பேரிடரின்போது வெளியே வரும் நமது பொறுப்புணர்வு - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

 



வினோத் பாலுச்சாமி vinodh balusamy




மழை பெய்தால் வெளியே வரும் நம் பொறுப்புணர்வு! 




புகைப்படம் - வினோத் பாலுச்சாமி 


26.11.2021

அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு வணக்கம். 

நலமா? 

இந்த கடிதம் எழுதும்போது மயிலாப்பூர் மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை ஆகிய இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் எளிதாக வடியமாட்டேன் என்கிறது. இத்தனைக்கும் ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு கி.மீ. சென்றால் கடல் வந்துவிடும். நிலைமையைப் புரிந்துகொண்ட பணியாளர்கள் பாதாளச்சாக்கடை அடைப்புகளை குச்சி வைத்து எடுத்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள். வேலையை முடித்தவர்கள் வேறு இடங்களுக்கு போகும்போது நீரை காலால் கையால் வீசியபடியும், செல்ஃபி எடுத்து வரலாற்றில் தனக்கான இடத்தை பதிவு செய்தபடியும் சென்றனர். 

ராதாகிருஷ்ணன் சாலை வழியாகவே நான் ராயப்பேட்டை அஜந்தா அருகிலுள்ள நாளிதழ் அலுவலகத்திற்கு சென்று வருகிறேன். இதை விட தினசரி சட்டமன்றத்திற்கு விடியல் முதல்வர் செல்லும் சாலையும் இதுதான். இங்கேயே இப்படிப்பட்ட நிலைமை. நான் நடந்துசெல்லும்போது தேங்கிய நீரில் தனது வீட்டிலிருந்து பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து எறிந்தார். துப்புறவு பணியாளர் திட்டினாலும் அசட்டு சிரிப்பு சிரித்தபடி சமாளித்துவிட்டார். இதுதான் நமது பொறுப்புணர்வு. 

நீங்கள் சமூக வலைத்தளங்களை விட்ட விலகியது எனக்கு வருத்தம்தான். உங்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை தவிர்க்க நீங்கள் எடுத்த முடிவு சரியானதே. உடல்நலனும் மனநலனும் சரியாக இருந்தால் நல்லதுதான். ஒவ்வாமை பற்றிய நூலை தொகுத்து வருகிறேன். அதனை மின்னூலாக வெளியிட வேண்டும். உங்களிடம் வாங்கி வந்த பறவைகள் கையேடு சிறப்பாக உள்ளது. அதை வைத்து இப்போது கட்டுரைத்தொடர் ஒன்றை எழுதி வருகிறேன். வெளியிட வாய்ப்பு கிடைக்குமா என்று பார்ப்போம். 

வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றது பற்றிய சிறப்பு மலரை தீக்கதிர் நாளிதழ் வெளியிட்டுள்ளனர். விவசாய சங்கத் தலைவர், செயலாளர்களின் பேட்டிகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. 

நன்றி!

அன்பரசு 

26.11.2021

-----------------------------------------------------------------------------------------------------







சிந்துதாய் சப்கல்


27.11.2021

அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். 

நலமாக இருக்கிறீர்களா? இரவில் இங்கு கனமழை. காலை அலுவலகம் சென்றபோது சிட்டி சென்டர் வணிக வளாகத்தை ஒட்டிய சாலையில், முழங்காலளவு தண்ணீர் நின்றது. மயிலாப்பூர் முழுக்க பெய்யும் மழைநீர் அங்கே வடிந்து வந்து தேங்கும்படி பள்ளமான பகுதி அது. சுகாதார பணியாளர்களும் தங்களால் முடிந்த விஷயங்களை செய்கிறார்கள்தான். ஆனால் வடிகால் அமைப்பு திறம்பட அமைக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது. 

கோல்கேட் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் சிந்துதாய் சப்கல் என்ற பெண்மணி பற்றிய வீடியோ ஒன்றைப் பார்த்தேன். இதனை ஏழு மொழிக்கும் அதிகமாக டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். வாழ்க்கையை புன்னகையுடன் தொடங்குங்கள் என்பதுதான் கேப்ஷன். சிந்துதாய் இருபது வயதில் கணவர் வீட்டை விட்டு துரத்தப்பட்டார். இரண்டு பிள்ளைகள் கையில், வயிற்றில் ஒரு குழந்தை கருவாக. பிறந்த வீடும் ஏற்காது விரட்ட, சுடுகாட்டில் இடம் பெயர்ந்து வாழ்ந்தார். பசிக்கு பிச்சை எடுத்தார். இவரைப் பார்த்து அடைக்கலமாக ஆதரவற்ற குழந்தைகள் வர அவர்களுக்காகவே பிச்சை எடுப்பதை தொடர்ந்தார். இன்று ஆதரவற்றோர் இல்லம் ஒன்றைக் கட்டி ஏராளமான சிறுவர்களுக்கு அடைக்கலம் தந்து வருகிறார். என் பிரச்னைகள்தான் என்னை செதுக்கின என்றார். சிந்துதாய், நவம்பர் மாதம் குழந்தைகள் தினத்தில் பிறந்தவர். ஆச்சரியமான கதை. சிறப்பாக வீடியோ எடுத்திருக்கிறார்கள். 

நன்றி! சந்திப்போம்!

அன்பரசு

27.11.2021

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்