வாழ்வின் கடைசித்துளியில் வலி நீக்கும் மருத்துவர்

வாழ்வின் கடைசித்துளியில் வலி நீக்கும் மருத்துவர்
                      சென்ஞ்சோ செரின் தாமஸ்

                      தமிழில்: ஆலன் வான்கா

கேரளாவைச் சேர்ந்த மரு. ராஜகோபால் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுபவர்களுக்கு அன்பையும், கவனிப்பையும் அவர்களின் கடைசித்தருணம் வரை தர முயற்சிக்கிறார்.

     மரு. ராஜகோபால் குதூகலமாக தொடங்கிய அன்றைய தினத்தை நினைவு படுத்தி பார்க்கிறார். புற்றுநோய் நோயாளி ஒருவரை நரம்பு சிகிச்சை மூலம் வலியில்லாமல் இருக்கச்செய்கிறார்.  தன் திறமைகளை தானே வியந்து அமைதியாக அன்று இரவு உறங்கச்செல்பவருக்கு, அடுத்தநாள் எழும்போது, சிகிச்சையளித்த புற்றுநோய் நோயாளி தற்கொலை செய்துகொண்டதாக செய்தி கிடைக்கிறது.

     தொண்டைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனது மருத்துவரின் பேரில், மரு. ராஜகோபாலைத் தேடி வந்தார். அவர் ராஜகோபாலிடம் மேம்பட்ட சிகிச்சை முறைகளை எதிர்பார்த்தார். ஆனால் ராஜகோபால் மயக்கமருந்து கொடுத்து நரம்புகளை உணர்விழக்கச்செய்யும் நிபுணராக இருந்தார். ஆனால் அந்த நோயாளி எதிர்பார்த்தது அத்தகைய சிகிச்சையல்ல. அவரின் இறுதிமுடிவை ராஜகோபாலின் சிகிச்சை தடுக்கமுடியவில்லை.

     இந்த சம்பவமானது, மருத்துவத்தின் மீது ராஜகோபால் கொண்டு இருந்த அணுகுமுறையை மாற்றியமைக்கிறது. ‘’ நான் அதுவரை மகாபாரத அர்ஜூனன் போல இருந்தேன். நோயாளிகளின் நரம்புகளை மட்டுமே கவனமாக பார்த்தேன். அவர்களை வேறுமாதிரி பார்க்க முடிந்திருந்தால், அவரின் பிள்ளைகள் தங்கள் அப்பாவோடு இரண்டு ஆண்டுகள் வாழ்ந்திருக்க முடியும். இது என்னை பெருமளவு மாற்றியமைத்தது ’’ என்று கூறுகிற ராஜகோபால் அண்மையில் அலிசன் டெஸ் போர்ஜஸ் எனும் விருதினை தனது சிறந்தசெயல்பாடுகளுக்காக பெற்றிருக்கிறார்.

     பிறகு, ராஜகோபால் வலியினைக் குறைத்து சமநிலைப்படுத்தும் பல சிகிச்சை முறைகளை புத்தகங்கள் மூலமாக அறிந்துகொண்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் கடுமையாக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறிய அளவில் உதவத் தொடங்கினார். வலியைக் குறைத்து தணிக்கும் பிரிட்டிஷ் தாதியான கில்லி பர்ட் ன் பயிற்சிவகுப்பில் கலந்துகொண்டார்.

     அந்த பயிற்சி வகுப்பிற்கு பிறகு, ராஜகோபால் கில்லி பர்டிடம் தன் சிறிய முயற்சிகளைப்பற்றிக் கூறி அதனைக்காண அழைத்திருக்கிறார். பிறகு, கில்லி பர்ட் ஆக்ஸ்போர்ட்டில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ராஜகோபாலை  அறிவுறுத்தியிருக்கிறார். ‘’பத்து வார பயிற்சி முகாமில் எனக்கு உதவித்தொகையையும் கில்லி பெற்றுத்தந்தார். அவரின் உதவியினால் வலிநிவாரணிமுறைகளை மிகச்சிறந்த மனிதரான ராபர்ட் கிராஸிடம் இருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது ’’ என்கிறார் ராஜகோபால். பயிற்சி முடித்து ராஜகோபால் நாடு திரும்பியதும், அவரது நண்பரும், மருத்துவருமான சுரேஷ்குமார் இவரது பணியில் இணைகிறார். அதன் பின் சுரேஷின் நண்பர் அசோக்குமார் மற்றும் மருத்துவரல்லாத பல தன்னார்வ நண்பர்களும் இந்த முயற்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

     ‘’மரு. சுரேஷ்குமார் வலிகுறைக்கும் இந்த முயற்சியின் கதாநாயகன் என்று கூட கூறலாம். அவர் இதில் பங்கேற்றபின்தான் பல நண்பர்கள், தன்னார்வலர்கள் இதில் பங்கேற்க உள்ளே வந்தார்கள். பலரும் மருத்துவப் பட்டங்களைப் பெற்றவர்கள் இல்லை ’’ என்று சிரிக்கிறார் ராஜகோபால்.
1993 ஆம் ஆண்டு இவர்கள் வலிநிவாரணி மையத்தை கோழிக்கோட்டில் பதிவுசெய்கிறார்கள். 1994 ல் இந்த மையம் முழுக்க வலிநிவாரணிக்கான மையமாக நோயாளிகள் தம்மை தாமே இந்த மையத்தில் அனுமதித்துக்கொள்ளும் படியாக மாறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு, உலக சுகாதார மையம் இந்த மையத்தின் திட்டத்தினை மாதிரி திட்டமாக அறிவிக்கிறது.

     ‘’ 2002ல் எனது பணி ஓய்விற்குப்பின் 10 ஆண்டுகளுக்கு பின் கூட வலிநிவாரணிக்கான சிகிச்சைகள் கேரளாவில் வளரவில்லை. தேசிய அளவிலான வலிநிவாரணி சிகிச்சைத்திட்டம் தேவைப்படுகிறது. அதனால்தான் பலியம் இந்தியா எனும் அமைப்பு தோன்றியது. இதற்கான மையங்களை டெல்லி, இந்தூர், சென்னை ஆகிய இடங்களில் அமைத்திருக்கிறோம் ‘’ என்கிறார் மரு. ராஜகோபால்.

     திருவனந்தபுரம் அருமணா மருத்துவமனை கூடத்தில் அமைதியும், நேர்மறைதன்மையுமாக எதிரொலிக்கிறது. மரு.ராஜகோபாலின் குழுவினர் இரவும், பகலுமாக நோயாளிகளின் இறுதிக்கணத்தை வலியில்லாமல் மகிழ்ச்சியானதாக மாற்ற கடுமையாக உழைக்கின்றனர்.

     பிந்து நாயரை மரு. ராஜகோபால் தனது மையத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய பேச்சு அவரை இந்த பணிகளின் மீது திருப்பி இருக்கிறது. அவிட்டம் திருநாள் மருத்துவமனையில் குழந்தைகளை நான்கு ஆண்டுகளாக பராமரித்து வரும் பணியினை பிந்து நாயர் செய்து வருகிறார்.

‘’ நாங்கள் குழந்தைளின் பெற்றோர்கள் கூறுவதை கவனித்துக்கேட்கிறோம். அவர்களை தேற்றுவதற்காக சாய்ந்துகொள்ள எங்கள் தோள்களை தருகிறோம்; இவைதான் நாங்கள் செய்வது‘’ என தன்னடக்கமாக பேசுகிறார் பிந்து நாயர்.

   1993 ல் தன்னை நெகிழவைத்து இம்மையத்தின் அறங்காவலர்களில் ஒருவராக தன்னை மாற்றிய நிகழ்ச்சி குறித்து பினோத், ‘’ கோழிக்கோடு மருத்துவக்கல்லூரிக்கு 1993 ஆம் ஆண்டு சென்றபோது, ராஜகோபால் ஒரு சிறிய அறையில் தன் பயிற்சிகளை தொடங்கி இருந்தார். அங்கிருந்த நோயாளிகள் சிரித்துக்கொண்டு இருந்தார்கள். அறை முழுக்க அன்பும், கருணையும் பொலிய அச்சூழ்நிலை இருந்தது.  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி, சிரித்து, விளையாடிக்கொண்டிருந்தாள். சில மாதங்களுக்கு பிறகு அவள் இறந்துவிட்டாள் என்றாலும், ஆனால் அதுவரை அவள் மகிழ்ச்சியாக இருந்தாள் ‘’ என்று கண்களில் நீர் நிறைய கனிவோடு பேசி விடைதருகிறார் பினோத்.

நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 23 நவம்பர் 2014.



கருத்துகள்