2020 நம்பிக்கை இளைஞர்கள் விருது! - த.சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்
வலி உணர்த்தும் நிஜம்!
1.5.2021
அன்புள்ள நண்பர் சீனிவாசனுக்கு, வணக்கம். பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன். விகடனில் வரும் அண்டன் பிரகாஷின் தொடரைப் படித்து வருகிறேன். நிறைய விஷயங்களை அவர் இதில் எளிமையாக விளக்குகிறார். இந்தியாவைப் பற்றிய செய்திகள் பலவும் மோசமான எதிர்மறை செய்திகளாகவே இருக்கிறது. இதற்கு நாட்டை ஆள்பவர்களைத்தான் கோபித்துக்கொள்ள வேண்டும். வார இதழ்கள், நாளிதழ்கள் என்ன செய்ய முடியும்?
வலி நிவாரணி பற்றிய நூல் ஒன்றை இணையத்தில் தரவிறக்கினேன். கொரிய தொடர் ஒன்றில் வலி நிவாரண மருத்துவம் பற்றி அறிந்தேன். அதற்கென தனி துறையே இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மனதை நெகிழ்ச்சியாக்கிக் கொண்டு தளர்வாக்கிக் கொள்ள அதிகளவு மருந்துகளைப் பயன்படுத்துபவர்களைப் பற்றி நூல் பேசுகிறது. இதனைத் தடுப்பது எப்படி? இப்படி மருந்துகளை சாப்பிடுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை விவரிக்கிறார்கள். மருத்துவத்துறை சார்ந்த அடிப்படை அறிவையேனும் நூல்களின் வழியே எட்ட முடியும் என நினைக்கிறேன்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி அவரது செயலர் சஞ்சயா பாரு எழுதிய நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன். எழுபது பக்கங்களைக் கடந்துவிட்டேன். அரசியல் சார்ந்து நிறைய தகவல்களை வெளிப்படையாக எழுதுவது உங்கள் மீது நீங்களே சேற்றை வாரி பூசிக்கொள்வது போலாகும். ஏகப்பட்ட வழக்குகள் பாயும். வெளிநாடுகளில் இதுபோல நிறைய நூல்கள் உண்டு. இந்தியாவில் இப்போதுதான் மெல்ல எழுத தொடங்குகிறார்கள். பயம் குறைந்த காலமா இது என்று தெரியவில்லை.
முகேஷ் அம்பானி பற்றி பேசுவதாக கூறிய நூலைப் படித்தபோது, அவரின் அப்பா திருபாய் அம்பானி பற்றிய தகவல்களே நிறைய இருந்தது. எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதைகள் சிலவற்றைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். இதில் காதலிக்கும் ஜோடியைப் பிரிக்க ஒருவர் ஹிப்னாடிசத்தைப் பயன்படுத்துகிறார். அதில் வெற்றி பெறுகிறார். ஆனாலும் கூட அதே காதலர்களுக்கு இடையில் மீண்டும் இயல்பாக இயற்கையாகவே சந்திப்பு நடைபெறுகிறது. இதனை எழுதிய வடிவில், உரையாடலில் சுஜாதா கவனம் ஈர்க்கிறார். இதனை பிடிஎப் நூலாக படித்தேன்.
நன்றி! சந்திப்போம்!
ச.அன்பரசு
1.5.2021
மின்னூல் பரவும் வேகம்!
10.7.2021
அன்பு நண்பர் கணியம் சீனிவாசன் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நான் சென்னைக்கு வரும்போது உங்களுடைய அடோமிக் ஹேபிட்ஸ் நூலை கொண்டு வந்து தந்துவிடுகிறேன். இப்போது வரும்போது மறந்து வீட்டிலேயே விட்டுவிட்டேன். சென்னையில் அறையில் வைத்துள்ள நூல்களை உங்கள் நண்பர் அல்லது நேரடியாக உங்களிடமே கூட தந்துவிடுகிறேன். இவை பற்றி கவலைப்படாதீர்கள்.
நாளிதழில் நூல்களை எழுதி தொகுக்கும் வேலை இருந்தது. அதில் எனது பங்களிப்பாக கூறப்பட்ட நூலை ஓரளவுக்கு எழுதி தயாரித்து விட்டேன். இணையத்தில் பல்வேறு தளங்களில் உங்கள் மின்னூல் குழுவினர் நூல்களை பதிவிட்டு வருகின்றனார். ஆச்சரியமான பணிதான். மருத்துவம் தொடர்பாக நூல்களை வாசிக்க வேண்டும். கிடைக்கும் நேரங்களில் இதனைச் செய்ய நினைக்கிறேன். மார்ஷியல் யுனிவர்ஸ் - 2 தொடரை ஆப்பில் பார்த்துக்கொண்டிருந்தேன். இறுதிப்பகுதியை படுமோசமாக எடுத்து தொகுத்து முடித்துவிட்டனர். சீன இயக்குநர், சண்டைக்காட்சியைக் கூட இந்தளவு செயற்கையாக எடுக்க முடியுமா என ஆச்சரியப்படுத்தி விட்டார்.
யுவர் சீக்ரெட் என்ற சீன தடயவியல் தொடரைப் பார்த்து வருகிறேன். இது கொஞ்சம் பரவாயில்லை ரகம். உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள். பார்ப்போம். நன்றி! சந்திப்போம்.
