ஆத்மாவை பற்றி படரும் குரல்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்











3.12.2021 

அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு , வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

இரண்டு வாரங்களுக்குப் பிறகு இப்போதுதான் வெயில் காய்கிறது. அறையின் சுவரின் பூஞ்சை வேகமாக பரவிவருகிறது. நான் வைத்திருந்த சமையல் பொருட்கள் ஈரத்தால் பூஞ்சை உருவாகி வீணாகிவிட்டன. இதனால் பொருட்களை வைக்க பிளாஸ்டிக் டப்பாக்களைத்தான் சேட்டா கடையில் வாங்கி வர வேண்டும். இப்போதுள்ள பாட்டில்களும் டீக்கடையில் விலையின்றி பெற்று வந்தவைதான். 

டெல் மீ வொய் என்ற குழந்தைகள் நூலை வாங்கினேன். இதுவும் முன்னர் நான் வேலை செய்த முத்தாரம் போன்ற இதழ்தான். மலையாள மனோரமா குழுமத்தின் தரமான தயாரிப்பு. பொது அறிவுத்தகவல்களைக் கொண்டது. இந்த மாத இதழ் பெண் சாதனையாளர்களை மையமாக கொண்டுள்ளது. ரூ.40க்கு வாங்கினேன். 

நாளிதழ் ஆசிரியருக்கு மகள் வயிற்றுப் பேரன் பிறந்துள்ளான். மனம் கொள்ளாத மகிழ்ச்சியும், முகத்தில் இதுவரை பார்த்திராத சிரிப்புமாக இனிப்பைக் கொண்டு வந்து கொடுத்தார். உடனே சக உதவி ஆசிரியரும் ஒன்றிய அரசின் விருது பெற்ற எழுத்தாளருமான பி.பி சார் பிரியாணி என அடிபோட்டு இருக்கிறார். 

அன்பரசு

3.12.2021

----------------------------------------------------------------------







6.12.2021

அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

நான் இந்த வாரம்தான் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆழ்வார்பேட்டையிலுள்ள பாரதிதாசன் வட்டார நூலகத்திற்கு சென்றேன். தொடக்கத்தில் நன்றாக இருந்தது. பெருந்தொற்று பரவிய பிறகு சென்றால் இடமே கொசுக்களின் கூடாரமாக இருக்கிறது. இருட்டாகவும் இருக்கிறது. 

சோஜூகாடே சூஜூமல்லிகே என்ற கன்னட பாடலைக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். சிவனை வாழ்த்திப் பாடும் பாடல். இதில் தாளம் அடிப்படையில் வெவ்வேறு தொனியில் பாடுகிறார்கள்.  யூடியூபில் அனன்யா பட் இதனை மென்மையாக பாடுகிறார். கோவையில் சிவராத்திரி விழாவில் இப்பாடகி மென்மையான தொனியில் பாடும்போது மனதில் ஏனோ உறங்கிய துயரங்கள் மேலெழுவது போல இருந்தது. இவரது குரல் ஏனோ எனக்கு நாம் சந்தித்த சாந்திப் பிரியா அக்காவையும் நினைவூட்டியது. 

பாடலின் போக்கில் திடீரென உயர்ந்து பரவசமான தன்மையில் குரல் உயருகிறது. இதனை சாந்திப் பிரியா அக்காவின் பாடலில் கேட்டுணர்ந்தேன். அனன்யா பட், கன்னட நாட்டுப்புற பாடல்களை பாடவென தனி குழுவை உருவாக்கியுள்ளார். இவர்கள் தனி நிகழ்ச்சியாக நிறைய நடத்தியுள்ளனர். இவற்றை யூடியூபில் வாய்ப்பிருந்தால் கேட்டுப் பாருங்கள். 

எனது கணினி சரியாக இயங்கவில்லை. 8,500க்கு வாங்கிய கணினியின் முதலில் விண்டோஸ் தனது மூச்சை நிறுத்த லினக்ஸ் இயங்கியது. இப்போது அதுவும் பைத்தியம் பிடித்தது போல நடந்துகொள்கிறது. வன்பொருள் கோளாறு என டெக் நண்பர் சொன்னார். 

அன்பரசு 

6.12. 2021

-------------------------------------------------------------------------------





7.12.2021

அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். 

நலமா? 

இன்று எனது ஆசான் கே.என்.எஸ், வாசிக்க நிறைய நூல்களை வாங்கிக் கொடுத்தார். அதன் விலைமதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை. பணத்தை அனுப்பிவைக்கிறேன் என்றாலும் அவர் அதை விரும்பவில்லை.  பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். 

அந்த மனசுதான் கடவுள். இவரை நான் எப்போது சந்தித்தாலும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு இன்னும் புதிதாக நிற்கிறார். பேசுகிறார். பேச்சுலர் படத்தில் ஒயில் கும்மி பாட்டு கேட்டேன். நீங்கள் வாய்ப்பிருந்தால் கேளுங்கள். விரைவில் இந்த கலைஞருக்கு குக்கூ காட்டுப்பள்ளியில் ஏதாவது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வார்கள் என நினைக்கிறேன்.  அதை விடுங்கள். பாடல் கேட்க நன்றாக இருக்கிறது. 

இன்னொரு விஷயம் சொல்லவேண்டும். திருமணம் பற்றித்தான். திருவண்ணாமலை வந்து சாமியார்கள், பிச்சைக்காரர்கள் இடத்தில் அவர்களோடு படுத்துறங்கி எழுந்து சிவனின் காலில் விழவேண்டும். அப்போதுதான் ஒச்சமான பெண் என்றாலும் கிடைக்கும் என பெண் ஜோசியர் கூறியிருக்கிறார். அம்மா பயந்துவிட்டாள். அதான் திருவண்ணாமலை போகிறாயே இதையும் சேர்த்து செய்துவிடு என்றாள். சாலா பயங்கரம்! 

அன்பரசு 

7.12.2021


 புகைப்படங்கள்

Yaa studio (vinodh balusamy)

கருத்துகள்