ஆங்கிலம், கல்யாணம், ஆனந்தவிகடன் விருது- கணியம் சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

 

 

 

 

த. சீனிவாசன் - தமிழ் விக்கிப்பீடியா

 த.சீனிவாசன்

 

 


ஆங்கிலத்தை வாசிக்கவே அரும்பாடு!


13.12.2020


அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு, வணக்கம்.


நலமாக இருக்கிறீர்களா? மனைவி, குழந்தைகள் நலமாக இருக்க பேரிறையைப் பிரார்த்திக்கிறேன். நான் இந்த வாரம்தான் சென்னை வந்தேன். தோலில் ஏற்பட்ட ஒவ்வாமை இங்கு குணமாகவில்லை. ஈரோடு சிகிச்சைக்காக சென்றேன். அங்கு தீவிரமாக மருந்து சாப்பிட்டு சிகிச்சை எடுத்தபிறகு நிலைமை பரவாயில்லை.


என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களது வேலை எப்படியிருக்கிறது? பழக்கமாகிவிட்டதா? வீட்டிலேயே வேலை செய்யும் முறை எங்களுக்கு புதிது என்றாலும் உங்களுக்கு ஏற்கெனவே பழக்கமானதுதான் அல்லவா? ஆங்கில நூல்களை வேகமாக வாசிக்க முயன்று வருகிறேன். தமிழ்நூல்களை பழக்கம் காரணமாக வேகமாக படித்து விடுகிறேன். அண்மையில் பரத்வாஜ் ரங்கன் எழுதிய நூலைப் படிதேன். இப்போது பில்கேட்ஸ் பற்றி என். சொக்கன் எழுதிய நூலை படித்து வருகிறேன். நூல் சுவாரசியமாக இருந்தால்தான் அதனை பிடிஎப் வடிவில் படிக்க முடிகிறது. இந்த அம்சம் இருக்கும்போது, பக்கங்கள் கூடுதலாக இருந்தால் கூட பிரச்னையில்லை. ஓநாய் குலச்சின்னம் நூலை இந்த வகையில்தான் சேர்க்க வேண்டும். வேட்டை இலக்கிய நூலை வேகமாக படிக்க முடிந்தது.


நேருவின் பேச்சுகளை மொழிபெயர்க்க முயன்று வருகிறேன். கொஞ்சம் கடினமான பணிதான். ஆனால் முயன்று செய்துவருகிறேன். அடிக்கடி மனம் இதிலிருந்து வெளியே போய் விடுகிறது. அவர் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளின் பயன்பாடு புரிந்துகொள்ள கடினமாக உள்ளது. அதைப் புரிந்துகொண்டு கஷ்டப்பட்டு மொழிபெயர்த்தால் என்னைப் பொறுத்தவரையில் சிறந்த நூலாக வர வாய்ப்புள்ளது. நீங்களும் கூட இந்த காலகட்டத்தில் நிறைய நூல்களை வாசித்திருப்பீர்கள். சந்திப்போம். நன்றி!


.அன்பரசு

13.12.2020




















2


கல்யாண களேபரம்!


27.12.2020



அன்பு நண்பர் சீனிவாசனுக்கு, வணக்கம். மனைவி, குழந்தைகள் நலமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எனக்கும் ஒரு கனவு வர்க்கீஸ் குரியன் எழுதிய சுயசரிதை நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன். இரா.முருகானந்தம் பரிந்துரைத்த நூல்களில் இதுவும் ஒன்று. பொதுநலன் சார்ந்த பணிகளில் எப்படி ஒருவர் ஈடுபட வேண்டும் என்பதை உணர்த்தும் முக்கிய நூல்களில் ஒன்று. எனக்கு மிகப்பிடித்த நூல்களில் ஒன்று. குரியன் தனது பேரனுக்கு எழுதும் கடிதம் போல நூல் தொடங்குகிறது.


இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமான அமுலை உருவாக்கி அதனை நிர்வாகம் செய்தவர்களில் வர்க்கீஸ் குரியன் முக்கியமானவர். எனக்கு பெண் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. ஜாதகத்தோடு பெண்வீட்டாருக்கு புகைப்படமும் வேண்டுமாம். எதிர்பார்த்தது போல போட்டோவைக் கொடுத்ததும் எதிர்ப்புறம் சகிக்க முடியாத மௌனம் நிலவியது. இந்த சமாச்சாரத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. பெற்றோரின் நம்பிக்கைக்காக இதனை செய்யவேண்டியுள்ளது. எனக்கு ஒருவகையில் நிம்மதி. கல்யாணம் என்பது பொருட்களை விலைபேசி வாங்குவது போல மாறிவிட்டது.