ச.அன்பரசு
10.7.2021
13.8.2021
அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு, வணக்கம். நலமா?
வேலைப்பளு எப்படியிருக்கிறது? எங்களது நாளிதழ் குழுவினர் நூல்களை தொகுக்கும் பணியை செய்து வருகிறோம். எனது நூல் ஒன்றுதான். அதைக்கூட நண்பர் என நினைத்தவர் திடீரென விரோதியாக மாறி போட்டுக்கொடுத்ததால் ஏற்பட்ட வேலைதான். எழுதிய கட்டுரைகளை மீண்டும் துறை ரீதியாக தொகுக்கவேண்டும். வேலையை முடித்துவிட்டேன். இரவில் தூங்குவது கடினமாக உள்ளது.
முழங்கால் வலி அதிகரிப்பதால் பெல்ட்டை கட்டிக்கொண்டுதான் படுக்கிறேன். உடலுக்கு பொருந்தாத ஏதோவொன்றை பொருத்திப் படுப்பது உண்மையில் வினோதமான அனுபவம்தான். இப்போது ஜிஎஸ்டி வரி பற்றி படித்து வருகிறேன். இதனை முன்னமே அலுவலக சகாவும், உதவி ஆசிரியரும் எழுத்தாளருமான பாலபாரதி அவர்கள் கூறியிருந்தார். படிக்க ஊக்கப்படுத்தினாலும் என்னால் படிக்க முடியவில்லை. இப்போதுதான் படிக்கிறேன். அதற்கு நேரம்தான் காரணம் என பொய் காரணத்தை சொல்ல விரும்புகிறேன்.
நூல்களை வாசிப்பதில் இப்போது பெரும் தேக்கத்தை உணர்கிறேன். இதை விரைவில் சரி செய்ய வேண்டும். காலையில் நேரமாக எழுவது கடினமாக உள்ளது. நன்றி! சந்திப்போம்!
ச.அன்பரசு
13.8.2021
2020 நம்பிக்கை இளைஞர்கள் விருது!
23.9.2021
அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு, வணக்கம்.
2020 விகடன் நம்பிக்கை விருதுகள் வழங்கிய வீடியோ பார்த்தேன். உங்கள் மின்னூல் குழுவினரின் உழைப்பிற்கான முக்கிய அங்கீகாரம் இது. மகிழ்ச்சி. ராகுல் ஆல்வாரிஸ் எழுதிய ஃப்ரீடம் ஃபிரம் ஸ்கூல் நூலை தமிழில் சோதனை முயற்சியாக நான் எழுதினேன். பள்ளிக்கு வெளியே வானம் என்று பெயரிட்ட நூலை உங்களது ஃப்ரீதமிழ் இபுக்ஸ் தளத்தில் வெளியிட்டீர்கள். அதற்குப் பிறகுதான் மொழிபெயர்ப்பு தொடர்பாக எனக்கு என்மீது நம்பிக்கை பிறந்தது. பள்ளிக்கு வெளியே வானம் என்பது மிகச்சிறந்த நூல் என்று கூற மாட்டேன். எனது முதல் முயற்சிக்கு நீங்கள் அங்கீகாரம் கொடுத்தீர்கள்.
அச்சமயம் நான் திருவண்ணாமலையில் குக்கூ என்ற அமைப்பின் துணை அமைப்பான இயல்வாகையில் வேலை செய்துகொண்டிருந்தேன். அங்குதான் திரும்ப சந்திக்கவே கூடாது என்று நினைக்கும் குரூரமான ஆணவம் பிடித்தவர்களையும், நினைத்து சந்தோஷப்படும்படியான நட்புகளையும் பெற்றேன். பகல் முழுக்க எழுதுவேன். மாலையில் அம்மன் கோவில் அருகே உள்ள பாலம் ஒன்றில் உட்காரந்து மலையைப் பார்த்துக்கொண்டிருப்பேன். இதுதான் எனக்கிருந்த ஒரே பொழுதுபோக்கு. அந்த வாய்க்கால் பாலத்தைக் கடந்து சரிவில் கீழிறங்கினால் புகைப்படக்காரர் வினோத் அவர்களின் வீடு இருந்தது. அவர் மட்டுமே அங்கிருந்தபோது என்னிடம் நல்லவிதமாக நடந்துகொண்டார். எனது சகோதரர் என்று அவரைக் கூறுவேன்.
தற்போது கொரிய பொருளாதாரம் பற்றிய நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை நான் தங்களுக்கு எழுதிய கடிதங்களை சகித்துக்கொண்டு படித்துக்கொண்டு இருப்பீர்கள். மிக்க நன்றி! உங்களது உடல்நிலை சரியானதும், ஒருநாள் சந்திப்போம். டீ குடிக்கும் நேரம் இருந்தால் போதும். நீங்கள் வாசிக்க கொடுத்த நூலை கொடுதுத்துவிடுகிறேன். உங்கள் வீட்டுக்கு வந்து சிரமம் கொடுக்க விரும்பவில்லை. எனது அறைக்கு திரும்பி விடுவேன்.
உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். இயல் எப்படியிருக்கிறாள்? பாரி, வியனையும் கேட்டதாக சொல்லுங்கள். நன்றி!
ச.அன்பரசு
23.9.2021
கருத்துகள்
கருத்துரையிடுக