ஐஏஎஸ் கனவுக்காக தட்டுவடை விற்கும் மாணவர்கள்!

 தட்டுவடை செட்


பொதுவாக சினிமாக்கார ர்கள்தான் பாலத்தின் அடியில் தூங்கினேன். அக்கா கடையில் கடன் வைத்து இட்லி வாங்கினேன். இப்படி சுதந்திரப் போராட்டமே செய்துதான் படத்தை இயக்கினேன். ஜெயித்தேன் என டிவி பேட்டிகள் முதல் யூடியூப் பேட்டிகள் வரை சொல்லுவார்கள். படிப்பிற்காகவே போராடும் நிலை இன்னும் சமூகத்தில் இருக்கிறது. அதைப்பற்றியதுதான் இந்தக் கட்டுரை. 

சேலத்தில் உள்ளது கோரிமேடு. இங்குள்ள சிறிய உணவுக்கடையைச் சுற்றி இளைஞர்களாக நிற்கிறார்கள். அனைவரும் வந்தது தட்டுவடை விற்கும் கடைக்காகத்தான். இதுதான் அந்த கடையின் சிக்னேச்சர் டிஷ். தட்டு வடையை சாண்ட்விட்ச் போல வைத்துக் கொடுக்கிறார்கள். அதில், கேரட், பீட்ரூட், வெங்காயம், புதினா நிரம்பியுள்ளது. இதை தொட்டுச்சாப்பிட மிளகாய் சட்னி கொடுக்கிறார்கள். 

இதை வி கிஷோர், எம் தனகோடி என்ற இரு 12ஆம் வகுப்பு மாணவர்கள்தான் நடத்துகிறார்கள். இருவருக்குமே ஐஏஎஸ் தேர்வில் வெல்வதுதான் கனவு. எனவே தங்களுடைய குடும்பத்தை இதற்காக குறை சொல்லாமல் தங்கள் கல்விச்செலவை தாங்களே பார்த்துக்கொள்ள கடையைத் தொடங்கியிருக்கிறார்கள்.  கிஷோர், திருவேனி கார்டனில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார். இவர் அப்பா லாரி ஓட்டுநராக வேலை செய்கிறார். கிஷோரின் தம்பிகள் இருவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள். 

இவர் வார இறுதியில் கட்டுமான இடங்களில் கூலியாக வேலை செய்வார். அந்த தொகையை வைத்துத்தான் படிப்பு செலவுகளை சமாளித்து வந்தார். தனகோடி ஆந்திரத்தின் விஜயவாடாவிலிருந்து வந்தவர். இவர் பிறந்தபிறகுதான் குடும்பம் ஆந்திராவிலிருந்து சேலத்திற்கு வந்திருக்கிறது. அப்பா முதல் வகுப்பு படிக்கும்போது காலமாகியிருக்கிறார். இதனால் படிப்பு செலவை சமாளிக்க தனகோடி அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். பிறகுதான், கோரிமேட்டிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தனகோடி சேர்ந்தார். அங்குதான் கிஷோரைப் பார்த்திருக்கிறார். இருவரும் ஒன்றாக பத்தாவது படித்தனர். இருவருக்கும் பொதுவானதாக வறுமை இருந்ததால், எளிதாக நண்பர்களாகி விட்டனர். 

பெருந்தொற்று தொடங்கும்போது கட்டுமான வேலைகள் நின்றுபோய் விட்டன. இதனால் கிஷோருக்கு வேலைகள் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் அங்கு இருந்த தட்டுக்கடை  ஒன்றில் வேலை பார்த்தார். தட்டுவடையை எப்படி பல்வேறு விதமாக தருவது என்பதை கற்றுக்கொண்டார். இதை வைத்து பொருளாதாரத்தை மேம்படுத்த நினைத்தார். இந்த நேரத்தில் தட்டுக்கடையும் மூடப்பட்டது. இதனால் வேலையின்றி தவித்தவர், தனக்கோடியுடன் சேர்ந்து கடை தொடங்க நினைத்தார். இருவரிடமும் 10 ஆயிரம் ரூபாய் இருந்தது.  பிறகு நண்பர்களிடம் பெற்ற கடன் என 40 ஆயிரம் ரூபாயை திரட்டினர். கடந்த நவம்பரில் நம்ம கடையைத்தொடங்கினர். இதில் தினசரி இருவருக்கும் ரூ.500 வருமானம் கிடைக்கிறது. 

இதில் தேவையான பணம் கிடைத்தவுடன் கோவை, அல்லது சென்னை சென்று ஐஏஎஸ் படிப்பதற்கான முயற்சியை செய்வதுதான் இருவரின் லட்சியம். படிக்கப் போகும் இடத்தில் இதுபோன்ற கடையை ஏற்பாடு செய்வதை நோக்கமாக வைத்துள்ளனர். 

இவர்களின் கடையை முதலில் காவல்துறை அகற்றுவதற்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இப்போது இருவரின் கல்விக்கனவை தெரிந்துகொண்டவர்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாது என்று கூறியுள்ளனர். வியாபாரமும் இப்போது நன்றாக நடந்துவருகிறது. ஃபிரிட்ஜ் இல்லாத காரணத்தால் எந்த காய்கறிகளையும் வாங்கி ஸ்டாக் வைத்து உணவு தயாரிப்பதில்லை. சேலத்தில் மட்டும் இதுபோல 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஏற்காட்டிலிருந்து உருவாகி வந்ததாக தட்டுவடையின் பூர்விகம் பற்றி சொல்லுகிறார்கள். தட்டுவடை இந்த மாணவர்களின் கனவை நிறைவேற்றும் என நம்பலாம். அவர்களின் உழைப்பு அதைத்தான் சொல்லுகிறது. 

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 
கருத்துகள்

பிரபலமான இடுகைகள்