அசாதாரண இந்தியர்கள்! - முதியோர்களைக் காப்பாற்ற முன்வந்த முன்னாள் குற்றவாளி ஆட்டோ ராஜா
தாமஸ் ராஜா - நியூ ஆர்க் மிஷன் இந்தியா |
தாமஸ் எனும் ஆட்டோ ராஜாவுக்கு இப்போது வயது 54 ஆகிறது. அவருக்கு வாழ்க்கையை மாற்றிய நிகழ்ச்சி எதையும் நினைவுகூர நேரம் இல்லை. தெருவில் ஆதரவில்லாமல் கிடப்பவர்கள் தூக்கிக்கொண்டு போய் தனது ஆர்க் மிஷன் இல்லத்தில் சேர்த்து பாதுகாப்பதைத்தான் செய்து வருகிறார்.
பள்ளியில் படிக்கும்போது பிற மாணவர்களை கடுமையாக கேலி, கிண்டல் செய்து வந்தார். மாணவர்களின் பணத்தைக் கூட அடித்துப் பிடிங்கிக்கொண்டிருக்கிறார். அவரது பெற்றோர் என்ன செய்தார்கள் என்று இங்கு கேள்வி வருகிறதல்லவா? அவர்களிடமிருந்து அன்பு கிடைக்கவில்லை என்பதுதான் தாமஸை இப்படி செயல்பட வைத்திருக்கிறது. இதன் போக்கிலேயே தான் ஒருநாள் பெங்களூருவில் பெரிய டான் ஆகவேண்டும் என லட்சியத்தை வளர்த்துக்கொண்டார்.
இந்த லட்சியத்தை நோக்கி கர்ம சிரத்தையாக தினந்தோறும் முன்னேறிக் கொண்டிருந்தார். அப்போது, பீதியானவர்கள் பள்ளி நிர்வாகம்தான். உடனே தாமஸை பள்ளியிலிருந்து நீக்கினர். பிறகு பெற்றோர் அவரை வீட்டிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். தாமஸின் வீட்டைச் சுற்றியிருப்பவர்கள் பலரையும் அடித்து வெளுத்திருந்ததால் அவர் மீது சொன்ன குற்றச்சாட்டுகளும் கூடுதலாக இருந்தன. எனவே, பெற்றோர் எளிமையாக அவரை வீட்டைவிட்டு விரட்டினர். தாமஸ் சென்னைக்கு வந்தார். அங்கு வயதானவர்களின் வீட்டில் வேலை செய்து வந்தார். ஆனாலும் திருடுவதன் சுகமும் சுதந்திரமாக வாழ்வதும் பற்றிய ஆசை போகவில்லை. அப்படித்தான் அங்கு பொருட்களை திருடினார்.
முதியவர்கள் தாமஸை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். அவர்கள், வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சிறைதண்டனை உறுதியானது. அங்கு சென்று சிறைபட்டபிறகுதான் தாமஸிற்கு மனம் தெளிந்திருக்கிறது. இப்படி ஒரு நிலை இனி வரவே கூடாது என திருந்தியிருக்கிறார். பிறகு வெளியே வந்தவர் பெங்களூருவுக்கு வந்து ஆட்டோவை வாடகைக்கு ஓட்டத் தொடங்கினார். பிறகு எப்போதும் திருட்டு, கொள்ளை பக்கம் போகவில்லை.
பொதுமக்கள் சிறுநீர் கழிக்கும் இடத்தில் முதிய பெண்மணி படுத்துக்கிடந்தார். அதைப் பார்த்த தும் அவருக்குள் ஏதோ உடைந்து போனது போல இருந்தது. யாரும் அவரை கண்டும் காணாமல் போய்க்கொண்டிருந்தனர். இவர் அந்த பெண்மணியை கையால் தூக்கினார். அப்போது அந்த பெண்மணி மெல்ல புன்னகைத்தார். வெகுநாட்களாக அவரை யாரும் தொடக்கூட இல்லை. மோசமான நிலையில் அவரது சுற்றுப்புறமும் உடல்நிலையும் இருந்தது.
அந்தப் பெண்மணியை வீட்டுக்கு கூட்டி வந்து குளிக்க வைத்து உணவிட்டு காயங்களுக்கு மருந்திட்டு உணவுகளை தந்தார். இப்போது அந்த பணிகளை அவரது அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் செய்கிறார்கள். வாடகை இடத்தைப் பிடித்து பதிமூன்று பேர்களோடு தொடங்கிய இல்லம் இன்று மாற்றுத்திறனாளி சிறுவர்களையும் பாதுகாப்பதாக விரிவடைந்துள்ளது
இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான நிகழ்ச்சி ஒன்றுள்ளது. தற்போது ஆர்க் மிஷன் இல்லத்தின் பாதுகாவலராக டி.வி. ரவிக்குமார் உள்ளார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தபோது அவரது குடும்பம் கைவிட அவரை தாமஸ்தான் பராமரித்தார். இதனால் தனது குடும்ப சொத்தாக கிடைத்த 80 லட்ச ரூபாயை ஆதரவற்றவர்களை பராமரிக்கும் அமைப்பிற்கே கொடுத்துவிட்டார். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு, இங்குதான் என்னை மனிதனாக நடத்தினார்கள். மரியாதை கொடுத்தார்கள் என்று சொல்லுகிறார்.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட கர்ப்பிணிகள் என பலரையும் பராமரிக்கும் இல்லமாக ஆர்க் மிஷன் உள்ளது. மதம், இனம், மொழி என எதையும் பார்ப்பதில்லை என்றார் தாமஸ். மனநிலை பாதிப்புற்றவர்களை இங்கு கொண்டு வந்து நன்றாக பார்த்துக்கொள்வதோடு அவர்களுக்கு சிகிச்சையும் ஏற்பாடு செய்கிறார் தாமஸ். இப்படி சிகிச்சை பெற்றவர்களே இங்கு தன்னார்வலர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
பின்னாளில் தாமஸை அவரது குடும்பம் அழைத்தாலும் கூட அவர்களைப் பார்க்க இவர் போகவில்லை. கடவுள் என்னை ஏழை மக்களுக்காக தேர்ந்தெடுத்திருக்கிறார். எனவே, நான் இதையே செய்ய விரும்புகிறேன். குடும்பம் பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை என்கிறார் தாமஸ் எனும் ஆட்டோ ராஜா.
2022ஆம் ஆண்டோடு தாமஸ் செய்யும் ஆதரவற்றோர் உதவிகளுக்கு 25 ஆண்டுகள் ஆகிறது. 750 பேர்களுக்கு மேல் பாதுகாத்து பராமரித்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் தோடகுப்பி எனும் இடத்தில் ஆர்க் மிஷன் இந்தியா மையம் செயல்பட்டு வருகிறது.
ரீடர்ஸ் டைஜெஸ்ட்
வி குமார சாமி
கருத்துகள்
கருத்துரையிடுக