நான்காவது காட்சி
நான்காவது காட்சி
ஆக்கமும், தொகுப்பும்: லாய்டர் லூன், ஆலன் வான்கா
இன்னோசன்ட் ஸ்டெப்ஸ்(Innocent Steps)
இயக்குநர்: பார்க் ஹூன்
இந்த திரைப்படம் ஒருவர் தனக்கான ஒரு பெண் துணையை எப்படி தயார் செய்து நடனப்போட்டியில் பங்குபெறுகிறார் என்பதையே கதையாக கொண்டுள்ளது. கொரியன் படம்.
வசனங்கள் குறைவு என்றாலும், கவித்துவ வசனங்களின் இனிமை மனதில் நடனமாடுகிறது. அதுவும் மின்மினிப்பூச்சிகள் பற்றி செரின் கூறும் காட்சி.
நடனப்போட்டியில் பங்குபெற நினைக்கும் யுன்சேவை ஹூன் சூ பல்வேறு தந்திரங்கள் செய்து இணையைப் பிரிப்பது, யுன் சேவின் காலை உடைப்பது என்று செய்து சிறந்த நடனக்காரனான அவனை போட்டிக்கு வரவிடாமல் செய்துவிடுகிறான். பின்னும் விடாப்பிடியாக போட்டியில் பங்கேற்க சீனாவிலிருந்து ஒரு பெண்ணை கொரியா வர ஏற்பாடு செய்கிற பொழுது, அந்தப்பெண்ணிற்குப் பதில் இன்னொரு பெண் தன்னை அப்பெயர் கூறி யுன்சேவை ஏமாற்றி அவன் வீடு வந்து சேருகிறாள். ஏமாற்றப்பட்டது தெரிந்ததும், அவன் அவளை வீடு விட்டு வெளியே துரத்த, அவள் வேலை தேடி வந்தவள் என்பதால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேலைக்கு சேருவது பற்றி யுன்சேவிடம் கூற, அவன் அவளை வேகமாக அந்த இடத்தில் இருந்து காப்பாற்றிவரும்போதுதான் அவளுக்குத்தெரிகிறது, அது ஒரு விபச்சாரவிடுதி என்று.
19 வயதான் அப்பெண்ணை திருமணம் செய்துகொண்டதுபோல போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். அவன் அவளுக்கு நடனம் சொல்லிகொடுக்கிறான். அவளும் நடனம் கற்றுக்கொண்ட நிலையில் ஏற்படும் சிக்கலை எப்படி சமாளிக்கிறாள் என்பதுதான் இறுதிக்காட்சி. கண்கள் மலர
அன்பைத்தேக்கி சிரிக்கின்ற அந்தப்பெண்தான் இப்படத்தின் பெரும்பலமே. அவள் மீண்டும் யுன்சேவை சந்திக்கும் காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. காதலில் திளைக்க, உணர இப்படம் சரியானதாக இருக்கும்.
கல்கி
இயக்குநர்: மணிஷ் ஜா
இது ஒரு
புனைவுதான். நிஜமாகும் சாத்தியம் கொண்டது. பெண்குழந்தைகள் பிறந்தாலே கொன்று விடும் வழக்கம் கொண்ட ஊரில் நாளாக, நாளாக பெண்களே கிடைக்காமல் போய் அனைத்து ஆண்களும் நீலப்படம் பார்த்துக்கொண்டும், ரெகார்ட் டான்ஸ் பார்த்துக்கொண்டு ஆண்களோடும், பசுக்களோடும் உறவு கொண்டு அலைகின்றனர்.
ஒரு
குடும்பத்திலுள்ள ஐந்துபேர்களில் யாருக்கும் திருமணம் ஆகவில்லை. பெண்கள் கிடைத்தால்தானே? பின் கிடைக்கும் ஒரு பெண்ணை 5 லட்சம் பணமும், ஐந்து பசுமாடுகளும் கொடுத்து அவள் தந்தையிடம் வரதட்சணையாக விலைகொடுத்து வாங்கி திருமணம் செய்துகொள்கிறார்கள். அவள் பெயர்தான் கல்கி. அவள் ஐந்து பேருக்கும் மனைவி. ஐந்துபேரில் அவள் எதிர்பார்க்கும் அன்பும், காதலும் கடைசி பையனான அவள் வயது கொண்ட ஒருவனிடம்தான் கிடைக்கிறது. தங்கள் வெறி தீர அவளை அவர்கள் உறவுகொள்கிறார்கள். கதவு நீக்கி, அடைத்து ஒவ்வொருவராக வரும் காட்சி நமக்கு பதட்டத்தை ஏற்படுத்துகிறது. வாரத்திற்கு அவளை புணர்வதற்கு திட்டமிட்டு வாழ்கிறார்கள் ஐவரும், அவர்களின் தந்தையும்.
கல்கிக்கு யாரும் ஆதரவில்லாத நிலையில் இளைய கணவன்தான் ஆறுதலாக இருக்கிறான். அவனுக்குத்தான் பெண் பார்க்க்ப்பட்டு திருமணம் செய்து தரப்படுகிறாள் கல்கி. ஆனால் அவள் மாமனாரும் அவளை உறவுகொள்வதால் நொந்துபோய் தன் அப்பாவிடம் கூற, அவரோ, தன் மகளுக்காக எதையும் பரிந்துபேசாமல் ஐந்து பேருக்கு ஐந்து லட்சம், இப்போது உங்களுக்கும் என் மகள் தேவை என்றால் இன்னொரு லட்சம் வேண்டும் என்று கேட்கிறார் கல்கியின் தந்தை. மனமொடிந்துபோகிறாள் கல்கி. கல்கிக்கு இருக்கும் இளையவனின் மீதான காதலை கண்டு பொறாமையில் வேகும் அண்ணன்கள் அவனை தந்திரமாக கொன்றுவிடுகின்றனர். பின் கல்கி தொடர்ந்து அடிமை போல பல வேலைகள் செய்யுமாறு வற்புறுத்தப்பட்டு வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.
இதிலிருந்து தப்பித்து செல்ல தன் வீட்டில் இருந்து வேலை செய்யும் கீழ்சாதி சிறுவனின் உதவியை நாடுகிறாள். ஆனால் வழியிலே கண்டுபிடிக்கப்பட்டு, அச்சிறுவனை அடித்துக் கொன்றுவிடுகிறார்கள். அவளை கடுமையாக சித்திரவதை செய்து உணவில்லாமல் தண்ணீர் கூட கொடுக்காமல் மாட்டு கொட்டாயில் கட்டிப்போட்டுவிடுகிறார்கள்.
இன்னொருபுறம் கீழ்சாதி சிறுவன் இறந்துபோனதால் இதை வைத்து அந்த பெரிய குடும்பத்தை பழிவாங்க திட்டமிடும் அச்சிறுவனின் சகோதரனின் உறவுக்காரன் அவர்களை பழிவாங்க அக்குடும்பத்து பெண்ணை நாம் கற்பழிக்கவேண்டும் என்று கூறுகிறான். பின் இருவரும் அப்பெண் கட்டிப்போடப்பட்டிருக்கும் இடத்திற்கு இரவில் வருகிறார்கள். அவளை உறவினன் புணர்கிறான். பின் அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவள் சுய உணர்வில்லாமல், கிடப்பது குறித்து எந்த கவலையுமில்லாமல் வாரக்கணக்கில்லாமல் இஷ்டம்போல வந்து புணர்கிறார்கள். அவள் வயிறு பெரிதாகிறது.
