நூல் வெளி



35
இந்தியப்பிரிவினை சினிமா
யமுனா ராஜேந்திரன்
உயிர்மை பதிப்பகம்

                                                     பக்சி
இந்நூலில் பிரிவினையைப்பற்றிய பிரச்சனைகளைப்பேசும் 7 படங்கள் அவற்றின் கதை, அது ஏற்படுத்திய தாக்கம் பற்றிய முழுமையான விளக்கம் என நம்முன் வைக்கிறது.

இதில் நான் முழுமையாக பார்த்திருப்பது தீபா மேத்தா இயக்கிய எர்த் படம் ஒன்றைத்தான். 1999 ல் வந்த இப்படம் பாப்ஸி லபித்வா எனும் பாகிஸ்தான் எழுத்தாளர் எழுதிய Cracking India  எனும் நாவலை மூலமாக கொண்டது. இதில் வரும் காட்சிகள், பிரிவினை கலவரங்களை சூழல்களை ஓரளவு உணர்த்தும்படியான காட்சிகளைக்கொண்டுள்ளன என்று கூறலாம். கதையைக்கூறும் லெனி தன் உறவினரான சிறுவனோடு எதிரில் உள்ள சிறுவனோடு நிகழ்த்தும்  காட்சி எனக்கு பிடித்தமானது என்பேன்.  லெனியாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பில் துக்கம், மகிழ்ச்சி, வலி என  அத்தனையையும் அந்த முகம் வெளிப்படுத்துகிறது. அமீர்கான் முஸ்லீம் மக்கள் இந்துமக்களை கொன்று குவிப்பதை சிரிப்புடன் ரசிக்கும் காட்சியில் பதறும் நந்திதாதாஸின் முகபாவம் ஒன்றேபோதும்; அவரது நடிப்பிற்கு சான்றுகூற.

இது தவிர ஹேராம் படத்தினை சிறிது பார்த்திருக்கிறேன். இந்த திரைப்படத்தினைப்பற்றி ஆசிரியர் தர்க்க விலகல் குறித்து விரிவாக எதிர்ப்பார்த்தது போல பேசியிருக்கிறார். மேலும் படத்தில் நாம் பின்பற்ற வேண்டிய அரங்க அமைப்பு, காலம் குறித்த நினைவு, நடிகர்கள் போன்றவை சிறப்பாக உள்ளது என்று பாராட்டியிருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதில் கமலின் முயற்சிகள் தவறில்லை என்றாலும் படத்தினைப்பார்த்தால் எனக்கு சாகேத ராமன் தெரிவதில்லை. கமல்தான் தெரிகிறார் என்பதால், படம் பார்க்கமுடியவில்லை. இந்தப்படத்தினை விமர்சிக்க ஆசிரியர் புதிய கலாச்சாரம் இதழின் விமர்சனங்களையும கணக்கில் கொண்டுள்ளார் என்பது ஆச்சர்யம்.

 கோவிந்த் நிஹ்லானியின் தமஸ், ஸியாம் பெனகலின் மம்மோ, பமேலா ரூக்ளின் டிரெயின் டூ பாகிஸ்தான், சபியா சுமரின் காமோசி பாணி ஆகிய படங்களும் தீர்க்கமான அரசியல் பிரச்சனைகளை முன்வைத்து நம்மோடு உரையாடுகின்றன. இப்படத்தின் கதை மற்றும் விஷயங்களை வாசிக்கும்போது, அந்தப்படத்தினை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் உருவாவது இயல்பானது. அந்தளவு நடந்த நிகழ்ச்சிகளைப்பற்றி தங்கள் பார்வையை இயக்குநர்கள் திரையில் பதிவு செய்துள்ளார்கள்.
     தேசப்பிரிவினை படங்கள் பெரும்பாலும், அப்பிரிவினையை அனுபவித்த, கண்ட மனிதர்களின் நாவல்களிலிருந்து உருப்பெற்ற திரைமொழியாகி, உள்ளன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

     நான் பார்க்கவேண்டிய படங்களாக கூறுவது, கோவிந்த் நிஹ்லானியின் தமஸ், ஸ்யாம் பெனகலின்  மம்மோ, பமேலா ரூக்ஸின் டிரெயின் டூ பாகிஸ்தான், சபியா சுமரின் காமோஸி பாணி ஆகியவற்றைத்தான்.

