நான்காம் காட்சி - லாய்ட்டர் லூன்


நான்காம் காட்சி :     சத்தம் எழுப்பாத குக்கூ         
                                                     கரட்டுப்புலி

குக்கூவின் கதை பார்வையற்ற ஆண், பெண் இருவரின் காதல் சேர்ந்ததா இல்லையா என மனம் பதற வைக்கும் திரில் ராமெடி கதை.

நகரத்தில் பாதிப்பேர் பார்த்த பார்வையற்றோரின் வாழ்வை எதுக்கு பாஸ்! சோகமாக காட்டிக்கிட்டு என ராஜூ முருகன் முடிவெடுத்து எல்லாப்பயவளுக்கும் புது சொக்காய் எல்லாம் போட்டுவிட்டு பளாபளா என்று கேமராவில் ஓளி ஓவியம் வரைய முயன்றிருக்கிறார். ஆனால் என்ன பண்ணுவது? ரொம்ப அவசரத்துல வரைஞ்சதால பாதி கிறுக்கலா போயிருச்சி.
     அழகாக இருக்கும் காட்சிகளிலெல்லாம் ஆழமில்லாது போய்விடுகிறது. காவல்துறை பற்றிய சித்தரிப்பு இயக்குநரின் மனக்கசப்பை சொல்கிறதோ! ஒரு நிருபரின் பாணி படத்திலும் வந்து சோதிக்கிறது.

     எளிய மனிதர்கள் விகடன் சாரதிதம்பி, குருமாவேலன் எழுதும் அரசியல் பேசுகிறார்கள். விகடனை உள்ளே கொண்டுவந்துவிட்டார்கள். நிச்சயம் அதற்கென்றே மார்க் அதிகம் போட்டுவிடுவார்கள் அப்பத்திரிக்கையில்.

     எங்கேயோ பார்த்த திரைப்பட சம்பவங்களை நினைவுபடுத்துகிறது பல காட்சிகள். இயக்குநர் இறுதிக்காட்சியில் மிகத்திறமையாக சிந்தித்திருப்பார் போல. ஆத்தாடியோவ்! மிரட்டலப்பா. ஒடம்பே சிலித்துப்போச்சப்பா!

     சன் மியூசிக்கில் அடிக்கடி போடும்படியான அழகான பாடல்கள். அவ்வளவே மற்றபடி குக்கூ - சத்தமே வரவில்லை.

நான்காம்காட்சி: பாம்புகள் சூழ்ந்த கட்டங்கள் – தெகிடி(ப.ரமேஷ்)
                                கேளிக்கைப்பிரியன்

எம்.ஏ கிரிமினாலஜி படித்துவிட்டு ஒரு டிடக்டிவ் நிறுவனத்தில் வேலைக்கு சேரும் ஒருவன் தன் ஆர்வத்தால் அந்த வேலையை மிகச்சிறப்பாகவே செய்கிறான். முழுமையான விவரங்களை சேகரித்து கொடுக்கிறான். அவன் கொடுக்கும் ஒவ்வொரு நபரும் விதவிதமாக கொல்லப்படுகிறார்கள். அதுபற்றிய விபரங்களைக் கண்டறிந்து கொலையாளிகளைக் கண்டறிந்தானா இல்லையா நாயகன் என்பதுதான் கதை.

கதையை நம்பி எடுக்கப்பட்ட படம் என்பதை பல காட்சிகள் நிரூபிக்கின்றன என்றாலும், காதல் காட்சிகள் சிறிது பொறுமையை இழக்கவைக்கின்றன என்றாலும், காதலிக்கின்ற பெண்ணையும் கதையில் தொடர்புபடுத்தியிருப்பது புத்திசாலித்தனமான சிந்தனை.

துப்புதுலக்கும் துறையிலுள்ளவர்கள் காதலியோடு ஊர்சுற்றினாலும் நாளிதழ்கள் படிக்கக் கூட முற்றிலும் மறந்துபோவார்களா என்ன?

இடைவேளையின் போது யார் கொலைகளை செய்வது என்று கூறிவிடுகிறார் என்றாலும் யார்? எதற்கு? என்ற கேள்விகள் தானே முக்கியம் என்று பயணிக்கும் கதையில் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.

இசை ரவிபிரசன்னா என்று தேவையில்லாமல் பின்னணியில் திடீரென அபரிமிதமாக பொழிந்துதள்ளும் இசை கடுப்பைக்கிளப்புகிறது. சித்தர் என்னமா இசையமைக்கறாம் பாரேன் என்று கூறிய அடுத்த நொடி இசையமைப்பாளரின் காதைக்கிழிக்குமாறு இசைத்த இசையில் சித்தர் ‘’ சொன்னது குத்தமாடா? இந்தா வந்தர்றேன் ‘’ என்று பாத்ரூம் ஓடினார்.

ஒரு பாடல் தேறுகிறது திருப்பி கேட்பது விண்மீன் பாடல்தான். சிறிய தொகையில் நிறைவு தருகிற படம்தான் இது என்று கூற தயக்கமேதுமில்லை.

நான்காம் காட்சி
எவடு – வம்சி படிப்பல்லி
                பார்சன் ஆக்ஸ்

இது ஒரு சுவாரசியமான மையத்தைக் கொண்டிருக்கிறது. விபத்தில் முகமழிந்து கிடக்கும் ஒருவனுக்கு புதிய முகம் கிடைக்கிறது. ஆனால் அவன் தன் முகம் மாறியிருப்பதை அறியாது, தன் காதலியை கொன்றவனை அழித்தபின் பார்த்தால், அவனை பல பேர் கொண்ட கும்பல் துரத்துகிறது. ஏன் என்றால் அவன் முகத்திற்குத்தான். எனும்போது தன் முகம் ஏன் இப்படி இருக்கிறது? என்று தெரிந்துகொள்ள மருத்துவமனை வருகிறான். அவன் முகத்தை சீரமைத்த மருத்துவர் தன் மகனின் முகத்தை ஏன் உனக்கு பொருத்தினேன் என்று கூற முன்பு நடந்த கதை விரிகிறது.

உடலும், மனதும் வேறொருவனுடையது. ஆனால் முகம் மற்றொருவனுடையது எனும்போது உடல் கொண்டவன் சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன என்பதை விளக்குகிற படமாக இருந்தால் நிச்சயம் விருது வாங்கும் படமாகியிருக்கும். ஆனா பாஸூ தெலுங்குபடத்துக்கு எதுக்கு இவ்வளவு டீட்டெய்லு?

ஏமி ஜாக்ஸன் அழகாக வந்து காதலிக்கிறார். நீச்சலுடையில் நம் மனம் சந்தோஷப்பட மணலில் உருண்டு புரள்கிறார். பிரம்மானந்தம் காமெடிக்கு. படம் முடியும் போது ஏனோ திருப்தியில்லாத நிலைதான்.

மக்களுக்காக உழைத்த பழைய ராம்சரண்தேஜா மருத்துவரின் மகன் என்று விரியும் கதையில் காதலித்த ஸ்ருதியை இறுதியில் திருமணம் செய்துகொள்வது போல் வைப்பது பொருத்தமில்லை என்றே நினைக்கிறேன். ஏமிஜாக்சன் புதிய முகம் கொண்ட ராம்சரணை விரும்புகிறார். இவரும் ஏமி மேல் மையலுறுகிறார் என்றாலும், மருத்துவர் தன் மகன் காதலித்த பெண் என்று ஸ்ருதியை திருமணம் செய்யக்கூறுவது எப்படி? முகம் சரி. உடல் எப்படி ஒரேமாதிரி இருக்கும்?

யோவ் பாக்கறது தெலுங்கு படம் ஆனா அதுக்கு இத்தன நொட்ட சொல்றயேப்பா என்கிறீர்களா? கதாநாயகனை தூக்கி நிறுத்த காலில்லாதவர் தரையில் தவழ்ந்து வந்து ராம்சரணின் காலைப்பிடித்து கெஞ்சும் காட்சியில் ராமின் முகம் அவ்வளவு கருணையைப் பொழிகிறது. படுமோசமான காட்சி இது எனலாம்.

படம் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. கதை மையம் நன்றாகயிருந்தது அவ்வளவே. எப்படி இதனை உருவாக்கியிருக்கலாம். சிரஞ்சீவி, பவன்கல்யாண் என குடும்ப புகழ்பாடும் மற்றொரு பக்கா கரம்மசாலா சினிமாதான் இது.


நான்காம் காட்சி: ராமய்யா வஸ்தாவய்யா
இயக்குநர்: ஹரிஷ் சங்கர்

பேபிகுச்சியப்பன் போல ங்******* என்னமா பண்ணியிருக்கிறான் என்று கூற முடியாத படம்தான் இது. கல்லூரியில் படிக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர் ஆனால் படத்தில் கேன்டீனில்தான் எப்போதும் இருக்கிறார். ஒரு பாடல்காட்சிக்குப்பின் “ஸமந்தாவைப பார்க்கிறார். எழுச்சிபெறுகிற ஜூ.என்.டி.ஆர் அப்பெண்ணுக்கு பல தொல்லைகளைக் கொடுக்கிறார்.  சில பாடல் காட்சிகளுக்குப்பின் காதல் கனிகிறது. அப்போது அவரது காதலி மூலம் அவரது தந்தை கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்லும் வாய்ப்பு ஜூ.ஆருக்கு கிடைக்கிறது. அங்கு காதலியின் தந்தையை தன் அண்ணன்களின் உதவியோடு பல கண்ணாடிகளை உடைத்தெறிந்து சண்டையிட்டு கொன்றொழிக்கிறார். காதலிக்கு இந்த உண்மையை தெரியாமல் வைத்துக்கொண்டு, அக்கொலையினை துப்பு துலக்கவரும் போலீசையும் அலைய வைக்கின்றார். அந்த உண்மை காதலிக்கு தெரிந்ததா? காதலியின் தந்தையைக்கொல்ல என்ன காரணம் என்பதுதான் படத்தின் மையம்.

கல்லூரிக்காட்சிகள் இளமைத்துடிப்புடன் வலம் வந்தாலும் நீளமான அக்காட்சிகள் சலிப்பை ஊட்டுகின்றன. படு ஜாலியான சம்பவங்கள் நிறைய இருக்கும்போதே கடுமையான துயரத்தின் ஊற்றின் தடயங்களை நாம் தேடத்தொடங்கிவிடுவோம் இல்லையா? அதேதான் பாஸூ. இரண்டு நாயகிகள். இரண்டு முன் பின்னான வெவ்வேறு காதலிகளுடான பாடல்கள், அரங்கை சிதறடிக்கும் சண்டைக்காட்சிகள் என நிறைந்துள்ளது. சில காட்சிகளில் ஜூ.ஆர் தனது உறவினரான பாலகிருஷ்ணாவை நினைவுபடுத்தி பயமுறுத்துகிறார். கப்பார் சிங்கில் கலக்கிய இயக்குநர் ஹரீஷ் சங்கர் இதில் ஏமாற்றி விட்டார் என்றே கூறவேண்டும்.


நான்காம் காட்சி: தி டிபார்டெட்
இயக்குநர்: மார்டின் ஸ்கார்ஸி

ஒரு ஏரியா தாதா ஒரு சிறுவனை தத்தெடுத்து தன் பிள்ளையாக வளர்த்து, போலீஸ் அதிகாரியாக்குகிறார். எதற்கு? தன் மாஃபியா தொழிலை வளர்க்கத்தான். அதே சமயம் டிகாப்ரியோ போலீஸ் வேலைக்குத் தயாராகி நேர்காணலுக்கு வருகிறார். அவருக்கு பணி கிடைக்கிறது. ஆனால் ரகசியமாக வேலை செய்யும் போலீசாக. மேலே சொன்ன தாதாவின் நம்பிக்கையைப் பெற்று அவன் செய்யும் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை திரட்டும் எக்கச்சக்க அபாயகரமான வேலை. டிகாப்ரியோ ஆதாரங்களை திரட்டினாரா? இவரிடமிருந்து தன் அப்பாவைக்காப்பாற்ற போலீஸ்மகன் செய்யும் பிரயத்தனங்கள் என்ன? தாதா தன்னைக்காப்பாற்றிக்கொண்டாரா இல்லையா? என்பதெல்லாம் மீதிக்கதை.

சுவாரசியமான கதைதான். ஆனால் லாஜிக் ஓட்டைகள் நிறைய உள்ளன. எனவே மார்டின் ஸ்கார்ஸி படமாக நினைக்க முடியவில்லை. பின்புலத்தை விசாரிக்காமல் ஒருவன் போலீசில் சேருவது கடினம். தந்தைதான் தாதா என்று அறிந்துகொள்பவர்கள் மகனிடமே துப்பறியும் வேலைகளை கொடுப்பது எப்படி? கடத்தல் கூட்டத்தினர் எவ்வளவு நுட்பமாக இருக்கவேண்டும்! டிகாப்ரியோ தன் செல்போனில் மெசேஜ் அனுப்பும் போது கூட யாரும் அதை கவனிக்காமல் விடுவார்களா என்ன? விழிப்புணர்வுதான் கடத்தல் தாதாக்களுக்கு பலமே. சிறந்த நடிகர்கள்தான் நம்மை இதிலிருந்து காப்பாற்ற முயல்கிறார்கள். எவ்வளவுதான் முடியும்.

என்னமோ போடா மாதவா என்கிற படமாகிவிட்டது. சில திருப்பங்களும் , சுவாரசியங்களும் முழுக்க இல்லாமல் இல்லை.

நான்காம் காட்சி: நான் சிவப்பு மனிதன்
இயக்குநர்: திரு

     இயக்குநர் திருவின் மூன்றாவது படம். படத்திற்கு படம் வித்தியாசமாக செய்பவர். முயற்சிகளை பாராட்டவேண்டும். விஷாலுக்கு உணர்வுகள் உச்சம் பெற்றால் உறங்கிவிடும் நோய். இதனால் யாராவது ஒருவர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க கூடவே இருக்கவேண்டியதாகிறது. வேலை வாய்ப்பு தட்டிப்போகிறது. பின் தன்னை கண்காட்சி போல மாற்றிக்கொண்டு பணம் சம்பாதித்து கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி வேலை செய்கிறார். மற்றவர்களுக்கு கிடைக்கும் இயல்பான ஒன்று கூட பெரும் பிரயத்தனமான ஆசையாக பட்டியல் போட்டு நிறைவேற்றிக்கொள்ள முனைகிறார்.

     தியாகியான ஒரு பெண் காதலிக்க வேண்டுமே! லட்சுமி விஷாலை விரும்பத்தொடங்க சில நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன. சில பல டூயட்டுகளை பாடிவிட்ட நிலையில் தன் மகள் இப்படி விளங்காத பயலை கல்யாணம் பண்ணி குழந்தை எப்படிப் பெறுவாள் என்று லாஜிக் ஓட்டை போட்டு காதல் பலூனை பஞ்சராக்குகிறார் லட்சுமியின் தந்தை ஜெயப்பிரகாஷ். அதுக்கு ஒரு வழிதான் மக்களே நீங்கள் போஸ்டர்ல வெறிச்சு, வெறிச்சுப் பார்த்து பரவசமான நீருக்கடியிலே ஒரு பிரளய முத்தக்காட்சி.

     இதற்கு பிறகு என்ன? காரில் பயணிக்கும் விஷால், லட்சுமி தடுத்து ஒரு கும்பல் லட்சுமியை மிகத்தெளிவாக நாம் காணும்படி உடை அவிழாது வல்லுறவுக்கு உள்ளாக்குகிறது. இதன் பின் கதையை நான் சொன்னால் அடிபின்னி விடுவீர்கள். அதேதான். விஷால் தன் பலவீனங்களோடு, தன் ஷோல்டரை ஏகத்துக்கு சுற்றி தன் காதலியை டரியல் ஆக்கியவர்களை அவியலாக்குகிறார். உண்மையில் தன் காதலியின் நிலைக்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கிறாரா இல்லையா என்பதுதான் கதை.

     முதல்காட்சியே எதிர்மறை பாத்திரத்திற்குத்தான் என்றாலும, நாயக துதி காரணமாக நல்ல முகம் கொண்ட வீரிய வில்லனை வீணாக்கிவிட்டார்கள். எஸ். ஏ சந்திரசேகரனுக்கு பிறகு கற்பழிப்பு காட்சியில் பெரும் புரட்சி சார். திரு சார் கையக்குடுங்க! அந்த லட்சுமி புள்ளைக்கு டப்பிங் பேசற புள்ள அலறுற சத்தத்துல எனக்கு ஒண்ணுக்கே வந்திருச்சின்னா பாத்துகங்களேன்.

     விஷால் வில்லன்களை தேடிப்பிடிப்பது எல்லாம் கோமா ஸ்டேஜ் லட்சுமிக்கா இல்லை நமக்கு இனி ஏற்படுமா என்று சந்தேகத்தை கிளப்புகிறது. சுந்தர் ராமு மீசையை வழித்தால் வயது குறைந்து விடுமா என்ன? அதிலும் பழிவாங்கச் சொல்லும் காரணம் இருக்கிறதே. சிரிக்கிறாங்கப்பா தியேட்டர்ல. தன் மனைவியை பயன்படுத்தியன் மேல் எப்படி விஷால் அம்புட்டு நம்பிக்கையை இன்சூர் பண்றாப்பல.

     இசை ஜி.வி.பி இங்கிலீஸ் ஆல்பம் வராத இக்கட்டான காலம் என்பது நன்றாகவே தெரிகிறது. கிழிந்த தப்பட்டையில் தட்டுவது போல ஏதோ சத்தம் கேட்கிறது. கேட்க வெளங்கல.

     கிளைமேக்ஸ் சண்டை பெரிய ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இல்லை. பல திருப்பங்களைக் கொண்டிருக்கும் படம் என்றாலும் அது நம்மை ஈர்க்கவில்லை. கதைக்கரு நன்றாக இருக்கிறது.படம் பார்த்த பின் நான் கோமா மனிதன்.

நான்காம் காட்சி: த்ரீ அயர்ன்
இயக்குநர்: கிம் கி டுக்

     வசனங்கள் அநேகமாக இல்லை என்று கூறலாம் இப்படத்தில். கிம்கிடுக்கின் படத்தை வன்முறை என்று கூறி ஒதுக்காமல் காணமுயலுங்கள். கதை இதுதான். வீடில்லாத ஒருவன் பிறரின் வீட்டினில் எப்படி திறமையாக உள்ளே நுழைந்துவாழ்கிறான் என்பதுதான் கதை. நுழைபவன் அங்கு சாப்பிட்டுவிட்டு அதற்கு பதிலாக சிலவேலைகளை செய்துவிட்டு சென்றுவிடுவான். அப்படி ஒரு வீட்டில் நுழையும்போது, ஒரு பெண் உள்ளே இருப்பதை அவன் அறியாமல் நுழைந்து விடுகிறான். அப்பெண் தன் திருமண வாழ்வில் கடும் துயரத்தை அனுபவிக்கிறாள். அவளை அழைத்துக்கொண்டு போகிறான். பல வீடுகளுக்கு சென்று தங்கி வாழும் ஒரு தருணத்தில் இருவரும் உடலுறவு கொள்கிறார்கள். பின் காவல்துறையிடம் பிடிபடும் நாயகனை கடுமையாக அந்தப்பெண்ணின் கணவன் தாக்குகிறான். சிறையில் நாயகன் பிறருக்கு தெரியாமல் அவர்களோடே வாழும் நிழல் கலையைக் கற்கிறான். பின் தன் காதலி இருக்கும் வீட்டில் சென்று அவளோடே வாழத்தொடங்குவதோடு படம் நிறைவடையகிறது. விழிப்புணர்வின் உச்சத்தை குறிக்கிறது எனவும் இப்புனைவினைக்கொள்ளலாம். ஆனால் அதிலும் பல மரபான தத்துவ, ஆன்மிக விஷயங்கள் நிறைந்துள்ளன. காட்சி ரீதியாக பார்ப்பவர்களை அனுபவிக்க வைக்கும் திரைப்படம் இது.எத்தனை கூறினாலும் படத்தை பார்த்துவிடுங்கள். பின்பு இவரின் படங்களை தேடிப்பிடித்து பார்ப்பீர்கள்.

நான்காம் காட்சி: மதுபானக்கடை
    
மதுபானக்கடை அதற்கு வரும் விமர்சனங்கள், கருத்துக்கள், மதிப்பெண்கள் என்று பெரிய பிம்பம் உருவாகியிருக்கிறது. ஆனால் அதற்கு இது தகுதியான படமா என்றால் இல்லை என்பேன்.

     மதுபானக்கடையில் உலாவுகின்ற பல்வேறு கதாபாத்திரங்கள்தான் இங்கு நடிகர்கள். படத்தின் இடைவேளையில் கட்டிங் அடிக்கத்தான சொல்லுகிறார்கள். அப்படி ஒரு புரட்சிகரமான படம் இது.
     பாடல்கள் எல்லாம் பரவாயில்லை ரகம். எந்த நோக்கமும் இல்லாமல் அலையும் கதை பற்றி முன்பே கூறிவிடுகிறார்கள் என்றாலும் எந்த மன உந்துதலும் இல்லாமல் படம் எப்படி பார்ப்பது?  புதிய பாத்திரங்கள் அறிமுகமாகிக்கொண்டு இருப்பதும், பாடல்களும் பலம் எனலாம். வேறு எதுவும் மனதில் தங்கவில்லை.