கீழ்சாதிசிறுவனின் இறப்பிற்கு காரணமான அப்பெண்ணின் வயிற்றில் வளர்வது நமது பிள்ளை. எனவே அவளை நாம் நம்மிடத்திற்கு கொண்டுவந்து வைப்பதுதான் சரியாக இருக்கும் என்று தன் சுற்றத்தாரிடம் கூற, அனைவரும் அந்த குடும்பத்தின் வீட்டை நோக்கி நடக்கிறார்கள். பின் என்னவானது? கல்கி குழந்தையை ஈன்றாளா? அந்த ஊர் என்னவானது? என்பதுதான் இறுதிக்காட்சி.
புனைவு என்பது பல விஷயங்களுக்கு உதவியாக இருக்கிறது. எதையும் புனைவு என்று கூறி தப்பித்து விடலாம். ஆனால் இப்படத்தில் பலதும் நேருக்கு நேர் நிஜம்பேசும் காட்சிகள்தான். சில காட்சிகளின் உக்கிரத்தை தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை.குறிப்பாக மாட்டுக்கொட்டாய் காட்சி. கல்கி பிரசவித்து பெறும் குழந்தை பெண்ணாக இருப்பது. பெண்ணை விலைக்கு வாங்குவது. உயிராக இல்லாமல் பொருளாக பெண்ணை நடத்துவது என்று பல காட்சிகளைச் சொல்லலாம். உண்மையை பேசும் படத்தின் முழுவலுவையும் தாங்குவது கல்கியாக நடித்திருக்கும் பெண்தான். அற்புதமான முக பாவங்கள், திருமணம் செய்வதற்குமுன் இருப்பது, திருமணத்திற்குப்பின் இளைய கணவனோடு முதன்முதலாக சிரிப்பது, அவன் அவளுக்கு நீர் இறைக்க உதவும்போது வெட்கமுறுவது, அவன் இழந்த துக்கத்தில் அழுவது, மாட்டுக்கொட்டாய் காட்சிகளில் உடல்மொழி. அற்புதம். பெண்கள் குறித்த எண்ணங்கள் இன்னும் இளகாத, சரியாக புரிந்துகொள்ளப்படாத, அவளை ஒரு பொருளாக மதிக்கின்ற சமுதாயத்திற்கு இதுபோன்ற படங்கள் ஓரளவாவது குற்றவுணர்வை உருவாக்க உதவக்கூடும்.
Memories of geisha
Director: Rob marshal
குடும்பத்திற்கு வந்து சேர்கிறாள் சியோ. துணி துவைக்கிறாள். தண்ணீர் இறைக்கிறாள். இன்னும் பல வேலைகள். அவளின் சகோதரி இதுபோல ஒரு வீட்டிலிருந்குடும்பத்தினரால் விலைக்கு விற்கப்பட்டு, மேல்தட்டு மக்களை ரசிக்க வைக்கும் நடனம், பாடல் அதைத்தாண்டி நல்ல விலை கிடைக்கும்போது தன் உடல் என்று தொழில் செய்யும் ஒரு து ஓடி விடுகிறாள். சியோவும் தப்பித்துச்செல்ல முயலுகையில் கைஉடைந்துபோக, குணமாகி வரும்நேரத்தில் ஒரு பாலத்தில் சேர்மன் என்பவரை சந்திக்கிறார். அவர் அவளுக்கு ப்ளம் ஐஸ்க்ரீம் வாங்கித்தர , அவர் மீது பெரும் ஈர்ப்பிற்கு ஆட்படுகிறாள் சியோ. தான் ஜெய்ஷா ஆகி அவரை சந்திக்கவேண்டும் என்று அவர் கொடுத்த பணத்தை புத்தரின் கோயில் உண்டியில் போட்டுவிட்டு துதிக்கிறாள். அது நிறைவேறியதா இல்லையா என்பதுதான் கதை. வலுவான பாத்திர அமைப்போடு, நடன அரங்கேற்றம், அதற்கான ஏற்பாடுகள், போரின் நிலைமைகள் என விவரிக்கப்பட்டுள்ள ஜப்பான் திரைப்படம் இது.
இறுதிக்காட்சியில் சியோ தான் விரும்பியதை அடைந்தாளா இல்லையா என்பதைக்கூறுகிறது. ஜான்வில்லியம்சின் இசை யாருமற்ற நதிக்கரையினில் நதி பார்த்திருக்க, காற்று வீசும் மனநிலையை ஏற்படும் வெறுமையான துயரத்தினை போல இருக்கிறது. ஜெய்ஷாவின் பலவீனம் வேறென்ன பலவீனம்தான். அதனைப்பேசுகிறது படம். அதைத்தாண்டி ஒரு பிரார்த்தனை, அது பலித்தல் நிகழ்வது என்று வாழ்வை பேசுகிற படம் இது.
Deadman
Dir: Jim jarmuich
நிஜமா, புனைவா என்று எண்ணும்படியான ஒரு திகைப்பை உண்டாக்கும்படியான படம் இது. ஜானிடெப் ஒரு வேலையைப்பெற அதற்கான அனுமதிக்கடிதத்துடன் ஒரு நகருக்கு வெகு தொலைவு பயணித்து வந்து சேர்கிறார். ஆனால் வேலை சேர அலுவலகத்திற்கு வந்தபின்தான் தெரிகிறது அது இருமாதங்களுக்கு முன்பு அனுப்பிய கடிதம் என்று. வேறு ஒரு ஆளைஅந்த நிறுவனத்தில் பணியமர்த்தியிருப்பதால், வேறு என்ன செய்வது என்று தெரியாமல், ஜானி மதுபானக்கடைக்குச்செல்கிறார். அங்கு ஒரு பெண்ணை(தேல்) சந்திக்கிறார். அவளுக்கு ஜானியைப்பிடித்துப்போக, இருவரும் உறவுகொள்கிறார்கள். அப்போது அவளை ஒருதலையாய் காதலிக்கும் ஜானி வேலைதேடிப்போன முதலாளியின் மகன் சார்லி அங்கு வருகிறான். வாக்குவாதம் மூளுகிறது. தேல் அவனை காதலிக்கவே இல்லை என்கிறாள். அவன் கோபமாகி சுட, தேல் ஜானியின் குறுக்கே வர, தோட்ட அவளது கழுத்தை துளைத்துவிட்டு, ஜானியின் நெஞ்சில் சேகரமாகிறது. ஜானி தன் காதலியான தேலின் துப்பாக்கியால் எக்குத்தப்பாக சுட சார்லி சாகிறான். ஜானி தப்பித்து ஓடுகிறான். தப்பித்து திக்கு எது திசை எதுவென தெரியாமல் ஓடும்போது, ஒரு பழங்குடி ஒருவன் வில்லியம் பிளேக் என்பவன் ஒரு மறைந்துபோன பாடலாசிரியன் அது நீதான் என்று நம்புகிறான். பின் ஜானிக்கு என்னவானது? சார்லியின் தந்தை அனுப்பும் ஆட்கள் ஜானியைக்கண்டுபிடித்து கொன்றார்களா? இல்லையா என்று கூறுவதுதான் மிச்சப்படமே.
