் சுதந்திரமாகவே பதிவாகியிருக்கிறது என்பேன். அமெரிக்காவின் மனநிலையும், அவர்களின் நடவடிக்கை பற்றியும் பல இடங்களில் பகடியும், அங்கதமும் நிறைய குறிப்பிடப்படுகிறது.
     லட்சியத்தை நோக்கிய பயணத்திற்கு எவை முக்கியம் என நான்கு அம்சங்களை கூறும் இந்நாவல் தன் இயல்பான இளமைக்குறும்புகளை விட சமூகம், பணம், பணியின் மனநிலை ஆகியவற்றைப்பற்றி தீவிரம் கொண்டு பேசுகிற படைப்பு என்பேன். சேட்டன் பகத் ஒரு நண்பனைப்போல சமூகத்துடனான உரையாடலை நம்தோள்மீது கைபோட்டு பேசுவதுதான் அவரது நூல்கள் வெற்றிபெறுவதற்கான காரணம் என்று கொள்ளலாமா?

லெனினின் கதை
தமிழில்: பூ.சோமசுந்தரம்
என்சிபிஹெச்
                                                            பரீக்குட்டி

     தீவிரப்புரட்சி லெனினை நிச்சயம் நீ படிக்கவேண்டும் என்று கூறியதால் லெனினினைப்பற்றி இதோ.. புத்தகம் படித்தாகிவிட்டது. சிறுவயதிலிருந்து அவரது வாழ்வு இருந்த தன்மைக்கும் பின்னாளில் இருப்பதற்கும் விஷயங்கள் வேறுபாடு கொண்டிருந்தது மகிழ்ச்சிதான். அவரது அண்ணன் அலெக்ஸாண்டர் ஜார் மன்னரால் கொல்லப்படும் கணத்திலிருந்து தொடங்குகிறது லெனினின் வாழ்க்கை மாரத்தான் ஓட்டம்.

     உயிர்பிழைக்க தப்பி ஓடுகையில் அவர் மனதில் இருந்தது நம்பிக்கையா? நம்பிக்கையின்மையா என்று அறிவதில்தான் முழுக்கவனம் செலுத்த முயற்சித்தேன். எந்தக்கடினமான சூழலையும் சந்திக்க தயார்படுத்தியது அவரது தந்தையின் பணியின் மூலமாக லெனின் கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் என்று கூறலாம்.

     நாட்டின் மீது இவ்வளவு ஆசை வைத்திருக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கை இப்படித்தான் தப்பித்தலும், மறைதல் நிமித்தலுமாக இருக்கக்கூடும். அன்றென்ன இன்றும் அப்படித்தானே இருக்கிறது நிலைமை?

     ரயிலிலிருந்து எதிர்புரட்சிக்காரர்கள், போலீசிடமிருந்து தப்புவது, மூன்று குண்டுகள் கழுத்து, நெஞ்சு ஆகியவற்றில் பாய்ந்த பின்னும் பிழைத்து எழுவது, நாடு வெற்றி பெற உரையாடும் கூட்டத்தில் தன் தாயை வெகு காலத்திற்குப்பின் சந்திப்பது என பல உணர்ச்சிகரமான பதட்டமான திருப்பங்கள் உள்ளன. நாட்டை உண்மையாக நேசித்த ஒருவனின் சுயசரிதம். மக்களை நேசித்த ஒரு சாதாரண மனிதனின் கதை.

ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
தமிழவன்
அடையாளம் பிரஸ்
                                                            டைகர்குட்டி

      மாய எதார்த்தம் என்று முதலிலேயே கூறிவிடும் தன்மையினால் கதையின் யதார்த்தம் உறைந்த தன்மை பற்றி எதுவும் கேட்கக்கூடாது. ஜானின் தாத்தா, தன் தம்பி உருத்திரமூர்த்தியின் மகனான முத்துப்பிள்ளையை கொலை செய்துவிடுகிறார். அது ஏன் என்பது தலைமுறைக்கதை மரத்தை கிளைக்கச்செய்கிறது.

     மார்க்வஸின் நூற்றாண்டுத்தனிமைகளின் பாதிப்பு பல இடங்களில் உள்ளது. இது அதிலிருந்து வேறுபட்டு பயணித்து நமக்கு புதிய அனுபவத்தை தருகிறது. பல அரசியல் செய்திகள் குறியீடுகளாக வருகின்றன என்றாலும் சமகாலத்தை அங்கதம் செய்து புதிதாக ஒன்றை உருவாக்குவதில் ஆசிரியர் நுழையவில்லை என்றே தோன்றுகிறது.

தமிழவன் உருவாக்கும் உலகம் நம்மை அப்படியே ஈர்த்து தொடர்ந்துவாசிக்க வைத்தாலும், உரையாடல்களில் கச்சிதம் குறைந்துபோனதுபோல் தோன்றுகிறது. சிலந்திகள் கூடுகட்டுவது, மார்க்வஸின் நாவலை நினைவுபடுத்துகிறது. கதைக்குள் கதை என்று செல்லும் நாவல் முழுமையான வாசிப்பிற்கு எந்த தடையையும் ஏற்படுத்துவதில்லை. நல்ல முயற்சி என்று கூற தயக்கமேதுமில்லாத நூல் இது.

 தொகுப்பு:பியர்சன் கயே,ரோஸலின் கெல்லி

 


    


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்