தனது நாவல் பாத்திரங்களை ஒரே நாவலில் வலம் வரச்செய்த பாலபாரதி! - கடிதங்கள் - த.சீனிவாசன்
10
திடீரென நேர்ந்த விபத்து!
26.2.2021
அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு, வணக்கம்.
நலமா? அறிவியல் நேர்காணல்களை எழுதிக் கொண்டு இருக்கிறேன். இதனை ஓராண்டுக்கு முன்னரே எழுதினேன். நான் வேலை செய்யும் தினசரிக்காக எழுதினேன். ஆனால் அங்கு பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது தனி நூலாக மாற்றி வெளியிட நினைத்துள்ளேன்.
புத்தக காட்சியில் காமிக்ஸ் நூல்களை தேடிப்பார்க்க வேண்டும். இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் அங்கு செல்வேன் என்று நினைக்கிறேன். எனது ஆசான் குங்குமம் ஆசிரியர் கே.என். சிவராமன் அவர்களை சந்திக்க நினைத்தேன். ஆனால் அவர் ஏதோ விபத்தில் சிக்கி கையில் காயத்துடன் இருந்தார். அவரது அம்மாவின் நலம் பற்றிக் கேட்டபோது அடிபட்ட தகவலை சொன்னார். வருத்தமாக இருந்தது. டிஸ்கவரி இந்தியா நூலை மெல்லத்தான் படிக்கக முடிகிறது. நடப்பு ஆண்டில் உடல் மனம் உள்ளே போன்ற இயல்பிலான உளவியல் நூலை எழுதி தொகுக்க வேண்டும். நான் எழுதிய மருத்துவம் சார்ந்த நூல்களில் பரவாயில்லை என்று எனக்குத் தோன்றிய நூல் அதுவே.
2021ஆம் ஆண்டில் நூலை செம்மைப்படுத்தி எழுத முயல்வதுதான் வேலை. பார்ப்போம். நன்றி சந்திப்போம்.
ச.அன்பரசு
26.2.2021
11
கைகளைப் பற்றிய கடவுள்!
28.2.2021
அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு, வணக்கம்.
இன்று உங்கள் வீட்டுக்கு வந்தது மறக்க முடியாத அனுபவம். அதற்கு காரணம், உங்கள் மகளான இயல்தான். அண்மையில் அவள் அளவிற்கு என் கையைப் பிடித்து யாரும் பேசவில்லை. மகிழ்ச்சியாக உணர்ந்த தருணம் அது. குழந்தைகளை எந்தளவு பாதுகாப்பாக பார்த்து பராமரிக்கவேண்டும் என்பதை பார்த்து் தெரிந்துகொண்டுவிட்டேன். பாரியை எப்படி ஏற்றுக்கொண்டு வளர்க்கிறீர்கள் என்பதைப் பார்த்தது நிறைய விஷயங்களை புரிந்துகொள்ள உதவியாக இருந்தது.
ரிச்சர்ட் பிரான்ஸன் - டோன்ட் கேர் மாஸ்டர் நூல் படிக்க நன்றாக இருந்தது. தனது அம்மாவான ஈவ் பிரான்சனிடமிருந்து ரிச்சர்ட் கற்றுக்கொண்ட மன வலிமை, விடாமுயற்சி முக்கியமானது. அதுதான் அவரை வாழ்க்கை முழுவதும் வழிநடத்தியிருக்கிறது. வர்ஜின் விமான சேவைக்காக, தனது முதல் வெற்றிகரமான நிறுவனம் வர்ஜின் ரெக்கார்ட்ஸை விற்க நேரும் இடம் நூலில் முக்கியமானது. அந்த நிலையில் தனது வாழ்க்கையில் எது முக்கியம் என்று அவர் தீர்மானித்தது முக்கியமானது. மறக்க முடியாத புதிய தலைமுறை தொழிலதிபர்களின் ரிச்சர்ட் பிரான்சனின் இடம் ஊக்கமூட்டக்கூடியது. கடித நூலில் பதினைந்து பக்கங்கள்தான் படித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் நூல் பற்றிய விமர்சனங்களை எழுதி அனுப்புவேன்.
நன்றி!
ச.அன்பரசு
28.2.2021
12
புதுமையான பாலபாரதி யுனிவர்ஸ்!
6.3.2021
அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு, வணக்கம். நலமா? ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டிற்கு அழைத்தமைக்கு நன்றி. மகிழ்ச்சி. ஆனால் யோசித்துப்பார்த்தால் அன்று நான் உங்களின் தினசரி அலுவல்களின் நிறைய இடைஞ்சல்களைக் கொடுத்துவிட்டது போல தெரிகிறது.
சமையல் வேலைகள், குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது என ஞாயிற்றுக்கிழமையும் மற்றொரு நாளே என நினைக்க வைத்துவிட்டது. நான் உங்களிடம் சொன்ன நேரத்திற்கு முன்னமே வந்துவிட்டேன். இது என்னுடைய பழக்கம். இனிமேல் சரியான நேரத்திற்கு வந்து சேரும்படி பயணத்தை திட்டமிட முயல்கிறேன். உண்மையில் ஞாயிறு அன்று நண்பகல் 12 மணிக்குள் கிளம்பிவிட நினைத்தேன். ஆனால் சூழல் நினைத்தது போல அமையவில்லை.
