ஆதரவற்றோருக்கும், பிச்சைக்காரர்களுக்கும் உணவளிக்கும் கோவை முருகன்! - நிழல் மையத்தின் அன்னதான சேவை

 









1992ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் தோற்றுப்போன சோகத்தில் மூன்றுமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தார் அந்த மாணவர். அனைத்தும் தோற்றுப்போன சோகத்தில் அப்படியே சாலைகளில் திரிந்தார். கோவையின் சிறுமுகைப் பகுதயில் பிச்சைக்காரர்களோடு  உட்கார்ந்திருந்தார். படிப்பில் தோற்றாகிவிட்டது. இனி என்ன எதிர்காலம் கண்ணில் உள்ளது என்றும் அவருக்கு தெரியவில்லை. 

மனதில் துக்கம் இருப்பதால் வயிறு பசிக்காமல் இருக்குமா? வயிறு கபகபவென எரியத் தொடங்கியது. அங்கு வீடில்லாமல் பிச்சை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவருமே சோறு கிடைக்காமல் அதற்காக அங்கு வருபவர்களிடம் கை நீட்டிக்கொண்டிருப்பவர்கள்தான். அப்போது மாணவரைப் பார்த்த கருப்பன் என்ற பெரியவர் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்த்துவிட்டார். பிறகு அங்கிருந்து சில ஆண்டுகளில் லாரி க்ளீனராக மாறினார். 1998இல் ஆட்டோவை வாடகைக்கு வாங்கி ஓட்டத் தொடங்கினார்.  



மனம் வாடி பிச்சைக்காரர்களோடு உட்கார்ந்து சோற்றுக்கு ஏங்கியபோது அந்த மாணவரின் மனதில் இருந்தது ஒன்றுதான். நாம் நல்ல நிலைக்கு வந்தால் இதுபோல வீடில்லாதவர்களுக்கு, மனநிலை தவறியவர்களுக்கு சோறு போட வேண்டும். நம்மால் முடிந்தவர்களுக்கு உதவ வேண்டும் என முடிவெடுத்தார். ஆட்டோ ஓட்டி ஓரளவுக்கு வருமானம் கிடைத்தவுடன் சாப்பாடு கொடுக்கும் வேலையைத் தொடங்கினார். இதற்காகவே நிழல் மையம் என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கினார். அந்த மாணவரின் பெயர்  முருகன். 

இன்று பல ஆண்டுகளாக நடந்து வரும் அன்னதான சேவையின் கர்த்தா இவர்தான். இவரது சேவையைப் பார்த்து இதில் இணைந்த தன்னார்வலர்கள் இவரது பணியை தொய்வுறாமல் இழுத்து சென்று வருகிறார்கள். 

முருகன், தினசரி 3 மணிக்கு எழுகிறார். இவரது மனைவி மூன்று வேலையாட்கள் என வீட்டுக்கு அருகில் சமையல் பணி நடக்கிறது. வெஜிடபிள் பிரியாணியைத் தயாரிக்கிறார்கள். தினசரி வீடில்லாத தெருக்களில் வாழ்பவர்களுக்கு 200 பேருக்கு சாப்பாடு கொடுக்கிறார்கள். ஞாயிறு மட்டும் அனாதை ஆசிரமங்களுக்கு, ஆயிரம் உணவுப் பொட்டலங்களை வழங்குகிறார். கோவையில் உள்ள பதினெட்டு அனாதை இல்லங்களில் உள்ள ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உணவு வழங்குகிறார். 

முருகனின் கம கம சாம்பார் இங்கு மிக பிரபலம். 15 பல்வேறு வகை காய்கறிகள்,  5 லிட்டர் சுத்தகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், 5 லிட்டர் நெய் ஆகியவற்றோடு பட்டாணி ஆகியவற்றையும் சேர்க்கிறார். கூடுதலாக பிறர் மீதான அன்பும்தான் சாம்பாரை மணக்க வைக்கிறது. பசியில் தவிப்பவர்களின் பிணி அகற்றுகிறது. முருகனின் பணியை பாராட்டலாம் தானே?

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

தாமோதரன்

படம் பின்டிரெஸ்ட்



கருத்துகள்