படங்கள் பற்றிய ஆழ்ந்த கவனிப்பும், புரிதலும், வாசிப்பும் கொண்டிருந்தால் இவற்றை புரிந்துகொள்வது அற்புதமாக இருக்கும் என்பதால் விமர்சனங்களை படங்களைப்பார்க்காமல் நேரடியாக எழுதுவது அறமாகாது என்பதால் திரையில் பார்த்துவிட்டு மனம் கூறுவதை கேளுங்கள் போதுமானது.

கமலின் ஹேராம் பற்றிய பெரிதாக கூற என்னிடம் ஏதுமில்லை. நாம் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா அல்லது நம்மிடம் உள்ள திறமைகளை, அதாவது சுயமாக கற்றுக்கொண்ட விஷயங்களை ஒவ்வொரு படத்தின் மூலமாக வெளிப்படுத்த முயல்கிறோமா என்பதை தீர்க்கமாக முடிவு செய்து படத்தினை உருவாக்க முனைய வேண்டும். தொழில்நுட்பம், நடிகர்கள், அரங்கம் போன்ற பலவற்றிலும் ஆண்டவரின் படங்கள் மேம்பட்டவையாக இருந்தாலும், அவற்றை உயிர்ப்பானதாக மாற்றுவது கதையின் ஆன்மாதான். ஆனால் கதையினை பின்தள்ளி தனி ஆளுமையாக நாயகதுதி முன் வருவதால், படம் கூற வரும் கருத்து இரண்டாம் பட்சமாகிவிட, படம் வெகுஜன சினிமாவா, அல்லது கலைப்படமாக என்று ரசிகர்களுக்கும் விளக்கெண்ணெய் விட்டு வெண்டைக்காய் வதக்கின குழப்பம் வரலாம். ஆனால் இயக்குநருக்கே குழப்பம் வந்தால்..திரைப்படம் என்னாவது? அதுதான் தொடர்ந்து நடிகர் கமலும், இயக்குநர் கமலும் ஒன்றாக இணைவதில் இருக்கும் சிக்கலே. கற்ற மொத்த விஷயங்களையும் ஒரே படத்தில் இறக்கி வைக்க நினைத்தால் கதை அமுங்கி நசுங்கிப்போய் விடுகிறது. இந்த தன்மைகளை தவிர்த்துவிட்டால் படம் நேர்த்தியான தன்மையைப்பெற எந்த தடையும் இல்லை. இந்த விசாலமில்லாத தன்மையினால்தான், போதாமையினால்தான் வேறு படங்களை நோக்கிச்செல்ல வேண்டியிருக்கிறது.










                           36

காந்தியைக்கடந்த காந்தியம்: பின்நவீனத்துவ வாசிப்பு
பிரேம்
காலச்சுவடு பதிப்பகம்
                                                      ஃபெரோஸ்
    
காந்தியின் கொள்கைகள், காந்தியம் ஆகியவை பற்றிய விமர்சனத்தை எந்த புனிதப்படுத்தலும் இல்லாமல் இந்நூல் பேசுகிறது மகிழ்ச்சியான ஒன்று. மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் உள்ளிட்ட பலவற்றில் இருந்து காந்தியம் எப்படி மாறுபடுகிறது, எங்கு ஒன்றிணைந்த சிந்தனைகளைக் கொண்டிருக்கிறது என்று கூறுகிற பார்வைகளை முக்கியமானவையாக கருதுகிறேன். 

