நல்லநூல் வெளியீட்டாளருடன் இருளறைப் பேச்சு - 1

                                 1

          நல்லநூல் வெளியீட்டாளருடன் இருளறைப் பேச்சு
                                          சோனி எம் போனி

நீ உருப்படி ஆகணும்னா குயில  நம்பாதே என ஏவல், பில்லி, சூனியக்காரரின் மறுபிறப்பு என சத்தியம் பண்ணாத குறையாக ஆயில்யம் கூறியதால் இந்த வாதனையே வேண்டாம் என்று ஸமீரா முடிவெடுத்து, போறண்டா பதிப்பகத்துக்கு போறண்டா என அடுத்த தெலுங்கு தமிழ் டப் பட டைட்டிலை உதிர்த்துவிட்டு சென்றார். லாலே லா…ல..லா லாலே என்ற கும்பெனி பாட்டை பாடி கிளம்ப வைத்து மகிழ்ந்தோம். மாலை திரும்பி வந்தபோது வேலை பற்றிக் கேட்க பேய்முழி விழித்து வேலையின் முடிவை தெரியப்படுத்தியவர், திடீரென நினைவு வந்தது போல ‘டீ நல்லார்ந்துது’ என்றார்.

‘’ யோவ் டீயக்குடிக்க நீயி ஏய்யா தி.நகரு போவோணும். இங்க குடிக்க முடியாதா? இல்ல கெடைக்காதா? முக்குல சாத்தூரு தெய்வீகச்சிரிப்புகிட்டயே வாசமா குடிச்சிருக்கலாமல்ல ’’ என்றான் ஈரோட்டான்.

 எதற்கும் அசைந்து கொடுக்காத ஸமீரா தன் பயணத்தை சொல்ல ஆரம்பித்தார்.

அலைபேசியின் மின்கலசக்தியூட்டி( சார்ஜர் எவ்வளவு எளிமைன்னு புரியுதா) உடைந்துபோனதால் நேரம் தெரிய அலைபேசி மினுங்கவில்லை. கதிரோனின் வெளிச்சம் கொண்டு பாப்பம்மாள் ஆத்தாபோல நேரம் கணிக்க முயன்றேன்( தேர்தல் விதி அமலில் சூரியன் வருதுப்பா) குத்துமதிப்பாக மணியை நினைத்து 12பி பேருந்தில் ஏறி லஸ்கார்னர் வந்ததன் பின் தான் சகோதரர் வீட்டுக்குள் போக முடியாதபடி சாவியை தானே கொண்டுவந்தது தெரியவந்தது. செரி பாத்துக்கலாம்டா என் தோளில் தட்டியபடி இருந்ததை அருகிலிருந்தவர் அந்த மிருகம் நம்மு பக்கத்துலதான் இருக்கு என்று வெளிறி உட்கார்ந்திருந்தார்.
      ஏதோ ஒரு சமூகம் முன்னே போவதை ஆட்டோ ஓட்டுநர் நினைவிலிருத்தினார். பதிப்பகத்தில் கண்ணாடியில் நம்பிக்கையிழக்காது பேசியதை பின்தொடர முடியுமா என்று பயமாக இருந்தது. தியரியில் நான் சென்டம் வாங்க இரண்டு மதிப்பெண்தான் குறைவாக இருக்கும் என்றாலும், செய்முறையில் தேர்ச்சி மதிப்பெண்ணைப் பெறுவதே நான்சிபிரைடேவின் பேன்டசி கனவுகளை மீறி கனவு காணவேண்டியதாக இருந்தது.