கருப்பு வெள்ளைப்படமான இப்படம் மிக நேர்த்தியான இசை, காட்சிகோர்ப்புகளோடு கூரிய வசனங்களால் இயக்குநரை யார் என்று கேட்க வைக்கிறது. இதில் ஒரு பாடல் ஒன்று வரும். அதன் வாசகம் இறந்துபோனதாக அந்த பழங்குடி மனிதன் கூறும் வில்லியம் பிளேக் எனும் கவிஞன், புரட்சிக்காரன் எழுதியது சிலர் முடிவில்லாத இருளில் பிறக்கிறார்கள் என்பது. இந்த வாசகம் பலமுறை பயன்படுத்தப்படுகிறது. பல காட்சிகள் கடும் பகடி, பரிகாசப்படுத்தும்படியாக உள்ளன. அவற்றை திரையில் பார்த்து அறிந்துகொள்ளுங்கள். பல்வேறு ஆழமான மன உணர்வுகளை ஏற்படுத்தும் படம். இன்டிபென்டன்ட் இயக்குநரால் எடுக்கப்பட்ட முக்கியமான படம் இது.
Stray Dog
Dir: Akira Kurosova
ஒரு
போல¦ஸ் கான்ஸ்டபிளிடமிருந்து துப்பாக்கி காணாமல் போகிறது. அதை எப்படி பல கொலைகள், திருட்டு என இவற்றை நிகழ்த்தும் ஒருவனிடமிருந்து அதை மீட்கிறார் என்பதே கதை.
நாயகனின் பதட்டம் என்னவோ அதிகமானதாக தோன்றுகிறது. பதட்டமாகவும், நடுக்கம் கொண்டும் என இவர் ஒருவர் மட்டுமே அலைகிறார்.
படபடவென படம் ஓடுகிறது. அவ்வளவு வேகமான திரைக்கதைதான் என்றாலும், நாயகனின் துடிப்பு,ஒரு அந்நியத்தை ஏற்படுத்துகிறது. மற்றவர்கள் கொலைகள் குறித்து காவலர்களுக்கு இருக்கும் புத்தியோடு, இருக்க இவர் ஒருவர் தன் துப்பாக்கி மூலம்தான் நிகழ்ந்ததோ என்று கடுமையாக பதற்றமுறுகிறார்.
சில துப்புகளை பின்தொடர்ந்து செல்வது, தன் துப்பாக்கி தேடி அலையும் காட்சிகள் அவரின் அயர்ச்சியை நமக்கு கடத்தும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பங்கள், சுவாரசியங்கள் என்பதற்கு பெரிய விஷயங்கள் ஒன்றுமில்லை. நேர்கோட்டிலான ஒரு துப்பு துலக்கும் கதை அவ்வளவுதான்.
Central Station
Dir: Walter salles
ரயில்வே ஸ்டேசனில் பலருக்கும் கடிதம் எழுதிக்கொடுத்து அவற்றை எப்போதும் யாருக்கும் அனுப்பியிராத ஒரு வயதான பள்ளி ஆசிரியைக்கு அப்படி அனுப்பப்படாத கடிதத்தின் மூலமாக ஒரு சிறுவனை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டுபோய் சேர்க்கும் சிக்கல் உருவாக, சிறுவன் தன் அப்பாவை சந்தித்தானா, ஆசிரியைக்கு அவன் மேல் உருவாகும் பாசம் என பல பரிமாணங்களில் மனித உறவுகளின் மேல் கரிசனம் பரவ வைக்கும் கதை இது.
முதிய ஆசிரியையும், சிறுவனும் மட்டும்தான் படம் நெடுக வருகிறார்கள். தாய் ஒரு விபத்தில் இறந்தபின் தன் அப்பாவின் முகவரி தேடி அலையும் சிறுவனை அழைத்துச்சென்று அவரிடம் சேர்க்க முயற்சிக்கிறாள் ஆசிரியை. அவளுக்கும், அச்சிறுவனுக்குமான முட்டல், மோதல், நேச உறவுகள் தொடங்க காரணம் அந்த சென்ட்ரல் ஸ்டேஷன்தான்.
பல காட்சிகள் வசனமில்லாமல் நம்மை மனதினை பெரும் பாரமாக்கிவிடுகிறது. ஜோசுவாவை உடல்பாகங்கள் திருடி விற்கும் கும்பலிடம் விற்று டி.வி வாங்கிவருவது, பின் ஆசிரியையின் தோழி கூறுவதைக்கேட்டு இரவு தூங்காமல் கண்ணீர்விட்டு அழுவது, அவனை அக்கும்பலிடம் இருந்து மீட்பது. இதிலிருந்துதான் படம் தொடங்குகிறது என்று கூறவேண்டும். முக்கியமான காட்சி இதுதான்.
நீண்ட நிலப்பரப்புகள், லாரியில் பயணம், வீடு நோக்கி வரும் காட்சிகள், பணமில்லாது தவிப்பது, ஒன்றுபோலவே இருக்கும் வீடுகளிடையே நடப்பது என இந்தப்படம் உங்களில் ஏதோஒன்று நிகழ்த்துகிறது. அதுதான் இப்படத்தின் வெற்றியாக உள்ளது. பயணம் உங்களை மாற்றிவிடுமா என்ற கேள்விக்கு இப்படத்தினைப்பார்த்துவிட்டு அதே கேள்வி உங்கள் மனதில் தோன்றுகிறதா என்று சோதிக்க முயலுங்களேன். நுண்ணிய, நுட்பமாக நம்மை கனிய வைக்கும் ஒரு திரைப்படம் என்று இதனைக்குறிப்பிட இயலும்.
The Blue Kite
Dir: Zu Zingbova
கம்யூனிச ஆட்சியின் சீர்கேடுகளை விமர்சித்து எடுத்த படம் என்பதால் திரைப்பட விழாக்களுக்கு இப்படத்தை அனுமதிக்கக் கூடாது என்று சீன அரசு கூறியிருப்பது படத்தின் தரத்திற்கு சான்று.
இனி எந்தப்படமும் இயக்கக்கூடாது என்று இயக்குநருக்கு சீனஅரசு தடைவிதித்துள்ளது.
கம்யூனிச ஆட்சியில் ஒரு குடும்பம் எப்படி மகிழ்ச்சியைத் தொலைத்து வீழ்ச்சியடைகிறது என்பதே கதை. கதையைக் கூறுபவர் அந்தக்குடும்பத்தின் உறுப்பினரான தியோட்டுதான். கதை மூன்று பாகங்களாக விரிகிறது. அப்பா, மாமா, இரண்டாவது அப்பா என அவர்களின் வாழ்வையே அரசிற்கு அர்ப்பணித்துவாழ்ந்தும் அரசு அவர்களை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை.
வசனங்களைவிட காட்சிரீதியாக கம்யூனிசம் பற்றிய எரிச்சல் இயல்பாகவே நமக்கு ஏற்படும்வண்ணம் அக்குடும்பத்தில் பல ஆண்கள் தங்கள் உயிரை அரசிற்காக விடுகிறார்கள். சித்தப்பா ஒருவர் தன் கண்பார்வையை இழந்துவிடுகிறார். பள்ளியின் தலைமை ஆசிரியை முடியை வெட்டுவது, எந்த விசாரணையும் இன்றி ஒருவருக்கு தண்டனை அளிப்பது என பலரின் வாழ்வே இளம் செஞ்சேனைப்படையினால் நாசமாகிறது. இதில் திரும்ப திரும்ப ஒலிக்கும் ஒரு பாடல் ஒன்றுள்ளது.
‘’ அமைதியாக தாயை பார்த்திருப்பேன். அவள் நிச்சயம் எனக்கு சோறூட்டுவாள்’’ எந்த அரசு வந்தாலும் மக்களின் நம்பிக்கையும் இதுபோலத்தானே வெகுளித்தனமாக உள்ளது.
The Mirror
Dir: Jafar Panahi
பள்ளிவிட்டு வெளியே வரும் சிறுமி வீட்டுக்கு போக வழிதெரியாமல் தவிக்கிறாள் எப்படி வீடுபோய் சேர்ந்தாள் என்பதுதான் படம். படத்தில் ஒரு படம் என்னவென்றால் பள்ளிவிட்டு வீடு போவதற்காக காத்திருக்கும் சிறுமியே அதை ஒரு படத்திற்காக செய்கிறாள். கோபத்தில் படத்தில் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டு தன் வீட்டுக்கு கிளம்புகிறாள். வழிதெரியாது அலைந்துதிரிகிறாள். படக்குழு அதை அப்படியே படம் பிடிக்கிறது. பிறகு என்னவானது என்பதுதான் கதை.
நேர்த்தியான ஒளிப்பதிவு, சிறுமி அலைந்துதிரியும் காட்சிகளில் நமக்கே அந்த அயர்வு ஏற்படுகிறது உண்மைதான். அலைந்து திரிதல்தான் படம் என்னும்போது, கதாபாத்திரங்கள் புதிதாக அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறார்கள்.
பெரும்படபடப்பு ஏற்படுகிறது. நிச்சயம் குழந்தை பத்திரமாக வீடுபோய் சேரவேண்டும் என்கிற தவிப்பை மறுக்கவே முடியாது. ஆனால் படம்எடுக்கிறார்கள் எனும்போது சிறிது தொய்வு ஏற்படுவதுபோல் இருக்கிறது.
படத்திற்குள் படம் என்றாலும் குழந்தையை வைத்து படம் எடுப்பது சவாலானது. அதை இப்படம் மீண்டும் சரியாக செய்திருக்கிறது. குழந்தை சரியாக வீடு போய் சேர்ந்துவிட்டபின் நமக்குவருவது நீளமான பெருமூச்சுதான்.
This My Father
Dir: Paul Quinn
தன்னுடைய அப்பா பற்றிய உண்மை அறிய தன் தங்கை மகனோடு அயர்லாந்து செல்கிறார் பள்ளி ஆசிரியர் இயர்சன். அந்த பயணத்தில் அவர் உண்மைகளை கண்டறிந்தாரா இல்லையா என்பதுதான் கதை.
திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையான வீட்டில் ரேடியோ ஒலிக்க காலையில் எழுகிறார் பள்ளி ஆசிரியரான இயர்சன். தன் அம்மா பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு உடல் செயலிழந்து பேச முடியாது தத்தளித்து இருப்பதையே வகுப்பறையிலும் நினைத்துக்கொண்டிருக்கிறார்.
தங்கைக்கோ தன்
மகன் ஜேக் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் இருப்பது குறித்து வருத்தம். அவனைக்கண்டித்தாலும், அவனோ, அவளிடம் கடும் வெறுப்போடு பேசிவிட்டு அறைக்குள் சென்றுவிடுகிறான்.
பள்ளி ஆசிரியரின் அப்பா பற்றிய கதை நன்றாக எடுக்கப்பட்டு இருந்தாலும் இருவரும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுவதற்கான மனதில் கொள்ளும்படியான காதலாக இல்லை.பல முத்தங்கள், வேகமான உடலுறவுக்காட்சிகள் என வேகமாக இருக்கும் காட்சிகளில் ஆழம் இல்லை.
மதம் எப்படி மனிதனின் வாழ்வை அன்பு, உறவு என எதையும அறியாமல் கசக்கி எறிகிறது என்பதை படம் நேர்த்தியாக பதிவு செய்கிறது. அயர்லாந்து சிறு கிராமத்தில் கிராம தேவாலயம் சொல்லும் கட்டுப்பாடுகள்தான் அங்கே சட்டம். வேறெதுவும் செல்லாது. இயர்சன் ஓடே, பியோனா என இருவருக்குமிடையே வயது வேறுபாடு அதிகமாக உள்ளது. பெண்ணிற்கு வயது 17 தான் ஆகிறது என்று சொல்லி இயர்சன் சீனியரை சிறையில் தள்ள ஏற்பாடுகள் வெளிப்படையாக அவரிடம் கூறியபடி நடக்க, மதம், சமூகம் குறித்து பயம்கொண்ட இயர்சன் சீனியர், காதலியை திருமணம் செய்ய முடியாத நிலையில் அவர்கள் எப்போதும் சந்திக்கும் மரத்தின் கிளைகளில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். பியோனா கடுமையாக வருத்தமுறுகிறாள். இயர்சன் சீனியரின் தந்தை அவளால்தான் தன் மகன் அநியாயமாக இறந்துபோனான் என்று குற்றம் சாட்டுகிறார்.
இக்கதை நிகழும்போது, இதற்கிடையே இயர்சன் ஜூனியரின் தங்கை மகன் ஜேக் அயர்லாந்து பெண் ஒருவளைக் காதலிக்க தொடங்குகிறான். இருவரும் பிரியும்போது, முகவரி பரிமாறிக்கொண்டு பிரிகிறார்கள். சிகாகோ திரும்புகிறார்கள்.
அயர்லாந்து பிணைப்பு தொடங்குகிறது என்று முடிகிறது படம். நிறைய விஷயங்களை இடியாப்பத்தோடு, பாஸ்தா, அதோடு சேமியா, அதோடு கொஞ்சம் இட்லி என நினைத்து கிண்டியதில் பல சிக்கல்கள். ஆனால் மதம், வர்க்கவேறுபாடு குறித்து வலுவாக கூறியிருக்கிறார். மதம் மனிதனை வெறி பிடித்தவனாக்குகிறது அன்பை, மனிதர்களின் கூட்டுணர்வை மதம் விரும்பாதது குறித்து பேச முயற்சித்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
The Notebook
வயது முதிர்ந்த ஒரு பெண் ஜன்னல் வழியே பறக்கும் பறவைகளை பார்க்கிறாள். அவருக்கு ஒரு நோட்டிலுள்ள கதையை படிக்க ஒருவர் வருகிறார். அவர் அதனைப்படிக்கத் தொடங்க திரைப்படம் தொடங்குகிறது.
ஒரு நாவலை மூலமாக கொண்ட படம் இது. நேர்த்தியான ஒளிப்பதிவு கொண்ட இப்படம் ஏழை காதலன், பணக்கார காதலி என இருவரின் காதல், அதன் மீதான எதிர்ப்பு, பிரிவு மீண்டும் சேர்வது என பயணிக்கிறது. அதோடு இந்தக்கதையைக்கூறிக்கொண்டிருப்பது யார்? அதைக்கேட்டுக்கொண்டிருப்பவர் யார் என்பதும் இறுதியில் தெரிய வருகிறது.
கிளர்ச்சியூட்டும் பல்வேறு முத்தக்காட்சிகள் உள்ளன. படத்தின் போஸ்டரிடலும் இவை இடம்பிடிக்கின்றன. அப்புறம் எதுக்குங்க எழுதிக்கிட்டு? நேராகவே படத்திற்கு செல்லலாம் என்கிறீர்களா? நம் பங்குக்கு சிறிது தூண்ட வேண்டாமா?
மரம் அறுக்கும் வேலைகளில் ஈடுபடும் நாயகன், நாயகியை ஒரு விழாவில், பூங்காவில் பார்க்கிறான். அப்போதே போய் கேட்கிறான் நாம் ஏன் டேட் போகக்கூடாது? அறிமுகமாக ஒருவன் திடீரென இப்படிக்கேட்டால் எப்படியிருக்கும் அவளுக்கு? அதேதான். பின் பல சந்திப்புகளுக்கு பிறகு ஜாக்கி ஜட்டி மாடல் போல இருக்கும் நாயகனிடம் காதல் வருகிறது. பின் வரும் காட்சிகளிலெல்லாம் இழுத்து வைத்து உதட்டை நான்காக்கி நம்மை சிதற வைக்கிறார்கள். கிஸ் ஆப் லவ் அன்னைக்கே தொடங்கியாச்சுப்பா.
