ஓராண்டு இடைவெளியில் சமூகத்தை கற்ற சிறுவனின் கல்வி! - தெருக்களே பள்ளிக்கூடம் - ராகுல் அல்வரிஸ்

 




ராகுல் அல்வரிஸ் - தெருக்களே பள்ளிக்கூடம்






தெருக்களே பள்ளிக்கூடம்
ராகுல் அல்வரிஸ்
தமிழில் - சுஷில்குமார் 
தன்னறம் நூல்வெளி
ரூ.200 பக்கங்கள் 203


பொதுவான கல்விமுறையில் நாம் படித்து நிறுவனத்தில் வேலைக்கு செல்லலாம். ஆனால் இதில் நாம் கற்பவை பெரும்பாலும் உதவாது. அவை கல்வி சான்றிதழில் இருக்கும். நேரடியாக வாழ்க்கையில் அவை பெரிய பங்காற்றாது. இப்போது கல்லூரி படிப்பவர்கள் பெரும்பாலானோர்க்கு அவை கல்யாணப் பத்திரிக்கையில் குறிப்பிட உதவுகிறது. பெருமைக்கு மட்டுமே. 

இதைத்தாண்டி நடைமுறை வாழ்க்கையைக் கற்க நாம் வெகுதூரம் செல்லவேண்டியிருக்கிறது. பள்ளி, கல்லூரி என மூடிய வகுப்புகளைத் தாண்டி சாளரம் திறந்தால்தான் சூரிய ஒளி, காற்று என வெளிப்புற சூழல்களை உணரமுடியும். 

கோவாவைச் சேர்ந்த ராகுலும் அப்படித்தான் தனது படிப்பை அமைத்துக்கொண்டார். ஜூன் 1995 முதல் ஜூன் 1996 என பள்ளிப்படிப்பில் சிறு இடைவெளி எடுத்துக்கொண்டார். இந்த இடைவெளியில் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென என்பதை தெருக்களே பள்ளிக்கூடம் நூல் விவரிக்கிறது. 

ராகுல் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் தனது உறவினர்கள், நண்பர்கள் போல கல்லூரியில் சேரவில்லை. அதில் அவரின் பெற்றோருக்கும் கூட விருப்பம் இல்லை. அவர்கள் ஒரு திட்டம் வகுக்கிறார்கள். சமூகத்தை, நாம் வாழும் உலகை புரிந்துகொள்ள பள்ளி மட்டுமே உதவாது என்பது அவர்களின் எண்ணம். எனவே, ராகுலை ஓராண்டு பல்வேறு விஷயங்களை கற்க, பார்க்க, அனுபவிக்க, புரிந்துகொள்ள பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

அக்வாரியம், முதலைப்பண்ணை, மண்புழு வளர்ப்பு, விலங்கு காட்சி சாலை என பல்வேறு இடங்களுக்கு செல்கிறான் ராகுல். அங்கு அவன் சென்று பல்வேறு விஷயங்களைக் கற்கிறான். கோவாவிலிருந்து புனே, மும்பை, மங்களூர், சென்னை என பல்வேறு இடங்களுக்கு தானே பயணிக்கிறான். அதில் நேரும் இடர்ப்பாடுகளை கடந்து வருகிறான். தான் என்ன செய்யவேண்டுமே  அதில் அவன் சவால்களை கடந்து உறுதியாக இருக்கிறான். 

பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி, உணவு, வாசிப்பு என அனைத்தையும் தேர்ந்தெடுக்கிறார்கள். ராகுல் தனது ஓராண்டில் அவனுக்கு என்ன பிடிக்குமோ அதை அவனே தேர்வு செய்கிறான். சரியோ தவறோ அதன் விளைவுகளை அனுபவித்து தெரிந்துகொள்கிறான். அவனது அனுபவங்களின் விளைவாக சூழலியலை தனது வேலையாக பின்னாளில் தேர்ந்தெடுக்கிறான் என்பது நூலைக் கடந்த செய்தி. 

மீன்குழம்பும் சோறும் மட்டுமே விரும்பிச் சாப்பிடும் ராகுல், தனது உறவினர்களின் வீட்டில் தங்கி பயிற்சிகளுக்கு செல்லும்போது மெல்ல காய்கறிகளையும் சாப்பிட்டு பழகுகிறான். ஒரு செயலை எப்படி செய்வது என்ற திட்டமே இல்லாமல் சோம்பலாக இருப்பவன், மெல்ல தன்னை ஒழுங்கு செய்துகொள்கிறான். அப்படியல்லாதபோது அனைத்து செயல்களையும் தப்பும் தவறுமாக செய்து மாட்டிக்கொண்டு அல்லாடுகிறான். இது,  பிங் என்பவரின் வீட்டில் தங்கி நியூ காலேஜூக்கு சென்று மண்புழு பயிற்சிக்கு சென்று வரும்போது நடக்கிறது. 

