ஸ்டீபன் ஹாக்கிங் தினம்! - ஜனவரி 8

அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கை யாரும் அறியாமல் இருக்க முடியாது. இயற்பியல், வானியல் சார்ந்த துறைகளில் பல்வேறு கண்டுபிடிப்புகளை தனது ஆய்வின் வழியாக சொன்னவர். முழு உடலும் செயலிழந்துபோனாலும் வீல்சேரில் உட்கார்ந்து பல்வேறு அறிவியல் சாதனைகளை உருவாக்கியவர். ஜனவரி 8, 1942ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் பிறந்தவர் ஸ்டீபன். இவரது பெற்றோர் மருத்துவர்கள். குடும்பமே படிப்பாளிகளைக் கொண்டது. படிப்பை முக்கியமானதாக எடுத்துக்கொண்டவர்கள். ஆக்ஸ்போர்ட் பல்கலையில் இயற்பியல் படிப்பில் பட்டம் பெற்றவர். 1962 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலையில் சேர்ந்தும் படித்தார். 1963ஆம் ஆண்டு ஸ்டீபனின் உடலில் மோட்டார் நியூரான் தொடர்பான நோய் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதற்குப்பிறகு, அவரது முழு உடலும் செயலிழந்துபோனது. பின்னர்தான், அவரது முக தசைகளின் இயக்கத்திற்கு ஏற்ப அதனை பேச்சாக மாற்றும் கருவியை உருவாக்கினர். இதன் வழியாக அவர் பிறருடன் தொடர்புகொள்ள முடிந்தது. உடல் இத்தனை பிரச்னைகளைக் கொண்டிருந்தாலும் கூட இயற்பியலில் பல்வேறு அறிவியல் கருத்துகளைக் கண்டுபிடிக்கவும், அதனை உலகிற்கு சொல்லவும் உழைத்தார். கருந்துளை பற்றிய கருத்துகளை இப்படித்தான் ஸ்டீபன் கூறினார். கருந்துளைகள் கதிர்வீச்சை வெளிப்படுத்துவதைப் பற்றியும் அறிவியல் ரீதியாக விளக்கம் கொடுத்தார். இதனை ஹாக்கிங் ரேடியேஷன் என்ற பெயரில் அழைக்கின்றனர். இயற்பியலின் கோட்பாடு ரீதியான கொள்கையில் ஸ்டீபனின் பங்களிப்பு முக்கியமானது. 2002ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பெருமைக்குரிய மனிதர்கள் நூறு பேரில் ஒருவராக ஸ்டீபன் ஹாக்கிங் இடம்பெற்றார். இப்பட்டியலில் இவரின் இடம் 25. 2018ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். 76 வயது வரை வாழ்ந்த ஸ்டீபன், தனது நியூரான் நோயுடன் போராடி வாழ்ந்த காலம் மட்டுமே 50 ஆண்டுகளாகும். டெல் மீ வொய் இதழ்

கருத்துகள்