வாத்ஸாயனார் மொத்தம் 27 முத்தங்கள் இருக்கின்றது என்று கூறியிருக்கிறார் இல்லையா! இதில் 26 முத்தங்களை பரிசோதித்துப்பார்க்கிறார்கள். நாயகன், நாயகி சந்தித்தாலே இழுத்து வைத்து உதடுகளை சங்கமாக்குகிறார்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டால் அதை முகத்தில் தடவி முத்தம் முத்தம். நாம் சிறிது தாமதித்துவிட்டோம். எஸ்.ஜே சூர்யாதானே இதை அறிமுகம் செய்தார். நாயகி ஆலியினுடைய அப்பா ஸ்டாலின் மீசை வைத்த பசை பார்ட்டி. ஆனால் அவரோடு ஒப்பிட்டால் நமது நாயகன் ஏக் சாயா தோ பன் கேடி. ஒரு விருந்தில் என் பெண்ணை திருமணம் செய்ய உனக்கு என்ன தகுதியிருக்கிறது என்று அவரது குடும்பமே நாயகனை கீழிறக்க, நாயகன் கோபத்தோடு வெளியேறுகிறான்.
இருந்தாலும் காதல் இருவரையும் விடாமல் துரத்த, நாயகன் காதலியோடு உறவு கொள்ள விரும்ப, உடைகளை களைந்து தயாராக இருக்க, லேட்டரல் திங்கிங்கில் நாயகி யோசித்து உறவு வேண்டாம் என்று மறுக்க, தியாகி திருச்சிற்றம்பலமாகி, விக்ரமனின் ரசிகனான நாயகன் அவளை வீட்டுக்குக் கொண்டுபோய் விட, அதற்குள் பெண்ணைத்தேட ஆரம்பித்துவிட்ட ஆலியின் அப்பா, நாயகனை இதுக்கு மேல எவனும் கேவலமாக திட்டமுடியாதுடா என்றவகையில் திட்டுகிறார்.
கடுமையான கோபத்தில் இருக்கும் நாயகன் தன் வீட்டிற்கு கிளம்பிச்செல்கிறான். நாயகியை அதோடு வேறு ஊருக்கு கூட்டிச்செல்ல, அவளின் முகவரியை அறிந்துகொண்டு நாயகன் தொடர்ந்து நம்ம கட்டுமரத்தலைவர் போல் தொடர்ந்து லெட்டராக எழுதுகிறான். நாயகியின் அம்மா இந்திய பிரதமர் போல அக்கடிதங்களை தானே பெற்று அதை மகளிடம் கொடுக்காமல் வைத்திருக்கிறாள். பிறகு நிகழும் சூழல்களினால் நாயகன் ராணுவத்தில் சேருகிறான். அங்கிருந்தும் விடாமல் அவளுக்கு இன்பினிட் கடிதங்களை எழுதுகிறான். ஆனா நம்ம நாயகி அந்த கடிதங்களை படிக்காததினால் கல்லூரியில் படித்துவிட்டு நர்சாகி ஒரு
மருத்துவனையில் ராணுவவீரனுக்கு சிகிச்சைசெய்யும்போது, அவன் இவளைப்பார்த்ததும் காஃபீன் போல் ஏறும் காதல் மூளையில் பல்வேறு புரட்சிகளை செய்ய, அவளை விரும்புகிறான். பணம், வேலை, குடும்ப அந்தஸது எல்லாம் தராசில் அளந்து பார்த்தால் சரியாக இருக்கிறது. அப்புறம் என்ன, பார்ட்டி, கல்யாணம், மாட்டுடா மோதிரத்தை கதைதான். ஆனால் அங்கேதான் ட்விஸ்ட் பாஸ். ராணுவ வேலை முடிந்து நாயகன் வீட்டுக்கு வரும்போது, அவன் அப்பா முன்பு குடியிருந்த வீட்டை விற்றுவிட்டு, பூர்வீக வீட்டை புனரமைத்து தன் பையன் வாழவேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அது நிறைவேறும் முன்னே இறந்துவிடுகிறார். நாயகன் தன் காதலியை முதலில் போய்பார்த்துவிட்டு வரலாம் என்று நினைக்க, அவளுக்கோ திருமணம் நிச்சயமாகி இருக்க, தன்னைப்பற்றி எந்த நினைப்பும் இல்லாமல் இருக்க, சரி, பணம் ஜெயித்துவிட்டது என்று இருக்கும் பணத்தை வைத்து வீட்டை புனரமைக்கிறான். தச்சு வேலைகளில் நிபுணன் என்பதால், வீட்டிற்கான அனைத்தையும் அவனே செய்கிறான்.
அது
குறித்த செய்தி நாளிதழில் வெளிவர, அதைப்படிக்கும் நாயகி மயங்கிவிழ, யாரால இந்தகதிக்கு ஆளானா, பஞ்சாயத்துக்கு போயிரலாமா என்று நினைக்கவேண்டாம். காதல், காதல் அதனால்தான் மயக்கம். செரி பார்க்கலாம் என்று நாயகி போனா, தன் கடிதங்களை படித்தும் கூட தன்னைப் புரிந்துகொள்ளாமல் இன்னொருவனை திருமணம் செய்துகொள்ளப்போகிறாளே என்று நாயகன் கடுமையாகப்பேச, நாயகி திரும்பிவிடுகிறாள். பின் மெதுவாக சமாதானம் ஆகி, இருவரும் பேசிக்கொள்கிறார்கள். நாளைக்கு இங்கே வா என்கிறான் நாயகன். மெல்ல பேசிக்கொண்டே ஏரிக்கு படகில் செல்கிறார்கள். பயணம் முடியும்போது, மழைவருகிறது. இருவரையும் இணைத்துவைக்கிறது மழை. ஒரு வாரம் நாயகனோடு வாழ்கிறாள். ஆனால் அப்போதுதான் அமெரிக்க மாப்பிள்ளை போல இருக்கும் தியாகி நிச்சயம் செய்த மாப்பிள்ளை நினைவுக்கு வர, நாயகி கடும் குற்றவுணர்வுக்கு ஆளாகிறாள். பின் இதுபற்றி அம்மாவின் கதையையும் கேட்டுவிட்டு, அவளிடம் நாயகன் எழுதிய கடிதங்களின் பண்டல் கட்டை வாங்கிக்கொண்டு அவனின் வீட்டிற்கே வந்துவிடுகிறாள். கதையைக்கேட்டுக்கொண்டிருக்கும் வயதான பெண்யார்? கதையைக் கூறுபவர் யார் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். அதுதானே இறுதிக்காட்சி.
காதலுக்கான, காதலர்களுக்கான படம். கவனமாக பார்த்தீர்கள் இன்னும் நிறைய விஷயங்கள் புரியும். காட்சி மொழியின் வசீகரம் அது.
Life as we know it
ஆங்கிலப்படங்களை விட இந்தியப்படங்களில் அதிக ஆழமான உணர்ச்சிகள் நிறைந்து இருக்கிறது என்று ஆர். எம் கூறுவதாக ஸமீரா கூறினார். ஆனால் நான் அதை மறுக்கிறேன். அப்படி இருக்கிறது என்றால் அது இயக்குநரின் வாழ்வனுபவத்தை புரிந்துகொள்ளும் திறமைதான் என்று கூறலாமே தவிர, திரைப்படம் என்பது பண்பாட்டு ரீதியாக ஒரு பகுதியில் காலூன்றி நின்றாலும், அது மனித நன்மையை நிலைநிறுத்தும் தன்மை கொண்டிருந்தால் உலகிற்கானதாக மாறிவிடுகிறது உளமார நான் நம்புகிறேன்.
