கோமாளித்தனமான சாம்பு, துப்பறியும் சாம்புவாக மாறும் கதை! - துப்பறியும் சாம்பு - தேவன்
துப்பறியும் சாம்பு 1
தேவன்
அல்லயன்ஸ் வெளியீடு
துப்பறியும் சாம்பு நூல், வங்கியில் வேலை செய்யும் சாதாரண எழுத்தர் எப்படி புகழ்பெற்ற துப்பறிவாளர் ஆகிறார் என்பதை விவரிக்கிறது. சாம்பு, நீளமான பினாச்சியோ மூக்கு, விளாங்காய் மண்டை, கோட், வேஷ்டி கட்டிய பிராமணர். முகத்திலேயே அசடு வழிபவரை பார்த்தவுடனே யாரும் முட்டாள் என்று சொல்லிவிடுவார்கள். இப்படி இருக்கும் ஒருவர் அதிர்ஷ்டத்தால் தொட்டது அனைத்தும் துலங்கி புகழ்பெற்ற துப்பறிவாளர் எப்படி ஆகிறார் என்பதுதான் முதல்பாக துப்பறியும் சாம்புவின் மையக்கதை.
பதினான்காவது பதிப்பு 2021இல் வெளியாகியிருக்கிறது. முதல் பாகத்தில் 27 அத்தியாயங்கள் உள்ளன. இதில்தான் வங்கியில் வேலை செய்யும் சாம்பு, அவமானப்படுத்தப்படுகிறார். அதற்காகவெல்லாம் அவர் ரொம்ப துடிக்கவில்லை. சோறு முக்கியமே என அதனை சகித்துக்கொண்டு இருக்கிறார். அப்போது வங்கி மேலாளர் அலுவலக காரை பயன்படுத்தி தகிடுதத்தம் செய்கிறார். அதை சாம்பு ஊழ்வினை காரணமாக மோப்பம் பிடிக்கிறார். அதை மேலாளரிடமே உளறி வைக்க அவர் பணத்துடன் தப்பியோடுகிறார். உடனே வங்கியின் தலைவர் அந்த கோபத்தில் சாம்புவை வெளியே போடா முட்டாள் என்கிறார். அப்படித்தான் போல என சாம்பு நம்பிக்கொண்டு வெளியே வருகிறார்.
பிறகுதான் அவரின் துப்பறியும் வேட்டை தொடங்குகிறது. அவர் ஒன்று செய்ய அது வேறொன்றாக முடிய என முட்டாள் சாம்பு, துப்பறியும் சாம்புவாக மாறுகிறார். இவருடன் பக்கத்துணையாக இன்ஸ்பெக்டர் கோபாலன் அமைந்துவிட கச்சேரி களை கட்டுகிறது.
தேவனின் எழுத்து எந்த அத்தியாயத்திலும் சோரவில்லை. துடிப்புடன் நகைச்சுவையாக சென்றுகொண்டே இருக்கிறது. நூலை சோராமல் படிக்க வைப்பது வித்தியாசமான பல்வேறு குற்றங்களும் அதைக் கண்டுபிடிக்க பெரிதாக மெனக்கெடாத சாம்புவின் கோமாளித்தனங்களும்தான். இந்த பாகத்தில் அவர் துப்பு கண்டுபிடிக்க சென்று தடுமாறுவது, தனது மனைவி வேம்புவை பெண் பார்க்கச் செல்லும்போதுதான். இந்த நிகழ்ச்சியை கோபாலன் சுமூகமாக முடித்து வைக்கிறார். வேம்புடன் சாம்புவுக்கு மணமான பிறகு கதையில் வேம்பு, சுந்து என கூடுதல் பாத்திரங்கள் வருகிறார்கள். அடுத்த பாகத்தில் இன்னும் சுவாரசியங்கள் இருக்கும் என்று தோன்றுகிறது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக