நிழலுக்கு வெளியே…

நிழலுக்கு வெளியே…

          பங்கஜா ஸ்ரீனிவாசன்

             தமிழில்: ஜோசப் மென்கீல்

     சாலி ஹோல்கரின் பணியினால் கைத்தறி நெசவு செய்பவர்கள் வெளிச்சம் கிடைக்கிறது.

    சாலி ஹோல்கர் அவர்களை நிழல்பெண்கள் என்று அழைக்கிறார். தறியில் அமர்ந்து சேலைகளை நெய்து அதனை சரியான நேரத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். பிறகுதான் அவர்களுக்கு அப்பணிக்கான ஊதியம் வழங்கப்பட்டு குடும்பங்களை நடத்துவதற்கான வலிமை அதன்மூலம் கிடைக்கிறது.

     ‘’ அந்த சமயம் நான் ரேவாவில் இருந்தேன். (சாலி மகேஸ்ரி நெசவாளர்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்தார்) எனது அனுபவத்தின் வாயிலாக நான் உணர்ந்தது பெண்கள்தான் இந்த துறையின் முதுகெலும்பாக உள்ளார்கள் என்பதுதான். இந்தப்பணியில் பெண்கள்தான் பல முன்னேற்பாடான பணிகளை செய்து, நெசவுக்கான தேவைகளை நிறைவு செய்கிறார்கள். ஆனால் ஊதியமோ ஆண்களுக்குத்தான் சென்று சேர்கிறது ’’.

     ஹோல்கர் இந்தப்பெண்கள் வாழ்வதற்காக பருத்தி பறிப்பது, பாத்திரங்கள் கழுவுவது, கல் உடைப்பது ஆகியவற்றை செய்து வந்ததைப் பார்த்தார். ‘’ நெசவுக்கான சிறிய வாய்ப்புகள் உள்ள ஊரில் இதுபோன்ற குறைந்த சம்பளம் கொண்ட வேலைகள்  அவர்களுக்கு தேவைதான் ’’ என்று கூறுபவர் 2003 ல் பெண்கள் நெசவாளர் அறக்கட்டளையை தொடங்கினார்.

     ‘’ நர்மதா நதி பாயும் மகேஸ்வர் இருப்பதால் செறிவான நீரினால் இங்கு பருத்தி நன்றாக விளைந்தது. அதனால் மகேஸ்வர் பகுதி பெண்களின் திறமையை வெளிப்படுத்த திட்டம் ஒன்றினை தீட்டி, அதோடு நாட்டு ரகமான குறுகிய ரக பருத்தியை பயன்படுத்த முடிவு செய்தோம் ‘’.

     ஹோல்கரின் குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் பெண்களை நேர்காணல் செய்து, தேவையான பெண்களை  தேர்ந்தெடுத்து நெசவுக்கான பணியில் பயிற்சி கொடுத்தனர்.  இதற்கான நிதியை மத்திய பிரதேச கைத்தறித்துறை அளிக்கிறது.  உள்ளூர் பருத்தி, இந்த கைத்தறி பெண்களைக்கொண்டு நாங்கள் செய்வது மிகப்பெரிய ஒன்று என்ற போதிலும், இதுபற்றியும் நாங்கள் அதிகம் அறிந்ததில்லை என்ற போதும், இதற்கான செயல்பாட்டில் அர்த்தம் உண்டு என்பதை அறிந்தோம் ’’.

     விரைவிலேயே பெண் நெசவாளர்களுக்கு வெளியிலிருந்து எவ்வித நிதியும் தேவைப்படவில்லை. இன்று இவர்களின் நெசவுப்பொருட்கள் 21 நாடுகளில் அனோகி, குட்எர்த், அஞ்சுமோடி, ராகுல் மிஸ்ரா, சபியாசச்சி, பரோமிதா பானர்ஜி என்ற பெயரில் குறிப்பிட்ட தனித்துவத்துடன் விற்பனையாகி வருகிறது. ‘’ இவர்கள் அதிக நாட்கள் நிழலுடன் இருக்கவில்லை. அவர்களின் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கான செலவை சமாளித்து கொள்கிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் பணத்தை சேமிக்கிறார்கள். சந்தை குறித்தும் ஆர்வத்தோடு கற்கிறார்கள். மேலும் தங்கள் உற்பத்தி பொருட்கள் குறித்து பெருமையாக உணர்கிறார்கள் ‘’ என்று திருப்தியுடன் கூறுகிறார் ஹோல்கர்.

     2013 ஆம் ஆண்டு பெண் நெசவாளர்கள் கைத்தறி பள்ளியினைத் தொடங்கியுள்ளார்கள். ‘’ இப்பள்ளி இளம் நெசவாளர்களுக்கு ஆங்கிலம், ஸ்மார்ட்போன்களை வணிகத்திற்கு பயன்படுத்துவது, மாற்று நூலிழைகளைப் பயன்படுத்துவது, ஆடை வடிவமைப்பு குறித்த தகவல்களை தெரிந்துகொள்வதோடு, வணிகர்களோடு தொடர்பில் இருக்கவும் இணையத்தை அறிமுகப்படுத்துகிறோம். இந்தியாவின் நாகரிகம் சார்ந்த விஷயங்கள் உலகிற்கு பொக்கிஷம் போன்றவை. உலகில் வேறெங்கும் இத்தனை வகைகளில் தரமான கைத்தறி உடைகள் பொருத்தமான சரியான விலைகளில் கிடைக்க வாய்ப்பில்லை ‘’ என்கிறார் ஹோல்கர்.

     கைத்தறிகளைக் காப்பாற்றி வருவதே பெண்கள்தான் என்று சுட்டிக்காட்டுகிறார் ஹோல்கர். ‘’ கைத்தறி நெசவு என்பது பெருமளவு வீட்டைச்சார்ந்து உழைத்து வருமானம் பெறும்வழிதான். நான் வாரணாசி, பெங்களூர், கோயமுத்தூர் பகுதிகளைச் சேர்ந்த நெசவாளர்களிடம் பேசியபோது, ஆண்கள் கௌரவமான, அதிக ஊதியம் தரும் வேலைகளை நாடிச்சென்றுவிடுவதை அறிந்தேன். பெண்கள் மட்டும்தான் தறியில் அமர்ந்திருக்கிறார்கள். இது பொதுமையமான செயல்பாடானாலும், இது தற்காலிகமானதுதான். பெண்கள் போட்டியிடத்தயாராக இருப்பதோடு, தம் நாட்டு நாகரிகத்தையும் தங்களின் செயல்பாடோடு இணைத்து கொண்டு செல்வதோடு தமக்கான ஊதியத்தையும், வீட்டிலிருந்தபடியே தம் உழைப்பின் மூலம் பெறுகிறார்கள் ‘’ என்கிற சாலி ஹோல்கருக்கு பள்ளியில் பயில மாணவர்கள் கிடைப்பதில் சிக்கலில்லை. ஆனால் அவர்கள் கற்க பெற்றோரின் அனுமதி பெறுவதில்தான் கடும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. ‘’ கைத்தறியைப்பொறுத்தவரை ஒவ்வொரு கரங்களும் மதிப்பு மிகுந்தவை. மேலும் தொடர்ச்சியான வருமானமும் இதில் முக்கியமானவை. எனவே நாங்கள் மாணவர்களது பெற்றோர்களிடம் பேசி அனுமதி பெற்றதோடு, அவர்கள் குடும்பத்திற்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகையையும் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கிவருகிறோம் ’’. என்று கூறுகிறார் சாலி ஹோல்கர்.

     இந்தப்பள்ளியை பிரபலப்படுத்த ஹோல்கரின் குழுவினர், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களையும், தனியார் நெசவுத்தொழில் நிறுவனங்களையும், இந்திய நெசவாளர்கள் சேவை மையத்தலைவர்களையும், சந்தித்து ஆதரவு திரட்டியிருக்கிறார். இவர்கள் தங்களுடைய திட்டங்களை பல முன்னணி வடிவமைப்பு பள்ளிகளில்  விளக்கியிருக்கிறார்கள். இதில் என்ஐடி, ஷிருஷ்டி ஆகிய இவ்விரண்டு பள்ளிகளும் இத்திட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்க முன்வந்திருக்கிறார்கள். என்ஐடியிலிருந்து பெண் நெசவாளர்களில் வடிவமைப்பாளர்கள் வரத்தொடங்கி உள்ளனர். அவர்கள் தங்களது பணியின் மூலம் இத்திட்டத்தை முன்னுக்கு கொண்டு செல்கிறார்கள்.

     ‘’சமூக வலைத்தளங்கள் குறைவாக இயங்குகின்ற கிராமப்புறங்களில் இந்தக்கட்டுரை பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால் நெசவாளர்கள் தங்களுக்குள் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் எளிதாக பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ள முடியும் ’’.

     கோயமுத்தூர், பெங்களூரு, மைசூரு, மங்களூர் ஆகிய இடங்களில் கடைகளைக்கொண்டிருக்கும் பிஎஸ்ஆர் நிறுவனர் பி.எஸ். ரங்கசாமி, ‘’ நெசவாளர்கள் எப்படி நெய்வது என்று கற்றுக்கொள்வதை விட வடிவமைப்பு மற்றும் தகவல்தொடர்பில் திறன்கொண்டவர்களாக இருந்தால் போதுமானது. அவர்கள் சிறந்த வடிவமைப்பில் ஆடைகளை வடிவமைத்தால் நாங்கள் அதனை வாங்கிக்கொள்ளத்தயாராக இருக்கிறோம். எந்த இடைத்தரகர்களும் இதில் தேவையில்லை ’’ என்று ஹோல்கரிடம் கூறியிருக்கிறார்.

     ஹோல்கரின் கனவுகள் ஆச்சர்யங்கள் பலவும் நிரம்பியவை. பயிற்சிகளை நன்கு கற்றுக்கொண்ட பெண்கள் பிற பெண்களுக்கு ஆலோசகர்களாக இருக்கிறார்கள். ‘’இவர்கள் தொடர்ந்து பயணிக்கிறார்கள். தங்கள் திட்டங்களை கூறுவதோடு, கற்பித்தலையும் செய்கிறார்கள். இவர்களின் குழந்தைகள் நெசவுவேலைகளை செய்துகொண்டிருக்கலாம். பலர் எங்களுடன் இணைந்து முதலிலேயே நெசவு நெய்திருக்கிறார்கள். மற்றவர்கள் மாணவர்களாக பள்ளியில் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு கைத்தறி அற்புதமான வழியாக கைகொடுத்திருக்கிறது. இவர்களின் முகத்தில் ஒளிருகின்ற புன்னகை, வாழும் நிலையின் மேம்பாடு ஆகியவைதான் நாம் சரியாக பொருத்தமான பாதையில் பயணிக்கிறோம் என்று எனக்கு உணர்த்துகிறது ’’ என்று மலர்ச்சியான புன்னகையுடன் விடைதருகிறார் சாலி ஹோல்கர்.


                நன்றி: தி இந்து ஆங்கிலம் 30 நவம்பர் 2014

கருத்துகள்