ஆணும், பெண்ணும் இருவர் ஆண், விளையாட்டுச்சேனல் ஒன்றிலும், பெண் பேக்கரி ஒன்றிலும் பணிபுரிகிறார்கள். இவர்கள் இருவருக்குமான நண்பர் மற்றும் அவரது மனைவி ஒரு தற்செயலான விபத்தில் இறந்துவிடுகிறார்கள். அவர்களது ஒரே
மகளான சோபியாவை வளர்க்கும் பொறுப்பை நெருங்கிய நண்பர்களான இவர்களின் பெயரில் இறக்கும் தருணத்தில் எழுதிவைத்துவிட்டு செல்கிறார்கள். என்னதான் நட்பு என்றாலும், ஒரு பொறுப்பை தனதல்லாத ஒன்றை கடமையை செய்வது எவ்வளவு கஷ்டம்? இருவருக்கும் இடையே குழந்தையை பார்த்துக்கொள்வது குறித்து கடும் சண்டைகள் வருகிறது. மாதக்கணக்கு போட்டுக்கொண்டு பராமரிக்கிறார்கள். சோபியா ஓரளவு நிற்கத்தொடங்கும்போது, இவர்களின் முழுமையான பொறுப்பில் வர, மனக்கசப்பு உச்சத்தில் எட்டும்போது, அரசின் சமூகநலத்துறையில் இருந்து பெண் ஒருவர் தொடர்ந்து குழந்தையைக் கண்காணிக்க வருகிறார். என்ன செய்தார்கள்? குழந்தையை உளமார வளர்க்க முயற்சித்தார்களா? இருவரும் காதலிக்கத்தொடங்கினார்களா? என்பதுதான் கதை.
தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைக் கொண்ட இரு தனிப்பட்ட இரு உள்ளங்களை ஒரு குழந்தை தன் நிகரற்ற அன்பினால் இணைத்துவைக்கிறது. குழந்தை மெல்ல நிற்பதிலிருந்து நடக்கத்தொடங்குகிறது என்பதை அவன் கூறும்போது, ஆச்சர்யத்தில் குளிக்கும்போதான உடையுடன் அவள் வருவது, தன் வேலைக்காக விமானம் ஏறும்போது, குழந்தை நடக்கத்தொடங்குவதை பார்த்துக்கொண்டிருக்க அருகிலிருக்கும் பெண் ‘’ உனக்கு நல்ல குடும்பம் அமைந்திருக்கிறது’ எனக்கூறுவது, அவன் பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்புவது, அவள் அவனைத்தேடி அலைந்து பின் அழுதபடி ஏங்குவது என்று பல காட்சிகள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன.
முன்னிலைக்கான நாயக, நாயகி பாத்திரங்களின் தேர்வு நேர்த்தியாக இருக்கிறது. இரண்டுபேருமே செமையான நடிப்பும் படத்திற்கானதை தருவதில் வஞ்சகமில்லை. எந்தப்பகுதி என்றாலும் மனிதர்களின் உணர்வுகள், உணர்ச்சிகள் ஒன்றுதான் என்பதை பல படங்கள் நிரூபித்திருக்கின்றன என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை.
பீட்ஸா
இயக்குநர்: கார்த்திக் சுப்புராஜ்
பீட்ஸா டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்யும் விஜய் சேதுபதி, தன் முதலாளி பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதை அறிந்துகொள்கிறார். அப்போது, படித்துக்கொண்டிருக்கும் தன் காதலி வேறு கர்ப்பமாக இருக்க, அவளைத் திருமணம் செய்துகொண்டி வாழ்க்கையில் செட்டிலாக விஜய் விரும்புகிறார். அதற்கான சந்தர்ப்பமும் பீட்ஸா கடைமுதலாளி மூலம் கிடைக்கிறது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விஜய் சேதுபதியின் காதலி ரம்யா ஒரு ஐடியா கூறுகிறாள். என்ன அந்த ஐடியா? கற்பனையாக கூறும் ஒன்று நிஜத்தில் அப்படியே நடந்தால் எப்படியிருக்கும்? என்று நீங்கள் படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இறுதியில் வரும் ட்விஸ்ட்தான் படத்தை திரும்ப பார்த்தாலும் நிச்சயம் சலிக்காது என்று நம்பிக்கை தருகிறது.
கார்த்திக் சுப்புராஜின் திரைக்கதைதான் படத்தின் பெரும்பலம். இதற்கு மற்றொரு பலமாக சந்தோஷ் நாராயணனின் இசையைக்கூறியே ஆகவேண்டும். இதில் நடித்தவர்களின் பங்களிப்பும் சிறப்பாக இருக்கிறது. பார்வையாளர்களை ஏமாற்றாத படம் என்று துணிந்து கூறலாம்.
Mumbai Police
Dir: Roshan Andrews
ஒரு
போலீஸ் அதிகாரி ஒருவரின் குணநலன்களால் உருவாகும் பிரச்சனைதான் கதை. ஆண்டனி மோசஸ் (பிரித்விராஜ்)ஜீப்பில் வரும்போது, தனது மேலதிகாரிக்கு அழைத்து தான் வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட்டதாக கூறும்போது, முன்னே சென்று கொண்டிருக்கும் டெம்போவில் இருந்து பிரிட்ஜ் ஒன்று கழன்று விழ, அதில் மோதுவதை தவிர்க்க, வண்டியைத்திருப்புகிறார் பிரித்விராஜ். ஆனாலும் கடுமையான விபத்தில் சிக்கி தன் நினைவுகளை இழந்துவிடுகிறார். இதனால் அவரது மேலதிகாரியான கமிஷனர் ரகுமான் வழிநடத்துகிறார்.
பிரித்விராஜ் கடைசியாக தன் நண்பனான ஆர்யனின் (ஜெயசூர்யா) கொலைவழக்கு குறித்து ஆராய்ந்துகொண்டிருந்த விஷயங்களை கமிஷனர் அவருக்கு நினைவுபடுத்துகிறார். மெல்ல ஜெ.சூ நட்பு பற்றிய காட்சிகள் விரிகின்றன.
பிரித்விராஜிற்கு இது முக்கியமான படம். ஆண்டனி மோசஸ் என்கிற ராஸ்கல் மோஸஸ் ஆக ஆவேசமான நடிப்பு. ஜெ.சூ வை கொன்றது யார் என்று தேடியலைவது பற்றிய காட்சிகளில் பார்ப்பவரையெல்லாம் சந்தேகப்படுவது போல காண்பித்து காரணம் யார் என்று கூறுவது திகைக்கவைப்பதாக உள்ளது. திரைக்கதை பாபியும், சஞ்சயும் உருவாக்கியிருக்கிறார்கள்.
கொரியன் பட பாதிப்பு என்கிறார்கள். இதில் காதலுக்கு எல்லாம் இடமில்லை. தடதடக்கும் திரைக்கதையில் பாடலையோ, குத்துபாடல்களையோ, காதல்காட்சிகளையோ யாரும் எதிர்பார்க்கவும் இல்லை, படத்திலும் இல்லை என்பதுத பெரிய ஆறுதலாக உள்ளது. இறுதியில் அனைத்திற்கும் காரணமாக அமையும் நமது நாட்டில் சர்சைக்குள்ளான ஒரு விஷயத்தையும் குறிப்பிடுகிறார்கள். தைரியமான முயற்சி. பரபரப்பான சாகசத்திரைப்படத்திற்கு நல்ல தேர்வு மும்பை போலீஸ் எனலாம்.