     குடிபோதையிலும் புலம்ப வைக்கும் வகையறாவைச் சேர்ந்த படம்தான் இது. அடுத்த படத்தை டி.வி.டியில் போட்டு வித்தாலும் பரவால்ல நல்லபடமாக எடுங்க கோயம்புத்தூர்காரரே!!!




நான்காம் காட்சி
வெதர்மேன்

           ரசிகவேள்

நிக்கோலஸ் கேஜ் நடித்த திரைப்படமான இப்படம் தொலைக்காட்சியில் வானிலை அறிவிப்புகளை கூறும் ஒருவனின் வாழ்வில் நிகழும் மேகமூட்டம், இடி,மின்னல், புயல், மழை விஷயங்களேதான் கதை.

வானிலை அறிக்கை வாசிப்பதன் மூலம் நிகோலசுக்கு வருமானம் கிடைக்கிறது என்றாலும் அதன் காரணமாகவே அவமானப்படுத்தல்களும் அதிகம் நிகழ்கிறது. ஆப்பிள் பை, கோழிஇறைச்சி, பழச்சாறு போன்றவை அவரின் மீது வீசியெறியப்படுகிறது.  நிகோலசின் அதீத கோபத்தினால்  அவன் மனைவி அவனைவிட்டு விலகி இன்னொருவரை மணம் செய்துகொண்டு, தன் பிள்ளைகளையும் தன்னோடே வசிக்கச்செய்கிறாள்.  இலக்கியத்திற்காக புலிட்சர் பரிசு வாங்கிய தந்தைக்கு ஏற்படும் உடல்நலக்குறைவை தீர்க்கவும் அவனிடம் பணமிருப்பதில்லை. தன் மகன், மகள் ஆகியோரிடமும் ஒரு நெருக்கமின்மை நிகழ கடுமையான விரக்தி மனநிலைக்கு தள்ளப்படுகிறான். அவன் விரும்பிய டிவியில் அவனுக்கு பணி கிடைத்தாலும், அவ்வாய்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாதபடி குடும்பத்தில் சிக்கல்கள் முற்றுகின்றன. என்ன ஆனது அவரின் ஆசை? குழந்தைகளை சேர்ந்தாரா? என்பது இறுதியான காட்சி.

நிகோலசின் உடல்மொழியும், அர்ப்பணிப்பான ஈடுபாடும்தான் படத்தை தூக்கி நிறுத்துகின்ற ஒரே காரணியாக இருக்கின்றன. பதற்றம், ஏமாற்றம், ஆகியவற்றை பார்ப்பவரின் உடலில் ஏற்படுத்தும் அற்புதமான நடிப்பு. நேர்த்தியான படம்தான் இது.

நான்காம் காட்சி

தூம் – 3
     ஜிலேபியாதவ்
தூமில் ஒன்று, இரண்டில் என்ன இருக்கும்? அதேதான். பைக், கார் சேசிங் காட்சிகளும், ஆமிர்கானும் மட்டுமே போதும். படம் காப்பாற்றப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் யஷ்சோப்ரா பணம்போட்டு எடுத்த படம். இரண்டு ஆமிர்கான்கள் இருப்பது மட்டுமே ஒரு திருப்பமாக இருந்தாலும், மற்றபடி பெரியதாக ஈர்க்க ஏதும் இல்லை. கத்ரீனாவிடம் எதை விரும்புவார்களோ அதற்கு பயன்பட்டிருக்கிறார்.

உதய் சோப்ரா சிறிது ஆறுதல் தந்தாலும், அவரது பேச்சு தவிர்த்து படமே முழுக்காமெடியாக இருப்பதால் எது பெரியது என்று அளவிடமுடியவில்லை. அபிஷேக் பெரும்பாலும் வேடிக்கை பார்க்கும் வேலைதான். நான் என்னப்பா பண்றது என்கிற ரியாக்ஷன் அவரது முகத்தில் தெரிகிறது.

ரிவென்ச் கதை, மறைந்திருக்கும் இரட்டையர்கள், பாட்டுக்கு மட்டும் ஹீரோயின், தமாசு போலீஸ்காரர்கள், துப்பாக்கி, பிஎம்டபிள்யூ பைக்குகள், பைக் போட்டாவது என பல ஜிம்மிக்ஸ் வேலைகள்.

ஆமிர்கான் தவிர வேறெதுவும் கண்ணில் படவேயில்லை.

தொகுப்பு:லாய்ட்டர் லூன்



கருத்துகள்