      கல்லாப்பொட்டி சிங்காரத்தின் உறவைப்போல நம்பவைக்கும் எனது முகத்தை ஏதோ தப்பிருக்கு புடிக்கறன் என்று மனதுக்குள் சொல்லியபடி என் முகத்தை பார்த்தபடியே கடந்து பயணச்சீட்டை கொடுத்தார். மெட்டல் டிடெக்டர்லாம் தோத்துரும்டா என்கிட்ட என்னும் அலட்சியம் நிறைந்திருந்தது அவர் முகத்தில்.பாண்டி பஜார் நிறுத்தத்தில் இறங்கி நடந்தபோது அத்தனைபெண்களும் எனக்காக காத்திருந்து கலைந்து போவது போல் உணர்ந்தேன். (ஆசயப் பாரு நாய்க்கு என்று லூசு என் கடைவாயில் குத்துகிறான் அப்ஜக்சன் யுவர் ஆனர்!) பறவைகளின் குறிப்பாக காகத்தின் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு என்பதை தோள்பட்டையில் அதன் எச்சத்தின் மூலம் அறிந்தேன். சென்னையில் இருந்த இரண்டு ஆண்டில் பல சட்டைகளில் இந்த அடையாளம் மிச்சம்  உண்டு என்பதை பின்னர் கண்டறிந்தேன்.

      ஆட்டோவாலாவிடம் இடம் கேட்டுக்கொண்டு சித்தப்பா பெண் பதிப்பகம் சென்று, சேது சொக்கலிங்கத்திடம் பேச முயற்சித்தேன். எந்த வேலையும் அங்கில்லை என்று கூறிவிட்டார்கள். முதலாளி நிமிர்ந்தே பார்க்கவில்லை.

      பின் உளவு கறுப்புத்தொப்பி பதிப்பகம் சென்றபோது, அது பதிப்பகமா என்று ஒரு சந்தேகம் எழுந்தது. லுங்கி கட்டிக்கொண்டு ஏதோ தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கும் ஆட்கள் இருந்தார்கள். அனைத்து வேலைக்கும் ஆட்கள் உள்ளதாக அஜீரணம் உள்ளதாக நம்பும் முகபாவனையுடன் நம்பும் ஒருவர் கூறினார்.

      பிறகு நல்லநூல் வெளியீட்டாளர்களிடம் செல்ல முயன்றேன். அதற்கு முன் வனிதா பதிப்பகம் செல்ல முயன்றபோது, கொர் என சீரான தாளலய ஒலி என் காதில் கேட்டது. பதினொரு மணி இருக்கும் அப்போதே உறக்க ஒலியா? ஐயத்துடன் பலமுறை மேடம் என்ற விளியை பயன்படுத்த முதலாளி வந்துவிட்டாரோ என்று பயத்துடன் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் பதட்டத்துடன் எழுந்து, நீயா என்ற பார்வையுடன் என்னைப்பற்றிக் கேட்க, வேலைக்கான ஏதாவது அறிகுறி உள்ளே இருக்கிறதா என்று பார்த்தேன். அங்கே இருக்கும் ஒரு புத்தகம் கூட வாசிப்பதற்கான ஆர்வம் ஏற்படுத்துமா என்றால் இல்லவே இல்லை என்பேன். நீங்கள் வீட்டில் தட்டச்சு செய்யுமாறு பேசி சம்பளம் பெறலாம் என்றார்கள். நான் சென்னையில் இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். அங்கே எனது சுயவிவரக்குறிப்புகளை தந்துவிட்டு நகர்ந்தேன்.
      நல்லநூல் பதிப்பக கட்டிடம் பெரியது. காவலர்களால் வாசலிலேயே தடுக்கப்படுவேனோ என்று ஐயம் எழ வாய்ப்பில்லை. காவலர் எந்த நேரமும் யாருப்பா நீ? என்று கூப்பிட்டு விடுவாரோ என்று பயந்துகொண்டே நடந்தேன். எப்போதும் போல சிறுநீர் வெளியே கசிந்துவிடுமோ என்று வேறு ஒரு நடுக்கம். அங்கு சுவரில் செருப்பை கழட்டிவிட்டு செல் என்று கூறவே ஒரு பெரிய பத்தி எழுதப்பட்டிருந்தது. இரண்டு முறை பார்க்கலாம் என்ற நம்பிக்கை தரும் பெண்ணொருவள் என்னைப் பார்த்துவிட்டு பத்துரூபாய் கடன் கேட்டுவிடுவானோ என்று பாவித்து என்னமோ போடா என்ற முகச்சுளிப்புடன் நகர்ந்தாள். உள்ளே நுழைந்த என்னிடம் கேள்வி கேட்டவர் பொங்கல் உண்டிருப்பார் போல, காஃபி குடித்தால் தேவலை என்று கூறும்  முகத்தில் அவ்வளவு அதிருப்தி. கதிரையில் உட்கார பணிக்கப்பட்டேன்.

