என்னைத் தான் மாற்றிக்கொள்ள வேண்டும்! -- வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்
12.12.2021
அன்புள்ள வினோத் அண்ணனுக்கு வணக்கம்.
இன்று வானம் மேகமூட்டமாக இருக்கிறது. மனமும் அப்படித்தான் இருக்கிறது. திருவண்ணாமலை வர நினைத்தேன். சூழல் இசைவாக இல்லை. சிவனின் அனுகிரகம் கிடைத்தால்தான் அங்கு வர முடியும் என நினைக்கிறேன். புஷ்பக விமானம் என்று தெலுங்குப் படம் பார்த்தேன்.
தாமோதர் என்பவர் இயக்கி ஓடிடியில் வெளியான படம். திருமணமாகி சில நாட்களில் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுவிடுகிறாள். மனைவி போனதை வெளியில் சொல்ல முடியாமல் அரசு பள்ளி ஆசிரியரான கணவர் என்னென்ன விஷயங்களைச் செய்கிறார் என்பதே கதை.
படத்தின் கதை, அதிலுள்ள விஷயம் என்று பார்த்தால் சீரியசான விஷயம்தான். ஆனால் இயக்குநர் நகைச்சுவையை படம் நெடுக சேர்த்திருப்பதால் படம் நன்றாக வந்திருக்கிறது. ஆனந்த் தேவரகொண்டா சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு இணையாக குறும்பட நடிகையாக வந்து போலி மனைவியாக நடித்து கலக்கியிருக்கிறார் ஷான்வி மேகனா.
இன்று காலையில் வானம் மேகமூட்டமாக இருந்தது. இப்போது மழை பெய்துகொண்டு இருக்கிறது. மோகன் ராஜ் அண்ணா போன் செய்தார். மழை பெய்கிறது அடுத்தவாரம் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.
அன்பரசு
12.12.2021
---------------------------------------------------------------------------------------
13.12.2021
அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு,வ ணக்கம்.
நேற்று இரவிலிருந்தே வயிற்றுப்போக்கும், வாந்தியும் தொடங்கிவிட்டது. சாப்பிட்ட உணவு ஏதோ ஒத்துக்கொள்ளவில்லை. நடந்தாலே உடல் கிறுகிறுப்பு தட்டியது. எனவே ஆபீசுக்கு விடுமுறை சொல்லிவிட்டேன். உப்பும் சர்க்கரையும் கொண்ட ஓஆர்எஸ் பாக்கெட்டை வாங்கி வந்து குடித்தேன்.
நேற்று மயிலாப்பூரில் மழை விட்டுவிட்டு பெய்தது. முன்னரே துவைத்து வைத்த துணிகள் மழையில் சினிமா நாயகி போல மொத்தமும் நனைந்துவிட்டன. பிரன்ட்லைன் இதழில் பருவச்சூழல் மாறுபாடுகளால் அழிந்துவரும் கடல் பறவைகளைப் பற்றி படித்தேன். அதனை சிறு கட்டுரையாக்க நினைத்துள்ளேன்.
குங்குமம் இதழிலிருந்து அன்னம் அரசு போன் செய்து பேசினார். இயக்குநர் ரஞ்சித்திடம் மக்களிசை பற்றி பேட்டி எடுக்கப் போகிறாராம். அதற்கான கேள்விகள் எப்படி இருக்கலாம் என்று கேட்டார். அவர் தயாரித்த கேள்விகளைக் கேட்டுவிட்டு நானும் சில கேள்விகளை கேட்கலாம் என்று சொல்லி சொன்னேன். அவர் என்னிடம் இதுபற்றி ஆலோசனை செய்தது மகிழ்ச்சி. சில கேள்விகளை வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைத்தேன்.
அன்பரசு
13.12.2021
------------------------------------------------------------------------
21.12.2021
அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.
நலமா? எங்கள் பள்ளி தினசரி வேலைகள் நடந்து வருகின்றன. இயற்கை தொடர்பான கட்டுரைகளை மொழிபெயர்த்து வருகிறேன். இதழ் ஆசிரியரே நிறைய பேப்பர் கட்டிங்குகளை வெட்டி கொடுத்துவிட்டார். அதை மொழிபெயர்த்தாலே பாதி வேலை முடிந்துவிடும்.
மறுபடியும் தேவகி - ரா.கி. ரங்கராஜன் எழுதிய நாவலை படித்து வருகிறேன். கல்லூரி மாணவிகள் ஓரிடத்திற்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கு ஒரு மாணவிக்கு மட்டும் தான் வேறு ஒரு பெண் என்பது போல நினைவுகள் மாறுகின்றன. சுற்றியிருப்பவர்கள் அவளுக்கு முன்ஜென்ம நினைவு வந்துவிட்டதாக சொல்லுகிறார்கள். உண்மையில் அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்பதுதான் கதை. கதையை மிகவும் நீளமாக இழுத்து சொன்னதால் பாதியிலேயே சுவாரசியம் போய்விட்டது.
