மத மோதல்களை போக்கும் உரையாடலுக்கு ரெடி - விபின்குமார் திரிபாதி

 











ஐஐடி டெல்லியில் இயற்பியல் பேராசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்றபிறகு என்ன செய்வார்? இருக்கும் தொடர்புகளை வைத்து வெளிநாடுகளுக்கு செல்வார், தனது சொந்த விஷயங்களை செய்வார். ஆனால் டெல்லியைச் சேர்ந்த விபின்குமார் திரிபாதி, நாடெங்கும் சென்று மதமோதல்களை தடுக்கும் முயற்சியை செய்து வருகிறார். 

ஏறத்தாழ இது வங்கப் பிரிவினையின்போது நடந்த மத மோதல்களை தடுக்க காந்தி தொடர்புடைய இடங்களுக்கு சென்ற சம்பவம் போல இருக்கிறதா? அதேதான். அதே வழியைத்தான் பின்பற்றுகிறார். அகிம்சை வழியில் முடிந்தளவு மக்களிடம் பேசி வன்முறை உணர்வை மட்டுபடுத்த நினைக்கிறார். 

பத்து பேரிடம் பேசினால் கோபமாக இருப்பவர்களில் ஒருவர் மட்டுமே என் பேச்சை கேட்கிறார். இந்த அளவில் எனது பணி இருக்கிறது. இந்தியா உயிர்வாழ்வது இப்படி பட்ட சிலரால்தான் என்கிறார். 

திரிபாதியின் உறவினர்கள் இவரையும் குடும்பத்தையும் பார்த்தாலே பதற்றமாகி வேறுபக்கம் திரும்பிக்கொண்டு வருகிறார்கள். நலம் விசாரித்தலைத் தாண்டி வேறு எதையும் அவர்கள் பேசுவதில்லை. ஆனாலும் திரிபாதி எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார். அதை நோக்கி போய்க்கொண்டே இருக்கிறார். 

விபின்குமார் திரிபாதி


மத மோதல்களை தவிர்க்கும் நோக்கில் இந்தியாவின் அனைத்து இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறார். இதனை 30 ஆண்டுகளாக செய்து வருகிறார் என்பதே ஆச்சரியகரமானது. மத மோதல்களை தடுக்கும் நோட்டீஸ்களை அச்சிட திரிபாதியின் மனைவி உதவுகிறார். இவரது மகளுக்கும் கூட தனது தந்தை பற்றி பெருமையான எண்ணமே இருக்கிறது. பல நேரங்களில் மதவாத அரசியல் கட்சிகள், அமைப்புகள் செய்யும் மூளை சலவை காரணமாக பலரும் திரிபாதியின் பதில்களில் திருப்தி அடைவதில்லை. அவரை திட்டி அவமானப்படுத்தியதோடு தாக்கவும் முயன்றிருக்கிறார்கள். 

அதேசமயம் அமைதி முயற்சி பயனளித்த சம்பவமும் நடந்திருக்கிறது. 2013ஆம் ஆண்டு உ.பியின் முசாபர் நகரில் இந்து, முஸ்லீம் கலவரம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு செல்ல திரிபாதி துணிச்சலான முடிவெடுத்தார். கிடைத்த போக்குவரத்து வசதி மூலம் முசாபர் நகருக்கு 13 கி.மீ. தொலைவில் சென்று சேர்ந்தார். பிறகு தனக்கு தெரிந்த ஒருவர் மூலம் விவசாயிகளிடம் பேச்சை தொடங்கினார். தொடக்கத்தில் ஆக்ரோஷமாக பேசினாலும் மெல்ல திரிபாதியின் பேச்சிலுள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு வன்முறை எண்ணத்தை கைவிட்டனர். அதற்கு காரணம் எனது வயது கூட காரணமாக இருக்கலாம் என்ற திரிபாதி நினைத்தார். 

முகலாயர்கள் குறிப்பாக மதவாத கட்சிகள் முன்வைக்கும் ஓளரங்கசீப்பை முன்வைத்தே விவசாயிகள் கோபம் கொண்டிருக்கின்றனர். அவர் காலத்தில் இந்துகளை அழித்தார்கள். கோவில்களை சிதைத்தனர் என திரும்ப திரும்ப மூர்க்கமான பல்வேறு கேள்விகளை திரிபாதியிடம் விவசாயிகள் கேட்டிருக்கின்றனர். 

ஜான்சியின் ல லித்பூர் மாவட்டத்தில் உள்ள பிப்ரி கிராமத்தில் திரிவேதி பிறந்திருக்கிறார். ஐஐடி டெல்லியில் படித்து பட்டம் பெற்றிருக்கிறார். முனைவர் பட்டம். 1971ஆம் ஆண்டு ஐஐடியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார். 1976 முதல் 1989 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவிற்கு பறந்து அறிவியலாளராக மேரிலேண்ட் பல்கலையில் வேலை செய்திருக்கிறார். அப்போதே அகிம்சையில் ஆர்வம் மிகுந்து மதச்சார்பற்ற இந்தியா என்ற அமைப்பை தொடங்கியிருக்கிறார். நண்பர்களும் இணைந்து பல்வேறு விஷயங்களை விவாதித்தனர். அப்போது இஸ்ரேல், லெபனாலில் உள்ள  பாலஸ்தீன் முகாம்களை தாக்கியது. அதை அமெரிக்கா எந்த வித குற்றவுணர்வுமின்றி ஆதரித்தது. இதனால் மனம் நொந்து போனார் திரிபாதி. 1982இல் இப்படி நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இந்தியாவிற்கு 1989 ஆம் ஆண்டு திரும்பினார். 

அப்போது பகலாபூர் கலவரம் நடந்தது. அதைப்பார்த்து மனம் நொறுங்கிய திரிபாதி, சத்பவ் மிஷன் எனும் திட்டத்தை தொடங்கினார். இதன்படி மதவாத த்தை எதிர்க்கும் திட்டத்தை உரையாடல் வழியாக உருவாக்கினார்.  கோத்ரா கலவர இடத்திற்கு பதினொரு நாட்களுக்கு பிறகு சென்றார். அங்கு சென்றபோது, கலவரம் ஏற்படுத்தியவர்கள் தாங்கள் செய்தது சரி, பழிக்குப்பழி வாங்கிவிட்டோம் என்றும் பெருமையான முறையில் பேசியதைக் கேட்டு அதிர்ந்து போனார். இதற்கு முன்னர் 2002இல் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் குறைந்த பட்ச குற்றவுணர்வு இனக்குழுவினரிடையே இருந்தது. ஆனால் இப்போது அதுவுமே இல்லை என்பதை என்ன சொல்ல.....? என வருந்தினார் திரிபாதி. 


டைம்ஸ் ஆப் இந்தியா 

ஹிமான்சி தவான்







கருத்துகள்