நூல் வெளி



37
சரித்திரத்தில் படிந்த நிழல்கள்
தமிழவன்
அடையாளம் பிரஸ்
                       

                                                            சகலன்
இது பின்காலனிய நாவல். தமிழகத்தில்  பல நிகழ்வுகளை கடும் பகடியாக நிகழ்ச்சியாக மாற்றுகிறது. பாக்கியத்தாய் ராணி, பச்சைராஜன் ராஜா, ஆளும் நாடு தொகிமொலா என புனைவாக பலதும் நல்ல திட்டமாக உருவாக்கப்பட்டு, பல அரசியல் நிகழ்வுகள், இத்தளத்தில் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன.  இவர்களுக்கு இருமகன்கள் சொல்லின் பொருள், மலைமீது ஒளி என இருவரின் செயல்பாடுகள், பச்சைராஜனின் இரண்டாம் ராணி சங்கல்ப ராணி என பலரின் செயல்பாடுகளை புனைவுலகின் மற்றொரு புனைவுச்செயல்பாடாக வர்ணிக்கப்பட்டு சுவாரசியமாக பயணிக்கிறது கதை. அடுத்தது என்று எதிர்பார்க்க வைக்கும் எதிர்பார்ப்பை தன்னகத்தே கொண்டுள்ளது.

கதையினை உண்மை என்று நம்ப வைக்க பல அறிஞர்களின் பெயர்கள், நூல்களின் பெயர்கள் அடிக்குறிப்பாக காட்டப்படுவதால் நம்பி பயணிப்பதைத்தவிர வேறு வழியேதுமில்லை.  இதனிடையே பழைய வடுவூராரின் நூல்களைப்போல இடையே வரும் ஆசிரியரின் குரல் வாசகரை திசை திருப்பும் பல பதில்களைக்கொண்டுள்ளது. காவியத்தன்மையை அளிக்க பல விஷயங்கள் நுணுக்கமாக இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நாவலை தொடர்ந்து படிப்பதில் அயர்ச்சியைத்தவிர்க்க கார்சியா மார்க்வஸ், போர்ஹே போன்றவர்களின் நூல்கள் உங்களுக்கு உதவக்கூடும். புதிய வடிவத்தினை சிறப்பாக பயன்படுத்தியுள்ள நூல் என்று இந்நாவலை குறிப்பிடமுடியும்.



















                           38
தனிமையின் இசை
ஷாஜி
உயிர்மை பதிப்பகம்

                                                            சமரன்
      இந்நூலில் இசை ஆளுமைகள் குறித்த கட்டுரைகள் தவிர இசை கேட்பது குறித்த நுட்பமான  கட்டுரைகள், நாம் இசை கேட்டு வந்த முறைகளை எப்படி சீரமைத்து மேம்பட்ட ரசனையை அமைத்துக்கொள்வது குறித்து வழிகாட்டி உதவுகிறது.

     ராய் ஆர்பின்சன், எடித் ஃபியாஸ், டி.எம்.எஸ் போன்றோரின் இளமைக்கால வாழ்க்கை வாசிப்பவர்களை கலங்கடித்துவிடும் இயல்புடையவை ஆகும். கடினமான குழந்தைப்பருவம், வறிய வாழ்நிலை என இளமையில் இப்பாடகர்களின் வலிகள் ஆழ்ந்த இசை துயரமே என்ற வரிகளை நினைவுபடுத்துகிறது.

     ஜெய்தேவ் வர்மா குறித்த பதிவுகள் கடுமையான மன உளைச்சலினை இசையினை நேசிக்கும் யாருக்கும் ஏற்படுத்தக்கூடியவை. குழு அரசியல், பொறாமைகளால் நல்ல இசையமைப்பாளரை இழந்துவிட்டோம் என வருத்தம் மேலிடுகிறது.

     அப்பாவின் ரேடியோ கட்டுரை ஒரு சிறுகதையின் வசீகரத்தைக்கொண்டுள்ளது. இசை தன் வாழ்வுடன் எப்படி இணைந்து வந்துள்ளது என்று அற்புதமாக இந்நூல் முழுவதும் விளக்கியுள்ளார் ஷாஜி. இந்நூலின் ஷாஜியின் கட்டுரைகளை ஜெயமோகன், ஸ்ரீபதி பத்மநாபா, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றனர்.

     இசை ஆளுமைகள், இசை ரசனை குறித்த ஆழ்ந்த புரிதலுக்கு இட்டுச்செல்ல உதவும் எழுத்துக்கள் ஷாஜியினுடையது என்பதை இந்நூல் மெய்ப்பிக்க தவறுவதில்லை.














                           39

ரெண்டு
பூமணி
ராஜராஜன் பதிப்பகம்
                                                            சம்பன்

      இரண்டு குறுநாவல்களை உள்ளடக்கியது இந்த நாவல். வரப்புகள் கதை பள்ளியில் செயல்படும் ஆசிரியர்களின் வாழ்வினை, அவர்களின் சார்பாக நின்று பல வேடிக்கை கதாபாத்திரங்களோடு  பேசுகிறது. இதில் உரையாடல்கள் மிகுதி. இது முழுக்க ஆசிரியர்களின் வாழ்விற்கான பகுதி. அவர்களின் வாழ்க்கைச்சிக்கல்கள், திருமணம், சொத்து குறித்த விஷயங்கள் கூறப்படுகின்றன.

     வாய்க்கால் எனும் கதை பள்ளி செல்லும் கிராமத்து சிறுவர்களின் வாழ்வை அவர்களின் இளமைக்குதூகலம் குறையாமல் பேசுகிறது. இதில் கோபால், லட்சுமி இடையிலான நேசம் அழகானதாக ஊருக்கே வெட்டவெளிச்சமானதாக இருக்கிறது. முயல்வேட்டைக்கு செல்லும் தருணத்தில் கதை இடைஇடையே இறந்த காலத்திற்கு சென்று திரும்பும் உத்தி நன்றாக வந்துள்ளது.

     இறுதியில் தான் நேசித்த பெண்ணை அப்பட்டமாக கைவிட்டு வேறொரு பெண்ணை கோபால் மணந்துகொள்ள, அவன் நண்பர்கள் உட்பட ஊரே அவன்மீது வருத்தம் கொள்கிறது. இதனிடையே முயல்வேட்டையின்போது, பேசப்படும் சொற்கள் அந்த வேகமான இயக்கங்கள் என நம்மை அந்த ஊரில் வாழ்வது போலான உணர்வை ஏற்படுத்துகிறார் பூமணி.

     இந்த இரண்டாவது குறுநாவலைப்படிக்கும்போது, நாம் நண்பர்களுடான பள்ளி செல்லும் வாழ்வினை நினைத்துக்கொள்ளும்படியான நெருக்கத்தை உணர முடிகிறது. பள்ளியின் மணி ஓலி காதில் கேட்கிறது. அதுதான் ஆசிரியர் பூமணியின் வெற்றியும் கூட.










கருத்துகள்