மோகனரங்கன் மொழிபெயர்த்து எழுதிய சிறுகதைகளைப் படித்து வருகிறேன். ரேமண்ட் கார்வாரின் சிறுகதைகளைப் படித்து வருகிறேன். சிக்ஸ்த் மேன் என்ற படம் பார்த்தேன். பேஸ்கட்பால் விளையாடும் இரு சகோதரர்களைப் பற்றிய கதை இது. பேஸ்கட்பால் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அண்ணன் எதிர்பாராதவிதமாக விளையாட்டின்போது இறந்துபோய்விடுகிறான். அவன் தம்பி விளையாடும்போது எப்படி உதவுகிறான் என்பதே கதை. கொஞ்சம் புனைவு கலந்த நெகிழ்ச்சியான கதை இது.


வேலை செய்யும் இதழில் வேலை ஏனோதானோவென்று நடைபெற்று வருகிறது. புதிய ஒருங்கிணைப்பாளருக்கு எந்த வேலையை எப்படி செய்வது என்று புரியவில்லை. ஒருமுறை வேலையை விளக்கி சொன்னேன். மிதப்பாக அப்படியா என்றார். அதற்குப்பிறகு நான் ஏதும் பேசவில்லை. இவரின் வேலைத்திறன் காரணமாக ஒரு வேலையை இருமுறை செய்ய வேண்டியிருக்கிறது. திறமையை விட விசுவாசத்தை முக்கியமாக நினைக்கிறது நாளிதழ் நிறுவனம். அதற்கான பலன்களை விரைவில் அறுவடை செய்வது நிச்சயம். நன்றி! சந்திப்போம்.


.அன்பரசு

27.12.2020







3


நிஜத்தின் வெம்மையை மறைக்கும் கலைப்பித்து!


அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?


நேற்றுதான் ஏர்டெல்லின் வைஃபை டாங்கிள் வாங்கினேன். முன்னமே வாங்க நினைத்தேன். ஆனால் இப்போதுதான் உறவினர் பையன் மூலம் ஆர்டர் செய்து வாங்கினேன். போனைத்தவிர்த்து இதனை மட்டுமே பயன்படுத்தி இணையத்தை பயன்படுத்தி வேலை பார்க்கலாம்.


அமுலின் நிறுவனரான வர்க்கீஸ் குரியனின் சுயசரிதையை இரண்டாம் முறை படித்தேன். சுயசரிதையில் தன்னை நாயகனாகவே காட்ட பலரும் முயல்வார்கள். ஆனால் இந்த நூலில் அப்படி ஏதும் நேரவில்லை. தனது பலம், பலவீனங்களை வெளிப்படையாகவே குரியன் பேசியிருக்கிறார். சுயநலமான அரசியல்வாதிகளை நேரடியாகவே குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். விவசாயிகளின் வா்ழ்க்கையை முன்னேற்றும் முயற்சியில் வரும் ஏராளமான தடைகளைப் பற்றி ஆதங்கப்பட்டு எழுதியிருக்கிறார். அவர்களின் நலனை அதிகார வர்க்கம் எப்படி பேராசையால் சிதைக்கிறது என்பதை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.


1950 தொடங்கி 1988ஆம் ஆண்டு வரை நிறுவனத்தலைவராக இருந்தாலும் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்திருக்கிறார். இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. தஞ்சை ப்ரகாஷ் எழுதிய படைப்புகளை படிக்க முன்னமே தாராபுர எழுத்தாளர் என்.ஶ்ரீராம் ஊக்கமூட்டினார். அதைப்பின்பற்றி தாராபுரம் இரா. முரூகானந்தத்திடம் நூல்களை வாங்கினேன். அப்படித்தான் கள்ளம் என்ற நாவலை வாங்கிப் படித்தேன்.


தஞ்சையில் வாழும் பரந்தாம ராஜூ என்பவரின் வாழ்க்கைதான் கதைக்களம். ஓவியங்ளளை வரைந்து அதில் கண்ணாடி ஒட்டும் கலையைப் பழகியவன் ராஜூ. ஆனால் இவனது அப்பா உட்பட பலரும் அதனை வெளிநாட்டினருக்கு உட்கும் விதமாக அதை சிதைக்கிறார்கள். அதைப் பொறுக்க முடியாமல் குடித்துவிட்டு சாலைகளில் திரிகிறான்.