      அறையின் சுவர்களில் புத்தகங்கள் அனுப்ப வசதியாக பல கட்டுகளாக பொதியப்பட்டிருந்தன. பத்தடி நடந்தால் ஏதாவது விநாயகர் சிலைமீது கட்டாயம் இடித்துத்தான் நிற்கவேண்டும் என்ற நிர்பந்தம் அவ்வலுவலகத்தில் இருந்தது. எங்கும் நீக்கமற விபூதி மணந்தது. ஆட்களின் ஊதியத்தை விட சாம்பிராணி, ஊதுபத்தி, விபூதிக்கான செலவு அதிகம் வரும் என்று திடமாகப் பட்டது. நல்ல ஐந்து இன்ச் பவுடர் பூச்சோடு, சிறந்த புடவை என்று அவரே நம்பும் உடையை அணிந்து நடிகை ரேகாவின் சாயலில் ஒரு பெண்மணி என் எதிரே உட்கார்ந்து எந்த ஊரில் பெண் பார்த்து எப்போது திருமணம் செய்வாய்? என்ற கேள்வி வரை பலதையும் கேட்டார்.

      விவாதம் ரணகள கட்டத்தை எட்டியது. இவர்தான் நிறுவனரின் மனைவி என்று இருக்குமோ என்று நினைக்கையில் வெள்ளுடை வேந்தர் ஒருவர் வந்தார். நமது ஸ்லாட் முடிந்தது என்று நினைத்து அவரிடம் ஏதோ கூற, நான் அவர் பின்னால் செல்ல பணிக்கப்பட்டேன். அறை ஏதோ போட்டோ ஸ்டூடியோ இருட்டறை போல இருந்தது. மேசையின் மேல் சிக்கனமாய் ஒரே ஒரு விளக்கு எரிந்தது. சுயவிவரக்குறிப்பை தினந்தந்தி சுவாரசியத்துடன் வேகமாக பார்த்தவர் அதிலிருந்து கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.
      இருபது நிமிடங்களில் பல கேள்விகள் கேட்டுவிட்டு, ‘’ நாஞ் சொல்றேன் தம்பி, நம்ம கட தெரியுமா, அங்க ஸ்ரீனிவாச பிரபுன்னு ஒருத்தரு இருப்பாரு அவரப்போயி பாருங்க ’’ என்றார். நியூ புக் லேண்ட் புத்தகம் விற்கிற கடை அதில் எனக்கென்ன வேலை இருக்கும்? என்று நின்றேன். உடனே வெ.வே ‘’ அம்மா பயனுக்கு ஒரு காபி கொடுங்க என்று தொலைபேசியில் கூறியவர், ‘’ தம்பி போயிப்பாருங்க அடச்சொல்றேன் தைரியமாப் போங்க ’’ என்று போர்முனைக்கு தள்ளிவிடுவது போல் கூறினார்.

      வெளியே வந்து வேகமாக கிளம்ப முயற்சிக்க, ‘’ தம்பி டீயக்குடிச்சிட்டு போ ’’ என்று சாயல் ரேகா கூற தட்டமுடியுமா பெண்மணியின் வார்த்தையை ! மறுபடியும் அதே இரண்டு முறை பார்க்கலாம் பெண், இரண்டாவது முறை என்னை பார்த்துவிட்டு நகர்ந்தாள்.

      ஸ்ரீனிவாச பிரபு ஒரு பொங்கல் தின்று காஃபி குடிக்கும் அக்மார்க் திவ்யமான பிராமணர் போல, நூறு ரூபாய் கடன் கேட்கிறானே என்பதுபோல் படு சந்தேகமாய் நீங்க? ஏன்? இங்கே? என தனித்தனியாக கேட்டு பரிதவித்தார். பிறகு கூப்பிடுகிறேன் என்றார். எவ்வளவு தூரத்திலிருந்து என்று கேட்காமல் வந்துவிட்டேன். அந்த புத்தகக் கடையில் கழிவறையில் ஏனோ வறுத்த உளுந்தின் வாசம் வந்துகொண்டிருப்பது போல் தோன்றியது.






கருத்துகள்