மந்திரச்சிரிப்பு - பாலபாரதி அவர்கள் எழுதிய நூலைப் படித்தேன். பாரதி புத்தகாலயம் இதனை நூலாக வெளியிட்டிருக்கிறது. நூலின் பிடிஎஃப்பை வாசிக்கக் கொடுத்தார். முன்னோடி குழந்தை எழுத்தாளர்களின் பாத்திரங்கள், பாலபாரதி இதுவரை எழுதியுள்ள குழந்தை நாவல்களின் பாத்திரங்கள் அனைவரும் இந்த நாவலில் ஒன்று கூடுகின்றனர். ஒருவகையில் இது பாலபாரதி யுனிவர்ஸ் முயற்சி. வாசிக்கும்போது நன்றாகவே இருக்கிறது. மோசமில்லை. நாவலைப் படிக்க நன்றாகவே இருந்தது. இந்த நூலுக்குப் பிறகு பூமிக்கடியில் ஓர் மர்மம் என்ற நாவலைப் படித்தேன். இதுவும் பாலபாரதி சாருனுடையதுதான்.
நாவலின் கதையை உங்களுக்கு சொல்லிவிடுகிறேன். பக்கம் 164தான். சுயம்புநாதர் கோவிலுக்குள் உள்ள மர்மத்தை சிறுவர்கள் சேர்ந்து எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் கதை. கதையின் போக்கில் ஏராளமான அறிவியல் சமாச்சாரங்களை சொல்லுகிறார்கள். முடிந்தால் வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு கதையைப் படித்துக் காட்டுங்கள். அடுத்து உங்களுக்கு அனுப்பும் கடிதங்கள் பெரும்பாலும் 25 பைசா மதிப்பிலானவைதான்.
நன்றி! சந்திப்போம்!
ச.அன்பரசு
6.3.2021
13
தோலைச் சொரிந்தால் கொட்டும் சீழும் ரத்தமும்!
14.3.2021
அன்பு நண்பர் சீனிவாசனுக்கு, வணக்கம். நலமா?
கடந்த வெள்ளி ஊருக்கு சென்றிருந்தேன். ஒவ்வாமைக்கான மருந்துகள் தீர்ந்துவிட்டன. சித்த மருத்துவமனையில் எனக்கு ரெஜூனாத் என்ற சித்த மருத்துவர் நியமிக்கப்பட்டார். இவரின் சிறப்பம்சம், எத்தனை முறை இவரை சென்று பார்த்திருந்தாலும் முதன்முறையாக நம்மைப் பார்ப்பது போல பார்த்து பேசுவார். தற்காலிக நினைவுத்திறன்தான். உடனே மறந்துவிடுவார். ரூ. 2,500க்கும் குறையாத மருந்துகள் கூடவே கடும் பத்தியம். இதன் காரணமாக எந்த விழாக்களுக்கு செல்ல முடியவில்லை. அலுவலக விரோதிகள் கொடுக்கும் பண்டங்களைக் கூட வாய் வைக்கமுடியவில்லை. அலுவலக பாதுகாவலர்களுக்கு கொடுத்து விடுகிறேன்.
வேறு வழியில்லை. ஒவ்வாமை பரவினால் உடல் முழுக்க சீழும் ரத்தமும் கொட்டும். கூடவே அரிப்பும் தோல் உரிந்தும் வரத்தொடங்கும். சித்த மருந்துகளும் பத்தியமும் மட்டுமே உடலை கொஞ்சமேனும் நள மகாராஜா நிலைக்கு செல்லாமல் காப்பாற்றி வருகிறது. இப்போதைக்கு தோல் விகாரமாக மாறாமல் இருக்கிறது. எலிசா ஃபே கடித நூலை 75 பக்கங்கள் படித்துள்ளேன். அலைச்சலில் நூலை சரியாக படிக்க முடியவில்லை. எங்கள் அலுவலகத்திற்கு எதிர் அலுவலகத்தில் தினசரி நாளிதழ் உள்ளது. அங்கு ஆறு பேருக்கு கொரோனா வந்துவிட்டது. எங்கள் குழுவினருக்கு வீட்டிலேயே வேலை செய்யும் அனுமதி கொடுப்பார்களா என்று தெரியவில்லை.
நன்றி! சந்திப்போம்!
ச.அன்பரசு
14.3.2021
14
அரசியலை விவரிக்கும் சிறுகதை!
16.3.2021
அன்பு நண்பர் சீனிவாசனுக்கு வணக்கம். நலமா?
எங்கள் அலுவலகத்திற்கும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. எதிரேயுள்ள அலுவலகத்தில் நோய்த்தொற்று வந்தது முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன். மாஸ்க் கூட போடாமல் தெனாவெட்டாக திரிந்த மனிதர்களும் அவர்களில் இருந்தனர். வீட்டில் வேலை என்றால் நூல்களை படிக்க நிறைய நேரம் கிடைக்கும். சொந்த வேலைகளையும் கவனிக்கலாம். உடற்பயிற்சிக்காக கொஞ்சதூரம் நடப்பது அவசியம்.
உறவுப்பாலம் - இலங்கை சிறுகதைகளைப் படித்தேன். இந்த கதைகளில் மறுபடியும் (குணதாச குமரசேகர), அக்கா (சரத் விஜயசூர்யா) கதைகள் எனக்கு பிடித்திருந்தன. ஆங்கில கதைகளில் டிரம் கலைஞன் (காமினி அக்மீனா), குரங்குகள் (புண்ய கண்டே விஜே நாயக) நன்றாக இருந்தன. தமிழ் சிறுகதைகள் ஏதும் தேறவில்லை. டிரம் கலைஞன், இலங்கையில் நடைபெறும் வினோத சம்பவங்களைச் சொல்லும் படைப்பு. குரங்குகள் மனதின் இயல்பான விருப்பங்களையும் திணிக்கப்படும் சர்வாதிகாரத்தையும் வெளிப்படையாக சுட்டிக்காட்டி எழுதப்பட்டிருந்தது.
நன்றி! சந்திப்போம்!
ச.அன்பரசு
16.3.2021
கருத்துகள்
கருத்துரையிடுக