நல்ல அனுபவங்கள் மட்டுமல்லாமல் மோசமான அனுபவங்களும் ராகுலுக்கு கிடைக்கிறது. பாண்டிச்சேரியில் ரிக்சா ஓட்டுபவர், ஆரோவில்லுக்கு அழைத்து செல்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி அரவிந்தர் ஆசிரமத்திற்கு கொண்டு சென்று விடுவது, இன்னொருவர் மகாபலிபுரத்திற்கு செல்லும் பேருந்து என்று சொல்லி காசை ஏமாற்றி வாங்கிக்கொள்வது ஆகியவற்றை வலியோடு குறிப்பிடுகிறார். அவரது பஸ்சில் உடன் இருந்தவர்கள் ஆங்கிலம் மட்டும் பேசத்தெரிந்தவன் என்ற ரீதியில் கூட அவரிடம் டிக்கெட் காசு கேட்டு வாங்குபவன் போலியானவன் என்று கூறவில்லை என்று வருத்தமாக குறிப்பிட்டு எழுதியுள்ளார். 

கல்வி என்பது இன்று வரலாற்றை மாற்றுவதாக அதிகாரத்தில் உள்ளவர்களின் போக்கிற்கு ஏதுவாக சிந்திக்க வைப்பதாக மாறியுள்ளது. இச்சூழலில் பொதுவான கல்வி என்பது அனைவருக்கும் பொருந்தாது. ஒரு சிறுவனுக்கு பல்வேறு வாய்ப்புகளை அடையாளம் காட்டி அதில் அவனுக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ அதனை செய்யவைக்க வேண்டும். பிடித்த விஷயத்தை செய்யும்போது அதில் பணம் கிடைப்பதில் பிழை ஏற்படாது. அதை வாழ்வாதாரமாக கொள்ள முடியும் என்பதை நூல் ராகுலின் அனுபவமாக விவரித்துள்ளது.  கல்வி சார்ந்து சிந்திப்பவர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் என்று இந்நூலைக் கூறலாம். தமிழில் சுஷில்குமார் நூலை நேர்த்தியாக மொழிபெயர்த்துள்ளார். ராகுலின் அனுபவங்களை அவரின் மனவோட்டத்தை ரசித்து படிக்கும்படி உள்ளது. 

ராகுலின் அனுபவங்களோடு களப்பணி விஷயங்களும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விலங்கினங்கள் பற்றிய நிறைய செய்திகளும் எழுதப்பட்டுள்ளன. எனவே, நம்மைச்சுற்றியுள்ள விலங்குகளை நாம் புரிந்துகொண்டு அவற்றுக்கான இடத்தை வழங்கவேண்டிய அவசியத்தையும் நூல் வலியுறுத்துகிறது. இது இன்றைய மனித விலங்கு முரண்பாட்டு காலத்தில் முக்கியமானது. 

நூலைப்படிப்பவர்கள் இன்னொரு விஷயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த முறை அனைவருக்கும் பொருத்தமானது என்று கூற முடியாது. ஏழைகள், வேலைக்கு சென்றுதான் குடும்பக்கடனை தீர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்படி ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாது.

 ஓரளவு செல்வம் கொண்டவர்கள், பையன் தனக்கான துறையை தானே தேர்ந்தெடுக்கட்டும் என நினைப்பவர்கள் மட்டுமே இப்பாதையை தேர்ந்தெடுக்கலாம்.  ராகுல் அல்வாரிஸ் பெரும்பாலும் சென்று தங்கும் வீடுகள் அனைத்துமே அவரின் பெற்றோர்களின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகள்தான். இது ஒருவகையில் அவரது பயிற்சி கடுமையாக இருந்தாலும் கூட ஆசுவாசமாக அமைகிறது. இதெல்லாம் தாண்டி கல்வியை இம்முறையில் மனப்பாடம் செய்யாமல் கற்க முடியுமா என்பது ஆச்சரியப்படுத்துகிறது. இதை ராகுலும் தானே ஓரிடத்தில் எழுதியிருக்கிறார். இந்த வகையில் களப்பணியோடு சேர்ந்து கற்கும் கல்வி, மேலும் தகவல்களை அறியத் தூண்டும் என்பது உண்மை.  


கோமாளிமேடை டீம் 


பள்ளிக்கு வெளியே வானம் - அன்பரசு சண்முகம்

மேலே நூல் விமர்சனம் செய்யப்பட்ட  நூலின் இன்னொரு எழுத்து வடிவத்தை விலையின்றி வாசிக்க கிளிக் செய்யுங்கள்....

https://freetamilebooks.com/ebooks/pallikku-veliye-vaanam/

கருத்துகள்