மாலைப்பொழுதின் மயக்கத்திலே
இயக்குநர்: நாகேந்திர ராவ்
பெரிய ஆர்வம் ஏற்படுத்தும் கதையில்லை. குறும்படத்தைத்தான் நெடும்படமாக மாற்றியிருக்கிறார்களோ என்று தோன்றும் படம் இது. ஆரி துணை இயக்குநராக இருக்கிறார். இயக்குநராக படவாய்ப்பு தேடுகிறார். ஆனால் 45 வயதான தயாரிப்பாளர் தானே நாயகனாக நடிக்க விரும்புகிறார். எல்லா முடிவுகளிலு தலையிட, ஆரி கோபத்தில் அவரை அடித்துவிட, பிரச்சனை கடுமையாகிறது.
மாலை 5 மணிக்கு தாங்கள் திரைப்படத்திற்கு கொடுத்த, செலவழித்த பணத்தைத்தரவேண்டும் அல்லது தங்களை வைத்து படம் எடுக்கவேண்டும்
என்று நிர்பந்திக்க, ஆரி இரண்டையும் ஒத்திவைத்துவிட்டு, காஃபி டே செல்கிறார். அங்கு சிட்னிக்கு சில நாட்களில் படிக்கக் கிளம்ப போகும் ஒரு பெண்ணோடு பேசுகிறார். மெல்ல காதலிக்கவும் தொடங்கிவிடுகிறார். பின் என்னவானது அந்தக்காதல் என்பதோடு, அந்த காஃபி டே முதலாளிக்கும் கடையை மூடும்படி பிரச்சனை உள்ளது. அவருக்கும் நிர்பந்தம் கடுமையாக இருக்கிறது.
அங்கே காஃபி குடிக்க வரும் ஒரு காதலித்து மணந்துகொண்ட தம்பதிக்குள் கடுமையான பிளவுகள் அந்த இடத்தில் வெடிக்கிறது. ஒரு காஃபி குடிப்பதற்குள் என்னென்ன விஷயங்கள் நடக்கும் என்று கூறும் படம் இது. அனைத்திற்கும் தெளிவான தீர்வுகளை கூறுகிறது. இசை அச்சு, பாடல்கள் வெவ்வேறு விதமான கருக்களில் கவனம் கவருகின்றன. படம் ஒரே
நேர்கோட்டிலான கதைப்போக்கினைக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட நேரங்களுக்குப் பிறகு காஃபி ஷாப்பில் சுற்றி சுற்றி வருகிறது என்பதில் சற்று சலிப்பு தோன்றுகிறது உண்மை. எவ்வளவு சுவாரசியங்களை இயக்குநர் இதில் சேர்க்க வாய்ப்பிருக்கிறது. சுப்பு பஞ்சு, கருணா, சதீஷ் இல்லையென்றால் படம் இன்னும் நெளிய வைத்திருக்கும். ஆரியின் உடல்மொழி, முக பாவங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் மொத்தமாக பாரத்தை அவர் மட்டுமே எப்படி சுமப்பார் இயக்குநர் சார்?
சில வசனங்கள் நன்றாக கவனம் ஈர்க்கின்றன. ‘’ எனக்கு இவங்கள பிடிச்சிருக்கு, ஆனா அத நான் ஏன் இவங்ககிட்ட சொல்லணும்? இவங்களுக்கு அது தெரியாதா என்ன?’’ , உங்களோட இருக்கிறாங்களா இல்ல உங்ககிட்ட இருக்கறாங்களா அப்படீங்கறதுதான் முக்கியம்’’.
நாகேந்திர ராவின் முயற்சி முற்றிலும் வீண் என்று நிராகரிக்க முடியாது. பல அழகான காட்சிகள் படத்தில் உண்டு. அழகான பாடல்காட்சிகள், காதல் காட்சிகளில் மெனக்கெடுதலில் இயக்குநர் பெயர் தேடுகிறோம், என்றாலும் படத்தினைத்தொடர்ந்து பார்ப்பதற்கான ஆர்வத்தை இதில் தவறவிடுகிறோம். எதில் இருந்து பார்த்தாலும் புரிந்துகொள்வது என்பது இயக்குநருக்கு மோசமான தகுதி இல்லையா?
Three Muskeeters
பிரான்ஸ் நாட்டு அரசனின் கீழ் பணிபுரியும் அந்தரங்க வீரர்கள் மூவரின் கதைதான் இது. எந்த படைத்தளபதிகளின் அதிகாரப்பரப்பிற்கும் கீழ் வராத வீரர்கள் இவர்கள்.
விமானம் குறித்து ஓவியர் வரைந்த படத்தை எடுக்கப்போகும்போது, கூடவே இருக்கும் ஒரு பெண்ணின் துரோகத்தினால் அதனைத் தன் எதிரியான பக்கிங்ஹாமிடம் பறி கொடுக்கிறார்கள் மூவரும். பின் சில ஆண்டுகளுக்குப்பிறகு, டைட்டானியன் என்ற இளைஞன் இம்மூவரையும் சண்டைக்கு அழைக்க, அதே தருணத்தில் பிரான்ஸ் நாட்டு அரசன் வெகுளியாய் இருக்க மதகுரு நாட்டை தன் கைப்பிடிக்குள் கொண்டுவர நினைக்க, அதனைத் தடுத்து நிறுத்த வீரர்கள் டைட்டானியனோடு முயல்கிறார்கள், தடுத்தார்களா, தேசத்தைக் காப்பாற்றினார்களா என்பதுதான் படத்தின் இறுதிக்காட்சி.
தொடக்கத்திலிருந்து இறுதிக்காட்சி வரையிலான காட்சிகள் பரபரவென செல்லுகின்றன. ஆனால் துப்பாக்கிக்கு மாறிவிட்ட காலத்தில் வாள்சண்டைகள் ஒட்டுவதுபோல படவில்லை. மூவருக்குமான தொடக்க காட்சிகள் நன்றாக உள்ளன. கதையின் முக்கியக்காட்சி ஆர்தோசின் காதலி இழைக்கும் துரோகம்தான்.
விசுவல் எஃபக்ட்ஸ் காட்சிகள் எப்போதும்போல நன்றாக இருக்கின்றன. விமானத்தில் வரும் காட்சிகள், அங்கே நடைபெறும் சண்டைக்காட்சிகள், அரண்மணையை நொறுக்கும் காட்சிகள் என்று கூறலாம். அடுத்த பாகத்திற்கான காட்சிகள் இந்த பாகத்திலேயே வைத்துவிட்டார்கள். இந்தப்பாகம் திருப்தி தரவில்லை.
அரிமாநம்பி
இயக்குநர்: ஆனந்த் சங்கர்
கதை
கைக்கட்சி மத்திய அமைச்சர், ஒரு நிருபர் பெண்ணுக்கான தன் மனைவியை தற்கொலை செய்துவிட்டார் இல்லையா? அதைப்பற்றியதுதான்.
