காந்திய அணுகுமுறையில் சமூகத்தை மாற்றியமைத்த மூன்று அமைப்புகள்! - தன்னார்வ செயல்பாடும், காந்திய அணுகுமுறைகளும்! டி.கே. ஓசா


தன்னார்வச் செயல்பாடும் காந்திய அணுகுமுறைகளும்!
டி.கே. ஓசா
நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா
புது டில்லி
ரூ.22 பக்கம் 89





இன்று காந்திய அணுகுமுறை என்பது குறைந்துவிட்டது. காந்தி என்றாலே கோழைத்தனமானவர், தந்திரமானவர் என்று எண்ணும்படி செய்திகளை மதவாத கூட்டம் வெளியிடுகிறது. எளிமையாகவும், உண்மையாகவும் இருப்பது தவறு என எண்ணும் சமூக கலாசாரம் வளர்ந்த பிறகு சொல்லுவதற்கு என்ன இருக்கிறது என பலரும் நினைக்கலாம். 

அண்மையில் நடந்த விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் காந்திய வழிமுறையைப் பின்பற்றி நடந்து வெற்றிபெற்றது. ஆங்கில ஊடகங்கள், தமிழ் ஊடகங்கள் என பாகுபாடின்றி விவசாயிகளை வசைபாடினர். இதற்கு அவர்கள் தங்கள் மனசாட்சியை விற்று பெற்ற பணம்தான் காரணம். யார் கொடுத்தார்கள் என்று கேட்காதீர்கள். ஊபா சட்டம் உடனே பாயும். தேச வளர்ச்சிக்காக என்று சொல்லி சுயநலத்திற்காக இந்தியாவை விற்க  பாடுபடுபவர்கள்தான் இதற்கு காரணம். 

இந்த காலகட்டத்தில்தான் டி.கே. ஓசா எழுதிய   இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. தொண்ணூறுகளில் வெளியான நூல் இது. அப்போதே மறுசுழற்சிக்கான காகிதத்தில் அச்சிட்டிருக்கிறார்கள். நூலில் பேசப்படும் விஷயமும் அந்தளவு முக்கியம் என்பதால் நூலின் தாள் பற்றிக் குறிப்பிடுகிறோம். 

நூலில் மூன்று அமைப்புகளைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். இந்த மூன்றையுமே டி கே ஓசா பார்வையிட்டு களப்பணி செய்து எழுதியிருக்கிறார் என்பது நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது. 

முதல் இயக்கம் சிப்கோ இயக்கம். இதனைப் பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். மரங்களை கட்டிப்பிடித்தபடி பழங்குடி பெண்கள் நடத்திய போராட்டம் இந்தியளவிலும் உலகளவிலும் புகழ்பெற்றது.  இமயமலை அடிவாரத்தில் உள்ள மரங்களை வியாபாரிகள் அபகரித்து ஆயிரக்கணக்கில் வெட்டிக் குவித்தனர். இதனையே பெண்கள் தட்டிக்கேட்டனர். இப்படித்தான் காந்திய அணுகுமுறையில் ஈடுபாடு கொண்ட மீரா பென், சரளா பென் ஆகிய இருவரும் ஆசிரமத்தை அமைத்து மக்களுக்கு உதவினர். 

இவர்களின் உதவியால்தான் பழங்குடி பெண்கள், மரங்களை வெட்டுவதை தடுப்பதற்கான முயற்சிகளை செய்தனர். இந்த வகையில் உத்தரப்பிரதேசம், விந்திய மலை, இமயமலை அடிவாரம் என பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தினர். இதனால் மக்களில் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டது. 

நூலாக இந்த போராட்டம் பற்றி நாம் வாசித்தாலும் இது முடிவுறாத போராட்டம். தொடர்ச்சியாக நாம் அரசிடம், பல்வேறு தனியார் அமைப்புகளிடம் இன்றுவரை போராடிக்கொண்டே தான் இருக்கிறோம். இது ஒரு நம்பிக்கை தரும் கதை. 




அடுத்து, பாபா ஆம்தேவைப் பற்றி பார்ப்போம். இவர் மகாராஷ்டிராவில் வசதியான குடும்பத்தில் படித்து வழக்குரைஞராக வேலை செய்தவர். ஆனால் தனக்கும், பிறருக்கும் உள்ள வருமான இடைவெளியை ஏன் என்று கேள்வி கேட்டார். தனது மனைவி சாதனாவிடமும் இதனைப் பற்றி சொன்னவர், நான் வழக்குரைஞர் தொழில் மூலம் நடத்தும் வழக்குக்கு பணம் வாங்க மாட்டேன்  என்று சொல்லுகிறார். இதன்படியே காந்திய முறையில் வாழ்கிறார். 

தெருவில் சொல்லும்போது, தொழுநோயாளி ஒருவர் சீண்டுவாரின்றி இருப்பதைப் பார்க்கிறார். அவர்களை யாரும் கவனிப்பதில்லை. எனவே, அவர்களை பாதுகாக்கும் முயற்சிகளை செய்கிறார். இவரது பணிகளைப் பார்க்கும்போது ஒருவர் எப்படி அந்த காலத்தில் இப்படி யோசித்தார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. பிறருக்கு சாதாரணமாக இருக்கும் காட்சி, முரளிதர் (பாபா ஆம்தேக்கு ) மட்டும் திகைக்க வைப்பதாக உள்ளது. பல்வேறு செயல்பாடுகள் மூலம் தொழுநோயாளிகளை சிகிச்சை செய்து அவர்களின் மறுவாழ்வுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொள்கிறார். 

நூலில் வாசிப்பவர்களை அதிகம் வசீகரிப்பது, பாபா ஆம்தேவாகவே இருக்கும். தொழுநோய் கிருமிகளை தனது உடலில் செலுத்திக்கொண்டு, அவர்களின் பாதிப்பை உணர முடியுமா என்றெல்லாம் சமூக செயல்பாட்டாளர் முயல்வாரா? ஆனால் பாபா ஆம்தே இதையும் முயற்சி செய்தார். 




இறுதியாக இருப்பது சேவா சங்கம்.  சாதாரணமான வேலைகளை செய்யும் கூலி பெண்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதே சேவா சங்கம். 1969ஆம் ஆண்டு இந்த சங்கத்தை உருவாக்கினர். இதன்மூலம் காய்கறி விற்கும் பெண்கள், பீடி சுருட்டும் பெண்கள், நூல் மில்களில் வேலை செய்யும் பெண்கள் என அனைவருக்குமான நலன்களை சேவா சங்கம் கவனித்துக்கொண்டது. இதனால் சம்பளத்தில் நிறுவனத்தினர் கைவைத்து திருடியது குறைந்தது. மேலும், உழைப்புக்கேற்ற கூலி என்பது உறுதியானது. இதனால் இந்த சங்கத்தில் சேருவதைத் தடுக்கும் முயற்சிகளும் கூட நடைபெற்றது. அத்தனையும் தாண்டி பெண்கள் இந்த சங்கத்தில் சேர்ந்து தங்களது தொழில் வாழ்க்கையை நேர்த்தி செய்துகொண்டனர். 

நூலில் மூன்று அமைப்புகளின் அத்தியாயங்களிலும் காந்தியின் மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை, பெண்களுக்கான சுதந்திரம், முடிவெடுத்தல் ஆகியவற்றைப் பற்றி பேசப்பட்டுள்ளது. 

கோமாளிமேடை டீம் 




கருத்துகள்