உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஒருங்கே தரும் நூல்! - சிறகுக்குள் வானம் - ஆர். பாலகிருஷ்ணன்

சிறகுக்குள் வானம் ஆர். பாலகிருஷ்ணன் பாரதி புத்தகாலயம். இந்த நூல் முழுக்க பள்ளி செல்லும் மாணவர்களுக்கானது என்று தனது இரண்டாம் சுற்று நூலில் கூறியுள்ளார் நூல் ஆசிரியரான ஆர். பாலகிருஷ்ணன். இவர் ஒடிசாவில் அரசு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தேர்தல் ஆணைய பணிகளில் இவர் ஆற்றிய சாதனைகள் அதிகம். சிறகுக்குள் வானம் என்பது, முழுக்க ஆர். பாலகிருஷ்ணன் எப்படி அரசு அதிகாரி ஆனார். அவருக்கு உதவிய மனிதர்கள், ஏற்பட்ட சோதனைகள், அதனை அவர் எப்படி வென்றார் என்ற கதைகளை ஊக்கத்துடன் நமக்கு சொல்கிறது. கூடவே அவர் எழுதிய கவிதைகளும் அனைத்து பக்கங்களிலும் நமக்கு உற்சாகம் தருகின்றன. நூலில் தனக்கு பள்ளி கல்லூரிகளில் தமிழ் கற்பித்த ஆசிரியர்களை பின்னாளிலும் மறக்காமல் மரியாதை செய்வதை வாசிக்கும்போது ஆசிரியரின் எழுத்து மீது மரியாதை கூடுகிறது. பணியில் செய்யும் விஷயங்களைப் பொறுத்தவரை எப்படி வேலை செய்யவேண்டும் என்பதை தனிநபர்தான் தீர்மானிக்க வேண்டும். நூல் ஆசிரியர் கூடுதலாக நேர்மையாக உழைக்கவேண்டும் என்பதை வற்புறுத்துகிறார். தி எக்ஸ்ட்ரா மைல் என்பது முக்கியமான அத்தியாயம். ஒடிஷாவில் முன்னர் இயற்கை பேரிடர்கள் நடைபெறும். ஆனால் இப்போது அதனை எதிர்கொள்ளும் நுட்பத்தில் அவர்கள் முன்னேறிவிட்டனர். அதற்கு பாலகிருஷ்ணன் எடுத்த நடவடிக்கைகளும், பயன்படுத்திய தொழில்நுட்பங்களும் காரணம். இதற்காக அவரை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் மக்கள் பற்றிய சம்பவங்கள் வாசிக்கும் யாரையும் நெகிழ வைக்கின்றன. வாடகை வண்டியை எடுத்துக்கொண்டு வெகு தொலைவிலிருந்து பாலகிருஷணனை பார்க்க வந்த கிராம மக்களின் பற்றிய நிகழ்ச்சியை வாசகர்கள் மறக்கவே முடியாது. இன்னொரு நிகழ்ச்சியாக ரகுராஜ்பூரில் கலைக்காக வாழும் மக்கள். அதில் கோப்பிக்குவா எனும் பாரம்பரிய கலையை பயிற்றுவிக்கும் மாகுனி தாஸ் பற்றிய நிகழ்ச்சிகள் நெக்குருக வைப்பவை. மகிழ்ச்சி தருபவை வேறு. நெகிழ்ச்சி தருபவை வேறு என வேறுபடுத்தி அதனைக் காட்டும் விதம் அபாரம். லட்சியம் எப்படி இருக்கவேண்டும், அதற்கு எப்படி நம்மை தயாரித்து உழைக்க வேண்டும் என்பதைப் பற்றி ஆர். பாலகிருஷ்ணன் கூறுவது வியக்க வைக்கிறது. தினமணியின் ஆசிரியர் சிவராமன், பயிற்சி மாணவர்களில் பாலகிருஷ்ணனை பணிக்கு அழைக்கும் சம்பவம் முக்கியமானது எனலாம். என்ன காரணம் என பின்னாளில் கேட்கும்போது சிவராமன் சொல்லும் பதிலை யாரும் மறக்கவே முடியாது. ஆர். பாலகிருஷ்ணன் இந்நூலிலுள்ள நிறைய சம்பவங்களை எடுத்துக்கொண்டு தமிழ் நெடுஞ்சாலை என்ற பெயரில் ஆனந்த விகடனில் தொடர் ஒன்றை எழுதி வருகிறார். அதனையும் வாசகர்கள் நூலாக வந்தால் படிக்கலாம். அதுவும் முக்கியமான பல்வேறு தகவல்களைக் கொண்டுள்ளது. இந்த நூலை கீழேயுள்ள தளத்தில் இலவசமாக தரவிறக்கிக்கொள்ளலாம். கூடுதலாக இரண்டாம் சுற்று என்ற நூலையும் விலையின்றி பெறலாம். https://bookday.in/ கோமாளிமேடை டீம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்