ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசி எறிந்த முகமது அலி! - அமெரிக்காவை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் முகமது அலி
முகமது அலி |
பட்டாம்பூச்சி போல உடல் லாவகம், தேனீ போன்ற வலி என்ற வாசகத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதை முகமது அலியின் குத்துச்சண்டையைப் பார்த்து பலரும் சொன்னது.
அமெரிக்காவின் கென்டக்கியில் காசியஸ் மார்செல்லஸ் கிளே ஜூனியர் என்ற பெயரில் முகமது அலி பிறந்தார். 1942ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று பிறந்தவர் இந்த குத்துச்சண்டை வீரர்.
தனது 12ஆவது வயதில் உள்ளூர் விழா ஒன்றில் சைக்கிளைத் தொலைத்துவிட்டார். அப்போது உள்ளூர் போலீஸ்காரர் காசியஸை சந்தித்தபோது, அவன் திருடனை கண்டால் அடித்து பிரித்துவிடுவேன் என ஆக்ரோஷமான தொனியில் இருப்பதைப் பார்த்தார். சண்டை போடுவது சரி. அதற்கு முறையான பயிற்சி வேண்டுமே என்று சொல்லி அவனை குத்துச்சண்டை பயிற்சிக்கு வரச்செய்தார். உள்ளூரில் இருந்த ஜிம்மில் மெல்ல பயிற்சி செய்யத் தொடங்கினான் காசியஸ் . அப்புறம் என்ன உள்ளூரில் சிறந்த குத்துச்சண்டை வீரராக மாறத் தொடங்கினான் காசியஸ்.
1960ஆம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டார் காசியஸ். தனது பதினெட்டு வயதிலேயே தங்கப்பதக்கம் வென்றுவிட்டார். பதக்க பெருமையுடன் லூயிஸ்வில்லேவுக்கு வந்தார். ஆனால் அமெரிக்கர்கள் அவரை ஆப்பிரிக்க அமெரிக்கராகவே பார்த்தனர். அப்படியே நடத்தினார். இதனால் விரக்திக்கு உள்ளானவர், தான் பெற்ற தங்கப் பதக்கத்தை ஓஹியோ ஆற்றில் தூக்கி வீசிவிட்டார். அதற்கு முன்னர்தான் ஒரு ஹோட்டலிலிருந்து காசியஸை இனவெறியுடன் அவமானப்படுத்தி வெளியேற்றியிருந்தனர்.
1963ஆம் ஆண்டு காசியஸ் அப்போதைய புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான சோனி லிஸ்டன் என்பவரை தோற்கடித்தார். பிறகு தனது பெயரை முகமது அலி என்று மாற்றிக்கொண்டார். தனது பெயர் வெள்ளைக்கார முதலாளிகளால் அடிமை என்று பொருள் வரும்படி வைக்கப்பட்டதாக பெயர் மாற்றத்திற்கு பதில் சொன்னார் முகமது அலி.
1967ஆம் ஆண்டு குத்துச்சண்டை போடுவதற்கான இவரின் உரிமத்தை அமெரிக்க அரசு தடை செய்தது. என்ன காரணம், வியட்நாம் போருக்கு முகமது அலியை செல்ல அரசு வற்புறுத்தியது. ஆனால் முகமது அதற்கு மறுப்பு தெரிவித்தார். எனவே அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை அச்சுறுத்தியது.
அதற்கெல்லாம் முகமது பயப்படவேயில்லை. நான்கு ஆண்டுகளை இதனால் இழந்தபோதும் தனது போர் பற்றிய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். வியட்நாமிற்கு எதிராக அமெரிக்கா போர் செய்வது அறத்திற்கு எதிரானது, அநீதியானது என்பதை பேச்சு மட்டுமல்ல செயல் வழியாகவும் சொல்லிக்கொண்டே இருந்தார். இதனால் களத்திற்கு வெளியேயும் முகமது அலிக்கு செல்வாக்கு வளர்ந்தது. சிறந்த விளையாட்டு வீரராகவும் அடையாளம் காணப்பட்டார்.
1971ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பு மூலம் மீண்டும் குத்துச்சண்டை போட்டிக்கு திரும்பினார். ஜார்ஜ் போர்மன் என்பவரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்க வைத்தார். தான் போட்டியிட்ட 61 போட்டிகளில் 56 போட்டிகளில் வென்றார் முகமது அலி. 2016ஆம் ஆண்டு ஜூன் 3 அன்று காலமானார். வாழும் காலத்திலும் அதற்குப் பிறகும் தலைசிறந்த குத்துச்சண்டை வீரராக போற்றப்பட்டவர் முகமது அலி.
டெல் மீ வொய் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக