நேர்காணல்: ஜோக்கின் அற்புதம்

நேர்காணல்: ஜோக்கின் அற்புதம்

                                                ஆங்கிலத்தில்: ஓமர் ரஷீத்

                                                தமிழில்: கார்த்திக் வால்மீகி
                                                                     ஷாம்பவி மித்ரா

திறந்த வெளியில் அமர்ந்து மலம் கழிப்பதை யாரும் ரசித்து செய்வார்களா என்ன?

                இவரின் நாட்கள் தொடங்குவதும், நிறைவடைவதும் கழிப்பறை தொடர்பான பணிகளில்தான். 68 வயதாகும் ஜோக்கின் அற்புதம் தனது நாற்பது ஆண்டுகால குடிசைப்பகுதி மக்களுக்கான வாழிடம் மற்றும் சுகாதார வசதிகளுக்கான போராட்டத்திற்காக மகசேசே விருது, பத்ம விருது போன்றவையும் பெற்றுள்ளார். மும்பை தாராவி, உலகிலேயே பெரிய குடிசைப்பகுதி ஆகும். அப்பகுதியைச் சேர்ந்தவரான அற்புதம், அந்தப்பகுதி மக்களுக்கு உதவுவதை தன்னியல்பாக பெற்றிருக்கிறார். தேசிய குடிசை வாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். அச்சங்கம் இந்த ஆண்டு நோபல் அமைதிப்பரிசிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கழிவறைகளை கட்டுவது, ஸ்வட்ச் பாரத் அபியான் மற்றும் சுகாதார விஷயங்கள் குறித்தும் விரிவாக பேசுகிறார்.
40 ஆண்டுகளாக வாழிடம் மற்றும் சுகாதார வசதிகளுக்காக போராடி வருகிறீர்கள். என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக நினைக்கிறீர்கள்?
                1987 ல் எனது முதல் கழிவறையைக் கான்பூரில் அமைத்தேன். அன்றிலிருந்து இன்றுவரை 1,00,000 கழிவறைகளை உலகம் முழுவதும் அமைத்துவிட்டேன். அதில் மும்பையில் மட்டும் 20,000 கழிவறைகள் இருக்கும். 5 மில்லியன் டாலர்கள் என நான் திரட்டிய பணம் முழுவதும் கழிவறைகள் கட்டவே செலவழித்தேன். இன்று கழிவறை குறித்த பார்வைகள் மக்களிடையே மாறியுள்ளது.அரசின் அணுகுமுறையும் இன்று கழிவறை குறித்து மேம்பட்டுள்ளது என்பது தயக்கமில்லாமல் அதுபற்றி பேசுவதிலிருந்தே அறிய முடிகிறது.

ஏறத்தாழ 50 முறை உங்களது திட்டங்களை செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் கைதாகி இருக்கிறீர்கள்? சுகாதார களப்பணியாளராக வாழ்க்கை எப்படி உள்ளது?

                இன்று நான் பிரபலமாக இருக்கிறேன். முன்பு அழுக்கான குற்றவாளி போலவும், தீண்டத்தகாதவனாகவும் நடத்தப்பட்டேன். ஒவ்வொரு முறையும் நான் ஒரு திட்டத்தைத் தொடங்கினால் அதற்கு அனுமதி பெற 10 இடங்களுக்கு ஓடுவேன்.அப்படி அதிகாரிகளிடம் கிடைக்கும் ஆதரவும், போதாமையைக் கொண்டதாகவும், தவறான வழிநடத்துதலாகவும் இருந்தது. சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து அலைகழித்தல்களையும், இடையூறுகளையும் சந்தித்தார்கள். நாங்கள் தொடர்ந்து பதற்றத்திலேயே இருந்தோம். பணியில் பங்கு பெற்றவர்களை இடையூறு செய்து நீக்கினால் எந்த சுகாதாரக்கொள்கை அல்லது திட்டம் வெற்றி பெற முடியும்?


மோடி 2019 ஆண்டிற்குள் குடிசை வாழ் மக்களுக்கு வீடு, நீர், உடல்நலம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவை கிடைக்கும் என்று கூறியிருக்கிறாரே?

                எந்த பிரதமருமே மோடிபோல செங்கோட்டையில் நின்று கழிவறை பற்றி பேசவில்லை என்பதற்காக அவரைப் பாராட்டுகிறேன். ஆனால் அது இதோடு முடியவில்லை. நீங்கள் உறுதியாக இதனைச்செய்ய நினைத்தால் அதற்கு ஏன் 2019 வரை காத்திருக்கவேண்டும்? ஒரு ஆண்டிலேயே செய்ய முடியாதாஇது ஒன்றும் விண்வெளி அறிவியல் அல்ல. நேருவின் ஐந்தாண்டுத் திட்டங்களைப் போலான அணுகுமுறையைத்தான் இவர் கையாளுகிறார். எளிய, தற்சார்பான, தனித்த கழிவறைத் திட்டங்களே நமக்குத்தேவை. போர்க்கால நடவடிக்கையாய் பிரதமர் இதனை முன்னிலைப்படுத்த வேண்டும்.

ஸ்வட்ச் பாரத் அபியான் திட்டம் எந்தளவு சாத்தியமானது?

                இத்திட்டம் மதிப்பானதும், குறிப்பிடத்தக்கதும்தான். ஆனால், நடைமுறையில் பிரதமர் பிரபலங்களை நம்பி இறங்கியிருப்பது இத்திட்டத்திற்கு பெரும் தோல்வியையே தரும். 9 திட்ட விளம்பர தூதர்கள் குடிசைகளுக்கு இடையே நடந்தோ அல்லது அங்குள்ள கழிவுகளை கண்டிருப்பார்களா? குறியீடுகள் என்பது சில விஷயங்களுக்கு சரி. ஆனால் அதைத்தொடர்வது அவ்வளவு சரியானதல்ல. குழுவாகவும், பங்காளர்களாகவும், ஆழ்ந்த சிந்தனையோடு இத்திட்டத்தில் ஈடுபடவேண்டும். களத்தில் திட்டங்களைத் தீட்டி உடனே அதனை செயல்படுத்தவேண்டும். குடிசைகளை மோடி இல்லாமல் போகச்செய்ய, அவர்களின் வாழ்வைக் கவனித்து, அவர்களின் உடனடித்தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.


நடைமுறையிலான செயல்பாடு என்பது வேகமாக நிறைவேறவேண்டும் என்கிறீர்களா?
                குடிசைகள் தீப்பற்றி எரிந்தால் அரசியல்வாதிகள் அதற்கு உடனடியாக இழப்பீடு பணம் அறிவிக்கிறார்களே! கழிவறைகளை அமைத்துக்கொடுப்பதில் ஏன் அதுபோன்ற வேகத்தை, அவசரத்தைக் காட்டக்கூடாது? சிறிய மாற்றத்தை பார்க்கலாம். சின்ன ஆதாரத்தைக்காட்டுங்கள் இதுபோன்ற ஒன்றுக்கு. நாங்கள் உங்களை நம்புகிறோம்.



ஸ்வட்ச் பாரத் அபியான் பற்றி உங்களுக்கு நல்ல எண்ணம் இல்லையா?
                காலக்கெடு என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பொதுவாக திட்டம் அடிப்படையான சிந்தனையில்  அவை சிறந்தவைதான். நடைமுறையில் தோல்வி பெறுவதை அது தடுக்கமுடியாது. வேலை செய்ய விரும்பினால் உடனே அதை செய்யத்தொடங்கலாமே? அதிகாரம் உங்களிடம்தானே இருக்கிறது? பின் எங்கே தொடக்கம்? இதற்கான குழு எங்கே? நகரத்தில் உள்ள 5 சேரிகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அவர்களுக்கு கழிவறைகளை போர்க்கால அடிப்படையில் உருவாக்கித்தரமுடியும். எங்களுக்கு ஒரு தொடக்கத்தைக் கூறுங்கள். ஒருங்கிணைந்த தேசங்களின் நூற்றாண்டு வளர்ச்சிக்கான திட்டங்கள் 2015 லிருந்து 2030க்கு மாற்றப்பட்டுள்ளது. அதே நிலையைத்தான் நமது திட்டங்களும் பின்பற்றி மெதுவாக இயங்குகிறது.

திறந்தவெளியில் மக்கள் மலம்கழிப்பதை தடுக்க அரசும் முயற்சிகள், செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளதே?

                நான் என் அந்தரங்கத்தை, தனிமையை விரும்புகிறேன் என்றாலும் அதைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. திறந்தவெளியில் மக்கள் மலம் கழிப்பது குறித்து மக்களை அரசு எப்படி அவமானப்படுத்த முடியும்? யாரும் இதனை மகிழ்ச்சியோடு செய்வது கிடையாது. எனது ஊரான கோலார் தங்கவயல் பகுதியில்(கர்நாடகா) இரண்டு கற்கள் வைத்து அதோடு ஒரு வாளியினை கீழே வைத்து இருந்தார்கள். அதற்கு கதவு இல்லை. விழிப்புணர்வு என்பது கழிவறைகளைக் கட்டினால் மட்டுமே வரும். 1000 மீட்டருக்கு அப்புறம் நின்றால் வராது. 50 மீட்டருக்குள் செய்ய வேண்டிய பணி இது. உலகத்தரத்திலான நகரம் என்று மோடி அழைக்கும் மும்பையில் சுகாதார வசதிகள் நாம் வெட்கப்படும்படி உள்ளன. எளிமையான சுகாதார, சுத்தத்திற்கான செயல்பாடுகள் திட்டமிடக்கூட இல்லை.

தேசிய குடிசை வாழிட மக்கள் சங்கத்தில் பெண்களும் சுகாதார செயல்பாட்டுப் பணிகளில் ஈடுபடுகிறார்களோமே?

                வீட்டில் பெண்கள்தான் பெரும்பாலும் குப்பைகளை தினமும் நேரடியாக கையாள்கிறார்கள். சுத்தத்திற்கான விஷயத்தில் பெண்களின் பங்கு தொடர்ந்து இயங்குவதும், தொடர்பானதும் ஆகும். மும்பை தாராவியில் வறுமையான வீட்டிற்குச் சென்று பாருங்கள். அங்கு தரையை துடைத்து சுத்தமாக இருப்பார்கள் அப்பெண்கள். நிறைய பெண்கள் பங்கேற்பாளர்களாக நமக்கு தேவைப்படுகிறார்கள். பிரதமர் சுத்தம் பற்றிப்பேசுகிறார்  ஆனால் அவருடைய திட்டத்தில் பெண்கள் எங்கே? பெண்களை சுத்தம் பற்றிய செயல்பாடுகளில் ஈடுபடுத்தவில்லை என்றால் உங்களுக்கு சுத்தம் பற்றி எந்தப்புரிதலும், வலுவான சரியான சிந்தனையும் இல்லை என்றே பொருளாகிறது.


                                நன்றி: தி ஹிந்து ஆங்கிலம் நாளிதழ் அக்டோபர்  2014.

கருத்துகள்