நூல் வெளி



திசைகாட்டி
எஸ்.வைதீஸ்வரன்
நிவேதிதா பதிப்பகம்
                                                                                                                                    அந்துவன்
     அம்ருதா இதழில் நினைவோடை பகுதியில் எழுதிவரும் வைதீஸ்வரன் பக்கம் அவரது இளமைக்கால நினைவுகளை கூறும் பகுதியாக வசீகரிக்கும் தன்மை கொண்டது. அத்தகைய கட்டுரைகளைக் கொண்ட நூல்தான் இது.

     இதில் பெரும்பாலும் கவிதை குறித்த பகுதிகள் அதிகம் என்றாலும், அதனினூடே கட்டுரை தன்  இளமைக்காலம், தன்பிறப்பு, பார்த்த படங்கள், கவிதைகள் குறித்த குறிப்புகள் கொண்ட புத்தகம் இது எனலாம்.

     தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களின் குணவியல்பை கூறுவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், தான் படிக்கச்செல்லும் இடம் பற்றியும், அர்த்தமற்ற வார்த்தை என்ற கட்டுரையில் விடுதலை ஆகப்போகும் வயது முதிர்ந்த ஒருவனின் மனநிலையையும் நுட்பமாக சுட்டிக்காட்டுகிறார்.

     பார்வையற்ற ஒருவர் குறித்த கட்டுரை அற்புதமாக உள்ளது. பார்வையற்ற மனிதரின் கவிதைதான் இந்த கட்டுரைத்தொகுப்பின் தலைப்பும் கூட.
                           41

அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள்
எம்.ஜி. சுரேஷ்
அடையாளம் பிரஸ்
                                                            அன்னி
      இத்தொகுப்பில் மொத்தம் 17 சிறுகதைகள் உள்ளன. இதில் எனக்கு பிடித்ததாக அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள், செய்திகள், நிகாமாவின் கண்ணீர், ஒவ்வொரு கதையும் ஒரு கதையும், உள்ளிட்ட கதைகளை கூறுவேன்.

     இந்தக்கதைகள் எவையுமே கதை சொல்லும் முறையில் பெரிய வேறுபாட்டைக்கொண்டவையல்ல என்றாலும், கதையில் வரும் சுய எள்ளல், பகடிதான் இந்த எழுத்துக்களின் விசேஷ அம்சம்.

     நிகாமாவின் கண்ணீர் ஒரு பெண்ணின் வாழ்வை காலம் தாண்டியும் ஆண் எப்படி ஆக்ரமித்து தன்தேவைக்கு பயன்படுத்திக்கொள்கிறான் என்பதை ஆச்சர்யம் தரும் விதமான தாத்தாவின் கதாபாத்திரத்தோடு கூறுகிறார் ஆசிரியர். 

     ஒவ்வொரு கதையும், ஒரு கதையும் என்கிற கதை இரண்டு வித முடிவுகளைக் கொண்டுள்ள கதை எதனைவேண்டுமானாலும் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதில் சுய எள்ளல் நன்றாக வந்துள்ளது. 

     அவந்திகாவின் த.ஆ.கா கதை இரண்டு நிலைகளைக்கொண்டுள்ளது. செய்திகளில் வந்துள்ளது முதலில் காட்டப்பட்டு பின் அதன்வழியே பயணிக்கும் கதையின் வடிவமைப்பு நன்றாக உள்ளது. சினிமா உலகில் சிறுவயதில் குழந்தை தொழிலாளி போல நுழையும் பெண்ணுக்கு நிகழும் சம்பவங்கள்தான் கதை.

     செய்திகள் கதை நமது சுவாரசியமற்ற செய்தித்தாள் படிக்கும் நாட்களை எப்படி சுவாரசியம் ஆக்கி கொள்ளலாம் என்று ஒரு வழி கூறுகிறது. இதில் ஒரு சந்தோஷம், நமக்கு பிடிக்காதவர்களை வெவ்வேறு விபத்து செய்திகளில் பொருத்திப்பார்த்துக்கொள்வதினை ஒருவர் தொடர்ந்து செய்து மகிழ்ச்சி கொள்கிறார்.  பின் ஒரு ரயில் விபத்தில் தன் உறவினர் ஒருவருக்கு நிகழும் விபத்து அவரை தடுமாறவைக்க என்னவானது என்பது மீதிக்கதை. எனக்கு ஏனோ பாளையத்தில் உள்ள ஒரு ஜோதிடர், சிறுகதை எழுத்தாளர் நினைவுக்கு வந்தார்.

     இவையில்லாமல் இருக்கும் கதைகள் பல இதழ்களின் தன்மைக்கேற்ப, விதிகளுக்கேற்ப வளைந்தவை. அவை தம் இயல்பை தொலைத்தது போல் இருக்க அவற்றை நான் இங்கு குறிப்பிடவில்லை.









                                42

இவான்
விளதீமிர் பகமோலவ்
தமிழில்: நா.முகமது ஷெரீபு
என்சிபிஹெச்
                                                            அஞ்சுகம்
      இது ஒரு சிறுவர் நாவல். ஜெர்மானியர்களை வேவு பார்க்கச்சென்று அவர்களிடம் மாட்டிக்கொண்டு சுட்டுக்கொல்லப்படும் இவான் எனும் சிறுவனின் கதை இது.

     கதை நிகழ்காலத்தில் மட்டுமே நடப்பதால் சிறுவனின் கதை முழுக்க நமக்கு தெரிவதில்லை. அதுபற்றிய குறிப்புகள் மிகக்குறைவு. இவானின் மனநிலை மாற்றங்களை முதல்முறையாக அவன் படைப்பிரிவுத்தலைவர் ஒருவரை சந்திக்கும்போதும், பின் ஒருவரை சந்திக்கும்போதும் நன்றாக வெளிப்படுத்த முயன்று இருக்கிறார் ஆசிரியர். 

     இவானின் நினைவாக உருவாக்கிய கத்தி ஒன்றும், இறந்துபோன நண்பனின் நினைவாக வைத்துள்ள கத்தி ஒன்றுமாக அந்த கத்தியை சிறுவனிடம் கொடுக்கச்சொல்லிய பின்னும் அவரது மனதில் அந்த சிறுவனின் தீரம் நிறைந்த செயல்கள் மறைந்துவிடாமல் அவன் மேலான அன்பும், அக்கறையுமாக மாறுகிறது.

     இவான் படம் ஒட்டிய கோப்பினை ஜெர்மனியரின் இடத்தில் பார்க்கும்போதே கதை நிறைவடைந்துவிட்ட உணர்வு எழுந்துவிடுகிறது. குழந்தைப்போராளி ஒருவனின் முழுமையில்லாத வரலாறு இது.

















                      43

மேற்குச்சாளரம்
ஜெயமோகன்
உயிர்மை பதிப்பகம்
                                                                                                                                          சில்லித்தாரா  
இந்த நூலில் மேற்கத்திய நாவல்கள் அதிக கவனம் பெறாத ஆனால் முக்கியமான பேசுபொருளை உள்ளடக்கமாக கொண்ட 7 நூல்களைப்பற்றி அறிமுகப்பகிர்வு ஒன்றினை ஆழமான தாக்கத்துடன் ஏற்படுத்த முனைகிறார் ஜெயமோகன்.

அந்த நூல்கள் தன்னுள்ளே கொண்டுள்ள ஆழமான மறைபொருளான தத்துவம் குறித்தும் விரிவாக அலசும்தன்மை இந்நூலில் மற்ற நூல்களில் இல்லாத விமர்சனத்தையும் மீறிய சிறப்பாக கூறலாம்.

ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு’ கதை அதன் எழுதப்பட்ட வாழ்விற்குள் உள்ள பல்வேறு மனிதர்கள் ஏதோவொன்று நிகழ தொடர்ந்து காத்திருக்கிறார்கள். மருத்துவர் ஒருவருக்கும், அதிக படிப்பறிவு இல்லாத கிராமத்து பெண் ஒருத்திக்கும் நடக்கும் திருமணவாழ்வு மருத்துவருக்கு பிராணசங்கடமாக இருக்கிறது. எப்படியாவது விலகிவிட நினைக்கும் அவருக்கு சட்டங்களும் உதவவில்லை. 20 ஆண்டுகளுக்குப்பிறகு தான் நினைத்த மனதுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்கிறார். ஆனால் காலம் கடந்து விட்டது. முதல் மனைவியும் மகளும் ஒன்றாக இருக்க, மருத்துவர் தன் இரண்டாம் மனைவியோடு வாழ்கிறார் என்றாலும், அவருக்கு அந்த வயதில் ஆதரவான அன்பான வாழ்க்கையே தேவைப்படுகிறது. காமம் குறித்த எண்ணங்கள் ஓய்ந்துபோய்விட, இரண்டாவது மனைவிக்கோ காத்திருந்து காத்திருந்து உடல் பேரலையாய் பசியில் அலையடித்து கரை மீறுகிறது. பின் மருத்துவரின் காத்திருப்பு அன்பிற்கானதாய் மாறுகிறது. இதில் கதை தாண்டிய பல்வேறு விஷயங்களை அதனுள்ளிருந்து எடுத்து பேசுகிறார் ஜெயமோகன். கதையின் எழுத்து, அதன் கச்சித பிசிறு இல்லாத தன்மை நம்மை அதன் தன்மையிலிருந்து விலக்குவது என மேற்கத்திய எழுத்தாளர்களின் புத்தகங்களிலிருந்து வேறுபட்ட ஒரு தன்மையை இந்த எழுத்துக்கள் காட்டுகின்றன.

டிரினா நதிப்பாலம் – இவோ ஆண்ட்ரிச் எழுதிய நோபல் பரிசு பெற்ற நாவல் நதிப்பாலத்தினை மையமாகக் கொண்டு மக்களைப்பற்றிப் பேசுகிறது. சு.ராவின் புளியமரத்தின் கதை இருக்கிறதல்லவா! அதை ஒத்தது எனக்கொள்ளுங்கள். பல படையெடுப்புகள், மரணங்கள், சூறையாடுதல், படுகொலைகள் என பலவும் பாலத்தின் சாட்சியம் கொண்டு அந்த பிரதேசத்தில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

வெளியே செல்லும் வழி எனும் கட்டுரை மேரி கொரெல்லி எழுதிய தி மாஸ்டர் கிறிஸ்டியன் என்ற நூற்றாண்டு பழமையான நூலின் செஞ்சுருக்கம் இது. 1900 ல் வெளிவந்த இந்நூலை முக்கியமாக குறிப்பிட வேண்டியதன் காரணம் இது கிறிஸ்துவ மதத்தின் சீர்கேடுகளை சிறுவனாக ஏசுவே வந்து சாடுவதாக அமைத்து இருந்த தன்மைதான் என்று கூறுவேன்.
     மானுவேல் பேசும் பல இடங்கள் வசனங்கள் மிக வசீகரமான தன்மையைக்கொண்டுள்ளன. அந்த வார்த்தைகள் நம் மனதில் ஏற்றும் ஒளிக்கு ஒரு அளவீடே கிடையாது. இதில் பலரும் தம் வாழ்வின் வழியே தரிசனத்தை கண்டறிகிறார்கள். இதில் மானுவேல் போப்பிடம், அவரைச்சுற்றியுள்ளவர்களிடம் பேசும் உரை மனதை கசியவைக்க கூடியது.இதனை உணர்ச்சிகரமான இரவுத்தருணங்களில் வாசித்தால் கண்ணீர் பெருகியோடும். அவ்வளவு அழகான ஆழமான வார்த்தைகள் கச்சிதமாக கோர்க்கப்பட்டுள்ள உரை இது.

     ரால்ப் ஹொஷூத் எழுதிய நாடகம் பாவ மௌனம் என்பது இந்த நூல் ஹிட்லர் காலத்தின் சித்திரவதை நாட்களை கூறுகிறது. இரு மருத்துவர்களின் மாதிரியாக கொண்டு படைக்கப்பட்ட கதாபாத்திரங்களைக்கொண்டுள்ளது. ஹிட்லர் ஒரு இன அழிப்பை மேற்கொள்ளும் போது, கிறிஸ்துவ மத போப் அதைக்கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் அதற்கு மௌன சம்மதம் அளித்தார். அது ஏன் என்று விளக்கமாக ஆராய்கிறது இந்த நாடக நூல். மேலும் இது ஆதாரங்களையும், ஆவணங்களையும் முழுமையாக கொண்ட நாடகப்பிரதி என்பது மிக முக்கியமானது.

மேற்குலகின் கண்டுகொள்ளப்படாத 7 நூல்களின் அடிப்படை பற்றி விரிவாகவே ஆராயும், விமர்சன நூல் என்று கூறலாம். மேற்கூறியவை படித்ததில் எனக்கு பிடித்தவை என்றாலும் இவை மற்றும் கார்ல்சகன் எழுதிய அறிவியல் புனைகதை மற்றும் அயன்ராண்ட் எழுதிய புத்தகம் அதன் தர்க்கம், தத்துவம் பற்றியும் மிக விரிவாக கூறியுள்ளார் ஜெயமோகன். வாசிப்பை மேற்கொள்ளும் போது எப்படி அதன் உட்கருத்தை உள்வாங்கிக்கொள்வது என்று இந்நூல் கற்றுத்தரக்கூடும்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்