ரொமான்டிக் என்ற தெலுங்குப் படத்தைப் பார்த்தேன். அதாவது இடைவெளி விட்டு பார்த்துக்கொண்டு இருக்கிறேன். காலையில் என்னை எழுப்புவதே ஐயப்ப பஜனையில் மூர்க்கமாக இருக்கும் வீட்டு ஓனர்தான். அலாரத்தையும் மிஞ்சி கொடூரமான தொனியில் ஒலிக்கிறது அவரின் பஜனைப் பாட்டுகள். முன்பிருந்த அதே வைப்ரேஷன் இப்போது டெம்போ மட்டும் மாறியிருக்கிறது அவ்வளவேதான்.
அன்பரசு
21.12.2021
--------------------------------------------------------------------------------------------------------------
22.12.2021
அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.
நலமாக இருக்கிறீர்களா? எனக்கு நாளிதழ் வேலை நெருக்கடி தொடங்கிவிட்டது. எப்படியோ சமாளித்து வருகிறேன். ஜன.3இல் இதழ் தொடங்குவதாக மீட்டிங்கில் சொல்லியிருக்கிறார்கள். குளிர் தொடங்கிவிட்டதால், அறையில் இரவில் மின்விசிறியை போட முடியவில்லை.
சுவிசேஷங்களின் சுருக்கம் - லியோ டால்ஸ்டாய் எழுதிய நூலை உலக சினிமா காதலர் த.சக்திவேலிடம் இரவல் வாங்கி வந்தேன். அதுதான் இந்த வாரம் புதிதாக செய்த விஷயம். நூல் பதினொரு அத்தியாயங்களைக் கொண்டது. வாசிக்க நன்றாக இருக்கிறது.
கனி விளையும் வரை விதைகளை விதைத்துக்கொண்டே இருங்கள் என்று அத்தியாயத்தில் ஒரு வாசகம் வந்தது. ஆச்சரியமாக இருந்தது. இதுபோல வாசிக்கும்போது ரசித்துப் படிக்கும்படியான வாசகங்கள் நிறைய உள்ளன. உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
அன்பரசு
22.12.2021
------------------------------------------------------------------------------------------------------------------------
23.12.2021
அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.
நலமா? சென்னையில் குளிர் கூடிக்கொண்டே இருக்கிறது. டிசம்பர் மாத அடையாளம் அதுதானே? வேலைகள் எப்போதும் போல சென்று கொண்டிருக்கிறது. அதிக நாட்களுக்கு சென்னையில் பத்திரிக்கை உதவி ஆசிரியராக இருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது. இங்குள்ள மனிதர்களைப் பார்ப்பதும் அவர்களுடன் பேசுவதும் எனக்கு உடலையும் மனதையும் இன்னும் பெரிய நோய்மையில் தள்ளுகிறது.
அடையாளம் அறியாத மக்கள் வாழுமிடத்தில் தோன்றும் வேலைகளை செய்தபடி வாழ வேண்டும். 2022ஆம் ஆண்டு என்னென்ன விஷயங்களை தருமோ தெரியவில்லை. பார்ப்போம். ரா.கி. ரங்கராஜனின் தாரகை நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். அனன்யா, ஆதவனை கேட்டதாக சொல்லுங்கள்.
அன்பரசு
23.12.2021
--------------------------------------------------------------------------------------------------------------------
26.12.2021
அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமா?
இன்று காலையில் மன அழுத்தம் காரணமாக வேலையை கைவிடுவது பற்றி பேசினேன். திருவண்ணாமலைக்கு வர நினைத்தேன். அங்கு எழுத்து தொடர்பாக என்ன வேலை கிடைக்கும் என தெரியவில்லை. அலுவலக வேலையைக் கூட தன்னை சார்ந்தவர்களுக்கு என்றால் வேகமாக முடித்துக் கொடுக்கிறார்கள். எந்த குழுவிலும் இல்லாத என்னைப் போன்றவர்களுக்கு புறக்கணிப்புதான் கிடைக்கிறது.
எழுதிய இன்போகிராபியைக் கூட கணினியில் போட்டுவிட்டால், மிக நிதானமாக செய்வோம் என்கிறார்கள். பக்கம் ரெடியாகவில்லை என்றால் அதற்கான பொறுப்பை ஒருங்கிணைப்பாளர் சமத்காரமாக உதவி ஆசிரியர்களின் தலையில் கட்டுகிறார். எதற்கு வீண் பழிகளை,சுமைகளை ஏற்கிறோம் என்று தெரியவில்லை. இந்த மன அழுத்தத்தில் உடலில் மறைந்து எக்சிமா கூட வந்துவிடுமோ என பயமாக இருக்கிறது. உண்மையான நட்பு, உறவு கிடைக்காமல் அல்லது அதனை பெற முடியாமல் போனது வாழ்வின் பெரிய துயரம், துரதிர்ஷ்டம் என இந்த நொடி நினைக்கிறேன்.
ஞாயிறு நான்கு மணிக்கு நண்பர் அஷ்ரத்துடன் ராயப்பேட்டையிலுள்ள மனித நேய மக்கள் கட்சி அலுவலகத்திற்கு சென்றேன். மெய்ப்பொருள் என்ற நூலக வாசிப்பு இயக்கத்தினர் கூடினர். கூடிய அனைவருமே முஸ்லீம்கள். என்னைத் தவிர. வாசித்த நூலும் அவர்களைப் பற்றியது. அன்வர் லெப்பை என்பவர் என்னைக் கூட்டத்திற்கு அழைத்திருந்தார். கூட்டம் நடக்க நடக்க அங்கிருப்பவர்கள் பேச பேச ஏன் அங்கு போனோம் என்று ஆகிவிட்டது.
கணினியை இலவசமாக வேலை செய்துகொடுத்தார் என்பதால் மதிப்புமிக்க எனது நேரத்தை இழக்க நேர்ந்தது. இதில் எனது தவறும் உள்ளது. இரண்டு மணிநேரத்தை தேவையில்லாமல் இழந்தேன். நண்பரை போளி வாங்கிக் கொடுத்து மனதைத் தேற்றிக்கொடுத்து அழைத்து சென்றேன்.
நன்றி! சந்திப்போம்!
அன்பரசு
26.12.2021
---------------------------------------------------------------------------------------------------------
4.1.2022
அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நான் மட்டுமே அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருக்கிறேன். இப்போதுதான் அந்திமழை இதழைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். எழுத்தாளர்கள் தங்கள் நாவல்களை எழுதிய கதையை இதழில் பகிர்ந்து இருக்கிறார்கள். நீலபத்மநாபனின் தலைமுறைகள் பற்றி அவர் எழுதியிருப்பது சிறப்பாக உள்ளது. நாஞ்சில் நாடன், சயந்தன், கண்மணி குணசேகரன் ஆகியோரது கட்டுரைகளைப் படித்தேன். இன்றைய வேலை ஓரளவுக்கு நிறைவு பெற்றுவிட்டது. சிறகுக்குள் வானம் என்ற நூலை போனில் படித்துக்கொண்டு இருக்கிறேன்.
அன்பரசு
4.1.2022
---------------------------------------------------------------------------------------------------------------
5.1.2022
அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.
நலமா? நேற்று அலுவலகத்தில் நான் மட்டுமே அமர்ந்து வேலை செய்தேன். எல்லோரும் வீட்டிலேயே அமர்ந்து வேலை செய்து வருகிறார்கள். நான் ஆபீசுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். இப்படி வந்து வேலை செய்வதுதான் நன்றாக இருக்கிறது.
சிறகுக்குள் வானம் நூறு பக்க நூல். ஒடிஷாவில் வேலை செய்த பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எழுதிய நூல். இதனை நேற்று அறையின் மொட்டைமாடியில் உட்கார்ந்து படித்தேன். அடுத்து இவர் எழுதிய இரண்டாம் சுற்று கட்டுரைத் தொகுப்பையும் படிக்க வேண்டும். நடப்பு ஆண்டில் தமிழ் நூல்களோடு ஆங்கில நூல்களையும் வாசிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி திறப்ப வட இந்தியாவில் தள்ளிப் போய்க்கொண்டு இருக்கிறது. எங்கள் நாளிதழ் என்ன ஆகுமோ?
டெல் மீ வொய் இதழ் வாங்கினேன். நிறைய விஷயங்களை சுருக்கமாக எழுதுகிறார்கள் . வாசிக்க சிறப்பாக இருக்கிறது. துப்பறியும் சாம்பு முதல்பாகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். இதற்கு முன்னர் இந்த நாவலை எழுதிய தேவனின் சின்னஞ்சிறு கதைகள் என்ற நூலை படித்திருக்கிறேன். வங்கி குமாஸ்தா எப்படி துப்பறிவாளர் ஆகிறார் என்பதே கதை. நகைச்சுவையான கதை.
நன்றி! சந்திப்போம்!
அன்பரசு
5.1.2022
கருத்துகள்
கருத்துரையிடுக