உறவுகளை சமாளித்து குற்றங்களை துப்புதுலக்கும் சாம்பு! - துப்பறியும் சாம்பு - 2 - தேவன்

 













துப்பறியும் சாம்பு - 2

தேவன் 

அல்லயன்ஸ் 

சாம்புடன் எழுத்தாளர் தேவன் - நன்றி - இந்து தமிழ்


துப்பறியும் சாம்பு பற்றிய குறிப்பை முன்னதாகவே எழுதியிருக்கிறோம். இதனால் நேரடியாக கதைக்குள் போய்விடலாம். முட்டாள் சாம்பு, துப்பறியும் சாம்புவாக மாறி நிறைய வழக்குகளை கண்டுபிடிக்கிறார். கூடவே இதன் மூலம் தனக்கான இனத்தில் வேம்பு என்ற பெண்ணையும் கரம் பிடிக்கிறார். அவள் மூலம் ட்ரேட்மார்க் மூக்கு கொண்ட சுந்து என்ற ஆண் பிள்ளை பிறக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் சாம்புவுக்கு சுப்பு என்ற பெண் குழந்தை பிறக்கிறது. 

அதுதான் கதையா என அயர்ச்சியாக கூடாது. இம்முறை சாம்பு, இங்கிலாந்து சென்று கோமாளித்தனங்கள் செய்து அடிவாங்கியும் கூட புகழ்பெற்று வருவதோடு கடைசி அத்தியாயம் முடிவுக்கு வருகிறது. அதில்தான் செய்தியாக சுப்பு என்ற பெண்பிள்ளை பிறப்பதாக கூறப்படுகிறது. வேம்புவும் கும்பகோணத்திலிருந்து சென்னை வந்து சேர்கிறாள். 

இந்த நாவலில் பெரும்பாலும் கதைகள் எப்படி அமையும் என்றால், சாம்பு ஏதேனும் வழக்கை கோபாலன் சொல்லி எடுத்துக்கொள்வார். பிறகு தன் மனம்போக்கில் அதனை ஆராய்ந்து அடிவாங்கி பிறகு கோபாலன் மூலம் அதிலிருந்து மீண்டு வருவார். அதற்குள்ளாகவே குற்றவாளியே குற்றங்களை ஒத்துக்கொள்வார். சாம்பு தன் முட்டாள்தனத்தை வெளியே சொல்ல நினைப்பதற்குள் அவரை ஓகோ சாம்பு என காவல்துறையினர் கொண்டாடி விடுவார்கள். இதுதான் சாம்பு கதையின் மரபு. 

இரண்டாம் பகுதியில் வேம்புவின் சொந்தக்காரர்கள் அதிகம் இடம்பிடிக்கிறார்கள். கூடவே மனைவி இருந்தாலும் சரசம் செய்ய காதலியும் கூட சாம்புவுக்கு தேவைப்படும் கதைகளும் உண்டு. அதையும் நகைச்சுவையாக தேவன் எழுதிச் செல்கிறார். நூலின் முதல் கதையே பணத்தை திருடி பீரோவில் வைத்து அதனை வாங்கிக்கொண்டு ஏமாற்றுவதுதான். அக்கதையில் சாம்பு உள்ளே வர நகைச்சுவை கூடுகிறது. 

இப்பாகத்தில் உறவுக்காரர்களின்  தொல்லை, புகழ்போதைக்கு அடிமையானவர்கள் சாம்புவைப் படுத்தும் பாடு, இன்ஸ்பெக்டர் கோபாலனுக்கு பெண்பிள்ளை பிறப்பது, குற்றவாளிகள் சாம்புவை நண்பராக்கிக் கொண்டு அவரை ஏமாற்ற முயல்வது என நிறைய சம்பவங்கள் கதையை சுவாரசியமாக்கியபடி நடக்கின்றன. இவை அனைத்தையும் வாசகர்கள் ரசித்தபடி புன்னகையுடன் படிக்க முடியும். 

கோமாளிமேடை டீம் 






கருத்துகள்