காந்தியின் கருத்துக்களை அக்குறிப்பிட்ட காலத்திற்குள் அணுகுவதும், அதன் பின்னான காலத்திற்குள் அணுகுவதும் பல விமர்சனங்களை அவர்மீது ஏற்படுத்தலாம். இதில் அவரின் தனிப்பட்ட சில உள் முரண்பாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இந்திய பொருளாதாரம் கதர், கிராமியத்தொழில்கள் என ஒரு தனிமனித சிந்தனையை நாடு முழுவதும் பரப்ப தனக்கு கிடைத்த பலவிஷயங்களை அவர் பயன்படுத்தினார். சில தனிப்பட்ட அந்தரங்க சோதனைகள் இன்று அவரை, கேள்விக்குட்படுத்தினாலும், மனிதனின் மீதான அவரது நம்பிக்கை குறையவே இல்லை என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். இதற்கான சாட்சிகளாக மதவாத சக்திகள் திருத்தம் செய்வதன் முன் வெளியிடப்பட்ட அவரது கடிதங்களின் தொகுப்பு நூலை, புத்தகங்களை , சாட்சியாக கொள்ளலாம்.

அம்பேத்கர் சட்டம் இயற்ற காந்தியின் பரிந்துரை பற்றி குறிப்பிட்டிருப்பது காந்தியின் தன்மை பற்றிய ஒரு சோறு பதமாகும். அம்பேத்கர், காந்தி வேறுபடும் புள்ளி இருவரையும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டது போன்ற பகுதிகள் மிக முக்கியமாக அனைவரும் வாசிக்க வேண்டிய பகுதியாக கூறுவேன். 

தீண்டாமை ஒழிப்பு என்பதை சாதிவர்ண முறை என்பதோடு, கலக்காமல் பேசி காந்தி முரண்பாடான நிலையை எடுத்தாலும், அதனை மேல்சாதி, தலித் இருவரிடமும் பேசுவதற்கான ஒரு வெளியாக தேர்ந்து அதனைக்கொண்டார் எனவும் கூறமுடியும்.

காந்தியைப் புரிந்துகொள்ள இந்த நூல் சிறிய அளவிலேனும் உதவக்கூடும். காந்தி எழுதிய நூல்களை மொத்தமாக படித்துவிட்டு பின் அவரைப்பற்றி எழுதுவது பொருத்தமானதாக இருக்கும். படைப்பிற்கு நேர்மையாக ஒன்றாகவும் இருக்கும்.

முக்கியமான பல நிகழ்வுகளில் காந்தி எடுத்த முடிவுகள், முன்னெடுத்த தீர்வுகள் பற்றி அதன் தன்மை, ஏன் அந்த முடிவு எடுக்க தூண்டுதல் பெற்றார் என்பதைப் பிரேம் கூறியுள்ளார். இது முக்கியமான நூலாக நாம் கருத பல காரணங்கள் உண்டு. புனிதம் என்று சிலை வைத்து மலர்தூவி வழிபடுதலை விட அத்தகைய ஒருவரின் கொள்கைகளை, முடிவுகளை விமர்சனம் செய்து அதன் தாக்கம் குறித்து பலரும் அறிந்துகொள்ள உதவுவது அவரை என்றும் நினைவில் மனதில் கொள்ள பேருதவியாக இருக்கக்கூடும். ஆங்கிலத்தில் காந்தி பற்றிய பல நூல்கள் உள்ளன. இதற்கு காரணம் காந்தியை பலவாறாக புரிந்துகொண்டு வெவ்வேறு நோக்கில் அவரை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் பாங்குதான். இது காலம் கடந்து காந்தியை வாழ வைக்க உதவும். சமுதாயத்திற்கான மனிதர்கள் காந்தி, பெரியார், அம்பேத்கர் போன்றோர்; அவர்கள் ஏதோ ஒரு நிறுவன, இயக்கச்சொத்தல்ல என்பதை மனதில் கொள்ளவேண்டும். அந்தவகையில் இந்த நூல் பெரியார், அம்பேத்கர், காந்தி என மூவரின் பார்வையையும் சிறப்பாக விளக்குகிற ஒரு புத்தகம் என்பேன்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்