தொலைத்தொடர்பு மத்திய அமைச்சர் ஒரு நடிகையோடு உறவுகொண்டுவிட்டு, அவளை திருமணம் செய்ய மறுத்து, ஏமாற்றி விடுகிறார். அதுதொடர்பான ஒரு பேச்சில் தன் மனைவியை அடித்துக்கொன்றுவிடுகிறார். இக்கொலை ஒரு வீடியோ டேப்பில் பதிவாகிவிட, அந்தக்காணொளி டிவி சேனல் ஒன்றுக்கு கிடைக்க, அதைப்பெற, அந்த சேனல் முதலாளி மகளைக் கடத்துகிறார்கள் அமைச்சர் அடியாட்கள். முதலாளி மகளின் காதலன் அதைக்கண்டறி முயலும் முன்னேஅவளின் அப்பாவான சேனல் முதலாளியும், அவனுக்கு உதவும் ஒரு கான்ஸ்டபிளும் கொல்லப்பட, துரத்தல் தொடங்குகிறது. உண்மை வெளியே தெரிந்ததா அல்லது காதலியை அவன் கண்டுபிடித்து மீட்டானா என்பது இறுதிக்காட்சி சாரே!
கதை
சிறுசிறு திடுக்கிடல்களை பார்வையாளர்களுக்குத் தந்தபடி நகர்கிறது. இதுபோன்ற சாகசத்திரைப்படங்களுக்கு பாடல்கள் கடும் எரிச்சலைத்தருகின்றன. சேனல்காரரின் மகளான பிரியா ஆனந்த், காதலனாக விக்ரம் பிரபுவை எப்படி தேர்ந்தெடுத்தேன் என்று கூறுவது, பின் அதே காட்சியை விக்ரம் பிரபு கூறுவது என அழகான காட்சிகள்.
திரைப்படத்தினை கவனமாக பார்த்தால் பல குறைகளைக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் திரைக்கதை வேகம் எல்லாவற்றையும் மறக்க உதவுகிறது. சில யதார்த்த குறைபாடுகளினால் படம் தேங்கிவிடுகிறது.
கேமராமேன் கங்காதோ ராம்பாபு
இயக்குநர்: பூரி ஜெகந்நாத்
பூரி ஜெகந்நாத்தின் சினிமாக்களில் அரசியலும், ஊடகங்களும், அடியாட்களும்,
ஐட்டம் டான்ஸ்களும், கடும் வன்முறைச்சண்டைகளுக்கும் நிரம்பியிருக்கும் என்பதை விட எளிமையாக
கரம் மசாலா படம் என்று கூறிவிடலாம்.
இந்தப்படத்தில் பவன் கல்யாண்
மெக்கானிக் ஷெட் நடத்திக்கொண்டிருப்பவர். அரசியல் பொருளாதாரம் தாண்டி நாளிதழ்களில்
வரும் செய்திகளை சரிசெய்ய உடனே அடித்துபிடித்து கேடிஎம் பைக்கில் கிளம்பிபோய் அடித்தே
அனைத்தையும் சரிசெய்பவர். ஹாஸ்டல் மாணவர்களிடம் ஜாதிப்பிரச்சனையை ஏற்படுத்த அரசியல்
கட்சித்தலைவரான கோட்டாசீனிவாசராவ் முயல, அதை பவன்கல்யாண் தன்னியல்பாக தடுத்து நிறுத்தி
ஆந்திரா அளவில் ஊடகங்களின் கவனம் ஈர்க்கிறார்.
பின் அவரை வைத்தே டி.ஆர்.பி ஏற்றும் சேனல்கள் தங்கள்
தொலைக்காட்சிக்கு அவரை நிகழ்ச்சி நடத்த அழைக்கின்றன. ஆனால் தமன்னா கேமராமேனாக வேலை
செய்யும் தொலைக்காட்சியில் சென்று சேர்கிறார். அங்கு நிகழ்ச்சி நடத்தும் ஒரு செய்தியாளர்
கோட்டாசீனிவாசராவின் ஊழல்களை வெளிப்படுத்தியதால், அவரது மகனான பிரகாஷ்ராஜ் சித்திரவதை
செய்து கொல்கிறார். இதனையொட்டி கோபமுறும் பவன் கல்யாண் பிரகாஷ்ராஜை வீடு தேடிவந்து
அடித்து உதைத்து அவமானப்படுத்துகிறார். பின்
பிரகாஷ்ராஜ் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள, பிரிவினை அரசியலை முன்னெடுக்கிறார். அனைத்தும்
தெலுங்கர்களுக்கே என்ற கோஷம் சர்ச்சைக்குள்ளானாலும் பரபரவென புகழ்பெறுகிறார். அவரை
பவன் கல்யாண் எப்படி தடுத்தார், மக்கள் தலைவனாக அவர் மாறினாரா என்பதுதான் இறுதிக்காட்சி.
பாடல்கள்கள் இதய நோய் இருப்பவர்கள்
பார்க்கவேண்டாம். கொடூரம். எல்லாமே சற்று எக்ஸ்ட்ராடினரி இப்படத்தில். இது முழுக்க
பவன் கல்யாண் ரசிகர்களுக்கான படம்தான். பவன் கல்யாண் ஜனசேனாவைத் தொடங்கும் முன் வந்த
படம் போல. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும், வெகுஜனத்தன்மையுடன் வலுவாகவே பேசப்படுகின்றன.
பிரமாண்டமான இறுதிக்காட்சி பவனின் ஆசையை விளக்கமாக, விமரிசையாகவே கூறுகிறது. மக்கள்
தலைவனாக அவர் மாறுவதோடு படம் முடிகிறது.
சைனீஸ் ஸோடியாக்
ஜாக்கிசான் நடித்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம்
அவருக்காகவே நிச்சயம் பார்க்கலாம். சீனாவின் பாரம்பரிய கலைப்பொருட்களை பல்வேறு நாடுகள்
தொடுத்த போர்களின் மூலமாக கொள்ளையடிக்கப்பட்டு பல்வேறு ஏல நிறுவனங்களின் கைகளில் சென்று
சேருகிறது. அவற்றை தன் தேசமான சீனாவிற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் கலைப்பொருட்கள்
சேகரிக்கும் பெண்ணிற்கு, அப்பொருட்களைத் திருடி ஏல நிறுவனம் ஒன்றிற்கு விற்கும் ஜாக்கிக்கும்
ஒரு நிகழ்ச்சி மூலம் தொடர்பு ஏற்பட, அவர்கள் இணைந்து அப்பொருட்களை தங்கள் நாட்டிற்கு
கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். ஏல நிறுவனத்தின் ஆதிக்கத்திலிருந்து அப்பொருட்களை
மீட்டார்களா? இல்லையா என்பதுதான் கதை.
ஜாக்கியின் துள்ளலான சண்டைகள், துறுதுறுப்பு,
கோமாளித்தனங்கள், புத்திசாலித்தனம் என்று மகிழ்ச்சிகொள்ள வைக்கிறார். சண்டைக்காட்சிகள்
எல்லாமே ஜாக்கியின் ஸ்பெஷல்தான். இம்முறையும், ஸ்கேட்டிங், பாரசூட், காட்டுக்குள் என
வகையான, வகையான சண்டைக்காட்சிகள் உள்ளன. அதைத்தாண்டி ரசிக்கவைப்பது இவை அனைத்தையும்
உள்ளடக்கிய கதைதான்.
படம் எழுப்பியிருக்கும் கேள்வி முக்கியமானது.
போரினால் பல நாடுகள் தாங்கள் கொள்ளையடித்துச்சென்ற கலைப்பொருட்களை திருப்பி நல்லெண்ட
அடிப்படையில் அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அளிக்கவேண்டும் என்பது நல்லதுதானே. அண்மையில்
இதுபோல ஆஸ்திரேலிய பிரதமர் சிவன் சிலையை இந்தியாவிற்குத் திருப்பித்தந்திருக்கிறார்.
இந்த சிலை திருடி அந்நாட்டில் விற்கப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக