நூல் வெளி



27
புயலிலே ஒரு தோணி
ப.சிங்காரம்
தமிழினி
                                                     ஊருணி
     புயலிலே ஒரு தோணி சாதாரணமாகவே வாசிக்க சற்று சவால் தரும் நாவல்தான். இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தாவித் தாவிச்செல்லும் உத்தி படிக்க முதலில் திகைப்பானதாகவே உள்ளது. மெல்ல மலேசியா ட இந்தோனேஷியா போர்ச்சூழல் மனதிற்கு பழக்கமாகிறது.

     சங்கப்பாடல்களோடான அத்தியாயங்கள் திரும்பத்திரும்ப வாசிக்கவேண்டும் என்று ஆவல் ஏற்படுத்துகின்ற ஒன்று. அதன் உட்பொருளை அறியும் பரபரப்பு மனதில் ஏற்படுகிறது. எள்ளல், அங்கதம் கடலுக்கு அப்பால் பகுதியில் குறைவு. முழுக்க புயலிலே ஒரு தோணி பகுதியில் நிறைந்திருப்பது பகடிகள்தாம்.

     நாவல் வெளிவந்தபோது சிறிது புரியாமல் போயிருக்க வாய்ப்புண்டு. அதிக கவனமாக, கூர்மையாக வாசிக்காவிட்டால் பலவற்றையும் தவறவிடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

     பாண்டியன், மாணிக்கம், ஆவன்னா, நாவன்னா என பலரும் தமிழிலேயே சொல்விளையாட்டு விளையாடுவது சுவாரசியமான பகுதிகள். தமிழனின் இன்றைய பெருமைகளாக பேசும் பலவற்றையும் உடைத்து போடும் பாண்டியன் பேச்சில் கலகத்தின் அடர்த்தி ரசிக்கவைக்கும்விதமாக உள்ளது.

     பாண்டியன், ஜெனரலிடம் பேசும் இடங்கள் மிக கச்சிதமான உரையாடல் வடிவங்களாக கூறுவேன்.

     சாகச நாவல்போல பயணிக்கும் இந்நாவல் போர்ச்சூழலிடையே உணர்வு பூர்வ நிகழ்வுகளையும், போர் சூழல்களையும் விளக்கத்தவறுவதில்லை என்பதில்தான் முக்கியத்துவம் பெறுகிறது. குறையாத பல்வேறு தகவல்கள் நுணுக்கங்கள் என இடம் பற்றிய பிரக்ஞையை தவறாது பிடித்து நிற்கின்றன. இந்தோ, தவோதுவான் ஆகிய குரல்களோடு தெருக்கள் பற்றிய வர்ணனைகள் கண்முன்னே அத்தெருவை உருவாக்கி காட்டும் வலிமைகொண்டவையாக உள்ளன.

     கடலுக்கு அப்பால் கதையில் செல்லையா மரகதம் காதல்தோல்வி, செல்லையாவின் கடும் வீழ்ச்சி அங்கே தொடங்கிவிடுகிறது. நேதாஜி இறந்தபின் நிகழும் சம்பவங்கள் இங்கு மனிதர்களின் வாழ்வில் பல மாற்றங்களை நிகழ்த்துகின்றன. செல்லையாவின் முதலாளி பற்றிய முதல் வர்ணனையே அவரின் குணத்தைக்கூறுவது போல நேர்த்தியாக அமைந்துள்ளது. சாமி கும்பிட்டுக்கொண்டே அவர் மனைவி, மகளிடம் கடைக்கு தேவையான பொருட்களை மந்திரம் கூறியபடி இடையிடையே கூறுவது என ஆரம்பமே செய்நேர்த்தி பளிச்சிடுகிறது.

     மரகதத்தைப்பற்றி மாணிக்கம் கண்ணகியை ஒப்புமைப்படுத்திப்பேசும் காட்சியின்படியே பின்னாளில் அனைத்தும் நிகழ்கிறது. செல்லையா போருக்கு முன்பான வாழ்வை, மீண்டும் திரும்ப பெற முடிவதேயில்லை. தத்தளிப்பும், தவிப்புமான மனநிலை கொண்டவனாக மரகதத்தின் மீதான காதலை விட்டு விட மாணிக்கம் கூறும் வார்த்தைதான் இங்கு முக்கியமாக குறிப்பிட விரும்புகிறேன்.

