எழுத்தை நம்பி சென்னைக்கு வரும் தஞ்சாவூர் இளைஞனின் போராட்டம்! - மிஸ்டர் வேதாந்தம் - தேவன்
மிஸ்டர் வேதாந்தம் - 1 தேவன் |
மிஸ்டர் வேதாந்தம் முதல் பாகம்
தேவன்
அல்லயன்ஸ்
வேதாந்தம் என்ற இளைஞனின் வாழ்க்கை, தடாலென ஒரேநாளில் கீழே விழுகிறது. அதற்குப் பிறகு அவன் தனது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறான் என்பதே நாவலின் மையம்.
தினந்தந்தியின் திரைவிமர்சனம் போல கதையின் கரு இதுதான் என்று சொன்னாலும் கூட நாவல் நெடுக வேதாந்தத்தின் மனநிலையை விவரிப்பது கடினமானது. சில பக்கங்களை வாசித்து விட்டு மெல்ல அவரின் மனநிலையோடு இணையும்போது நாவலை ரசிக்கத் தொடங்குகிறோம்.
தஞ்சாவூரில் வாழும் தேசிகாச்சாரி என்பவரின் மகன் வேதாந்தம். இவரின் பணம், செல்வாக்கு காரணமாக ஊரில் பெரிய மதிப்பு உண்டு. ஆனால் அவரை உண்மையாகவே மதிப்பவர்கள் குறைவு என்பதை அவர் மறைவின்போது, வேதாந்தம் கண்டுகொள்கிறான். அவனுக்கு அந்த சூழலில் ஆதரவு தருவது அவனது அத்தையும் அவளது பெண்ணான செல்லமும்தான். அத்தங்காள் செல்லம் என்றே கடிதங்களில் வருகிறது. அப்படியே வைத்துக்கொள்வோம் அழகாக இருக்கிறது அல்லவா?
தேசிகாச்சாரிக்கு கிடைத்த பணம் அவரை ஆணவம் கொண்டவராக மாற்றுகிறது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பணத்தை செலவு செய்கிறார். குறிப்பாக அவரது மாமா கோபாலசாமி அய்யங்காருக்கு. அவர் சாமர்த்தியமாக இவரைப் பயன்படுத்திக்கொண்டு பயன் பெறுகிறார். பணத்தையும் திருடுகிறார். இதை வேதாந்தம் கவனித்து தன் அப்பாவிடம் சொன்னாலும் அவர் அதை சரியாக புரிந்துகொள்வதில்லை. அவருக்கு ஒரே லட்சியம்தான். தான் பணக்காரன் என்பதை ஊரார் புரிந்துகொள்ளவேண்டும். எனவே இந்த கௌரவத்திற்காகவே ஏராளமாக செலவு செய்கிறார். இதனால் ஒரு ரூபாய் செலவு செய்யும் இடத்தில் ஐந்து ரூபாய் கூடுதலாகிறது.
வேதாந்தத்தைப் பொறுத்தவரையில் பணம் கிடைக்கிறது. அதை செலவு செய்வோம் என்று வாழ்கிறான். அப்பாவின் மீது மிகுந்த பாசம் என்றாலும் கூட அவர் எப்படி தொடர்ச்சியாக செலவு செய்கிறார், தனது சொத்துகள் என்ன என்று கூட தெரிந்துகொள்வதில்லை. பிஏ தேர்வுக்கு ஏனோதானோ என்று படித்துக்கொண்டிருக்கிறார். தேர்ச்சி பெற்றால் ஒரு பட்டம் பெற்று அத்தை மகள் செல்லத்தை திருமணம் செய்துகொள்ளலாம் என நினைக்கிறான். ஆனால் அப்போதுதான் அவனது அப்பா, மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக செய்தி கிடைக்கிறது.
விரைவிலேயே அவர் வேதாந்தத்தைப் பார்த்துக்கொண்டு இறந்துபோகிறார். அதற்குப் பிறகுதான் அவனைப் பார்த்துக்கொள்வதாக சொன்ன மாமா கோபாலசாமி அய்யங்காரின் நிஷ்டூர குணம் புரிகிறது. வேதாந்தத்தை வளைய வந்து காதல் சைகைகளை காட்டிய கோமளி, அவனிடம் பணம் இல்லை என்று தெரிந்ததும் சூசகமாக தெருநாய் என திட்டிவிட்டு விலகுகிறாள். வீட்டையும் கடனுக்கு ஜப்தி ஆகிறது என வேதாந்தம், அவனது அத்தை, அத்தங்காள் செல்லம் என அனைவரையும் விரட்டுகிறார் மாமா கோபால்.
