நம்பிக்கையை குலைக்கிறதா டேட்டிங் ஆப்கள்?

பம்பிள், ஓகே க்யூபிட், குவாக் குவாக் ஆகிய டேட்டிங் ஆப்கள் பெருந்தொற்று காலத்தில் புகழ்பெற்றன. நீண்டகால உறவை வளர்த்துக்கொள்ள பலரும் இதனை பயன்படுத்தினார். ஆனால் அதேசமயம், இதன் பக்கவிளைவுகளும் பலரையும் பாதித்துள்ளன. இதில் தங்களது பயோவை பதிவு செய்து காதல் உறவை எதிர்பார்த்தவர்களுக்கு நிறைய ஏமாற்றங்களும் கிடைத்துள்ளன. ஒருவரின் விருப்பங்கள் அடிப்படையில் அல்காரித முறையில் ஆட்களை தேடி தருவதை டேட்டிங் ஆப்கள் செய்கின்றன. எனவே, இவற்றைப் பயன்படுத்துபவர்கள் பலரும் நேரடியாகவே நாம் பார்க்கும் ஒருவரைப் பிடித்திருந்தால் பேசிப் பழகலாம். ஆப்பில் யாரையும் பார்த்துப் பழகவேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். புத்தாண்டு நேரம். இனிமேல் நான் குடிக்கிறதை விட்டுட்டேன் மாப்ள என நண்பர் போன் செய்து சொன்னால் நமக்கு மனதில் என்ன தோன்றும். குடிச்சிருக்கான் போல என நினைத்துக்கொண்டு சரிடா என்று சொல்லி போனை அணைப்போமே அதேதான். டேட்டிங் ஆப்களை பயன்படுத்துபவர்கள் வெளிநாடுகளைப் போல அதனை சீரியசாக நினைப்பதில்லை. போரடிக்கிறது ஏதாவது செய்வோமே என்று டேட்டிங் ஆப்பை நோண்டுகிறார்கள். செய்தி அனுப்புகிறார்கள். சந்திக்கிறார்கள். கஃபேயில் சந்தித்து பேசுகிறார்கள். இப்படி நான் சொல்லவில்லை. உறவுகள் தொடர்பான வல்லுநர்களே அப்படித்தான் சொல்லுகிறார்கள். இன்றும் ஒரு பெண்ணை சந்தித்து எப்படி பேசுவது, பழகுவது என்பதற்கு பயிற்சிகள் தேவைப்படுகின்றன. அதனை வழங்கவும் வல்லுநர்கள் உள்ளனர். டேட்டிங் ஆப்கள், கல்யாண சேவை ஆப்கள் என இரண்டையும் மில்லினிய இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். டேட்டிங் ஆப்பை விட கல்யாண சேவை ஆப்பில் பலரும் வெகு சீரியசான முகத்துடன் இருக்கிறார்கள். சுரங்கத்தை தோண்டி வைரத்தை தேடி வருகிறார்கள். டேட்டிங் ஆப்பில் ஆளைப் பார்த்து பிடித்தாலும் கூட ஜாதி குறுக்கே நுழைகிறது. இப்படி காபி ஷாப்பில் ஒருவர், தான் சந்திக்க வேண்டிய பெண்ணைப் பார்த்து பேசியிருக்கிறார். அந்த பெண் அவர் பேசும்போது வீடியோவில் பின்னணியில் உள்ள புத்தகங்களைப் பார்த்திருக்கிறார். ஜாதி தொடர்பான நூல்கள் அவை. நீ அந்த ஜாதியைச் சேர்ந்தவனா என்று கேட்டு உறுதி செய்தவர், உடனே அவரை மிரட்டத் தொடங்கியிருக்கிறார். தனக்கு சகோதரர்கள் உண்டு, இந்த ஜாதியில் பிறந்ததை நீ ஏன் முன்னமே கூறவில்லை. ஏமாற்றிவிட்டாய் என சொல்ல ஆண் பதறிப்போயிருக்கிறார். இதனால் டேட்டிங் ஆப்பில் தனது சாதியையும் தெளிவாக சொல்லிவிட்டுத்தான் பதற்றம் தணிந்திருக்கிறார். தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அவற்றை பயன்படுத்தும் மூளைகள் வளரவில்லை என்றால் என்ன செய்வது? டேட்டிங் நிறுவனங்கள் இதுபோன்ற சிறுபிள்ளைத் தனங்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? கமுக்கமாக சிரித்துக்கொண்டு பிஸினஸ் வேணுமே ப்ரோ என்பார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா

கருத்துகள்