‘’அனைத்து துக்கங்களையும் மனம் கடந்துவந்துவிட முடியும். மனதினை இழந்துவிடாது இருந்தால்’’ எனும் வரிகள் ஆசிரியர் தன் வாழ்வின் கண்டடைந்த அனுபவப்பூர்வமான உண்மைபோலவே படுகிறது.



                           28

நதியிலே விளக்குகள்
என்.துபோவ்
தமிழில்: யூமா.வாசுகி
என்சிபிஹெச்
                                               செஞ்சுத்தி
     இது ஒரு சிறுவர் நாவல்.  அம்மா வேலைவிஷயமாக வேறு ஊர் செல்ல, அவரது மகனான கோஸ்த்யா தன் மாமா வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகிறான். அவன் மாமா முன்பு கடற்படையில் வேலை செய்தவர். தற்போது நதியில் ஆபத்தான பகுதிகளில் விளக்குகளை ஏற்றி வைக்கும் பணி செய்துவருகிறவர். அவருக்கு நூரா என்று துறுதுறு வென இயங்கும் மகள் ஒருவள் இருக்கிறாள். கோஸ்த்யா அவன் மாமா வீட்டிற்கு வரும்போது, பெரும் மகிழ்ச்சியில் இல்லை என்றாலும், ஏதோ ஒன்று கிடைக்கும் என்று நம்புகிறான். அவன் நினைத்தது நடந்ததா? அவனுக்கு நண்பர்கள் கிடைத்தார்களா? அங்கு அவன் பெற்ற அனுபவம் என்ன என்பதுதான் கதை.

     பயணம் என்பதும், சந்திக்கின்ற மனிதர்களும் ஏற்படுத்துகின்ற அனுபவங்களை யார் விரும்பாமல் இருப்பார்கள்!. இங்கும் கோஸ்த்யா,  மாமா பெண் நூரா, மாமா யெம்பீ, தோழர்கள் தீம்கா, மீஷ்கா ஆகியோரிடம் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்கிறான். மாமா யெம்பீயின் வாழ்வில் ஒழுங்குமுறை உள்ளது. பல விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பு அங்குதான் கோஸ்த்யாவிற்கு கிடைக்கிறது. ஆனால் தனக்கு பிடித்தது எதுவென தெரியாமல் தடுமாறுகிறான் கோஸ்த்யா. நூராவோடு சேர்ந்து சிரமப்பட்டு படகு ஓட்டக்கற்றுக்கொள்கிறான். 

     தீம்பாவின் மரம் வளர்க்கும் கலை குறித்த ஆர்வம்,மீஷ்காவின் ரேடியோ அலைவரிசை இயக்கம்,  பணிகள், கூட்டுப்பண்ணை வேலைகள் ஆகியவை கோஸ்த்யாவிற்கு பலவேலைகளை கற்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது.

     தனக்கான வேலைகளை தானே செய்துகொள்வது, மற்றவர்களுக்கு வேலையில் உதவுவது என்று பல்வேறு விஷயங்களை இந்நாவல் கூறுகிறது. ஏறத்தாழ இதனை நடைமுறை சார்ந்த விஷயங்களை கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்துகிறது என்று கொள்ளலாம். சில எழுத்துப்பிழைகள் உள்ளன என்றாலும் நூலின் மொழிபெயர்ப்பு குறித்து கவலையுற ஏதுமில்லை. சிறப்பான பணிதான். 

     விளக்கு பொருத்தும் வேலை பற்றி பெரிய மரியாதை இல்லாத கோஸ்த்யா அந்தவேலை மட்டுமல்லாது உடலுழைப்பு, மூளை உழைப்பிற்கு சற்றும் குறைந்ததல்ல என்று மாமாவின் வீட்டில் இருக்கும்போது உணர்ந்துகொள்கிறான். 

     சிறுவர்களுக்கான நாவல் என்றாலும், ஆசிரியர் வலியுறுத்துகிற பல பண்புகள் இன்று பலரிடையேயும் காணக்கிடைப்பதில்லை என்பதுதான் இந்நூலின் முக்கியத்துவத்தை உணர முடியும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்