பிறகு மராட்டிய வேலைக்கார பெண் மூலம் மெல்ல குடியிலிருந்து மீள்கிறான். பிறகு அவன் வாழுமிடங்களில் உள்ள ஏழைப் பெண்களுக்கு கலையைச் சொல்லிக் கொடுக்கிறான். அதனை காமம் கலந்து சொல்லிக் கொடுப்பதுதான் அவனின் விசேஷ அம்சம் பெண்களைக் கொண்டாடும் போக்கு அவனை பற்றி ஏராளமான கதைகளைப் பேச வைக்கிறது. அத்தனையையும் தாண்டி அவனது கலை அவனை உயரத்திற்கு கொண்டு செல்கிறது. தமிழும் தெலுங்குமான உரையாடல்கள் நாவலை முக்கியமான நாவலாக மாற்றுகிறது. கலைப்பித்து கொண்டவனின் மனதை துல்லியமாக விவரிப்பதில் தஞ்சை ப்ரகாஷ் வெற்றி பெறுகிறார். சந்திப்போம். நன்றி!


.அன்பரசு


12.1.2021





4


கைவிளக்கேந்திய தமிழ்ப்பணி!

ஈரோடு

2.1.2021


அன்புள்ள தோழர் சீனிவாசன் அவர்களுக்கு, வணக்கம்.


கணியம் குழுவினர் ஆனந்த விகடனின் நம்பிக்கை விருதை வென்றதற்கு வாழ்த்துகள் போனில் வாழ்த்து சொன்னேன் என்றாலும் எழுத்து வடிவில் மீண்டும் வாழ்த்துகள். நீங்கள் எப்போதும் போல இதைப்பற்றி நினைக்காமல் உழைத்துக்கொண்டுதான் இருப்பீர்கள்.


.வி. நம்பிக்கை இளைஞர் விருது. நீங்கள் செய்யும் பணியை இன்னும் பரவலாக பலரிடமும் சென்று சேர்க்கும் என நம்புகிறேன். ராகுல் ஆல்வாரிஸ் ஆங்கிலத்தில் எழுதிய ஃப்ரீடம் ஃபிரம் ஸ்கூல் என்ற நூலை பள்ளிக்கு வெளியே வானம் என்று மொழிபெயர்த்தேன். அதனை முதன்முதலில் நம்பி வெளியிட்டது ஃப்ரீதமிழ்இபுக்ஸ் தளம்தான்.


நீங்கள் இல்லாதபோது எனக்கு மொழிபெயர்ப்பில் நம்பிக்கை வந்திருக்காது. இந்நாள் வரை நாள் எழுதிக்கொண்டிருப்பேனா என்பது கூட சந்தேகம்தான். சில விதிகளுக்கு உட்படும் நூல்களை மட்டுமே தளத்தில் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வருகிறீர்கள். ஒரு துளி மணலில் ஓர் உலகு நூலை நீங்களாகவே நீக்கியது எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. ஒருவகையில் அதுதான் வணிகரீதியான முறையில் நூல்களை எழுத வேண்டும் என்ற நிலைக்கு என்னை தள்ளியது. இதற்காக நான் தங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.


எழுத்தாளர்களை சந்தித்து நூல்களை பொதுவான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் பெற்று அதனை வெளியிட முயலும் அன்வர் லெப்பை, தொழில்நுட்ப நூல்களை தனது பணிகளுக்கு இடையிலும் எழுதும் தங்களது மனைவி து. நித்யா ஆகியோரும் முக்கியமான மனிதர்கள். இவர்களை நான் சந்தித்து பேசியிருக்கிறேன் என்பதால் இங்கு குறிப்பிடுகிறேன்.


தனிப்பட்ட வாழ்க்கைச் சுமைகளை சுமந்துகொண்டு பொதுநலனுக்கான வேலைகளை அதற்கான் ஆட்களைப் பிடித்து ஒருங்கிணைத்து செய்வது என்பதை பெரிய உழைப்பைக் கோரும் பணிதான். பொருளாதாரத்தின் அடிப்படைகளைப் பற்றிய நூலைப் படித்து வருகிறேன்.


ஏகே வெர்சஸ் ஏகே இந்திப்படம் பார்த்தேன். அவல நகைச்சுவையான படம். நிஜம், நிழல் என இரண்டு விஷயங்களையும் கலந்து படமாக எடுத்திருக்கிறார்கள். வசனங்கள் அனைத்துமே கலாட்டாவாக இருக்கிறது. அனில் கபூர் நடிகராகவே வருகிறார். வித்தியாசமான முயற்சி.


நன்றி!


சந்திப்போம்


.அன்பரசு

2.1.2021






கருத்துகள்