சொத்துக்களை வேதாந்தத்தை கட்டாயப்படுத்தி மிரட்டி வாங்குகிறார். இதற்காக தேசிகாச்சாரி கடன் வாங்கிய கடன்கார ர்களை கைக்குள் போட்டுக்கொள்கிறார். இதில் மிஞ்சும் பணத்தை தான் திருடிக்கொள்ளலாமே என்று நினைக்கிறார். அதனையும் செய்து முடிக்கிறார். இந்த நிலையில் வேதாந்தத்திற்கு தங்குவதற்கு கூட இடமில்லாத நிலையில் அவன், அத்தை வீட்டிற்கு வந்து தங்குகிறான். தேசிகாச்சாரி தனது தங்கையை அவளது கணவர் துரைசாமி காலமானதும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் வேதாந்தம் அங்கு நேரம் கிடைக்கும்போது வந்துபோய் கொண்டிருந்தவன்தான்.
இந்த நிலையில் அத்தைக்கு சொந்தமான பிரச்னையில் உள்ள நிலத்தையும் ரங்கநாதம் என்ற உறவினரிடம் வேதாந்தம் வெகுளியாக சென்று மாட்டிக்கொண்டு இழக்கிறான். பிறகு பிழைப்பிற்கு என்ன செய்வது என யோசித்து டியூசன் சொல்லிக்கொடுக்கலாம் என ஒருவரைக் கேட்கிறான். அவர்தான் அவனது வாழ்க்கையை மாற்றிப்போடும் சந்தான அய்யங்கார். அவர் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு செல்கிறார். அவனையும் அங்கு வந்து தங்கிக்கொண்டு பாடம் சொல்லிக் கொடுக்க சொல்கிறார்.
அவரும காரியவாதிதான். ஏழு பிள்ளைகளுக்கு வெறும் 30 ரூபாய் பேசி சல்லிசாக வேதாந்தத்தை மடக்குகிறார். இந்த நிலையில் வேதாந்தம் எழும்பூருக்கு சென்று இறங்குகிறான். அங்கு அவன் சந்திக்கும் மனிதர்கள், அவன் வாழ்க்கை மாறும் விதம் ஆகியவை முக்கியமாக வாசிக்க வேண்டிய பகுதிகள்.
அங்குதான் அவன் தன் வாழ்நாளுக்கும் மறக்க முடியாத மனிதரான சுவாமியை சந்திக்கிறான். பிறகும் ஏராளமான காரியவாதிகள், கைகாரர்கள், வினோதமான பழக்கம் கொண்ட பணக்காரர்கள் ஆகியோரை சந்திக்கிறான். அறிமுகமில்லாதவர்களிடம் உருவாகும் குரோதம், வன்மம், இதே போன்று நெஞ்சை இதமாக்கும் பாசம், அக்கறை ஆகியவற்றையும் பெறுகிறான்.
அத்தனை விஷயங்களிலும் அத்தங்காள் செல்லத்தின் கடிதம் அவனை ஆறுதல் சொல்லி தேற்றிக்கொண்டே இருக்கிறது. செல்லம் சென்னைக்கு வேதாந்தத்துடன் வராவிட்டாலும் அவளின் ஆன்மாவாகவே அவளின் கடித சொற்கள் பேசுகின்றன. இரண்டு பாக கதை. முதல் பாக கதையில் இரு போக்கிரிகள், பத்திரிக்கை தொடங்குவதாக சொல்ல அதை நம்பி வேதாந்தம் தனது பணத்தை இழப்பதோடு முடிகிறது. அடுத்து அவன் வாழ்க்கை என்னவானது என்பது இரண்டாம் பாக கதை.
தேவனின் எழுத்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் பல்வேறு வேதங்கள், தொன்மை இலக்கியங்களிலிருந்து பாடல்களை சொல்லி தொடங்குவது அழகாக உள்ளது. அடுத்தடுத்த அத்தியாயங்களைப் படிக்க நம்மை தயார் செய்வது அவைதான்.
இதில் முக்கியமாக சொல்லவேண்டியது உரையாடல்கள். குறிப்பாக சுவாமி, சந்தான அய்யர், ராம், வெங்கட். இவர்களின் உரையாடல்கள் சொற்களாக ஒரு பொருளைக் கொடுத்தாலும் அதை சொல்லும் தொனியால் வேறு பொருளைக் கொடுப்பது போல தேவன் மாற்றியிருக்கிறார். இதை ஒருவர் வாசிக்கும்போது வியக்காமல் இருக்க முடியாது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக