பத்ம விருதுகளைப் பெற்றவர்களைப் பற்றிய சிறு அறிமுகம்!

இந்தியாவைப் பொறுத்தவரை விருது என்பதே அப்ளிகேஷன் போட்டு வாங்குவது என்று மாறிவிட்டது. அரசு தனக்கென தனி குழுவை வைத்து சமூகத்திற்கு உழைப்பவர்கள், அதன் பாரத்தை தனது தோளில் சும்பபவர்களை பரிசளித்து கௌரவித்தால் நன்றாக இருக்கும். பெரும்பாலும் அரசுக்கு விழா கொண்டாடுவது முக்கியமே ஒழிய, அதற்கான உழைப்பை போட எப்போதும் சோம்பல் பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் சில மனிதர்களை அதிகாரிகள் குழு எப்படியோ தேர்ந்தெடுத்து கௌரவம் செய்துவிடுகிறார்கள். அவர்கள் பெயர் நமக்கு தெரியாவிட்டாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மூலம் நாம் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். அப்படி பத்ம விருது வென்ற சில மனிதர்களைப் பற்றி பார்க்கலாம். நந்தா கிஷோர் ப்ரஸ்டி கைவிளக்கு ஏற்றிய ஆசிரியர் கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் பரிசு வழங்கப்பட்ட மனிதர். கடந்த ஆண்டு டிசம்பரில் காலமாகிவிட்டார். ஆனால் இவர் கற்பித்த கல்வி பலரது வாழ்க்கையில் இருளை விலக்கியிருக்கிறது. அறிவு விளக்கை மனதில் ஏற்றியிருக்கிறது. ஒடிஷாவைச் சேர்ந்த கிஷோர், எழுபது ஆண்டுகாலம் கல்வியை குழந்தைகள் முதல் வயது வந்தோருக்கும் கற்பித்து வந்திருக்கிறார். இச்செயல்பாடு முழுக்க இலவசமாகவே நடைபெற்றிருக்கிறது என்பதுதான் முக்கியம். இதில் முக்கியமான நகை முரண் என்னவென்றால், சிறுவயதில் வறுமை காரணமாக கிஷோர் ஏழாவது வரைதான் படித்தார். கிராமத்தினரால் நந்தா சார் என்று அழைக்கப்பட்டார். தனது வீட்டின் அருகில் ஒரு இடத்தைப் பிடித்து அங்கு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். மாலைவேளையில் நடந்த வகுப்பு, பலருக்கும் முக்கியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துளசி கௌடா பசுமையின் காதலி கர்நாடகாவில் வாழும் ஹாலகி எனும் பழங்குடி இனப் பெண்மணி. வயது 70. இவர் பரிசு பெற வரும்போது உள்துறை அமைச்சரும். பிரதமரும் வணங்கி மரியாதை செலுத்தியதைப் பார்த்திருப்பீர்கள். அந்த ஸ்டன்ட்டைப் பற்றி இங்கே பேசவேண்டாம். தான் வாழும் பகுதியில் 30 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்து இடத்தை பசுமையின் கூடாரமாக்கியிருக்கிறார். இவர் கல்வி ஏதும் படிக்கவில்லை. படித்தது அனைத்தும் தன்னைச் சுற்றியுள்ள தாவரங்களையும் அதன் இனங்களைப் பற்றி மட்டுமே. இதனால்தான் இவரை காடுகளின் தகவல் களஞ்சியம் என்று கூறுகிறார்கள். தனது இளம் வயதிலிருந்து மரக்கன்றுகளை நட்டு வருகிறார். இவருக்கு பத்ம விருது சமூக சேவை பிரிவில் வழங்கப்பட்டது. மாத்தா பி மஞ்சம்மா மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்த நடனக்கலைஞர் நடனமே வாழ்வு இவரும் கர்நாடகத்தைச்சேர்ந்தவர்தான். 64 வயதான மாற்றுப்பாலின நடனக்கலைஞர். நாட்டுப்புற கலை வடிவங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததற்காக பத்ம விருதைப் பெற்றுள்ளார். மஞ்சுநாத ஷெட்டியாக பிறந்தார். மாற்றுப்பாலினத்தவராக பிறந்தால், அவரை கோவிலுக்கு அர்ப்பணித்துவிடுவது இவரின் குடும்ப பாரம்பரியம். குடும்பத்தால் கைவிடப்பட்டவர், தெருக்களில் பிச்சை எடுத்தார். பிறகு, பாலியல் ரீதியான நெருக்கடிகளை சந்தித்தார். பிறகுதான் ஜோகதி நிரித்யா எனும் கலையைக் கற்றுக்கொண்டு மாநிலம் முழுக்க ஆடியிருக்கிறார். இன்று கர்நாடகத்தின் ஜான்படா அகாதெமியின் முதல் மாற்றுப்பாலின தலைவராக இருக்கிறார். இது மாநில அரசின் அமைப்பு ஆகும். சிந்துதாய் சப்கல் அன்பின் அருவி தனக்கு கிடைக்காத அன்பை ஆதரவற்ற பிள்ளைகளுக்கு கொடுக்கத் தொடங்கியவர். மகாராஷ்டிரத்தின் வார்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1500க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்களுக்கு ஆதரவு கொடுத்து வளர்த்து வாழ்க்கையில் உருப்பட வழிசெய்து கொடுத்துள்ளார். குழந்தைகள் தினத்தில் பிறந்தவர். இவரது குடும்பம் வறுமையானது. எனவே, இவரை தேவையில்லாதவராகவே நினைத்தனர். பனிரெண்டு வயதில் திருமணமானது. இருபது வயதில் இவருக்கு மூன்று குழந்தைகளும், வயிற்றில் ஒன்பது மாத சிசுவும் இருந்தது. கணவர் வீட்டிலிருந்து இவரை துரத்திவிட்டனர். ஊரின் சுடுகாட்டை தனது இருப்பிடமாக்கிக்கொண்டார். தனது பிள்ளைகளை பிச்சை எடுத்து காப்பாற்றினார். பிறகு, இவரை நோக்கி நிறைய ஆதரவற்ற குழந்தைகள் வர அவர்களுக்காகவும் பிச்சை எடுத்தார். அவர்களை நன்றாக வளர்த்தியவர், பின்னாளில் அவர்களுக்கான இல்லம் ஒன்றையும் உருவாக்கினார். இன்று இவரது வாழ்க்கையைப் பற்றியே இவர் வளர்த்த பிள்ளைகளில் ஒருவர் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்துள்ளார். இவரைப் பற்றிய வீடியோ கோல்கேட் நிறுவனம் உருவாக்கிய விளம்பரமாகவும் யூடியூபில் உள்ளது. லக்ஷ்மி பருவா மனித வடிவில் தன லஷ்மி அசாம் மாநிலத்தின் பெண்கள் கூட்டுறவு வங்கியை முதன்முறையாக உருவாக்கிய பெண்மணி. இதன்மூலம் ஏழை பெண்களுக்கு கடன்களை வழங்கினார். தனது சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்துவிட்டார் பருவா. தனது திருமணத்திற்கு பிறகே பட்டம் பெற்றார். இதற்குப் பிறகு வங்கியில் வேலை செய்யத் தொடங்கினார். 2000இல் ஜோர்கட்டில் பெண்களுக்கு கடன்களை வழங்க வங்கியை உருவாக்கினார். பெண் ஊழியர்களைக் கொண்ட வங்கியில் இன்று 45 ஆயிரம் கணக்குகள் உள்ளன. பெண்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவருக்கு, சமூக பணி பிரிவில் பத்ம விருது வழங்கப்பட்டது. இவர் தேவி அகில்யா பாய் ஹோல்கர் விருது பெற்றுள்ளார். டெக்கன் கிரானிக்கல்

கருத்துகள்