நெருப்பு பொறி பறக்கும் செஞ்சந்தனக்கட்டை கடத்தல் மோதல்! - புஷ்பா - தி ரைஸ் - தெலுங்கு

 









புஷ்பா 

சுகுமார்

தெலுங்கு




ஆந்திரத்தின் காட்டுப்பகுதியில் உள்ள செஞ்சந்தனக்கட்டைகளை கடத்தும் குழுவில் இணையும் புஷ்பராஜ் எப்படி அந்த வியாபாரத்திற்கே தலைவனாகிறான் என்பதே கதை. 

படத்தின் இயக்குநர் சுகுமார் தனது பேட்டியில் தெளிவாக சொல்லிவிட்டார். இது பான் இந்தியா படம் கிடையாது. முழுக்க தெலுங்கு படமாகத்தான் எடுத்திருக்கிறேன் என்று. எனவே உலக சினிமா அளவுக்கு குறியீடுகளை ஆராயும் அவசியம் ஏதுமில்லை. ஜாலியாக கொண்டாட்டமாக பார்க்க வேண்டிய படம் இது. 

புஷ்பராஜ் தொடக்கத்தில் இருந்தே அப்பாவின் பெயர் தெரியாமல் ஏராளமான அவமானங்களை சந்தித்து வளர்கிறான். அவனைக் கோபப்படுத்த எரிச்சல் படுத்த அவன் அப்பாவின் பெயரைக் கேட்பது ஒன்று போதும். அதாவது இன்டி பேரு.... முல்லெட்டி வெங்கட்ரமணா என்பதை அவன் எங்கும் சொல்லமுடியாதபடி சட்டரீதியான அவனது அண்ணன்கள் தடுக்க, அவனுக்குள் இழந்த அத்தனையும் வட்டியோடு பெறும் ஆசை, வெறி பிறக்கிறது. அப்புறம் என்ன அத்தனை சம்பவங்களும் வேட்டைதான். 



அல்லு அர்ஜூன் தான் படத்தினை முழுக்க தோளில் தாங்குகிறார். இடது தோளை உயர்த்தியபடி படம் முழுக்க மனதில் திட்டங்களோடு அனைத்தையும் செய்கிறார். படத்தில் தனக்கு தலைவனாகும் அனைத்து தகுதியும் புஷ்பாவுக்கு இருக்க, அவனிடம் நண்பனாகிறான் கேசவன். கதையை நமக்கு சொல்லுவது கேசவன்தான். 

வேலையை செய்துவிட்டு இடைவேளையில் டீயும் பன்னும் தின்றபடி சேரில் உட்காரும் காட்சி அற்புதமாக இருக்கிறது. அதைப்பார்த்துவிட்டு மரம் வெட்டும் ஆலை முதலாளி கொந்தளிக்க, எனனோட காலை என் காலு மேல போட்டிருக்கிறேன் என கித்தாப்பாக சொல்லுவது, சம்பளம் தீர்க்க கொடுக்கும் பணத்தில் மீதியை கணக்குப் பிள்ளையிடம் கொடுத்து சந்தைக்கு போய் மரியாதையை வாங்கிக்கச் சொல்லு என தில்லாக பேசுவது என புஷ்பா பேசுவதுதான் தொடக்கம். அதிலிருந்து எல்லாமே மீட்டருக்கு மேல என்பதுபோல த்தான். 






இதேபோல நிறைய காட்சிகள் உண்டு.  வட்டிக்கு கொடுத்துவிட்டு அம்மாவை அவமானப்படுத்துபவனை அடித்து துவைக்கும் காட்சி படத்தில் உண்டு. புஷ்பாவுக்கு சம்பாதிப்பது, அதற்கான ஐடியாவைத் தேடுவது என்பதெல்லாம் பிரச்னையே இல்லை. ஆனால் அதற்கான மரியாதை, கூலி கிடைக்காதபோதுதான் பூவிலிருந்து நெருப்பு பொறி பறக்கிறது. 

வட்டார வழக்கு, உடல்மொழி, செருப்பு காலிலிருந்து விலக நடனம் ஆடுவது என அல்லு அர்ஜூன் படம் முழுக்க நெருப்பாகவே வருகிறார். ஸ்ரீவல்லியைப் பொறுத்தவரை, அப்பாவை கடத்தி வைத்திருப்பவன் படுக்கைக்கு அழைக்க தன்னை அலங்கரித்துக்கொண்டு வண்டியில் நேராக புஷ்பா வீட்டுக்குச் சென்று பேசும் காட்சி அவரின் நடிப்புக்கு உதாரணம். 

படத்தை உணர்வும் நெகிழ்ச்சியுமாக கொண்டு செல்வது சுகுமாரின் திரைக்கதையும் அதற்கு ஈடுகொடுக்கும் தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசையும் , பாடல்களும்தான். 

ஏழையாக, பின்னணியே இல்லாமல் அவமானங்களை செரித்து வளர்பவனின் கதையை அதைப்போன்ற எந்த படங்களோடும் நீங்கள் பொருத்திப் பார்க்கலாம். இதனால்தான் புஷ்பாவை, பிரசாந்த் நீலின் கேஜிஎப்போடு ஒப்பிடுகிறார்கள். மணிரத்னத்தின் நாயகனோடும் கூட பொருத்திப் பார்க்கலாம். தலைவனாகும் தகுதி உள்ளவர்கள் இயல்பாகவே தன்னைச் சார்ந்தவர்களை காப்பாற்றுவார்கள், அரவணைப்பார்கள். பிறர் நினைத்தே பார்க்க முடியாத சவால்களை சந்தித்து மீள்வார்கள். 


நெருப்புடா 


கோமாளிமேடை டீம் 








கருத்துகள்